சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 12, 2020

இல்லுமினாட்டி 75



ம்மானுவல் அனுப்பியிருந்த சிந்து பற்றிய தகவல்களை க்ரிஷ் நிதானமாகப் படித்தான். தாய் இறந்து விட்டாள் என்று அவளுடைய தந்தை அவளுக்குச் சொல்லி நம்ப வைத்திருக்கலாம். இல்லையென்றால் தாய் ஓடிப் போய் விட்டாள் என்று சொல்லச் சங்கடமாக உணர்ந்த சிந்து அவளாகவே தாய் இறந்து விட்டதாகச் சொல்லி இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அவளை அதற்குக் குறை கூற முடியாது என்று க்ரிஷுக்குத் தோன்றியது. அவளுடைய வாழ்க்கையைப் படித்த போது அவனுக்கு அவள் மேல் ஒருவித பச்சாதாபமே தோன்றியது. அன்பான தாய், தந்தை, குடும்பம் என்றிருந்தால் அவளும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பாள் என்ற உண்மையை அவனால் மறுக்க முடியவில்லை. மற்றபடி அவர்களிடம் அவள் சொன்ன கதையில் கட்டுக்கதை எதுவும் இருக்கவில்லை. அதெல்லாம் அவள் ஏமாற்றுப் பேர்வழி அல்ல என்ற ஆசுவாசத்தைத் தந்தாலும் அவனுக்கு முன்பு ஏற்பட்டிருந்த எச்சரிக்கை உணர்வைக் கற்பனை என்று ஒதுக்கவும் முடியவில்லை.

இம்மானுவல் அனுப்பியிருந்த தகவல்களில் சிந்து சென்னை வரத் தகுந்த காரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அவன் அனுப்பியிருந்த அவளுடைய பழைய புகைப்படங்களுக்கும் இப்போதைய தோற்றத்திற்கும் சம்பந்தம் இருக்கவில்லை. அந்தப் பழைய படங்களில் நெற்றியில் ஒன்றில் கூட பொட்டு இருக்கவில்லை. அந்தப் புகைப்படங்களில் மாடர்ன் டிரஸ்களில் தான் இருந்தாள். இப்போதோ சேலை, நெற்றியில் பொட்டு எனப் புதிய மாற்றங்கள் சேர்ந்திருந்தன. இந்த மாற்றத்திற்கும் காரணம் தெரியவில்லை.

உதய்க்கு அவள் இப்போது இருக்கும் தோற்றம் தான் பிடித்தமானது. அதை அறிந்து அதற்காகவே இப்படி மாற்றிக் கொண்டு வந்திருக்கிறாளா என்ற சந்தேகமும் மெல்ல எழுந்தது. இது வரை தனிமையை மட்டுமே விரும்பி ஒரு சின்ன வட்டத்திற்குள் இருந்து வாழ்ந்த அவள் இந்தப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இங்கே வந்திருப்பது தற்செயலா அல்லது திட்டமிட்டா?

அவள் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது அவ்வப்போது வேறு ரகசிய மனநிலைகளில் சஞ்சரித்தது போல உணர்ந்திருந்தான். அவன் உணர்ந்ததை அவள் கண்டுபிடித்து விட்டதாகவும் கூட அவனுக்குத் தோன்றியிருந்தது. பின் அவள் சாமர்த்தியமாக அதை மறைத்தது போல் கூட அவனுக்குத் தோன்றி இருந்தது. அதெல்லாம் அவன் சந்தேகத்தின் விளைவா, இல்லை அதற்கெல்லாம் வலுவான காரணம் இருக்கின்றதா என்று அவனுக்குத் தெரியவில்லை.   

இரண்டு மாதத்திற்குள் கல்யாணப் பேச்சு பேசினாலோ, முயற்சி எடுத்தாலோ இருவரில் ஒருவரின் உயிருக்கு ஆபத்து என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் பத்மாவதி மறந்து கூட அது குறித்துப் பேசவில்லை. ஆனால் தினமும் சிந்துவிடம் ஒரு முறையாவது போனில் பேச அவள் தவறவில்லை. சிந்து அவளிடம் மிக நல்லபடியாகவே பேசியிருப்பாள் போலிருக்கிறது. பத்மாவதி மூத்த மருமள் குறித்து பரமதிருப்தியாகவே இருந்தாள். அவள் மறுபடி ஒரு நாள் சிந்துவை வரச் சொல்லியும் இருந்தாள். உதயும் கூட வற்புறுத்தியும் சிந்து வேலையைக் காரணமாகச் சொல்லி உடனடியாக அவர்கள் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தாள்.

இம்மானுவல் கடைசியில் ஒரு இண்டர்நேஷனல் போன்கால் சிந்துவுக்கு வந்திருப்பதையும், அது எந்த நாட்டிலிருந்து யார் பேசியது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் கூடத் தெரிவித்திருந்தான். ராங் நம்பராக இருக்க வாய்ப்பில்லை என்பது சிறிது நேரம் பேச்சு தொடர்ந்திருக்கிறது என்பதால் தெரிகிறது என்றவன் அதற்கு மேல் தன்னுடைய சொந்த அபிப்பிராயம் எதையும் தெரிவிக்காமல் அப்படியே விட்டிருந்தான்.


னோகர் மறுநாள் முழுவதும் மிகவும் உற்சாகமாகவே இருந்தான். இனி எல்லாமே முன்பு போல சுபிட்சமாகவே இருக்கப் போகிறது என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. என்னேரமும் அடுத்த கட்டளை விஸ்வத்திடம் இருந்து வரலாம் என்ற எதிர்பார்ப்பில் அடிக்கடி சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்தான்.

அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்த செந்தில்நாதனும் அவனுடைய நடவடிக்கைக்காகக் காத்திருந்தார். அவன் உடலில் ‘சிப்’ வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் கம்ப்யூட்டரில் அவன் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது. அவனுடைய தோற்றம் அதில் வரவில்லையே தவிர அவன் உட்கார்ந்திருக்கிறானா, படுத்திருக்கிறானா என்பது போன்ற நிலவரம் எல்லாம் சிப் இருக்கும் நிலை மூலம் அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

பெங்களூரில் மனோகர் வீட்டுக்கு நெருக்கமான பகுதிகளில் செந்தில்நாதன் சில ஆட்களையும் என்னேரமும் இயங்கத் தயாரான நிலையில் தங்க வைத்திருந்தார். வீட்டின் அருகேயே ஆட்கள் இருந்தால் அவன் வீட்டுக்கு எதிரில் இருக்கும் வர்க்‌ஷாப்பில் இருக்கும் அவன் ஆள் மூலமாக அவனுக்குத் தெரிய வந்து விடும் என்பதால் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

ஆனால் அன்றிரவு வரையில் மனோகருக்கு விஸ்வத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. மனோகரே பொறுமை இல்லாமல் தவிப்பதும் அவருக்குத் தெரிந்தது. இரவு வரை காத்திருந்து விட்டுப் பின் அவர் கம்ப்யூட்டரில் கண்காணிக்கும் ஆசாமியிடம் ஏதாவது வித்தியாசமாகத் தெரிய வந்தால் உடனடியாகத் தெரிவிக்கும்படி சொல்லி விட்டுத் தன் வீட்டுக்குப் போனார்.


ன்றிரவு பதினோரு மணிக்கு மனோகர் வீட்டுக்கு ஒரு பிசா டெலிவரி பாய் வந்து சேர்ந்தான். எதிரில் இருந்த மனோகரின் ஆள் அதைத் தவறாக நினைக்கவில்லை. மனோகர் அடிக்கடி அப்படி பிசா வாங்கிச் சாப்பிடுவதை அவன் கவனித்திருப்பதால் அவன் கண்டுகொள்ளவில்லை.

மனோகரின் வீட்டுக்குள் இருந்த வேலையாள் பிசா டெலிவரி பாய் வந்ததைத் திகைப்போடு பார்த்தான். எப்போதும் மனோகர் அவனிடம் தான் பிசா ஆர்டர் செய்யச் சொல்வான். இன்று சொல்லவில்லையே பின் எப்படி  என்று யோசனையுடன் பார்த்தபடி  அவனிடம் கேட்டான். “யார் ஆர்டர் செய்தது?”

பிசா டெலிவரி பாய் சொன்னான். “மனோகர் சார். அவர் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். வேண்டுமானால் போய்க் கேட்டுப் பாருங்கள்”

குழப்பத்துடன் வேலையாள் மனோகரிடம் சென்றான். மனோகர் நல்ல உறக்கத்தில் இருந்தான். “இவர் ஆர்டர் செய்திருந்தால் ஏன் தூங்குகிறார். பிசா பாய் வேறெங்கோ போவதற்குப் பதிலாக இங்கே வந்து விட்டிருப்பானோ? ஆனால் அவன் தெளிவாக மனோகர் சார் பெயரைச் சொன்னானே. அவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் என்று வேறு சொன்னானே. இவரை எழுப்புவதா வேண்டாமா?”

மனோகர் திடீர் என்று கண்விழித்துப் பார்த்தான். “என்ன விஷயம்?”

“பிசா டெலிவரி பாய் பிசாவோடு வந்திருக்கிறான். நீங்கள் அவனை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் என்று வேறு சொல்கிறான்.” என்று குழப்பத்துடன் வேலையாள் சொன்னான்.

மனோகருக்கு அது விஸ்வத்தின் வேலையாக இருக்க வேண்டும் என்று உடனே புரிந்தது. அவர் பிசா பாயின் மூலமாக ஏதோ செய்தியை அனுப்பியிருக்க வேண்டும்... பரபரப்புடன் மனோகர் சொன்னான். “உண்மை. அவனை உள்ளே அனுப்பு. நீ வெளியேவே இரு.”

வேலையாள் குழப்பத்துடன் அங்கிருந்து போனான். ’பிசாவை வாங்கி நான் தானே எப்போதும் இவருக்குத் தருவது வழக்கம். இன்று என்ன எல்லாமே தலைகீழாய்?’ என்று அவன் மனம் முணுமுணுத்தது. பிசா பாயிடம் “உள்ளே வரச் சொல்கிறார்” என்று சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டான். தூக்கம் தூக்கமாய் வந்தது. இவனை அனுப்பித் தாள் போட்ட பின்பே தூங்கலாம் என்று அவன் மனம் கணக்குப் போட்டது.   

பிசா பாய் உள்ளே போனான். மனோகர் அவனைப் பரபரப்புடன் வரவேற்றான். “என்ன தகவல்...”

பிசா பாய் சொன்னான். “உங்களை போலீஸ்காரர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். உங்கள் உடலில் சிப் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் போலீஸ்காரர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கச் சொன்னார்.”

தலையில் இடி விழுந்தது போல் மனோகர் உணர்ந்தான். திகைப்புடன் அவன் பிசா பாயைப் பார்த்தான். பிசா பாய் ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து அவனிடம் தர யத்தனிப்பது போல் சைகை செய்தான். அவன் சொன்ன தகவலிலேயே மனதின் சமநிலை தவறியிருந்த மனோகருக்கு இந்தப் பொம்மைத் துப்பாக்கி மூலம் என்ன செய்ய வேண்டும், இதன் மூலம் அந்தச் சிப்பை எடுத்து விட வாய்ப்பிருக்கிறதா என்பது போன்ற பல சிந்தனைகளில் இருந்தான்.

ஆனால் பிசா பாயின் பொம்மைத் துப்பாக்கியிலிருந்து ஒரு விஷ ஊசி கிளம்பி வந்து அவன் முகத்தில் கன்னத்தில் குத்தியது. சில வினாடிகளில் முகம் மரத்துப் போக ஆரம்பித்தது. அதிர்ச்சியுடன் நினைவை இழக்க ஆரம்பித்த மனோகரிடம் பிசா பாய் சொன்னான். “ஏமாந்து போவதைத் தலைவர் எப்போதுமே ரசிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்”

மனோகர் உடலில் விஷம் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. படுக்கையில்  அமர்ந்திருந்தவன் அப்படியே அதில் சரிந்தான். பிசா பாய் போர்வையை அவன் மீது முழுவதுமாகப் போர்த்தி விட்டு வெளியே வந்தான். வேலையாளிடம் சொன்னான். “நாளைக் காலை பிசாவைச் சாப்பிட்டுக் கொள்கிறாராம். தூக்கம் வருவதாய்ச் சொன்னார்.”

பிசா பாய் போய் விட்டான். வேலையாள் கதவைத் தாளிட்டு விட்டு மனோகரின் படுக்கையறை உள்ளே வந்து எட்டிப் பார்த்தான். மனோகர் போர்த்தியபடி மறுபடி உறங்க ஆரம்பித்திருப்பது தெரிந்தது. அவனும் உறங்கப் போனான்.

(தீபாவளியை முன்னிட்டு போனஸாக வாசகர்களுக்கு அடுத்த அத்தியாயம் 14.11.2020 அன்று அதிகாலையிலேயே அப்டேட் ஆகும்)

(தொடரும்)
என்.கணேசன்      

4 comments:

  1. Viswam is getting back his powers. Sindhu enters Krish's family and wins Udhay and his mother. Akshay has entered into the plot. Krish knows the truth. All are ready to act. Very very interesting. Thanks for announcing Diwali bonus.

    ReplyDelete
  2. கெட்டவனிடம் வேலை செய்தால் நமக்கும் அதே நிலை தான்.... என்பதற்கு மனோகர் நல்ல உதாரணம்...
    சிந்துவின் நிலையும் இப்படிதான் ஆகுமோ...?

    ReplyDelete