சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 2, 2020

யாரோ ஒருவன்? 4


ரந்தாமனின் நண்பர் நாதமுனி அவரை அதிகாலை நடைக்கு அழைத்துப் போக வந்த போது தம்பதியர் இருவரும் வெளி கேட் அருகே சிலை போல் நிற்பதைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டார். “என்ன ஓய், காலங்காத்தால மனைவியோட ஜாலியா ஃபோட்டோக்கு போஸ் கொடுக்கற மாதிரி நிக்கறீர்?’

திரும்பி அவரைப் பார்த்ததும் அலமேலு புன்னகைத்தபடி கணவனிடம் சொன்னாள். “பாம்பு ஆராய்ச்சியாளரே வந்துட்டார். அவர் கிட்டயே கேளுங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு கண்டுபிடிச்சு சொல்லுவாரு”

நாதமுனி கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பாம்புகள் குறித்து ஆராய்ச்சிக்கட்டுரைகள் நிறைய எழுதி அதில் டாக்டரேட் பட்டமும் வாங்கியவர். அவர் கேள்விக்குறியுடன் நண்பரைப் பார்க்க, பரந்தாமன் மாதவனின் நண்பனொருவன் வந்து போனதாகச் சொல்லி அவன் போகும் போது அவர்கள் கண்ட காட்சியை விவரித்தார். கேட்டபின் நாதமுனியும் திகைத்தார்.

“ஓய் யோசிச்சு சொல்லும். பின் சீட்டில் வேற யாராவது ஆள்கள் உட்கார்ந்திருந்தாங்களா?”

பரந்தாமன் யோசித்தபடி மனைவியைப் பார்க்க அலமேலு பின் சீட்டில் ஆட்கள் இருக்கவில்லை என்று உறுதியாகத் தலையசைத்தாள். பரந்தாமன் சொன்னார். “பின் சீட்டில் யாரும் ஆட்கள் இருக்கலை... பாம்பை மட்டும் தான் பார்த்தோம்...”

நாதமுனி திகைப்பு குறையாமல் கேட்டார். “பாம்பு எப்படி இருந்தது சொல்லும்...”

‘பெரிய நாகப்பாம்பு என்று மட்டும் தான் பரந்தாமனால் சொல்ல முடிந்தது. பரந்தாமன் கேட்ட கேள்விகள் பலதும் பாம்பில் கவனிக்க இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று பிரமிக்க வைத்தனவே தவிர, அவற்றில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில்கள் சொல்ல முடியவில்லை.

அவர்களுடைய மிக நெருங்கிய குடும்ப நண்பரான நாதமுனிக்கு மாதவனின் நண்பர்கள் அனைவரையும் நன்றாகத் தெரியும். அவர் மெல்லக் கேட்டார். ”எந்த நண்பன் வந்தான்?”

பரந்தாமன் சொன்னார். “பேர் நாகராஜ்னு சொன்னான்

அந்தப் பேர்ல அவனுக்கு நண்பர்கள் யாரும் இருக்கலையே ஓய்...” என்று நாதமுனி சொன்னார்

அதைத் தான் நானும் நினைச்சேன். ஆனா அவன் அந்தப் பேர் தான் சொன்னான். நம்ம விலாசம் ஞாபகமிருந்து வந்திருக்கான். மத்த நண்பர்கள் பேரெல்லாம் சொன்னான்.” என்று பரந்தாமன் சொன்னார்.

ஆரம்பத்துல இருந்து சொல்லும் ஓய்என்று சந்தேகத்துடன் நாதமுனி சொன்னார். அலமேலு கவலையும் யோசனையுமாய் உள்ளே போய்விட நண்பர்கள் இருவரும் முன்னால் இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டார்கள். வெயில் இல்லாத நேரங்களில் அவர்கள் வழக்கமாகக் கதைக்கும் இடம் அது தான். அமர்ந்ததும் இன்று காலை நடந்ததை பரந்தாமன் விரிவாகச் சொன்னார்.

எல்லாம் கேட்டுக் கொண்ட நாதமுனிக்கு பாம்பு சமாச்சாரத்தை விட பரந்தாமன் தன் வங்கிக் கணக்கு விவரங்களை நாகராஜிடம் சொன்னது ஆபத்தான விஷயமாய்ப் பட்டது. அவர் நண்பரைக் கடிந்து கொண்டார். “என்ன ஓய். ஆள் அடையாளம் சரியாத் தெரியலைன்னு சொல்றீர். அவன் கிட்ட போய் உங்க அக்கவுண்ட் விவரம் எல்லாம் சொல்லலாமா? உங்க அக்கவுண்ட்ல எவ்வளவு வெச்சிருக்கீர்?”

பரந்தாமன் சொன்னார். “எட்டாயிரத்து முன்னூத்திச் சில்லறை இருக்கும்...”

காரில் வந்து, பழப் பையைக் கொடுத்து, ஒருவன் அந்தத் தொகையைத் திருடச் சிரமம் எடுத்துக் கொள்வான் என்று நாதமுனிக்குத் தோன்றவில்லை. பரந்தாமனிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பணம் தர வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கலாம். அதற்காக வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டிருக்கலாம்... யோசித்து விட்டு நாதமுனி சொன்னார். ”அவன் மாதவனோட சூட்கேஸ்ல எதையோ தேடி வந்திருக்கிற மாதிரி தான் தோணுது ஓய். அதை நேரடியா கேட்டுட்டு வந்தா நீர் என்ன சொல்வீரோன்னு நினைச்சு தான் எதோ கதை சொல்லிட்டு பழப்பையோட வந்து உங்களைப் பார்த்திருக்கான் ஓய். யோசிச்சுப் பாரும். யாராவது ஒரு பழைய பீங்கான் பாபா விக்கிரகத்துக்காக இருபத்தியிரண்டு வருஷம் கழிச்சு வருவாங்களா?”

அவர் சொல்வதும் சரிதான் என்று பரந்தாமனுக்குப் பட்டது. ஆனால் அவன் சொன்ன சமயத்தில் அது ஏனோ அவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை.

நாதமுனி கேட்டார். “அவன் மாதவன் சூட்கேஸ்ல இருந்து ஏதாவது எடுத்தானா ஓய். நல்லா யோசிச்சு சொல்லும்?”

அது நிச்சயமாய் இல்லை. நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன்... கிடைக்கலைன்னவுடனே ஏதோ யோசிச்சு நின்ன மாதிரி தோணுச்சு. அதுக்கப்பறம் அவன் அதிகம் நிக்கலை. இறங்கிட்டான். போகக் கிளம்பினான். அலமேலு சாப்பிடச் சொன்னப்ப பிகு பண்ணாம திருப்தியா சாப்ட்டான். எங்களுக்கென்னவோ மாதவன் சாப்டற மாதிரியே தோணல். அவன் சொல்ற மாதிரியே சமையல் சூப்பர்ன்னு சொன்னான். அவன் கார்ல ஏறின பிறகு தான் நாங்க அமானுஷ்யமாய் அந்தப் பாம்பு சமாச்சாரத்தைப் பார்த்தோம்...”

நாதமுனி மறுபடியும் பாம்பு சமாச்சாரத்தை யோசித்தார். “பின் சீட்டில் ஆளிருக்கலைன்னு சொல்றீர். அப்புறம் யார் கிட்ட அவன் பேசியிருப்பான். பாம்பு கிட்டயா? என்னவோ இடிக்குது ஓய். எனக்கென்னவோ அந்த ஆள் மாதவனோட நண்பனே அல்லவோன்னும் சந்தேகமாய் இருக்கு. உம்ம பையன் எங்கே போனாலும் நிறைய ஃபோட்டோஸ் எடுப்பானே. அந்த ஆல்பங்கள்ல எதிலாவது இப்ப வந்தவன் முகம் இருக்கான்னு பார்த்தா சந்தேகம் தெளிஞ்சுடும் ஓய்...”

பரந்தாமன் மகன் இறந்த பிறகு அந்த ஆல்பங்களை எல்லாம் பார்த்ததில்லை. அதெல்லாம் அடிக்கடி பார்த்து அழுபவள் அலமேலு தான். அவர் அதை எல்லாம் பார்த்துத் துக்கத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பியதில்லை. நாதமுனி இந்தச் சந்தேகத்தை இப்போதே தீர்த்துக் கொள்வது நல்லது என்று நினைத்தார்இனியொரு முறையும் அந்த ஆள் வந்தால் இவர்கள் ஏமாறாமல் இருக்க அது உதவும் என்று நினைத்தார். “வாக்கிங் அப்புறமாய் போவோம் ஓய். முதல்ல இந்தச் சந்தேகத்தை தீர்த்துட்டுத் தான் மறு வேலை.”

அவருக்கு மாதவன் மரணத்திலேயே நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அதைக் கேட்டும் தெரியப்படுத்தியும் பரந்தாமனின் துக்கத்தை மேலும் அதிகப்படுத்த விரும்பாமல் தான் இத்தனை காலம் பேசாமல் இருந்தார். இப்போது இந்த விசித்திர சம்பவமும் நிகழ்ந்த பிறகு, வந்து போனது யாரென்பதில் சந்தேகம் போக்கிக் கொள்ள நினைத்தார்.

பரந்தாமன் வீட்டில் நான்கு பழைய ஆல்பங்கள் இருந்தன. அவற்றை அவர் எடுத்துக் கொண்டு வந்தார். இருவரும் அந்த ஆல்பங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள் பெரும்பாலான புகைப்படங்களில் மாதவனுடன் சரத், கல்யாண், ரஞ்சனிஇந்த மூவர் தான் சேர்ந்தோ, தனியாகவோ இருந்தார்கள். அந்த ஆல்பங்களைப் பார்க்கையில் பரந்தாமனுக்கு மட்டுமல்ல மாதவனைத் தன் மகன் போலவே நேசித்திருந்த நாதமுனிக்கும் மனம் கனத்தது. நாதமுனிக்கு இரண்டு மகள்கள் மட்டும் தான் இருந்தார்கள். அவர்களுக்கு மாதவன் தம்பியாய், அவருக்கும், இறந்து போன அவர் மனைவிக்கும் மகனாய் மாதவன் இருந்தான். அவர்கள் வீட்டிலும் என்ன வேலை சொன்னாலும் அவன் முகம் சுளிக்காமல் செய்வான். கலகலப்பின் மொத்த உருவமாய் இருந்த மாதவன் இந்த ஆல்பங்களில் ஒவ்வொரு புகைப்படத்திலும் எல்லையில்லாத உற்சாகத்தில் தெரிந்தான். முடிந்த வரை அவனைக் கவனிப்பதைத் தவிர்த்து இருவரும் அவனுடன் இருந்த நண்பர்களைக் கவனித்தார்கள்.

வந்து போன நாகராஜ் மாதிரியே கொஞ்சம் தெரிஞ்சாலும் சொல்லும் ஓய்என்றார் நாதமுனி.

தொண்டையை அடைக்க பரந்தாமன் தலையசைத்தார்.

நான்கு ஆல்பங்களையும் அவர்கள் பார்த்து முடித்த போதும் ஒன்றில் கூட நாகராஜின் சாயலில் யாரும் இல்லை.  நாதமுனி சந்தேகப்பட்டது சரி தான். வந்தவன் மாதவனின் நண்பனல்ல. அவன் யார், வந்த உத்தேசம் என்ன என்பது தான் இருவருக்கும் பிடிபடவில்லை.

பரந்தாமன் மறுபடியும் சொன்னார். “அவன் சரியா விலாசம் தெரிஞ்சு வந்திருக்கான். மாதவனோட இந்த நண்பர்கள் பேரெல்லாம் சொன்னான். இவர்களையும் விசாரிச்சான். அதனால தெரியாதவனாய் இருக்க வாய்ப்பில்லையே

அப்படியானால் அவன் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்திருக்க வேண்டும். அல்லது எல்லா விவரங்களையும் சொல்லி யாராவது அவனை இங்கே அனுப்பி இருக்க வேண்டும். எது உண்மை? வந்தவனின் உத்தேசம் தான் என்ன? போகும் வழியில் அவன் பாம்பு கடித்துச் சாகாமல் இருந்தால் என்றாவது தெரியவரலாம்….


(தொடரும்)
என்.கணேசன்   


6 comments:

  1. Very interesting and suspenseful ji. Waiting for the next Monday evening.

    ReplyDelete
  2. கணேசன் சார் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. வந்தவன் தான் யாரோ ஒருவனா? சீக்கிரம் புக் ரிலீஸ் பண்ணுங்க. வாங்கி ஒரேயடியாய் படிக்கணும்.

    ReplyDelete
  3. Kind request apart from paper edition if possible publish in kindle version. It will be easy for us to buy and carry everywhere. Price is not a constraint. Publisher has to think and favour for us.

    ReplyDelete
  4. nanbar nathamuni....oru pambu aaraichiyalar.... doctor yenge? atho doctorae vanthutare...(visu pada comedy mathiri irukku)

    ReplyDelete
  5. போன எபிசோட் படிக்கும் போதே எனக்கு சந்தேகம் வந்திருச்சி... நாகராஜ், மாதவனோட நண்பன் இல்லைனு...

    ஏனெனில் கணேசன் சார் நாவல்ல வர்ர கதாபாத்திரம் எல்லாம் கொஞ்சம் விசித்திரமாக தான் இருப்பாங்க😂😂😂

    ReplyDelete
  6. Book publish mudinch vanthuta first vangi padichitu dhan next work sir .

    ReplyDelete