என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, June 1, 2017

இருவேறு உலகம் – 32


ங்கர நம்பூதிரி நீட்டிய ஜாதகங்களை மனோகர் வாங்கி விடவில்லை. புதிய நூறு ரூபாய்க்கட்டுகள் இரண்டு எடுத்து வைத்தான். “அவர் இந்த இரண்டு ஜாதகம் பார்க்க என் முதலாளி என் கிட்ட கொடுத்தனுப்பிய தட்சிணை இது. போதாதுன்னா சொல்லுங்க. அவர் கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்....

பணம் பேசும் போது மற்ற எல்லா சத்தங்களும் அடங்கி விடுகின்றன. சங்கர நம்பூதிரி பேச்சிழந்து அந்தப் பணத்தையே பார்த்தார். ‘இரண்டு ஜாதகம் பார்க்க இருபதாயிரம் ரூபாயா! அது போதாதென்றால் இனியும் வாங்கித் தருவானா?

சங்கர நம்பூதிரி மெல்லக் கேட்டார். “அவரே தான் ஜாதகம் பார்க்கணுமோ? நானும் அவர் கிட்ட இருந்து ஜோதிடம் கத்துகிட்டவன் தான்.... எனக்கும் தொழில் ஜோதிடம் தான்.....

எத்தனை சிறந்த குருவிடம் கற்றுக் கொண்டாலும் ஒவ்வொருவனும் தன் ஆழத்தின் அளவே அறிவை நிரப்பிக் கொள்ள முடியும்என்று மனதில் நினைத்துக் கொண்ட மனோகர் அமைதியாகச் சொன்னான். “என் முதலாளியே பெரிய ஜோதிட வித்வான். ஜோதிட சாஸ்திரத்தைக் கரைச்சுக் குடிச்சவர். அவர் கணிச்சிருக்கற பலனைச் சரிபார்க்க இன்னொரு வித்வான் அபிப்பிராயம் அவருக்குத் தேவைப்படுது... அதுக்கு உங்கப்பா சரியானவர்னு அனுப்பி இருக்கார்

சங்கர நம்பூதிரிக்கு அந்த இரண்டு பணக்கட்டுகள் மேல் இருந்த பார்வையை விலக்க முடியவில்லை. வருத்தத்துடன் சொன்னார். “அவர் பிடிவாதக்காரர். பணம் கூட அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது....

“இந்த இரண்டு ஜாதகங்களும் விசேஷமான வித்தியாசமான ஜாதகங்கள். இந்த ஜாதகங்களைப் பார்க்காமல் எந்த ஜோதிட ஞானமும் பூரணமடையாதுன்னு என் முதலாளி சொல்றார். பணத்துக்காக இல்லாட்டியும் இந்த விசேஷத்துக்காகவாவது பார்க்கச் சொல்லுங்களேன்....


மாஸ்டர் வீட்டில் நடந்ததை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட சங்கரமணி இப்படியும் ஒரு சக்தி வாய்ந்த மனிதனா என்று பிரமித்துப் போனார். ஆனால் விலைக்கு வாங்க முடியாத ஆட்களை அவரால் ரசிக்க முடிந்ததில்லை. தன் ஆதங்கத்தை அவர் மாணிக்கத்திடம் வெளிப்படுத்தினார். “இத்தனை சக்தி இருக்கற ஆளுக்கு அந்த மலைமேல் அந்த வாடகைக் கொலையாளி போன சமயம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கில்லையா.... என்ன கேட்டாலும் குடுத்துத் தெரிஞ்சுகிட்டா எனக்கு இந்த மண்டைக் குடைச்சல் குறையும்

“அவர் அப்படி விலை போற ஆளாய் தெரியலை....என்றான் மணீஷ்.

“அதெல்லாம் சும்மா. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு விலை இருக்கு. சில பேருக்குப் பணம், சில பேருக்குப் புகழ், சில பேருக்கு வேறெதாவது..... இந்த ஆளுக்கு என்னன்னு நாம கண்டுபிடிக்கணும். அவ்வளவு தான்....

மாணிக்கம் புன்னகைத்தார். அவர் மாமன் இது வரை இந்தப் பேருண்மையைப் பயன்படுத்தி தான்  பல காரியங்கள் செய்திருக்கிறார். இந்த மாஸ்டருக்கும் அவர் சொல்வது போல் ஏதாவது ஒரு விலை இருக்கலாம். ஆனால் மாஸ்டருக்குக் கூட அந்த மலை மேல் நடந்த நிகழ்ச்சிகள் தெரியவர வாய்ப்பில்லை என்று தோன்றியது. சம்பந்தப்பட்ட ஆட்கள் இருக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டும் அவரால் சுலபமாக அறிய முடிகிறது.   அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களை வைத்து ஓரளவு மட்டுமே அந்த நெருக்கமானவர்கள் பற்றி அறிய முடிகிறது. இது வரை மாஸ்டரை மிகவும் கூர்ந்து கவனித்ததில் அவர் அறிந்த விஷயம் இது. இதை அவர் மாமனிடம் வாய் விட்டுச் சொன்னார்.

சங்கரமணி அங்கலாய்த்தார். “சம்பந்தப்பட்ட ரெண்டு பேருமே இல்லையே. அது தானே ப்ரச்சனயே. பாவி கொலைகாரன் செத்துத் தொலைஞ்சுட்டான். க்ரிஷ் காணாமப் போயிட்டான்.... சரி க்ரிஷ் வீட்டுக்குப் போய் அந்த ஆள் என்ன கண்டுபிடிக்கறான்னு பார்ப்போம்..... “

மணீஷ் தன் மனதில் வலிமையாக எழுந்த எண்ணத்தைச் சொன்னான். “எனக்கென்னவோ அவர் தெரிஞ்சதை எல்லாம் நமக்குச் சொல்லிடறதில்லைன்னு தோணுது. என்னை மனசுல க்ரிஷை நினைக்கச் சொன்ன அவர் அது மூலமா நிறைய தெரிஞ்சுகிட்டாலும் முழுசும் நமக்கு சொல்லிடல...

மாணிக்கம் மகன் சொன்னதைப் பற்றி யோசித்தார். மாஸ்டர் என்கிற மனிதர் பல விஷயங்களில் மர்மமானவராகவே இருக்கிறார்...


தய் தன் பெற்றோரிடம் மாணிக்கத்துடன் மாஸ்டரைச் சந்திக்கப் போனதைத் தெரிவித்தான். தம்பி நலமாக இருப்பதிலும், அவன் வந்து விடுவான் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லா விட்டால் கூட அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் போனதாகச் சொன்னான். அங்கு   மாஸ்டருடனான தன் அனுபவத்தை அவன் சொன்ன போது கமலக்கண்ணனும், பத்மாவதியும் ஆச்சரியப்பட்டார்கள்.

கமலக்கண்ணன் சொன்னார். “அவர் பணம் காசு எதுவும் வாங்கறதில்லைன்னு சொல்றே. அதிகமா யார் வீட்டுக்கும் போகாதவர்னும் சொல்றே. அப்படிப்பட்டவர் நம்ம வீட்டுக்கு வர ஒத்துகிட்டதே பெரிய விஷயம்....

பத்மாவதி சொன்னாள். “அவருக்கு ஏதாவது கடவுளோட அருள் இருக்கு. அதனால தான் அப்படிச் சொல்ல முடியுது. அவர் எந்தக் கடவுளைக் கும்பிடறாருன்னு கேட்டியா?

உதய் குறும்பாகக் கேட்டான். “ஏன் நாளைல இருந்து நீயும் அந்த சாமியைக் கும்பிடப் போறியா?

“கும்பிட்டா தான் என்ன?

“அம்மா தாயே, அதெல்லாம் நான் கேட்கல. அவர் வர்றப்ப நீயும் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு தர்மசங்கடப்படுத்தாதே..... கொஞ்சம் கவுரவமா கம்பீரமா இரு....

“சரி தான் போடா. பெரிய கவுரவஸ்தன். கவுரமா இருக்கறவன் எவனாவது முன்னாடி போன அந்தக் கார்க்காரனை அப்படிக் கெட்ட வார்த்தையில் திட்டுவானாடா

உதய் தந்தையைப் பார்க்க, அவர் வாய் விட்டுச் சிரித்தார்.

அன்றிரவு உதயால் உறங்க முடியவில்லை. அவன் மாஸ்டர் சொல்லப் போவது என்னவாக இருக்கும் என்று பலவித அனுமானங்களில் மூழ்கிப் போனான். க்ரிஷ் பற்றி அவர் சொல்லும் தகவல்கள் அவன் நலமாக வந்து சேர உதவும்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவர் சக்தி வாய்ந்த மனிதர் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட மனிதர் இங்கு வந்து அறிவது மட்டும் நல்லதாக இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான்....

அவனைப் போலவே சங்கரமணி, மணீஷ், மாணிக்கம் மூவரும் தூக்கம் தொலைத்திருந்தார்கள். மாஸ்டர் என்ன சொல்வார் என்று அவர்களால் எந்த யூகத்திற்கும் வர முடியவில்லை. அவர் சொன்னதை வைத்தே அவர்கள் அடுத்த திட்டத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதால் தற்போதைய குழப்பத்தை முழுவதுமாகத் தீர்த்து வைக்கும் வகையில் அவர் சொல்லப் போவது இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆவலிலும் உறக்கம் வராமல் எப்போது விடியும் என்று அவர்கள் காத்திருந்தார்கள்.

அவர்கள் மட்டுமல்லாமல் மாஸ்டரும் அன்றிரவு உறங்காமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்குத் தன் சக்திகளைக் கூர்மைப்படுத்த வேண்டி இருந்தது. உதய் அலைகளையும், சங்கரமணி அலைகளையும் படித்து அனாயாசமாக அவர் சொல்ல முடிந்த நிகழ்வாக நாளை இருக்கப் போவதில்லை. எதிரி அந்த அலைகளையும் ஏதாவது விதத்தில் ஊடுருவிக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்....

தனக்கு விதிக்கப்பட்டதாய் உணரும்  பொறுப்பை என்றுமே தட்டிக் கழித்திராத மாஸ்டர் இந்த முறை தன் கடமையாற்ற குருவின் ஆசிகளை மனதார வேண்டினார். காலம் எத்தனை கடந்தாலும், குருவையே மிஞ்சி ஜொலித்தாலும் குரு குரு தான். உயிரோடு உருவத்தில் இருந்தாலும் சரி, பின் மறைந்து உருவமில்லாமல் அண்ட வெளியில் கலந்திருந்தாலும் சரி குருவுடன் ஒரு நல்ல சிஷ்யன் மானசீகத் தொடர்பில் இருக்க முடியும். வணங்கி அவருடைய ஆசிகளைப் பெற முடியும். எண்ணிய சிறிது நேரத்திலேயே அவர் குருவின் ஆசிகளை உணர்ந்தார். மனம் லேசானது.

கூடவே குரு ஏதோ சொல்வது போல் இருந்தது. மனதை ஒடுக்கிக் கூர்ந்து கவனித்தார்... ஆபத்து, அபாயம்.... என்பது போன்ற எச்சரிக்கையை அவர் உணர்ந்தார். அதற்கும் மேல் உணர முயன்ற போது அந்த அலைவரிசை கலைந்து போனது. யாரோ இடைமறிக்கிறார்கள்.... வலிமையாகத் தடை செய்கிறார்கள். குருவின் அலைகளோடு அவரால் கலக்க முடிந்தால் குருவுக்கு நடந்தது என்ன என்பதையும் அவரால் அறிந்து கொள்ள முடியும். அதனால் ஒட்டு மொத்தமாக அதைத் தடை செய்யப் பார்க்கிறார்கள் என்பது புரிந்தது.

மாஸ்டர் பிரார்த்தனைக்குத் திரும்பினார். சொந்த சக்திகள் போதாமல் போகும் போது இறைவனைத் தவிர வேறு ஏது ஒருவருக்கு அடைக்கலம்?..... அதிகாலை நான்கு மணிக்குத் தான் மாஸ்டர் உறங்கப் போனார். இரண்டு மணி நேரத் தூக்கம் முடிந்து, காலைக்கடன் முடிந்து, வழக்கமான தியானம், பிரார்த்தனை முடிந்து க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்பினார்.


காலை எட்டே முக்கால் மணிக்கே மாணிக்கமும் மணீஷும் க்ரிஷ் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மாஸ்டரை அழைத்துச் செல்ல வரவேண்டுமா என்று கேட்ட போது அவரே வருவதாக சுரேஷிடமிருந்து பதில் வந்தது. விலாசம் மட்டும் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். பத்மாவதி ஒரு மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்று பக்தி சிரத்தையுடன் காத்திருந்தாள். நெற்றி நிறையத் திருநீறும், நடுவே குங்குமமும் வைத்துக் கொண்டு அவள் வந்த போது உதய் தந்தை காதில் முணுமுணுத்தான். “கைல வேப்பிலை ஒன்னு தான் பாக்கி

கமலக்கண்ணன் சிரிப்பை அடக்க முயற்சி செய்யும் போதே பத்மாவதிக்கு மகன் தன்னைப் பற்றித் தான் ஏதோ சொல்லி இருக்கிறான் என்கிற சந்தேகம் வந்து விட்டது. மாணிக்கமும், மணீஷும் இருந்ததால் சத்தமாகக் கேட்காமல் மகன் அருகில் வந்து கேட்டாள். “என்னடா சொன்னே?

அம்மா பக்திப்பழமா வந்திருக்காங்கன்னு சொன்னா இவர் கிண்டலா சிரிக்கிறார்என்று உதய் போட்டுக் கொடுத்தான்.

கணவரை முறைத்த பத்மாவதி ஏதாவது சூடாகச் சொல்லி இருப்பாள். அதற்கு முன் வாசலில் மாஸ்டரின் கார் வந்து நின்றது. உதய் கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக ஒன்பது.

பரபரப்புடன் அனைவரும் வெளியே வந்தார்கள். மாஸ்டர் காரில் இருந்து இறங்கினார். காவி வேட்டியும், அரக்கு நிற கதர் சட்டையும் அணிந்தபடி  தேஜஸுடன் இறங்கிய அவரைப் பார்த்து அத்தனை கைகளும் கூப்பின. கை உயர்த்தி ஆசி வழங்கிய மாஸ்டர் ஏதோ ஒரு மெல்லிய குரலை அங்கே உள்வாங்கினார். ஒரு கணம் கண்களை மூடி அவர் கவனித்த போது ஒரு பலவீனமான குரல் அம்மா என்றழைப்பது கேட்டது. அது க்ரிஷின் குரல் என்பதை மாஸ்டர் உணர்ந்தார். க்ரிஷின் அலைகள் இங்கு தங்குதடையில்லாமல் வந்து சேர்கின்றன. அவருக்குள் ஒரு உற்சாகம் பிறந்தது...

அவரையே பார்த்துக் கைகூப்பி நின்றிருந்த பத்மாவதி இளைய மகன் அழைப்பது போல் உணர்ந்து திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

அதைக் கவனித்த மாஸ்டர் மெலிதாய் புன்னகைத்தார்.  குழந்தைகள் விஷயத்தில் ஒரு பாசமுள்ள தாயின் உள்ளுணர்வுச் சக்தி, யோகியின் சக்திக்குச் சிறிதும் சளைத்ததல்ல....

(தொடரும்)


என்.கணேசன்

11 comments:

 1. Nenga director aitalam full qulalify um irukku..

  ReplyDelete
  Replies
  1. சுஜாதாJune 1, 2017 at 6:47 PM

   ஆமாம். அட்லீஸ்ட் சீரியலாவது தரலாம். நல்ல சீரியலாக இருக்கும். நல்ல மெசேஜ் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் கணேசன் சார்.

   உங்க ப்ரமன் இரகசிய ஆனந்தவல்லிக்கு அடுத்தபடியாக நான் இந்த நாவலின் பத்மாவதி கேரக்டருக்கு ரசிகை ஆயிட்டேன். செம. சூப்பராக போகிறது உங்க நாவல்.

   Delete
 2. Simply amazing writing.

  ReplyDelete
 3. anna, sikram publish pannunga , aarvam thangala :)

  ReplyDelete
 4. கனகசுப்புரத்தினம்June 1, 2017 at 6:56 PM

  மனதில் பதியும் எழுத்து. மனதில் நிறையும் எழுத்து. அதுவே உங்கள் சிறப்பு. தொடர்க உங்கள் எழுத்து சேவை.

  ReplyDelete
 5. Marvelous finishing touch... Made my curiosity in full throttle :) semma ji
  Definitely this one beat Amanushyan.

  ReplyDelete
 6. Oru Paasamulla Thayin ullunarvu sakthi yogi in sakthi ku siridhum salaiththathalla......Beautiful truth!....
  Sakthi

  ReplyDelete
 7. Last lines are especially wonderful
  !!

  ReplyDelete
 8. Wow! Wow! What a powerful words! Especially in the last 3 paras!

  Sir! You're a Godsend man. This society will definitely benefit from you in many ways. And at the same time Government should take steps to protect people like you.

  ReplyDelete
 9. ஆழ்மன சக்திகளைப் பற்றி இதுவரை கேள்விபடாத புது தகவல்களை, இந்த நாவலில் தருகிறீர்கள்...ஆழ்மன சக்திகளின் உச்ச நிலைகள்...இதில் இடம்பெறுவது...அருமை...சார்

  ReplyDelete