என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, June 26, 2017

வூடூ டாக்டரை நிறுத்திய வூடூ போலீஸ்காரர்!

  
ல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள். அது போல் வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்டை வூடூ வழியிலேயே எதிர்க்க முடிந்த ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் 1926 ஆம் ஆண்டு அந்த ப்யூஃபோர்ட் நகருக்கே வந்து சேர்ந்தார். அவர் பெயர் ஜே எட் மக்டீர் (J. Ed McTeer). 22 வயதிலேயே போலீஸ் அதிகாரி ஆனதால் அவர் ’பாய் ஷெரீஃப்’ (Boy Sheriff) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். வயதாகி ரிடையரான காலத்திலும் அதே பெயர் அவருக்கு நிலைத்திருந்தது தான் வேடிக்கை.
அவர் வேலைக்கு வந்த போது போலீஸ் துறையிலேயே அதிகமாய் பேசப்பட்டவர் வூடூ பஸ்ஸார்ட் தான். மக்டீர் இளம் வயதிலேயே அமானுஷ்ய விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவருடைய பாட்டி ஆவிகளின் மீடியமாக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது. மக்டீரின் சிறுவயதில் அவரது தந்தையின் பண்ணையில் ஒரு ஆப்பிரிக்கத் தம்பதி பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூலம் வூடூ பற்றி அறிந்த அவர் இளமையிலேயே வூடூ குறித்த புத்தகங்களைப் படித்தும், வூடூ மக்களை சந்தித்தும் வூடூ குறித்த ஏராளமான தகவல்கள் அறிந்து வைத்திருந்தார்.

அவர் வேலைக்கு வந்த பிறகு பஸ்ஸார்டைப் பற்றி நிறையத் தகவல்கள் சேகரித்துக் கொண்டார். டாக்டர் பஸ்ஸார்டு தன்னிடம் கருப்புப் பூனையின் எலும்பு வைத்திருக்கிறார் என்று அவரே ஒத்துக் கொண்டிருந்ததை மக்டீர் அறிந்தார். சிலர் டாக்டர் பஸ்ஸார்ட் ஒரு சைத்தானின் கல்லை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அந்தக் கல்லைக் கையில் வைத்துக் கொண்டு டாக்டர் பஸ்ஸார்ட் சைத்தானை சூனிய வேலைகளில் ஈடுபடுத்துகிறார் என்றும் சொன்னார்கள். சிலர் பாம்புகளை வைத்து டாக்டர் பஸ்ஸார்ட் பல வேலைகளைச் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் பாம்புகளை வைத்து டாக்டர் பஸ்ஸார்டு நோய்களைத் தான் குணப்படுத்தி இருக்கிறார் என்று  மற்றவர்கள் சொன்னார்கள்.

அப்படி பாம்பினால் டாக்டர் பஸ்ஸார்ட் குணப்படுத்திய ஒருவர் மக்டீரிடம் தன் அனுபவத்தைச் சொன்னார். டாக்டர் பஸ்ஸார்ட் தான் உபயோகப்படுத்தும் பாம்புகளுக்குத் தனித்தனி பெயர்கள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். “நான் சென்றவுடன் என்னைப் படுத்துக் கொள்ளச் சொன்னார். பின் “ஷாம் இங்கே வா என்று ஏதோ ஆளை அழைப்பது போல டாக்டர் பஸ்ஸார்ட் அழைத்தார். நான் ஆளை எதிர்பார்த்தேன். ஆனால் வந்ததோ ஒரு பாம்பு. அது என் மேல் ஏறியது. பயத்தில் நான் நடுநடுங்கி விட்டேன். ஆனால் பஸ்ஸார்ட் பயப்படாதே. அது தீங்கு ஒன்றும் செய்யாது என்றார். அவர் சொன்னது போலவே என் மேல் ஊறி விட்டு இறங்கி விட்டது.அந்த நிகழ்வுக்குப் பின் அவரது நோய் நீங்கி விட்டது என்றும் அந்த நபர் சொன்னார்.  

எந்த வழிகளிலானாலும் நோய் தீர்க்க உதவுவதில் மக்டீருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் நோய் தீர்ப்பது போன்ற ஒன்றிரண்டு நல்ல வேலைகள் செய்தால் ஒன்பது வில்லங்கமான வேலைகள் டாக்டர் பஸ்ஸார்ட் செய்வதில் தான் மக்டீருக்கு உடன்பாடில்லை. அவருக்கும் வூடூ கலையில் ஞானம் இருந்ததால் அவரும் நல்ல காரணங்களுக்கு வூடூ சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். குறிப்பாக சூனியம் எடுப்பது மற்றும் நோய் தீர்ப்பது ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை பார்த்த மக்டீர் அதற்கு பணம் எதுவும் கூலியாக வாங்கிக் கொள்ளவில்லை. 

மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ளூர டாக்டர் பஸ்ஸார்ட் மேல் பயம் இருந்தது. அவர் ஏதாவது சூனியம் செய்து விட்டால் பிரச்னையாகி விடுமே என்று பயந்த அவர்கள் ஒரு அளவுக்கு மேல் டாக்டர் பஸ்ஸார்ட் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால் வூடூவில் ஓரளவு நன்றாகவே தேர்ச்சி பெற்றிருந்த மக்டீருக்கு அவர்கள் போல் பயமிருக்கவில்லை. அவர் டாக்டர் பஸ்ஸார்டை அழைத்து அவர் சட்ட விரோதமாக தொடர்ந்து நடந்து கொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று வெளிப்படையாகவே எச்சரித்தார்.

ஒரு முறை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது நீதிமன்ற வளாகத்தில் பஸ்ஸார்ட் கழுகுகள் ஏராளமாக வந்து குவிந்தன. அதை பஸ்ஸார்டின் செயலாகவே மக்டீர் கருதினார். உடனே அவர் அந்த பஸ்ஸார்ட் கழுகுகளை சுட்டுத்தள்ள ஆரம்பித்தார். இது டாக்டர் பஸ்ஸார்டுக்கு அவர் அனுப்பிய எச்சரிக்கையாகவே எல்லோரும் பார்த்தார்கள்.

அதோடு நின்று விடாத மக்டீர் ஒரு வலுவான வழக்கில் டாக்டர் பஸ்ஸார்டை சிக்க வைக்க நல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கைதி டாக்டர் பஸ்ஸார்டின் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை அறிந்திருந்தான் என்பது தெரியவரவே மக்டீர் அவனைச் சந்தித்து டாக்டர் பஸ்ஸார்டிற்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தினார். அவன் பஸ்ஸார்டிற்கு எதிராக சாட்சியம் அளிக்க பயந்தான். ஆனால் மக்டீர் அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.   

அந்த வழக்கில் அந்தக் கைதி சாட்சி சொல்வதற்கு கூண்டில் ஏறிய போது அவன் உடலில் பல நூறு எறும்புகள் ஊர்ந்து கடிப்பது போல அவன் உணர்ந்தான். அவன் வேக வேகமாகத் தன்னையே அடித்துக் கொண்டான். பின் வாயில் நுரை தள்ள அங்கேயே மயங்கி விழுந்தான். அதோடு அந்த வழக்கு முடிவுக்கு வந்து விட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.   இந்த நிகழ்வு டாக்டர் பஸ்ஸார்ட் மேல் பலருக்கு இருந்த கிலியை அதிகப்படுத்தியது.

ஆனால் அதுவும் மக்டீரைப் பின்னடைய வைக்கவில்லை. அவர் டாக்டர் பஸ்ஸார்டை எப்படியாவது தண்டித்தே தீருவேன் என்று சூளுரைத்தார். சில நாட்களில் டாக்டர் பஸ்ஸார்டின் மகன்களில் ஒருவன் ஒரு கார் விபத்தில் சிக்கி இறந்து போனான். பலரும் அதில் மக்டீரின் சூனியம் இணைந்துள்ளது என்று அபிப்பிராயப்பட்டனர். அவர்கள் பேசுவதைக் கேள்விப்பட்டோ, அல்லது அவர்கள் சொன்னதில் உண்மை இருப்பதாகத் தானே கண்டறிந்தோ டாக்டர் பஸ்ஸார்ட் நேரில் வந்து மக்டீரைச் சந்தித்தார். தங்களுக்குள் நடக்கும் பனிப் போரை உடனே நிறுத்திக் கொள்ளலாம் என்று சொன்னார். மக்டீர் பஸ்ஸார்டிடம் “சட்ட விரோதமான எந்தச் செயலிலும் நீங்கள் ஈடுபடாத வரை என்னுடைய குறுக்கீடு எந்த விதத்திலும் உங்கள் விஷயத்தில் இருக்காது என்று கறாராகச் சொல்லி விட்டார். சற்று யோசித்து விட்டு டாக்டர் பஸ்ஸார்ட் ஒத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து நீதிமன்றங்களுக்கு டாக்டர் பஸ்ஸார்ட் வருவது போன்ற விஷயங்கள் நின்று போயின என்றாலும் மற்ற வகைகளில் சின்னச்சின்ன சட்ட விரோதச் செயல்களை அவர் ரகசியமாய் தொடரவே செய்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் போருக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டது.  போருக்குப் போக விரும்பாத இளைஞர்கள் டாக்டர் பஸ்ஸார்டிடம் உதவி கேட்டுச் சென்றனர். அவரும் டாக்டர் பக் என்ற இன்னொரு டாக்டரும் சில விஷ மருந்துகளைத் தந்து உடல் பரிசோதனையின் போது அந்த இளைஞர்களின் இதயத்துடிப்புகள் அளவுக்கு அதிகமாக அடிக்கும்படி செய்தார்கள். இதய நோய் உள்ளதாக குறிக்கப்பட்டு அந்த இளைஞர்கள் போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தார்கள். இந்த விஷயம் மக்டீருக்குத் தெரிய வர அவர் சாட்சியங்களை வலுவாக அமைத்து டாக்டர் பஸ்ஸார்டையும், டாக்டர் பக்கையும் வழக்கில் சிக்க வைத்தார்.

டாக்டர் பஸ்ஸார்ட் தன் தரப்பில் வாதாட ப்ராண்ட்லீ ஹார்வே என்ற பிரபல வக்கீலை நியமித்தார். அந்த வழக்கில் வெறும் முன்னூறு டாலர் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்தார். அந்த வக்கீலின் மகன் பின் தான் எழுதிய நூலில் டாக்டர் பஸ்ஸார்ட் தன் தந்தைக்கு அந்த வழக்கிற்கு ஐந்தாயிரம் டாலர் தந்ததாக நினைவு கூறுகிறார். அந்த வக்கீலை தன் வீட்டுப் பரணுக்கு அழைத்துப் போன பஸ்ஸார்ட் பழைய ட்ரங்குப் பெட்டியிலிருந்து அந்த ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துத் தந்ததாகவும், அந்த ட்ரங்குப் பெட்டியில் இன்னும் கட்டுக் கட்டாக டாலர்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அந்த வழக்கு முடிந்த சில மாதங்களில் 1947 ல் டாக்டர் பஸ்ஸார்ட் வயிற்றில் கேன்சர் வந்து காலமானார். அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. சிலர், பல வூடூ பயிற்சியாளர்கள் அவர் சவப்பெட்டியில் இருந்து அவர் உடலை வெளியே எடுத்து அவரது எலும்புகளை தங்கள் வூடூ பயிற்சிகளுக்கு எடுத்துச் சென்று விட்டதாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அவர் கல்லறை இருக்கும் இடம் சரியாகத் தெரிந்திருந்தால் வூடூ ராணி மேரி லாவியூவின் கல்லறை போல இன்று பிரபலமாகி இருக்கும் என்றே தோன்றுகிறது.

டாக்டர் பஸ்ஸார்டின் வாரிசுகள் அவர் பெயரை உபயோகித்து இன்றும் வூடூ சிகிச்சைகள் செய்து வருகிறார்கள். அவர்கள் பெயர்கள் வேறு வேறாக இருந்த போதும் சிகிச்சைக்காக டாக்டர் பஸ்ஸார்ட் என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறார்கள்.

பஸ்ஸார்டின் மரணத்திற்குப் பின் மக்டீர் மேல் பல குற்றவாளிகளுக்கு பயம் ஏற்பட்டது. மற்ற போலீஸ் அதிகாரிகள் எத்தனை துன்புறுத்தினாலும் உண்மையை வெளியே சொல்லாத அந்தக் குற்றவாளிகள் மக்டீர் விசாரணைக்கு வரும் போது மட்டும் எதையும் மறைக்காமல் உண்மையைக் கக்கினார்கள். ‘உண்மையை ஒளிக்காமல் சொல்லி விடுகிறோம். தயவுசெய்து பஸ்ஸார்டுக்குச் செய்ததை எங்களுக்குச் செய்து விடாதீர்கள் என்று பலரும் அரண்டு போய்ச் சொன்னதாக வேறொரு போலீஸ் அதிகாரி நினைவு கூர்ந்தார்.
 
மக்டீர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வூடூ சிகிச்சை செய்வதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தார். தினமும் மூன்று மணி நேரம் அதற்காக ஒதுக்கினார்.  நீண்ட காலம் வாழ்ந்த அவர் 1976ல் Fifty Years as Lowcountry Witch Doctor என்ற நூலை எழுதினார். அதில் முக்கியமாக டாக்டர் பஸ்ஸார்ட் குறித்த பல தகவல்களை அவர் எழுதியுள்ளார்.

எட் மக்டீர் வழக்குகளையும் சிகிச்சைகளையும் கையாண்ட விதங்களை பேனார்ட் வுட்ஸ் (Baynard Woods) என்பவர் 2010ஆம் ஆண்டு    "Coffin Point: The Strange Cases of Ed McTeer, Witchdoctor Sheriff" என்ற நூலில் சுவாரசியமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த நூலில் உள்ள நிகழ்வுகளை மையமாக வைத்து பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் தயாரிப்பு நிறுவனம் தொலைக்காட்சி சீரியல்கள் எடுக்கவிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி உள்ளது.  

-  என்.கணேசன்  
   நன்றி: தினத்தந்தி 9.5.2017 


2 comments:

 1. போலிஸ்காரர் மக்டீர்...பஸ்ஸார்டுவை கொன்றதாக குறிப்பிடவில்லை.... கல்லறையும் தெரியவில்லை.... புரியாத புதிராகவே முடிஞ்சு போச்சே...!

  ReplyDelete
 2. Law of Karma.Everything comes back.Keep writing.

  Dr.Nagore Rumi sir once told that if you think negative about a person. You have done a black magic to that person with a minor intensity. In contrary, if you think positive about a person You have done white magic.

  So always think good, be good and do good. Everything comes back.

  With Regards,
  The Happy Zen (Blog)

  ReplyDelete