சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 8, 2017

இருவேறு உலகம் – 33

ங்கர நம்பூதிரி தயக்கத்துடன் தான் இரண்டு ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க மாடிக்குச் சென்றார். தந்தையைப் பார்ப்பதற்கு முன்பு பணத்தைத் தொடக்கூட அவர் முற்படவில்லை என்பதை அவன் கவனித்தான்.

பணம் மாற்ற முடியாத, பணத்திற்காக அதிகமாய் ஏங்காத மனிதராய் தான் சதாசிவ நம்பூதிரி இன்றும் இருந்தார். அவர் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாளைக்குப் பத்துப் பேருக்குத் தான் ஜாதகம் பார்ப்பார். அதற்கு மேல் கோடி பணம் கொடுத்தாலும் பார்க்க மாட்டார். ஜாதகம் பார்க்கும் அந்தப் பத்துப் பேரிடமும் அவர் இவ்வளவு பணம் கொடு என்று கேட்க மாட்டார். அவர்களாய் அங்கிருந்த தட்டில் எவ்வளவு வைத்தாலும் அதை ஏற்றுக் கொள்வார். ஜாதகம் பார்க்க வருபவர்களில் பத்தாவது ஆளுக்குள் வந்து விட வேண்டும் என்று சீக்கிரமே வந்து மக்கள் காத்திருந்தாலும் தங்கள் நிதிநிலைமை பெரியதாக முன்னேறி விடவில்லை என்ற வருத்தம் சங்கர நம்பூதிரிக்குச் சிறுவயதில் இருந்தே உண்டு. அவர் அதைத் தந்தையிடம் சொல்லி இருக்கிறார். “அவனவன் சினிமாக்கும், ஓட்டலுக்கும் கொடுக்கறதுல கணக்கு பார்க்கறது இல்லை.... ஆனா இங்க வந்தா பத்து ரூபா இருபது ரூபா நோட்டாய் தான் எடுக்கிறான்... நீங்க வாய்விட்டு இவ்ளவு வேணும்னு சொல்லணும். அப்ப தான் அவன் கொடுத்துட்டுப் போவான்.

சதாசிவ நம்பூதிரி சொல்வார். “கொடுக்கறது அவனல்ல, பகவான். நமக்கு எவ்வளவு தேவையோ அதைக் கண்டிப்பா கொடுப்பான்....

தேவைக்கேற்ற பணத்தைப் பகவான் கொடுத்ததென்னவோ வாஸ்தவம். ஆனால் தேவைகளையே குறைத்துக் கொண்டிருந்த மனிதருக்கு பகவானும் பெருந்தன்மை காட்டாமல் அளவாகவே தந்ததில் சங்கர நம்பூதிரிக்கு வருத்தமே. தன் காலத்தில் இந்த முட்டாள்தனத்தைச் செய்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஜாதகம் பார்க்க ஆரம்பித்த பின்னும் அவர் காலம் வரவேயில்லை. எத்தனை கூட்டமிருந்தாலும் வாடிக்கையாளர்கள் காத்திருந்தாவது தந்தையிடம் ஜாதகம் காட்டுவதையே விரும்பினார்கள். ஒரு கட்டத்தில் வேறு ஊருக்குப் போயாவது பிழைத்துக் கொள்ள சங்கர நம்பூதிரி முடிவெடுத்த போது தான் சதாசிவ நம்பூதிரி ஜாதகம் பார்ப்பதை நிறுத்தி மகனுக்கு வழி விட்டார். அதன் பின் அவர் யாருக்கும் ஜாதகம் பார்க்கவில்லை. அதற்குப் பின் அதே அளவு மக்கள் தனக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த சங்கர நம்பூதிரி ஏமாந்து போனார். தினமும் மூன்று, நான்கு பேர்கள் தான் வந்தார்கள். வருத்தத்தில் தன் தந்தையை மீண்டும் ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கச் சொன்னார். பல முறை வற்புறுத்தியும் சதாசிவ நம்பூதிரி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் இப்போது இந்த இருபதாயிரம் ரூபாய்க்கும் அவர் இசைவார் என்ற நம்பிக்கை சங்கர நம்பூதிரிக்கு இருக்கவில்லை.

அவர் மேலே வந்த போது சதாசிவ நம்பூதிரி பாகவதத்தில் மூழ்கி இருந்தார்.  நிமிர்ந்து மகனை என்ன என்று பார்த்தார். சங்கர நம்பூதிரி விஷயத்தைச் சொன்னார். சதாசிவ நம்பூதிரி சிறிதும் சுவாரசியம் காட்டாமல் தன் பாகவத புத்தகத்திற்குப் பார்வையைத் திருப்பிக் கொண்டார். “அந்த ஆளைப் போகச் சொல்லு....

ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்தார் சங்கர நம்பூதிரி. மனோகரிடம் அந்த ஜாதகங்களை நீட்டினார். “அவர் ஒத்துக்கலை

அவன் அதை வாங்கவில்லை. அமைதியாக மெல்லச் சொன்னான். “ஒரு ஜாதகத்துக்கு இருபதாயிரம் தர்றேன். இரண்டுக்கு நாற்பதாயிரம்....

சங்கர நம்பூதிரி திகைத்தார். நாற்பதாயிரத்தில் நான்கு மாத காலம் அவர் குடும்பச் செலவைக் கஷ்டமில்லாமல் சமாளிக்கலாம். பெருமூச்சு விட்டவர் வருத்தத்துடன் சொன்னார். அவர் ஒத்துக்க மாட்டார். பிடிவாதக்காரர்....

“நான் பேசிப் பார்க்கிறேனேஎன்றான் அவன். அவர் அவனைத் தயக்கத்துடன் பார்த்தார். அவன் சொன்னான். “நான் வியாபாரி. யார் கிட்ட எப்படி வியாபாரம் பண்ண முடியும்னு எனக்குத் தெரியும்....

அவர் தயக்கம் நீங்கவில்லை. அவன் அந்த இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை எடுத்து அவர் கையில் திணித்தான். “அவர் ஒத்துக்காட்டியும் இந்தப் பணம் வேண்டாம். இது உங்களுக்குத் தான். ஒத்துகிட்டா அவர் கைல  இருபதாயிரம் தர்றேன்....

அவர் எச்சிலை விழுங்கியவராக அவனிடம் இரண்டு ஜாதகங்களையும் நீட்டினார். அவன் வாங்கிக் கொண்டவுடன் மாடிப்படியைக் காண்பித்தார். மனோகர் மாடியேறினான்.


மாஸ்டரை அவர்கள் மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்கள். மாஸ்டர் முடிந்த வரை க்ரிஷின் அலைகளிலேயே ஒன்றியிருக்க விரும்பினார். மற்றவர்கள் அதைக் கலைக்கவோ, அதில் கலக்கவோ அவர் விரும்பவில்லை. அவர்கள் அவரை உட்காரச் சொன்னார்கள். அவர் உட்காரவில்லை. க்ரிஷிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் இந்த அலைவரிசைகள் எப்போது வேண்டுமானாலும் துண்டிக்கப்படலாம் என்று அவர் எதிர்பார்த்தார். அதற்கு முன் அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியும் அவசரமும் அவருக்கு இருந்தது.

“க்ரிஷின் அறை எங்கே இருக்கிறது?என்று கேட்டார்.

வந்து உட்காரக்கூடச் செய்யாமல் க்ரிஷின் அறை எங்கே என்று அவர் கேட்ட போது பத்மாவதி ‘முதலில் ஏதாவது சாப்பிடுங்களேன்என்று சொல்ல நினைத்தாள்.

அவள் அதை வாய்விட்டுச் சொல்வதற்கு முன் மாஸ்டர் அதைப் படித்துப் புன்னகையுடன் அவளிடம் சொன்னார். “இன்றைக்கு நான் உபவாசம்.... எதுவும் சாப்பிடுவதில்லை...

பத்மாவதி முகத்தில் தெரிந்த திகைப்பு அவள் சாப்பிடச் சொல்ல நினைத்திருந்தாள் என்பதை அனைவருக்கும் தெரிவித்தது. ‘இந்த மனிதர் முன்னால் எதையும் தைரியமாக நினைக்கக்கூட...என்று எண்ண ஆரம்பித்த மாணிக்கம் அந்த எண்ணத்தையும் தொடராமல் அப்படியே நிறுத்தினார். இதையும் இந்த மனிதர் படித்துவிடப் போகிறார் என்ற பயம் அவருக்குள் எழுந்தது.

உதய் அவரை க்ரிஷ் அறைக்கு அழைத்துப் போனான். மற்ற அனைவரும் ஹாலிலேயே நின்றனர். மணீஷுக்கும் உதயுடன் க்ரிஷ் அறைக்குப் போகும் ஆசை இருந்தது. அவர் அங்கு என்ன செய்யப் போகிறார், என்னவெல்லாம் கண்டுபிடிக்கப் போகிறார், என்னவெல்லாம் சொல்லப் போகிறார் என்பதை உடனிருந்து முதல் ஆளாகத் தெரிந்து கொள்ள அவன் ஆசைப்பட்டாலும் மற்றவர்கள் அங்கேயே நிற்கும் போது அழைக்காமல் உதயைப் பின் தொடர்வது சரியில்லை என்று தோன்றியது.

உதய் மாஸ்டரை க்ரிஷ் அறைக்குள்ளே அழைத்துப் போனவுடன் மாஸ்டர் அவனிடம் சொன்னார். “எனக்கு இங்கே தியானம் செய்யணும். பிறகு அவன் அலைகள்ல இணைய முடிஞ்சா தான் அவன் எங்கே இருக்கான், என்ன செய்யறான்னு எல்லாம் கண்டுபிடிக்க முடியும். அதுக்கு தனிமை தேவை

உதய் தலையசைத்து விட்டுக் கேட்டான். “உங்களுக்கு தியானம் செய்ய என்ன வசதி செய்து தரணும்?

மாஸ்டர் புன்னகைத்தார். தியானத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்குத் தான் சில சவுகரியங்கள் தேவை. போகப் போக அதெல்லாம் தேவையில்லை. அதில் முன்னேறிப் போய் விட்ட பிறகு எந்த சூழல்லயும், எந்த இடத்திலும் தியானம் செய்யலாம். பல காலம் கழிஞ்சும் சவுகரியங்கள்  தேவைப்பட்டா நாம ஆரம்பநிலையிலேயே இருக்கோம், முன்னேறலைன்னு அர்த்தம்....

உதய்க்கு தம்பி பேசுவது போல இருந்தது. புரிந்தும் புரியாமலும் அவன் அவரைப் பார்த்த போது அவர் புரிந்து புன்னகைத்தார். சிறிது வெட்கப்பட்ட அவன் அவரைத் தனிமையில் விட்டு வெளியேற இரண்டடிகள் வைத்து விட்டுப் பின் திரும்பித் தயங்கி நின்றான்.

“ஒரே ஒரு விண்ணப்பம். உங்களுக்குத் தெரியறது என்னவா இருந்தாலும் என் கிட்ட முழுசா சொல்லுங்க. எங்கப்பா, அம்மா கிட்ட நம்பிக்கையூட்டற விஷயம் மட்டும் சொல்லுங்க. மத்தத நான் சமயம் பார்த்து, பக்குவமா அவங்க கிட்ட பிறகு சொல்லிக்கறேன்....  

மாஸ்டர் முகம் மென்மையாகியது. தலையசைத்தார். உதய் நிம்மதியுடன் க்ரிஷ் அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியேறினான். வெளியேறும் போது க்ரிஷ் ஹரிணியுடன் நெருக்கமாய் இந்த அறையிலிருந்த தருணங்களையும் இந்த மாஸ்டர் தெரிந்து கொள்வாரே என்று தோன்றியது. ‘க்ரிஷ் வந்தால் கண்டிப்பாக என்னைச் சத்தம் போடுவான்.....என்று நினைத்து புன்னகைத்தான். வந்தவுடன் அவன் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று மனம் குறும்பாய் நினைத்தது.

மாஸ்டர் அந்த அறையில் நிரம்பி இருந்த அலைகளைப் படித்தறிய ஆரம்பத்தில் முற்படவில்லை. அந்த அலைகளின் மூலமானவனை அலைவரிசைகள் மூலம் அடையத் தன் மனதைக் குவித்தார். ஆச்சரியகரமாக அந்த அலைவரிசைகள் தடுக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ இருக்கவில்லை. மாறாக சில நிமிடங்களில் அவரால் அவனை அடைய முடிந்தது.

க்ரிஷ் இருக்கும் இடம் கும்மிருட்டாக இருந்தது. அந்த இடம் குளுமையாக இருப்பதையும் மாஸ்டர் உணர்ந்தார். அவன் மயக்க நிலையில் இருந்தான். அவன் உதடுகள் லேசாக அசைந்தன. அந்த மயக்க நிலையில் தான் சற்று முன் அவன் ‘அம்மாஎன்று அழைத்திருக்க வேண்டும். மாஸ்டர் அந்த இடத்தைப் பற்றி மேலும் அறிய முயன்றார். அந்தச் சூழலைக் கூர்ந்து கவனித்த போது அது அடர்ந்த காடு என்பது புரிந்தது. சந்தேகமே இல்லை..... அடர்ந்த அமேசான் காடுகள் ....

நேரம் செல்லச் செல்ல ஹாலில் அமர்ந்திருந்த அனைவருமே ஒவ்வொரு வகையில் பொறுமையில்லாமல் தவித்தார்கள். மாணிக்கமும், மணீஷும் என்ன தகவல் வருமோ என்று பயம் கலந்த ஆவலுடன் காத்திருக்கையில் சங்கரமணியின் மிஸ்டு கால்கள் தொடர்ந்து மாணிக்கத்துக்கும், மணீஷுக்கும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. கடைசியில் பொறுமை இழந்த மணீஷ் வெளியே வந்து “தயவு செய்து கூப்பிடாதீங்க.... தகவல் தெரிஞ்சவுடனே நானே உங்களைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்றேன்என்று சொன்னான்.

கமலக்கண்ணனும், பத்மாவதியும் மகன் பற்றிய கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் பொறுமையில்லாமல் இருந்தார்கள் என்றால் உதய் ஏதாவது பிரச்னையான தகவல் இருக்குமோ என்ற பயத்தில் பொறுமையின்றித் தவித்தான்.

அவர்கள் பொறுமையின்மையைக் காலமோ, மாஸ்டரோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில் செந்தில்நாதனின் ஜீப் க்ரிஷ் வீட்டை வந்தடைந்தது. ஜீப்பில் இருந்து இறங்கியவுடன் செந்தில்நாதன் கவனித்தது வாசலில் நின்றிருந்த அந்தக் கருப்பு நிறக்காரை. அவர் சந்தேகத்துடன் அந்தக் காரை ஆராய்ந்தார். அந்த மலை மேல் அவர் இருக்கையில் வந்தது கிட்டத்தட்ட  இந்தக் கார் போல் அல்லவா இருந்தது!...

சுற்றி முற்றிப் பார்த்த அவர் வெளியே ஒரு தூணுக்குப் பின் பதுங்கி மறையாய் நின்றிருந்த உதயின் அடியாள் ஒருவனைத் தன்னருகே வரும்படி சைகை செய்தார். அவன் தயக்கத்துடன் லேசான பயத்துடன் மெல்ல அவர் அருகே வந்தான்.

“யார் கார் இது?

இது மாஸ்டர்ங்கற சாமியார் கார் சார். அவர் வந்திருக்கார்.....

சாமியார்கள் என்றாலே சந்தேகத்துடன் பார்க்கும் செந்தில்நாதனின் சந்தேகம் இப்போது இருமடங்காகியது. அவரும் பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

(தொடரும்)
  
என்.கணேசன்

  

6 comments:

  1. aaha... vara varam ippide viru viruppai ethina enna panradhu anna ? sikram book publish pannunga ..cant wait any longer

    ReplyDelete
  2. Kaleeswari saravanamuthuJune 8, 2017 at 8:13 PM

    கணேசன் சார், கதையின் நாயகனை இன்னும் எங்கள் கண்களில் காட்டாமல், எங்ளை பதட்டத்திலேயே வைத்து இருக்கிறீர்களே! எப்போது அடுத்த வாரம் வருமென்று தவிக்க விடுகின்றீர்கள் சார்!

    ReplyDelete
  3. சுஜாதாJune 8, 2017 at 8:29 PM

    எல்லா வகைலயும் சூப்பரா போகுது. பரபரப்பு தாங்க முடியல. கெஸ் பண்ணவும் முடியல.

    ReplyDelete
  4. I think it is the first novel going interesting and sensational that keeps his hero secret even after 33 chapters. Only you can write like this sir

    ReplyDelete
  5. தியானத்தின் முன்னேற்றம் பற்றி மாஸ்டர் கூறிய கருத்துக்கள் சிந்திக்க வைத்தது சார்....
    சதாசிவ நம்பூதிரி எவ்வாறு ஜாதகம் பார்க்க சம்மதிப்பார்? பார்த்து என்ன சொல்லுவார்?
    மாஸ்டர் என்ன சொல்லுவார்? செந்தில்நாதனை எப்படி சமாளிப்பார்?
    போன்ற எதையும் சொல்லாமல்...அடுத்த வாரம் காத்திருக்க வைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  6. அற்புதமான எழுத்து நடை ....
    ஆர்வம் அதிகமாக உள்ளது அடுத்து என்ன என்று தெரிந்துகொள்ள..

    ReplyDelete