சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 15, 2017

இருவேறு உலகம் – 34

      

ங்கு க்ரிஷைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று அறிய மாஸ்டர் முயன்றார். எதிரி கண்டிப்பாக அங்கே தான் இருக்க வேண்டும்.... ஆனால் எதிரி அவர் தேடலில் சிக்கவில்லை. அவருடைய சகல சக்திகளும் அந்த எதிரியைக் காணப் போதவில்லை. அவருடைய குருவைச் சுற்றிலும் இருந்த தடயங்களை அழித்தது போலவே எதிரி இங்கும் தன் சுவடுகளை அழித்து விட்டிருப்பது போல் இருந்தது. 

க்ரிஷ் எதற்காக எப்போது, எப்படி அமேசான் காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டான் என்பதை அறிய மாஸ்டர் முயன்றார். க்ரிஷின் பயணத்தை அந்த மலையிலிருந்து அந்த அமாவாசை இரவிலிருந்து தொடர முயற்சித்தது தோல்வியிலேயே முடிந்தது. க்ரிஷ் இருக்கும் இடத்தை மறைக்காமல் விட்ட எதிரிக்கு மற்ற தகவல்களை அவருடன் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இருக்கவில்லை போலிருக்கிறது....

ஒரு மணி நேரம் ஓடி விட்டதைக் கவனித்த மாஸ்டர் முதல் வரவிலேயே அங்கு அதிக நேரம் இருந்து விட விரும்பாமல் க்ரிஷ் அந்த மலையை எட்டியது எப்படி என்பதை அறிய நினைத்தார். எதிரியிடம் க்ரிஷ் எப்படி சிக்கினான் என்பது தெரிந்தால் மீதியை ஓரளவாவது யூகிக்கலாம் என்று தோன்றியது. அந்த அறையில் க்ரிஷ் செய்த கடைசி ஆராய்ச்சிகள் பற்றி ஆராய ஆரம்பித்தார். நல்ல வேளையாக அந்தக் கடந்த கால நிகழ்வுகளின் அலைகள் எதிரியால் அழிக்கப்பட்டிருக்கவில்லை. இருக்கும் இடம், மற்றும் சென்று வந்த இடங்கள் சம்பந்தப்பட்ட அலைகளில் ஆதிக்கம் செலுத்த முடிந்த அளவு மற்ற இடங்களில் எதிரியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லையோ என்னவோ?

க்ரிஷ் எப்படி எதிரியிடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான் என்பதை  மாஸ்டரால் அங்கு கண்டுபிடிக்க முடிந்தது. காட்சிகள் அவர் கண் முன் விரிய ஆரம்பித்தன....


தாசிவ நம்பூதிரி தன் முன்னால் கோட்டும் சூட்டுமாய் வந்து நின்ற மனோகரை விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தார்.

அதைக் கண்டு கொள்ளாத அவன் மிகவும் பணிவாக அவரிடம் சொன்னான். “என் முதலாளி ஜோதிட சாஸ்திரத்தைக் கரைச்சுக் குடிச்சவர். இந்த ரெண்டு ஜாதகங்களையும் அவர் அலசி ஆராய்ஞ்சு பார்த்துட்டார். ரெண்டுமே விசேஷ விசித்திர ஜாதகங்கள். ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் பார்த்து ஆராய்ச்சி செய்திருக்கிற அவர் இது வரைக்கும் இந்த ஜாதகங்கள் மாதிரி பார்த்ததில்லைன்னு நினைக்கிறார். இது சம்பந்தமா அவர் கணிச்ச முடிவுகள் சரிதானான்னு பார்க்க அவருக்கு இன்னொரு ஜோதிட வல்லுனர் தேவைப்படறார். அவர் விசாரிச்சப்ப உங்க பேரைச் சொன்னது நான் தான். அதனால தான் இங்கே வந்தேன். இதைப் பணத்துக்காக நீங்க பார்க்க வேண்டாம். ஜோதிடத்து மேல மதிப்பு வச்சிருக்கற நீங்க ஒரு சக ஜோதிடருக்கு செய்யற உதவியா பார்க்கணும்....

அவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். “ஆனா நீங்க கீழே என் மகன் கிட்ட பேசின தொனி பணத்தோடதா இருந்துதே

“அப்படிப் பேசியிருக்காட்டி அவரைத் தாண்டி இங்க வந்திருக்க முடியாதேஎன்று மனோகர் தாழ்ந்த குரலில் பணிவாகச் சொன்னான்.

அவர் முகத்தில் சிறிய புன்னகை எட்டிப் பார்த்தது. மெல்லத் தனக்கு எழுந்த  சந்தேகத்தைக் கேட்டார். “எனக்குத் தெரிஞ்சு முதலாளிகளுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கறதைப் பார்த்திருக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சு பார்த்ததில்லை. அப்படிக் கரைச்சுக் குடிக்க முடிஞ்சவன் முதலாளியா ஆனதுமில்லை.....

இப்போது அவன் புன்னகைத்தான். எல்லா விதிவிலக்குகளையும் நம்ம வாழ்க்கைல எப்போதாவது ஒரு கட்டத்தில் பார்க்கிறோம். இப்போது இந்த விஷயத்துல நீங்க பார்க்கறதா வச்சுக்கோங்க சாமி...

அவன் பேச்சு சாமர்த்தியத்தை ரசித்தவராய் சொன்னார். ஏதாவது ஒரு ஜாதகம் குடுங்க. அது விசேஷ விசித்திர ஜாதகம்னு என் மனசுக்குத் தோணினா மேற்கொண்டு ரெண்டையும் பார்க்கறேன். இல்லைன்னா ரெண்டையும் பார்க்க மாட்டேன்....

“சம்மதம் சாமிஎன்றவன் அவரிடம் க்ரிஷின் ஜாதகத்தை நீட்டினான். மேலோட்டமாக அந்த ஜாதகத்தைப் பார்த்தவர் முகம் அலட்சியத்திலிருந்து ஆர்வத்திற்கு மாறியது. அடுத்த ஜாதகத்திற்காகவும் கையை நீட்டினார். அவன் தந்தான். அதையும் பரபரப்புடன் பார்த்தார்.

பின் ஒரு நிமிடம் கண்மூடி யோசித்து விட்டு அவனிடம் சொன்னார். “இந்த ஜாதகங்களைச் சரியாகப் பார்க்க எனக்கு ரெண்டு நாள் வேணும். இதோட பலன்களை நான் உங்க முதலாளி கிட்ட நேரடியாய் தான் சொல்வேன். சம்மதமா? 

இதுவரை தெளிவாகவும், அசராமலும் எல்லாவற்றையும் கையாண்டவன் முதல் முறையாகத் திகைத்தான். இதற்கு ‘அவர் ஒத்துக் கொள்வாரா?


விளையாடுவது விதியா, எதிரியின் மதியா என்று மாஸ்டர் யோசித்தார்.  க்ரிஷின் ஆர்வத்தைத் தூண்டி விட்டது முதல் இந்தக் கணம் வரை நடந்திருப்பதைப் பார்த்தால் எதிரி மிகக் கவனமாகவும், பிரமாத அறிவுடன் தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சங்கரமணியும், வாடகைக் கொலையாளியும் எதிர்பாராத விதமாக இதில் பங்கெடுத்தது வேண்டுமானால் விதிவசமாக இருக்கலாம். ஆனால் அதையும் எதிரி தன் மதியால் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டதை மாஸ்டரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

மாஸ்டர் க்ரிஷின் தற்போதைய நிலைமையைக் கூர்ந்து கவனித்தார். அவன் உடலில் இருந்து விஷம் முழுவதுமாக வெளியேறி விடவில்லை என்றாலும் ஆபத்து நிலையை அவன் தாண்டி விட்டான் என்பது தெரிந்தது. இப்போதும் எதிரி அவர் கண்ணில் பட்டுவிடவில்லை. க்ரிஷை விட்டு தொலைவில் எதிரி சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அமேசான் காடுகளில் விலங்குகளும், விஷப்பூச்சிகளும் நிறைய இருக்கையில் க்ரிஷ் உயிருக்கு இன்னொரு ஆபத்தை ஏற்படுத்தி விட எதிரி தயாராக இருக்க மாட்டான். க்ரிஷின் அருகேயே இருந்த போதும் அவருடைய காணும் சக்திக்கு மறைவாக இருக்கும் எதிரி அவரை விடச் சக்தி வாய்ந்தவன் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவன் இப்போது அவரைப் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதை யூகித்துப் புன்னகைத்தார்.

‘நீ என்னை விட வலிமையானவனாக இருக்கலாம் எதிரியே. ஆனால் என்னுடன் தர்மம் இருக்கிறது. எனவே முடிவில் வெல்வது நானாகவே இருப்பேன்.....”  என்று கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிக்கு அவர் உறுதியாகத் தெரிவித்தார். அந்தச் செய்தி எதிரியைச் சென்றடைந்ததையும் அவர் உணர்ந்தார். பதில் எதாவது வந்து சேர்கிறதா என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் எதிரி செயலில் தான் எதையும் தெரிவிப்பது என்ற கொள்கையில் இருப்பவன் போல இருந்தது.  எந்தப் பதிலுமே இல்லை.

இனி க்ரிஷ் மூலமாகவே எதிரி பேசலாம் போல் தெரிந்தது. க்ரிஷைப் போல் ஒரு தூய்மையான மனிதன் அழிவுக்குப் பயன்பட இருப்பது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இங்கு வருவதற்கு முன் உணர்ந்தது மிகவும் கொஞ்சம். ஆனால் இங்கே வந்த பின் அறிந்து கொண்டது அவன் மேல் மிகுந்த மரியாதையை அவர் மனதில் ஏற்படுத்தி விட்டது. குருவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது’.  அந்த உச்சமான அறிவு தன்னை தீயசக்தி  பகடையாகப் பயன்படுத்துகின்றது என்று அறியாமல் இருந்து விடுமா? இல்லை உணர்ந்து தன்னை விடுவித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....


செந்தில்நாதனின் வருகை மாணிக்கத்தையும் மணீஷையும் மிகவும் அசவுகரியப்படுத்தியது. உதய் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றதைப் பார்த்து அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘இருவரும் பரம எதிரிகள் போல் அல்லவா இருந்தார்கள். இப்போது என்ன இந்த திடீர் மரியாதை?என்ற கேள்வி மாணிக்கத்தின் மனதில் பலமாக எழுந்தது. செந்தில்நாதனும் மாணிக்கத்தையும் மணீஷையும் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை.  மந்திரி மாணிக்கத்திற்கு சம்பிரதாயமான மரியாதை வணக்கம் செலுத்தி விட்டு மணீஷைப் பார்த்துத் தலையசைத்தார்.

உதய் அவர் அருகே உட்கார்ந்து சக்தி வாய்ந்த மனிதர் ஒருவர் அங்கு வந்திருப்பது எப்படி என்பது பற்றி தாழ்ந்த குரலில் விளக்கமாய் சொன்னான். மாணிக்கத்திற்கு தாங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது செந்தில்நாதனுக்குத் தெரிவதில் உடன்பாடில்லை என்ற போதும் வேறு வழியில்லாமல்  அமைதி காத்தார்.

செந்தில்நாதனுக்கு உதய் சொன்னதைக் கேட்டு மாஸ்டர் மேல் சந்தேகம் அதிகரித்தது. அவருக்கென்னவோ வெளியே நின்ற கருப்புக் கார் தான் அவர் அங்கிருந்த போது அந்த மலையை நோக்கி அந்த இரவு வந்திருக்கும் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. உதய் சொல்வதைக் கேட்கையில் மாயாஜாலக் கதை கேட்பது போல் இருந்தது.   ஆனால் அவன் அந்த ஆள் வீட்டுக்குப் போகும் வழியில் முன்னே போன கார்க்காரனைக் கெட்ட வார்த்தைகளில் உதய் திட்டியது மாஸ்டருக்குத் தெரிந்திருக்க என்ன வாய்ப்பிருக்கிறது? அப்படியும் அந்த ஆள் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்றால் ஏதாவது சக்தி கூடுதலாக அவருக்கு இருக்கலாம்..... அந்த அளவு சக்தி இருக்கும் ஆள் அந்த மலைக்கு அந்த இரவில் வரக் காரணம் என்னவாக இருக்கும்?...

அந்த ஆள் இரண்டு மந்திரிகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட ஆள் என்பதால் அவரிடம் போலீஸ் முறையில் விசாரிக்க முடியாது என்று செந்தில்நாதன் புரிந்து கொண்டார். ஆனால் அந்த ஆள் விசாரிக்கப்பட வேண்டிய ஆள் தான் என்பதில் அவருக்கு மறு கருத்து இல்லை. நாசுக்காகத் தான் விசாரிக்க வேண்டும்...


மாஸ்டர் கம்பீரமாக ஹாலுக்கு வந்தார். அனைவரும் எழுந்து நிற்க செந்தில்நாதனும் அவரைக் கூர்ந்து பார்த்தபடியே எழுந்து நின்றார்.

மாஸ்டரின் கண்கள் செந்தில்நாதனை ஊடுருவிப் பார்த்தன. மிக நேர்மையான மனிதன்என்று செந்தில்நாதனின் அலைகள் அவருக்குத் தெரிவித்தன. கூடவே அவர் தற்போது வந்திருக்கும் கருப்புக் கார்  தான் சில நாட்கள் முன் மலையருகே வந்திருக்கிறது என்ற சந்தேகம் செந்தில்நாதனுக்கு அழுத்தமாக வந்திருக்கிறது என்பதும் தெரிந்தது. விதி நல்லவர்களை எல்லாம் தற்போது ஏனோ அவருக்கு எதிரணியிலேயே கொண்டு வந்து சேர்த்த வண்ணம் இருக்கிறது!

 (தொடரும்)

 என்.கணேசன்

7 comments:

  1. Super update sir. Could not guess even after 34 chapters. Surely this will be your unique novel in many aspects.

    ReplyDelete
  2. சுஜாதாJune 15, 2017 at 6:23 PM

    ஐயோ என்ன சார் இது க்ரிஷ் எதிரி கையிலா சிக்கி இருக்கிறான்?

    ReplyDelete
  3. Padikrapo nanga vera ulagathuku poitrome ganeshan ji...

    ReplyDelete
  4. எந்த சஸ்பென்ஸையும் உடைக்காம, அதே விறுவிறுப்போட,இந்த வார பகுதியையும் முடிச்சிட்டிங்களே சார்....!எதிரி யார்? அவன் எப்படி புத்திசாலிதனமா கிரிஷ்க்கு வலை விரிச்சான்? விசபாம்பு கடிப்பட்ட க்ரிஷ எப்படி காப்பத்துனான்?
    எதிரி வேற்று கிரக வாசியா?
    ஜாதகம் பாக்குற அந்த முதாலாலி யாரு? இதெல்லாம் குழம்ப வைக்கிறது.

    ReplyDelete
  5. அன்பு கணேசன், உங்கள் எழுத்து அருமை. அற்புதம். தமிழில் தற்போது இந்த அளவு சஸ்பென்ஸ், ஆன்மிகம், கதாபாத்திரங்களை உருவாக்கும் தன்மை, நிகழ்வுகளை நேரடியாக வாசகர்கள் பார்ப்பது போல் எழுதும் சிறப்பு அனைத்தும் கலந்த பாணி யாரிடத்திலும் பார்க்கவில்லை. சில அத்தியாயங்கள் பல முறை படிக்க வைக்கிறது. நிறைய எழுதுங்கள். ஆசிர்வாதம்.
    லக்‌ஷ்மி ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  6. அருமை . இத்தனை நேர்த்தியாக கதை பின்னும் உங்கள் எழுத்துக்கு நன்றி. ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யம் கூடி வருகிறது.

    ReplyDelete