கர்னீலியஸ் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. வங்கிக்குச்
செல்ல முயன்ற போது அனுமதிக்காத ‘அவன்’ இப்போது அவர் முயற்சியை அறிந்து நேரிலேயே வந்து விட்டானோ என்ற எண்ணம் தான் ஆரம்பத்தில் அவருக்கு வந்தது. ஆனால் அந்த சிக்னலில் ஏற்பட ஆரம்பித்த உணர்வு இப்போதும் அவருக்கு ஏற்படவில்லை என்பதும் நினைவுக்கு வந்து போனது. உடனே சில மூச்சுக்களை ஆழமாக விட்டு மனதை ஓரளவு நிதானத்திற்குக் கொண்டு வந்தார். பின் அமைதியாகச் சென்று கதவைத் திறந்தார். வாசலில் பக்கத்து வீட்டுச் சிறுவன் நின்றிருந்தான். அவன் கையிலிருந்த ட்ரேயில் நிறைய சாக்லேட்கள் இருந்தன. “இன்று எனக்கு ஹேப்பி பர்த்டே” என்று சந்தோஷமாகச் சொன்னபடி அவன் அவரிடம் ட்ரேயை நீட்டினான்.
கர்னீலியஸ் அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து விட்டு ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொண்டார். அந்தச் சிறுவனுக்குப் பரிசு தர என்ன இருக்கிறது என்று திரும்பி அலமாரியைப் பார்த்து அதிலொரு கப்பல் பொம்மை ஒன்றை எடுத்து வந்து அவனிடம் தந்தார்.
சிறுவன் புன்னகைத்து அழகாக இருக்கிறது என்று சொல்லி வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து விட்டுப் போனான். கதவைத் தாளிட்டு விட்டுத் திரும்பி வந்தவருக்கு இனி இன்றைக்கு விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் என்று தோன்றவில்லை. அமைதியாகச் சிறிது நேரம் யோசித்து விட்டு அவருடைய டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் இன்று அவர் படித்த வாசகங்களை நினைவுபடுத்தி எழுத ஆரம்பித்தார். இப்போது நினைவில் இருப்பது பிறகோ, இன்னொரு நாளோ பயிற்சியில்லாமல் நினைவுபடுத்த முடியும் என்பது நிச்சயமில்லை.
“முன்கூட்டிக் கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும் புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்....”
இத்தனை நினைவில் கொண்டு வர முடிந்தது அவருக்கு சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி செய்து முயற்சித்தால் மீதியையும் அவர் கண்டிப்பாக
நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை இப்போது முழுமையாக இருக்கிறது. இப்போது எழுதியதில் கடைசி வரி அவரைக் குழப்பியது. “நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்...” அது எந்த இடம்?
செந்தில்நாதன் க்ரிஷிடம் மனோகர் விஷயத்தில் கோட்டை விட்டு விட்டதற்கு மானசீகமாய் மன்னிப்பு கேட்டார். “அவன் வீட்டுக்கு எதிரேயே வர்க் ஷாப்பில் அவன் ஆள் இருந்ததால் நம் ஆட்களை அவன் வீட்டருகேயே நிறுத்தினால் அவன் கண்டுபிடித்து உஷாராகி விடுவான் என்று தான் பக்கத்துத் தெருக்களில் இருக்க வைத்தேன். சொன்னால் சில நிமிஷங்களில் அவர்கள் அந்த வீட்டுக்குப் போய் சேர்ந்து விடும் தூரம் தான். ஆனால் விஸ்வத்தின் ஆள் மனோகரைக் கொன்று விட்டு நம் ஆட்கள் போய்ச் சேர்வதற்கு முன் தப்பித்து விட்டான்.... நம் இத்தனை நாள் முயற்சியும் வீணாய் போயிற்றே என்று வருத்தமாக இருக்கிறது...”
க்ரிஷ் அவரைத் தேற்றும் தொனியில் மென்மையாகச் சொன்னான். “எல்லா முயற்சியும் வீண் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறோம். சில விஷயங்களை இனியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது..”
செந்தில்நாதன் ‘எப்படி?’ என்பது போல க்ரிஷைப் பார்த்தார். க்ரிஷ் சொன்னான். “விஸ்வம் தன் பழைய சக்தியுடன் யாரையும் கவனிக்க முடிகிறது என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். மனோகரை உணர்வு அலைகளால் அவனால் உணர முடிந்தது மாத்திரமல்ல, அவனுக்குள் நாம் வைத்திருக்கும் ‘சிப்’பைக் கூட உடனடியாக உணர முடிந்திருக்கிறது. அதனால் தான் மனோகரை அவன் கொன்றிருக்கிறான். அதை வைத்து எந்த அளவு சக்தியை அவனால் இப்போதும் பிரயோகிக்க முடிகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவம் நடந்திருக்கா விட்டால் கண்டிப்பாக அவனுடைய இந்த முன்னேற்றத்தை நாம் தெரிந்திருக்க முடியாது.”
அவன் அப்படிச் சொன்ன
போதும் அவர் மனம் ஆறவில்லை. மனோகர் தன்னுடைய அக்கவுண்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் பணம் அனுப்பி வைத்த பின் வங்கிகளைத் தொடர்பு கொண்டு மனோகரின் அக்கவுண்டுக்கு
வந்து போன தொகைகளை ஆராய்ந்தும் அவர்களுக்கு அவற்றின் மூலமாக விஸ்வம் அக்கவுண்ட் பற்றிய
தகவல்கள் கிடைக்கவில்லை. பல நாட்டுப் பரிவர்த்தனைகள் நடந்திருந்தன என்றாலும் அவற்றின்
மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவே அவருக்கு வருத்தத்தைத் தந்திருந்தது. இப்போது
மனோகர் மூலமாகவும் அவனைப் பிடிக்க முடியவில்லையே என்று மனம் நொந்தார்.
அவருக்கு இப்போதும் க்ரிஷுக்கும், விஸ்வத்திற்கும் இடையே உள்ள பகை என்ன என்பது தெரியாது. சில நாள் காணாமல் போய் வந்த பின் தான் அப்படி ஒரு எதிரி தனக்கிருக்கிறான் என்றும் காணாமல் போன போது நடந்தவற்றை அவரிடம் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்றும் க்ரிஷ் அவரிடம் சொன்னான். அப்போது அவனும் அந்த எதிரியைப் பார்த்ததில்லை என்றும் அவன் பெயர் உட்பட அவனைப் பற்றிய எந்த விவரமும் அவனிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரிந்து அது மேலும் குழப்பியது. ஆனால் அதே அளவில் தான் அவன் தன் குடும்பத்தாரிடமும் சொல்லி இருக்கிறான் என்பது உதயிடம் பின்பு ஒரு முறை பேசும் போது தெரிந்தது.
க்ரிஷ் வேண்டுகோளின்படி தான் அவர் பின் அபூர்வ சக்திகள் கொண்ட ஒரு மனிதனின் பழங்கதைகளைத் தெரிந்து கொள்ள வடக்கு நோக்கிப் பயணம் செய்தார். மாஸ்டர் அபூர்வ சக்திகளைச் சொல்லித் தரக்கூடிய குருக்கள் சிலர் இருக்கும் இடங்களைச் சொல்லியிருந்தார். அங்கெல்லாம் செந்தில்நாதன் போனார். போன இடங்களில் கிடைத்த தகவல்களை வைத்து அடுத்த இடங்களுக்குப் போனார். விஸ்வம் எப்படி சில சக்திகளை அடைந்தான் என்று சொல்லிக் கொடுத்த சில குருக்கள் சொன்னார்கள். ஒவ்வொருவரும் மறக்காமல் சொன்ன ஒரு விஷயம், அவர்களை அந்தச் சக்தியில் மிஞ்சி விட்டுத் தான் விஸ்வம் அவர்களை விட்டுப் போயிருக்கிறான் என்பது தான்.
ஒரு முறை விட்டுப் போன பின் அவன் எந்தப் பழைய குருவையும் தொடர்பு கொண்டதில்லை. கற்றுக் கொண்ட வித்தையில் குறை வைத்ததில்லை. அவனைப் பற்றி மேலும் அதிகம் தெரிந்து கொள்வதற்கு முன், ஹரிணி கடத்தப்பட்டதால் அவர் திரும்பி வர நேர்ந்தது. ஆனாலும் அவன் மீது உருவாகி இருந்த பிரமிப்பு அதன் பின் அவருக்கு என்றும் குறையவில்லை. வாழ்நாளில் ஒரு முறையாவது அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று செந்தில்நாதன் ஆசைப்பட்டார்.
அதன் பின் மாஸ்டர் மூலமாக அவன் பெயர் விஸ்வம் என்பது தெரிந்தது. சில காலத்திற்கு முன் வெளிநாடு சென்று திரும்பி வந்த போது க்ரிஷ் விஸ்வம் இறந்து விட்டதைச் சொன்னான். அத்தனை சக்தி படைத்த விஸ்வம் திடீரென்று இறந்து விட முடியும் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கேற்றாற் போல் சில நாட்களில் க்ரிஷ் சொன்னான். “விஸ்வம் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறான்.” வேறு யாரைப் பற்றி அவன் சொல்லி இருந்தாலும் அவர் அதை நம்பி இருக்க மாட்டார். ஆனால் விஸ்வத்தைப் பொருத்த வரை அவனால் முடியாதது என்று ஒன்றிருக்க முடியாது என்று எண்ணி வந்த செந்தில்நாதன் உடனடியாக நம்பினார்.
செந்தில்நாதன் க்ரிஷிடம்
சொன்னார். “விஸ்வத்துக்குத் தன் சக்திகளையும் பயன்படுத்த முடிகிறது. ஆட்களையும் அனுப்பி
யாரையும் கொல்லவும் முடிகிறது என்பது ஆபத்தான நிலைமை க்ரிஷ். நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக
இருப்பது நல்லது. உதய் காதலிக்கும் அந்தப் புதிய பெண் பற்றியும் முழுதாகத் தெரிந்து
கொள்வது முக்கியம்...”
க்ரிஷ் தலையசைத்தான்.
திறமையான போலீஸ்காரரான அவர் சந்தேகம் கொண்டது அவனை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆபத்தானவளாக இருக்கலாம் என்று தெரிந்தே நடந்து கொண்டிருப்பதை இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அவனுடைய
சொந்தப் புத்தியே அவனை ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும் கூட உதயின் காதலைக் கலைப்பதற்கு
அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை...
(தொடரும்)
என்.கணேசன்
Whether Illuminati can find the hiding place of Viswam through Carnelius? Krish is taking risk by allowing Sindhu to stay. Very thrilling and building tension.
ReplyDeleteகதை மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டிருக்கிறது, அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்க வைக்கிறது . அருமை
ReplyDeleteகர்னீலியஸ் இப்போதாவது முழுமையாக கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்த்தேன்...ஏமாற்றி விட்டார்...
ReplyDelete