சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 5, 2020

இல்லுமினாட்டி 74


னோகர் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது தான் விஸ்வத்தின் அலைகளை உணர்ந்தான். விஸ்வம் அவன் அருகில் நின்று கொண்டு அவனை தீர்க்கமாகப் பார்ப்பது போல இருந்தது.  நீண்ட காலமாக அவன் அதற்காக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த காரணத்தால் அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அவன் உணர்ந்து தூக்கி வாரிப் போட்டது போல் எழுந்து உட்கார்ந்தான். இனி அவனை உணர்வோமோ மாட்டோமோ, விஸ்வம் உயிரோடு இருக்கிறானோ இல்லையோ என்ற சந்தேகம் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கும் நிலையில் சந்தேகங்களுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இன்று உணர்ந்தது பெரும் நிம்மதியையும், இனி வரும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் தந்தது. இனிக் கவலை இல்லை. ஆயிரம் செந்தில்நாதன்களைச் சந்திக்கவும் அவன் தயார்!

அதன் பிறகு அவனுக்கு உறக்கம் வரவில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கு என்றே தோன்றியது. விஸ்வத்தின் சக்தி அலைகளை அவன் உணர்ந்த இந்த நேரத்தில் அவன் சிறையில் இருந்திருந்தால் அதை ஒரு பின்னடைவாக விஸ்வம் நினைத்திருக்கக்கூடும். நல்ல வேளையாக ராஜேஷின் தயவால் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டான்.....

படுக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டே மனோகர் மறுபடி விஸ்வத்தை உணர முயன்றான். அவன் அடுத்த கட்டளை, அல்லது அவன் தெரிவிக்கும் செய்தி எதாவது ஒன்றை உணர முடியுமா என்று முயற்சி செய்தான். விஸ்வத்தைத் திரும்பவும் உணர முடியவில்லை.

அவனைக் கம்ப்யூட்டரில் கவனித்துக் கொண்டிருந்த அதிகாரி உடனடியாக செந்தில்நாதனுக்குப் போன் செய்தார். அவன் தூக்கத்திலிருந்து தடாலென்று எழுந்திருந்து எதையோ தீவிரமாக உணர முயல்கிற மாதிரி தொடர்கிறது...”

செந்தில்நாதனுக்கு விஸ்வம் மனோகரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறான் அல்லது தொடர்பு கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. அவர் சொன்னார். “இனி நாம் அவனைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்....”  


ம்மானுவல் அக்ஷய் வந்ததிலிருந்து எர்னெஸ்டோவின் பாதுகாப்பு விஷயத்தில் கவலை ஒழிந்தவனாக இருந்தான். எர்னெஸ்டோவுக்கு அக்ஷயை மிகவும் பிடித்திருந்ததால் பாதுகாப்பு விஷயத்தில் அவன் சொன்னதைக் கேட்பார் என்ற நம்பிக்கை இருந்தது. இல்லாவிட்டால் அவரைச் சமாளிப்பது கஷ்டம் தான். அதிகாரம் செய்தே பழகிப் போனவருக்கு மற்றவர்களுக்கு அடங்கி நடப்பது அவர் நன்மைக்காகவே என்றால் கூட சுலபம் அல்ல. பிடித்த மனிதர்களிடம் அதில் பிரச்சினை இல்லை. அக்ஷய் அவரை அழகாகச் சமாளிப்பான் என்று இம்மானுவல் நினைத்தான்.

அக்ஷய் வந்தக் கணம் முதல் தன் கடமை, வேலை விஷயத்தில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தான். துளி கூட எதிலும் அவனுக்கு அலட்சியம் இருக்கவில்லை. அவருடைய பங்களாவில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவன் திருப்தி அடைந்திருந்தான். ஆனாலும் கூட பங்களாவின் ஒவ்வொரு ஜன்னல், கதவு, மூலை முடுக்கு அத்தனையும் தன் கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்று குறியாய் இருந்தான். பங்களாவுக்குள் பிரச்னை இல்லை, வெளியே செல்லும் போது கவனமாய் இருந்தால் போதும் என்று இம்மானுவல் சொன்னதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. விஸ்வம், அவன் கூட்டாளி போன்ற ஆட்கள் எதிரிகளாய் இருக்கையில் எந்த ஒரு சிறு அலட்சியமும் நல்லதல்ல என்று அவன் நினைத்தான்.

எர்னெஸ்டோவின் பக்கத்து அறையையே அக்ஷய்க்கு ஒதுக்கி இருந்தார்கள். இம்மானுவலிடமிருந்து விஸ்வத்தைப் பற்றிய முழு விவரத்தையும் அக்ஷய் வாங்கி இருந்தான். அதைப் படித்துப் பார்க்கவே சில நாட்களாகும் என்ற அளவில் விஷயங்கள் அதிகமிருந்தன என்றாலும் விஸ்வம் குறித்த சின்னத் தகவலைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்பதில் அக்‌ஷய் உறுதியாய் இருந்தான். அதே போல் விஸ்வத்தின் கூட்டாளி பற்றியும் இம்மானுவலிடம் இருக்கும் தகவல்கள் முழுவதையும் வாங்கியிருந்தான். கூட்டாளி விஷயத்தில் முடிவான தகவல்கள் தன்னிடம் இல்லை என்று சொல்லி கவனித்து முடிவுக்கு வர வேண்டிய அளவில் சில தகவல்கள் மட்டும் சேகரித்து வைத்துள்ளதாய் இம்மானுவல் சொல்லித் தந்திருந்தான். அதைப் படித்து அக்ஷய் என்ன முடிவுக்கு வருவான் என்று தெரியவில்லை....

சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த இம்மானுவலிடம் ஒரு ஃபைலை அவன் உதவியாளன் தந்து விட்டுப் போனான். அந்த ஃபைலில் சிந்து என்று எழுதி இருந்தது. அவளுடைய வரலாறே அந்த ஃபைலில் இருந்தது. அவள் பிரச்னை எதுவும் இல்லாத சாதாரணப் பெண்ணாக இருக்கலாம். அல்லது பிரச்னை ஆக முடிந்தவளாகவும் இருக்கலாம். இரண்டில் எந்த வகை அவள் என்பதை இந்தத் தகவல்களைப் படித்துத் தான் அவனுக்கு  முடிவுக்கு வர முடியும். அவன் படிக்க ஆரம்பித்தான்.

சிறிய வயதிலேயே தாய் ஓடிப் போனது, தாயின் சாயலிலேயே இருந்ததாலோ ஏனோ தந்தை அவளை வெறுத்தது, அந்த வெறுப்பை தந்தையின் இரண்டாம் மனைவியும், மகளும் பகிர்ந்து கொண்டது, சிந்து படிப்பில் மிக சூட்டிப்பாக இருந்தது, ஹாஸ்டலில் படித்தது, குடும்பத்திலிருந்து நிரந்தரமாய் பிரிந்தது எல்லாமே விரிவாய் இருந்தது. அவளுடன் படித்தவர்களோ, ஹாஸ்டலில் தங்கியிருந்தவர்களோ அவளிடம் நெருக்கமாகவில்லை, அனைவரிடமும் விலகியே இருந்தாள் என்றும் இருந்தது. ஆனால் தேவைப்படும் நேரத்தில் யாரிடமும் எந்த சங்கோஜமும் இன்றி அவளால் பழகவும் முடியும் என்றும், வேலை முடிந்த பின் எந்தப் பற்றுதலும் இல்லாமல் விலகவும் முடியும் என்றும் கூடக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

படித்துக் கொண்டிருக்கையில் அவள் நிறைய பகுதி நேர வேலைகளுக்குப் போயிருக்கிறாள். படித்து முடித்த பின் சில வேலைகள் பார்த்திருக்கிறாள் என்றாலும் எந்த நிரந்தரமான வேலையிலும் அவள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவள் பணத்திற்கு நிறையக் கஷ்டப்பட்டது போல் தெரியவில்லை. ஷேர் மார்க்கெட்டில் சிறிது ஈடுபாடு வைத்திருந்தாள் என்பதால் அது அவளுக்கு உதவியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று இம்மானுவல் நினைத்துக் கொண்டான். அவளுக்குக் காதலர்கள் யாரும் இருந்தது போல் தெரியவில்லை. ஆண்களுடன் நெருக்கமாக சகவாசம் வைத்திருந்த மாதிரியும் தெரியவில்லை.

இம்மானுவல் அவள் குடும்பத்தாரின் தகவல்களைப் பார்க்க ஆரம்பித்தான். அவள் தந்தை இப்போதும் மும்பையில் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அவரிடம் எத்தனை குழந்தைகள் என்று யாராவது கேட்டால் ஒரே பெண் என்று இரண்டாம் மகளைச் சொல்கிறார்... அவருடைய இரண்டாம் மனைவி வேலைக்குப் போகாமல் வீட்டில் தான் இருக்கிறாள். இரண்டாம் மகள் படிப்பில் பெரிதாய் சாதிக்கவில்லை. இப்போது அரசாங்க வேலை கிடைக்க பரிட்சைகள் எழுதிக் கொண்டிருக்கிறாள்...

சிந்துவின் தாயாரின் இரண்டாம் கணவன் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக இருக்கிறான். சிந்துவின் தாயார் சமூக சேவகியாய் இருக்கிறாள். டெல்லியில் தான் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன். அவன் இன்ஜீனியரிங் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நண்பர்கள் அதிகம்....

சிந்து இது வரை இரண்டு முறை வெளிநாடு சென்றிருக்கிறாள். ஒரு முறை சிங்கப்பூர், மலேஷியா இன்னொரு முறை மொரிஷியஸ். இரண்டுமே தனியாகத் தனியாகத் தான் சென்றிருக்கிறாள். இரண்டுமே சுற்றுப் பயணம் தான். வேலை விஷயமாக அல்ல.....

இம்மானுவல் அப்படியே மற்ற ஏராளமான விவரங்களை மேலோட்டமாகப் பார்த்தான். அவள் குடியிருந்த வீடுகள், சிறு வயதிலிருந்து அவளுடைய சில புகைப்படங்கள், அவள் அலைபேசி எண்கள், அவள் பேசிய எண்கள், அவளுக்குப் போன் செய்து பேசிய எண்கள்.....

திடீரென்று அவன் கண்கள் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. அவளுக்கு வெளிநாடு ஒன்றிலிருந்து சில நாட்களுக்கு முன் ஒரு போன்கால் போய் இருக்கிறது. அது எந்த நாடு என்ற தகவல் இல்லை. அந்த எண்ணும் பேசிய ஆளை அறிய முடிந்ததல்ல. அந்தப் போன்கால் ஒரு ராங் நம்பராக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சிறிது நேரம் பேசியிருக்கிறார்கள்.... பின் அந்த நம்பரில் இருந்தோ, வேறு வெளிநாட்டிலிருந்தோ அவளிடம் யாரும் பேசவில்லை. அதற்குப் பின் சில நாட்களில் அவள் மும்பையிலிருந்து  சென்னை போய் விட்டாள்.

இம்மானுவலுக்கு அந்தப் போன்காலை அலட்சியம் செய்ய முடியவில்லை...

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. Double thrilling. Very interesting.

    ReplyDelete
  2. அருமை. இந்த வாரம் கூடுதல் பாத்திரங்களுக்கு இடமளிக்கப் பட்டுள்ள விதம் நன்று. இதே பாணி ஒவ்வொரு வாரமும் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது...

    ReplyDelete
  4. சிந்து சிக்குவாளா? மாட்டாளா?? ஒரே குழப்பமாக இருக்குதே....

    ReplyDelete
  5. ஐயா இல்லுமிநாட்டி மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் என்று கூறுங்கள்

    ReplyDelete