சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 22, 2017

இருவேறு உலகம் – 35


வலுடன் அவரைப் பார்த்த மற்ற முகங்களைப் பார்த்து மாஸ்டர் புன்னகைத்தார். கனிவாகச் சொன்னார். “க்ரிஷ் நலமாக இருக்கிறான். சில நாட்கள் கழித்து வருவான். பயப்பட வேண்டியதில்லை

தடாலென்று அவர் காலில் கண்ணீருடன் விழுந்த பத்மாவதியைத் தொடர்ந்து கமலக்கண்ணன் நமஸ்கரித்தார். கமலக்கண்ணனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த பயமும், சந்தேகமும் கூட விலகி மனம் மிக லேசானது. பத்மாவதியோ மகனின் செல்போனில் இருந்து வந்த தகவலிலேயே முழு சந்தேகமும் விலகியவளாக இருந்தாலும் அவ்வப்போது மூத்த மகன் கவலைப்படுவது போல் தெரிந்ததால்  சின்னதொரு பயத்தைப் பெற ஆரம்பித்திருந்தாள். மாஸ்டர் வாயால் வந்த வார்த்தைகள் கடவுளிடம் இருந்தே வந்த வார்த்தைகளாய் உணர்ந்து அவள் பயம் நீங்கி, கண்கலங்கி, மனம் நெகிழ்ந்து, வணங்கி எழுந்தவள் மூத்த மகனைப் பார்த்து ‘நீயும் அவர் காலில் விழுஎன்று பார்வையால் ஜாடை செய்தாள்.

உதயும் அவர் காலில் விழுந்து வணங்கினான். பத்மாவதி மாஸ்டரிடம் சொன்னாள். “நல்ல பொண்ணு அவனுக்கு அமையணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி

இளைய மகன் ஹரிணியைக் காதலிப்பது தெரிந்தவுடன், அவன் நலமாய் இருந்து சில நாட்களில் வருவான் என்பது உறுதியானவுடன், அந்தத் தாய் மனம் முதலில் மூத்த மகனுக்கு நல்ல பெண்ணாய் பார்த்து சீக்கிரம் திருமணம் முடித்து விட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது. மாஸ்டர் புன்னகையுடன் அவனை ஆசிர்வதித்தார்.

கமலக்கண்ணன் அவரிடம் பயபக்தியுடன் கேட்டார். “ க்ரிஷ் இப்ப எங்கே இருக்கான் சாமி

உதய் மாஸ்டரை பதற்றத்துடன் பார்த்தான். மாஸ்டர் அமைதியாகச் சொன்னார். “காட்டுப் பகுதியில் இருக்கிற மாதிரி தெரியுது.....””””””.

பத்மாவதி மூத்த மகனைப் பெருமையுடன் பார்த்து விட்டுச் சொன்னாள். “இவன் முதல்லயே சொன்னான், அவன் அப்படியே ஆராய்ச்சி செய்துட்டே எங்கயாவது போயிருப்பான்னு. அப்படியே தான் நடந்திருக்கு போலருக்கு. ஏதாவது மூலிகையை ஆராய்ச்சி செய்துகிட்டிருப்பான்....

மாஸ்டரின் தேஜஸையும், தீர்க்கமான பார்வையையும் கண்ட செந்தில்நாதனுக்கு அவரை ஒரு போலி சாமியார் போல் நினைக்க முடியவில்லை. ஆனால் கருப்பு கார் குறித்த தன் உள்ளுணர்வையும் அவரால் தவிர்க்க முடியவில்லை.  மாஸ்டரைக் கூர்ந்து பார்த்தபடி நெருங்கினார். “வணக்கம்

உடனே உதய் அவரை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தினான். மாஸ்டர் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டு தலையசைத்தார்.

செந்தில்நாதன் பணிவாகக் கேட்பது போல் கேட்டார். “சுவாமிக்கு எந்த ஊர்?

மாஸ்டர் சொன்னார். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்

செந்தில்நாதன் அந்தப் புறநானூற்றுப் பாடல் வரியில் திருப்தியடைந்து விடவில்லை. “சென்னைக்கு எந்த ஊரில் இருந்து வந்தீங்க சுவாமி?

“காசியில் இருந்து வந்தேன்....

இந்த ஆள் வந்தது காசியிலிருந்தா, ராமேஸ்வரத்திலிருந்தா என்பதை எல்லாம் டிபார்ட்மெண்ட் மூலமாகக் கூட விசாரித்துக் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணிய செந்தில்நாதன் வேறெதுவும் கேட்காமல் அவரைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னார். “சுவாமி. க்ரிஷ் காணாமல் போனது சம்பந்தமான விசாரணைல என்ன நியமிச்சிருக்காங்க. இப்ப க்ரிஷ் எங்கே இருக்கான்னு தெளிவா சொன்னீங்கன்னா நான் போய் அவரைக் கூட்டிகிட்டு வந்து இவங்க கிட்ட ஒப்படைச்சுட்டு கடமையை முடிச்சுக்குவேன்

அங்கிருந்த அத்தனை பேரும் மாஸ்டர் என்ன பதில் சொல்கிறார் என்று ஆர்வமாகப் பார்த்தார்கள்... 

மாஸ்டர் செந்தில்நாதனைப் பார்த்துப் புன்னகைத்தார். “இவங்க எல்லாம் என்னைப் பத்தி அதிகப்படியா உங்க கிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு நண்பரே. அவன் இருக்கற விலாசம் எல்லாம் சொல்லி உங்களுக்கு உதவற அளவு எனக்கு சக்தி கிடையாது. ஏதோ சில காட்சிகள் தெரியும். அது கூட உள்ளுணர்வு எதோ கொஞ்சம் சரியாய் சொல்லும். அதை அடியேன் மத்தவங்களுக்குச் சொல்வேன். இப்ப காட்டுப் பகுதில அவன் நலமாய் இருக்கான்னு தெரிஞ்சுது. அதோட அவன் நலமாய் இங்கு வந்து சேர்வான்னு உள்ளுணர்வு சொல்லிச்சு. அந்த ரெண்டையும் சொல்லிட்டேன். அவ்வளவு தான்….”

செந்தில்நாதனுக்கு அவர் உண்மையைச் சொன்னது போல் தான் தோன்றியது. அதே சமயத்தில் அவர் எல்லா உண்மையையும் சொல்லி விடவில்லை என்பதும் புரிந்தது. முழு உண்மையையும் இந்த ஆள் வாயிலிருந்து வரவழைப்பது எப்படி என்று அவர் யோசித்தார். அதைப் படித்த மாஸ்டர் குறும்புப் புன்னகையுடன் அவருக்கு மட்டும் கேட்கும் படியாக “போலீஸ் புத்திஎன்று முணுமுணுத்தார்.

செந்தில்நாதன் திகைத்துப் போனார். அவர் மனைவி அடிக்கடி அவரிடம் பயன்படுத்தும் வார்த்தை தான் அது. அதில் ‘புத்திஎன்பதை ஒருவிதமாக அழுத்திச் சொல்வாள் அவள். அவளைப் போல் அதே விதத்தில் தான் மாஸ்டரும் அழுத்திச் சொன்னார். உதய் அதிகப்படுத்திச் சொல்லி விடவில்லை என்பதை இப்போது அவர் முழுவதுமாக நம்பினார். திகைப்பிலிருந்து மீண்டு அவர் அடுத்த கேள்வி கேட்க வாய் திறப்பதற்குள் மாஸ்டர் நகர்ந்து விட்டார். மாஸ்டரை மாணிக்கம் நெருங்கி விட்டார்.

எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி சுவாமி .... உட்காருங்கஎன்றார் மாணிக்கம். சுருக்கமாக மற்றவர்களிடம் சொன்னதை இந்த சுவாமி தன்னிடம் விரிவாகச் சொல்வாரா என்ற ஆசை லேசாக அவர் மனதில் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் சொல்லாத மாஸ்டர் சின்னப் புன்னகையுடன் அவரிடம் தலையசைத்து விட்டு, நான் கிளம்புகிறேன்என்று அனைவரையும் பார்த்துச் சொன்னார்.

அதைக் கேட்ட பத்மாவதி வழியில் நின்றிருந்த உதயைத் தள்ளி விலக்கி விட்டு, அவன் கோபப் பார்வையையும் பொருட்படுத்தாமல் மாஸ்டர் அருகே  வந்து அவரிடம் “பழமாவது சாப்பிட்டுட்டு போங்க சுவாமிஎன்று சொன்னாள்.

அவளுக்கு இப்படி ஒரு மகான் வீட்டுக்கு வந்து, அவர்களுக்கு நல்ல செய்தியும் தெரிவித்து விட்டு, ஒன்றும் சாப்பிடாமல் போவதில் வருத்தம். உபவாசம் என்றாலும் கூட பழம் எல்லாம் சாப்பிடலாம் என்று பலர் சொல்வதையும், கடைபிடிப்பதையும் அவள் பார்த்திருக்கிறாள்.

மாஸ்டர் சொன்னார். “உபவாசம் என்றால் என்னைப் பொருத்த வரை முழு உபவாசம் தான் அம்மா. தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை நான் உபவாசமாக நினைக்கிறதில்லை... கண்டிப்பா உங்க சின்ன மகன் வந்த பிறகு ஒரு நாள் வர்றேன்.... எனக்கும் அவர் கிட்ட பேசித் தெரிஞ்சுக்க நிறைய இருக்கு... அப்படி வர்றப்ப சாப்பிடறேன்...

பத்மாவதிக்குப் பூரிப்பு தாங்கவில்லை. அவள் மகனிடம் பேசித் தெரிந்து கொள்ள நிறைய இருப்பதாக இந்த மகானே சொல்கிறாரே.... கண்கள் சந்தோஷத்தில் ஈரமாயின. வார்த்தைகள் வராமல் அவரைப் பார்த்துக் கைகூப்பினாள்.

அவர் வெளியே போகும் போது அவசரமாக உதயும் கூடப் போனான்.   அவர் கார் ஏறி அமர்ந்தவுடன் அவரிடம் கவலையுடன் கேட்டான். “சுவாமி கவலைப்பட எதுவும் இல்லையில்லையா?”.  

அவர் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னார். “இல்லை”.  நடப்பது நடந்தே தீரும் என்றால் கவலைப்பட என்ன இருக்கிறது என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை, பாவம்! அவன் நிம்மதியடைந்தான்.

அவர் கார் கிளம்பி விட்டது.   அவர் மனம் சற்று முன் க்ரிஷ் அறையில் அறிந்து கொண்ட விஷயங்களை அசை போட்டது. எப்படிக் கச்சிதமாகத் திட்டமிட்டு எதிரி க்ரிஷைக் கையாண்டிருக்கிறான் என்பதை நினைக்கையில் எதிரியை அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

க்ரிஷிடம் எதிரி தொடர்பு கொண்ட முதல் கணத்திலிருந்து அவரால் அறிய முடிந்த காட்சிகள் மறுபடி அவர் மனதில் விரிந்தன....


க்ரிஷ் நிகோலா டெஸ்லா என்ற செர்பிய விஞ்ஞானியின் எழுத்துகளில் மூழ்கி இருந்தான். அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.     1856 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அந்த விஞ்ஞானியின் கருத்துகள் அவருடைய காலத்தை மிஞ்சிய நிதர்சன உண்மைகளாய், இப்போதும் சத்தியமான வார்த்தைகளாய் இருந்தன. தன் காலத்தில் சரியாக கவனிக்கப்படாதவராய், பெரிய அங்கீகாரம் பெறாதவராய், ஒரு கிறுக்கராகக் கருதப்பட்டவராய் வாழ்ந்த அந்த விஞ்ஞானியின் ஒரு வாசகத்தை அவன் திரும்பத் திரும்பப் படித்தான்.


“If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration."


(பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய வேண்டுமானால் சக்தி, அலைவரிசை, அதிர்வுகள் மூலமாக சிந்தித்துப் பார்.)

சில வரிகளில் க்ரிஷ் மணிக்கணக்காகத் தங்குவது உண்டு. அப்படித்தான் அன்று மெய் மறந்து யோசித்துக் கொண்டிருந்தான்.  அதிலிருந்து மீண்ட போது தான் அவன் லேப் டாப் திரையில் ஏதோ வாசகம் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கவனித்தான்.

“ஹலோ க்ரிஷ் சவுக்கியமா?

க்ரிஷ் திகைப்புடன் பார்த்தான். அவன் எப்போதுமே ‘சேட் (chat)ஐயும் மற்ற அறிவிப்புகளையும் தன் லாப்டாப்பில் அணைத்தே வைத்திருப்பவன்....

முதலில் எழுந்த சிந்தனை ஏதோ ‘ஹேக்கிங் நடந்து விட்டதோ என்ற சந்தேகம் தான்.... இந்த வாசகம் எத்தனை நேரமாய் மிளிர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் பதிலுக்குக் காத்துக் கொண்டிருப்பது போல் அது இன்னமும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது...

ஆழ்ந்த யோசனையுடன் பதில் கேள்வியை அழுத்தினான். “யார் நீங்கள்?

உன் நண்பன் என்ற பதில் உடனே ஒளிர்ந்தது.

பெயர் என்ன? மறு கேள்வியை க்ரிஷ் உடனே அழுத்தினான்.

பெயரில் என்ன இருக்கிறது? என்ற வாசகம் பதிலுக்கு ஒளிர்ந்தது.

பிடிகொடுக்காமல் பேசும் ஆட்கள் க்ரிஷுக்குப் பிடித்தமானவர்கள் அல்ல. உடனடியாக லாப்டாப்பை ஆஃப் செய்து விட்டுப் பின் என்ன நடந்திருக்கிறது என்பதை ஆராயத் தோன்றியது. ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அதைச் செய்யாமல் அவனைத் தடுத்தது.

வேறு எதுவும் எழுதாமல் மெள்ள  இந்த வாசகங்கள் இணையத்தில் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்தான். தெரியவில்லை. அவனுக்குத் தெரியவில்லை என்றால் வேறு எந்தக் கம்ப்யூட்டர் மற்றும் இணைய மேதைக்கும் தெரிய வாய்ப்பில்லை .....

திகைப்பு மாறாமல் லாப்டாப்பில் இருந்து விலகி தன் நாற்காலியில் சாய்ந்த க்ரிஷ் இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று மறுபடியும் நிகோலா டெஸ்லாவின் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தான். எப்போதுமே இது போன்ற சுவாரசியமான எழுத்துகளில் ஆழ்ந்தால் மணிக்கணக்கில் தன்னை மறந்து போகும் க்ரிஷுக்கு இப்போது அது முடியவில்லை. அவனுக்கே புரியாத ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது முழுமனதை முன்பு போல அந்த எழுத்துகளில் திருப்ப முடியவில்லை. ஆனாலும் பாதி கவனம் அந்த புத்தகத்திலும் மீதி கவனம் லாப்டாப் திரையிலுமாக இருந்தது.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்துப் புதிய வாசகம் லாப்டாப் திரையில் மிளிர்ந்தது. 

“நிகோலா டெஸ்லா நிஜமாகவே க்ரேட் தான். இல்லையா?

க்ரிஷ் அதிர்ந்து போனான்.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. சுஜாதாJune 22, 2017 at 6:36 PM

    அப்பாடா க்ரிஷ் வந்துட்டான். சுவாரசியம் விறுவிறுப்பு மட்டுமல்லாமல் கதையோட சேர்ந்து நிறைய விஷயங்கள் உங்க எழுத்து மூலமா தெரிஞ்சுக்க முடியுது சார். நன்றி.

    ReplyDelete
  2. Mesmerized by your writings Ganeshan sir. Great flow.

    ReplyDelete
  3. நிகோலா டெஸ்லா.... Sonna karuthu arumai sir.... Krish vanthathala..... Ini,intha thodaril,,,,, neraiya 'science' therinjikkalam..nu.... Nenaikkiren...

    ReplyDelete
  4. அற்புதமான எழுத்து நடை , மிகவும் சுவாரசியமாக இருக்கிறது, நிகோலோ டெஸ்லா அவர்களின் வார்த்தை 100 சதவிகிதம் உண்மை.

    ReplyDelete
  5. “ஹலோ க்ரிஷ் சவுக்கியமா?” இது நிகோலோ டெஸ்லா அனுப்பிருப்பாரோனு நினைத்தேன்.
    எதிரியையும் ஹீரோ ஆக்குறீங்க. இது எப்பவும் நீங்க செய்றது தான.
    நடத்துங்க

    ReplyDelete