சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 10, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 76


கசியக்குகை பற்றி அறிந்து கொண்டு தான் அந்த இடத்தை விட்டுச் செல்வது என்று அக்‌ஷய் முடிவெடுத்துக் கிளம்பியதைப் பார்த்த மைத்ரேயன் அவனிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அக்‌ஷயே செல்வதற்கு முன் அவனிடம் கேட்டான். “நான் ஒரு குகையைப் பார்த்ததாய் சொன்னேனே அந்த இடத்திற்குப் போய் நானும் சோதிக்கப் போகிறேன். நீ வருகிறாயா?

மைத்ரேயன் வரவில்லை என்று தலையை மட்டும் அசைத்தான். அக்‌ஷய்க்கு மைத்ரேயன் அந்தக் குகை விஷயத்தில் புதிராக நடந்து கொள்வது போலத் தோன்றியது. ஆனாலும் அவனை வற்புறுத்தாமல் அக்‌ஷய் “சரி நீ இங்கேயே இரு. நான் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்என்று சொல்லி விட்டு நகர்ந்தான். அவனுடன் சேர்ந்து அந்த ஆடுகளும் அவன் பின்னால் சென்றன. அவை கூட களைப்பாறி அலுத்து விட்டதாகத் தோன்றியது.

ஆனால் அவனோடு சிறிது தூரம் வரை கூடவே சென்ற ஆடுகள் இரண்டும், அவன் அந்த இடத்தை நெருங்க ஆரம்பித்ததும் மெள்ள பின்வாங்க ஆரம்பித்தன. அக்‌ஷய்க்கு அது வினோதமாய் தோன்றியது. இரண்டு ஆடுகளையும் கூர்ந்து கவனித்தான். நீலக்கரடியைப் பார்த்து நடுங்கியதை விட அவை இரண்டு மடங்கு பயப்பட்டது போல அக்‌ஷய்க்குத் தோன்றியது. அவை தள்ளிப் போய் நின்று கொண்டு அவனைப் பார்த்தன.

அக்‌ஷய் முன்னேறினான். அவன் அடையாளம் குறித்து வைத்திருந்த பழுப்பு நிறப்பாறையும், வித்தியாசமாய் வளைந்த மரமும் இருக்கும் இடத்தை அவன் நெருங்கிய போது அவன் உள்ளுணர்வு ‘போதும். இனியும் அதிகமாய் நெருங்கி விடாதேஎன்று எச்சரித்தது. அவன் தன் கழுத்தின் பின்புறம் இருக்கும் நாக மச்சத்தில் ஒரு உஷ்ணத்தையும் லேசாக உணர்ந்தான்.

அந்த நாக மச்சத்தில் சமீப காலமாகத் தான், அதுவும் மைத்ரேயன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் தான், அவன் ஏதாவது உணர்கிறான். அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. பின்னால் திரும்பி மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் முன்பு அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றாலும் அவன் பார்வை அக்‌ஷய் மேலேயே இருந்தது.

அக்‌ஷய் மறுபடி அந்த குகை இருந்த இடத்தைப் பார்த்தான். பழுப்பு நிறப் பாறைக்கும், வித்தியாசமாய் வளைந்து சென்றிருந்த மரத்திற்கும் இடையே அவன் பார்த்த குகை இப்போதும் காணவில்லை. வெற்றிடம் தான் இப்போதும் தெரிந்தது. அது வெற்றிடம் தானா என்று தொட்டுப் பார்க்க அவனுக்கு ஆவலாக இருந்தது. ஆனால் அவன் உள்ளுணர்வின் வழிகாட்டுதலை என்றும் மீறிப் போகாதவன். ஆவலை அப்படியே விழுங்கிக் கொண்டு அந்த வெற்றிடத்தைக் கூர்ந்து பார்த்தான். ஏதோ ஒன்று அவனை அந்த வெற்றிடத்தை நோக்கி இழுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. விரைவாக அவனும் பின் வாங்கினான்.     

அவன் வேகமாகத் திரும்பிச் செல்ல, ஆடுகள் அவனை முந்திக் கொண்டு சென்று மைத்ரேயனை அடைந்தன. மைத்ரேயன் குட்டி ஆட்டைத் தடவிக் கொடுத்தான். அவன் அப்போதாவது ஏதாவது சொல்வானா என்று அக்‌ஷய் பார்த்தான். மைத்ரேயன் அவனைப் பார்க்கவே இல்லை. மகா அழுத்தக்காரன் என்று அக்‌ஷய் நினைத்துக் கொண்டான். அந்த குகை சமாச்சாரம் ஒரு புதிராகவே தங்கி விட்டது அவனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

மைத்ரேயனிடம் அவன் சொன்னான். “சரி எழுந்திரு. போகலாம்

உடனே மைத்ரேயன் எழுந்தான். மலையின் மேல்பகுதியை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்தது.


க்‌ஷய் அந்தக் குகை இருந்த இடத்தை நோக்கிச் சென்ற நேரத்தில் மாரா காரில் பயணித்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் அந்தக் குகையை நெருங்க ஆரம்பித்த போது அவன் அந்த வருகையை உள்ளுணர்வில் உணர்ந்தான். மைத்ரேயனின் பார்வையை எப்போது அவன் உணர்ந்தானோ அந்தக் கணத்தில் இருந்தே அவன் அந்த குகைக் கோயில் இடத்தின் அலைகளுக்கு தன் சக்திகளை இசைவுபடுத்தி இருந்தான். அதனால் சில மணி நேரங்களில் நடந்த வாங் சாவோ குழுவின் சோதனைகளையும் அவன் உணர்ந்திருந்தான். அவர்கள் அங்கிருந்து விலகிய பின் இனி யாரும் அங்கு வருவதற்கில்லை என்று நினைத்த போதும் உள் மனதில் மைத்ரேயன் ஒரு முறை வந்தாலும் வருவானோ என்ற எண்ணம் வந்து தங்கியது. அதனால் அந்த இடத்தின் அலைகளோடிருந்த தொடர்பை அவன் துண்டிக்காமல் அப்படியே வைத்திருந்தான். ஆனால் சற்றும் எதிர்பாராமல் வேறொரு மனிதனின் வருகையை மாரா உணர்ந்தான். வருவது மைத்ரேயனின் பாதுகாவலனாகத் தான் இருக்க வேண்டும்.

மாரா காரை சாலை ஓரமாக நிறுத்தினான். பின் கவனத்தைக் குவித்து தன் அலைகளுக்குள் வருபவனை இழுக்கப் பார்த்தான். அப்போது தான் அவனது பிரதான சக்தி எல்லைக்குள் காலை வைத்த அந்த ‘அமானுஷ்யன் உடனே பின் வாங்கி விட்டதால் விடுபட்டுப் போனான். விடுபடும் முன்னர் ஒரு நாகத்தின் சின்னத்தை மாரா பார்த்தான். பின் எந்த ஊடுருவலும் அந்தப் பகுதியில் இல்லை. ஐந்து நிமிடம் தாமதித்துப் பார்த்து விட்டு மாரா காரைக் கிளப்பிக் கொண்டு போனான்.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் அவன் கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பெரிய கலைப்பொருள் அங்காடி முன் நின்றது. அந்தக் கடையை மூட ஒரு வெண்தாடிக்கார முதியவர் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கிய மாராவைப் பார்த்தவுடன் சின்னதாய் ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தோன்றி மறைந்தது.

அவனை மலர்ந்த முகத்துடன் வரவேற்று விட்டு அவர் சொன்னார். “ஐந்து நிமிடம் தாமதமாகி இருந்தால் நான் வீட்டுக்குப் போயிருப்பேன்

மாரா புன்னகைத்தான். அவன் அதை அறிந்தே இருந்தான். அவரை வீட்டில் அவன் சந்திக்க விரும்பவில்லை. அவருடைய மனைவி முன் அவரிடம் மனம் விட்டு அவனால் பேச முடியாது. இன்னும் சீக்கிரமாகவே வந்திருந்தால் அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள் யாராவது இருந்திருப்பார்கள். அப்போதும் பேசும் சந்தர்ப்பம் இல்லை.  அதனால் தான் இந்த நேரம் பார்த்து அவன் வந்திருக்கிறான்.

கடை மூடப்பட்டுள்ளது என்ற பெயர்ப்பலகையை வெளியே தொங்கவிட்டு கண்ணாடிக் கதவைச் சாத்திய வெண்தாடி முதியவர் அவனைக் கடையின் உள்ளறைக்கு அழைத்துப் போய் அமர வைத்து தானும் அவன் எதிரில் அமர்ந்தார். அவர் அவர்கள் இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினர். அவருக்கு வயது 90க்கு மேல் இருக்கும் என்றாலும் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் அவர். ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். அவர்களது இயக்கத்தின் உள் வட்டத்தில் இருக்கும் அவரது அறிவு பல்முனை கூர்மை கொண்டது. அவரிடம் மாராவால் மனம் விட்டுப் பேச முடியும்....  

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். பின் அவர் மெல்லக் கேட்டார். “மைத்ரேயன்?  

மாரா தலையசைத்தான். அவர் கேட்டார். “என்ன புதிய தகவல்?

“அவன் நம் குகைக்கோயில் மலையில் தான் இப்போது இருக்கிறான். அவனால் நம் குகைக்கோயிலைப் பார்க்க முடிந்திருக்கிறது

அவர் ஆச்சரியப்பட்டார். “உள்ளே வந்தானா?”  என்று ஆர்வத்துடன் கேட்டார்.

“இல்லை.......

“உனக்கு எப்படித் தெரியும்?

அவன் தன் முந்தைய இரவு அனுபவத்தைச் சொன்னான். பின் வாங் சாவொவின் வரவையும் சற்று முன் அமானுஷ்யன் வரவை உணர்ந்ததையும் தெரிவித்தான்.

அவருக்கு அவனுடைய சற்று முந்தைய அனுபவம் திகைப்பை ஏற்படுத்தியது. “மைத்ரேயன் நம் கோயிலைப் பார்க்க முடிந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவனுடைய பாதுகாவலன் எப்படி?

“பாதுகாவலன் பார்த்தானா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இன்று அந்த இடத்திற்கு வந்து பார்க்கும் அளவு ஆர்வத்தை ஏற்படுத்தியது மைத்ரேயனா, இல்லை வாங் சாவொ குழு முந்தைய நாள் தேடியதைப் பார்த்தா என்பது தெரியவில்லை. இதிலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அவன் நெருங்கப் பார்த்தானே ஒழிய நெருங்கி விடவில்லை. பின் வாங்கி விட்டான்..... சற்று முன்பும் என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. அவன் என் சக்தி எல்லைக்குள் நுழையவில்லை. எல்லையில் கால் வைத்தவன் விலகும் முன் அவனுடைய நாக மச்ச சின்னத்தைத் தான் பார்த்தேன்......

இயக்கத்தின் உள் வட்ட ஆட்களுக்கு மைத்ரேயனின் தற்போதைய வரலாறு மட்டுமல்லாமல் அமானுஷ்யனின் பழைய வரலாறும் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்டிருந்ததால் அக்‌ஷயின் நாக மச்சமும் அவர்களிடம் பிரபலமாகி விட்டிருந்தது.

அமானுஷ்யனை மாராவின் சக்தி நாக அம்சமாகவே அவனுக்கு அடையாளம் காட்டி இருப்பது பற்றி அவரை யோசிக்க வைத்தது. அதே போல மைத்ரேயனின் கண்களை மட்டுமே மாரா உணர்ந்திருக்கிறான். அது எல்லாவற்றையும் பார்க்க முடிந்த மைத்ரேயனின் தன்மையை உணர்த்தி இருக்கிறதோ? அவர் மைத்ரேயனைப் பற்றிப் படித்ததை எல்லாம் மறுபடி ஒரு முறை நினைவுபடுத்திப் பார்த்து விட்டுத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

“மாரா. நம் குகைக்கோயிலைப் பார்க்க முடிந்ததைத் தவிர இது வரை மைத்ரேயன் எந்த சக்தியையும் வெளிப்படுத்தவில்லை. சொல்லப் போனால் அவனாக இது வரை எதையும் செய்ததில்லை. இப்போது நடக்கும் எதிலுமே கூட அவனுக்குப் பங்கில்லை. அவனைக் காப்பாற்ற முயற்சி எடுத்தது கூட ஆசானும், தலாய் லாமாவும் தான். சம்யே மடாலயத்தில் அவனைக் காப்பாற்றியது கூட அந்தப் பாதுகாவலன் தான்........

மாரா ஆழ்ந்த ஆலோசனையுடன் சொன்னான். “நான் பல முறை யோசித்திருக்கிறேன். கோங்காங் மண்டபத்தில் ஒருவேளை அந்தப் பாதுகாவலன் அதிவேகமாகச் செயல்பட்டு அவனைக் காப்பாற்றியிருக்கா விட்டால் அவன் என்ன செய்திருப்பான்? அப்போதாவது அவனாக எதாவது செய்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பானா, இல்லை செத்துத் தொலைந்திருப்பானா? எனக்கு இது வரை அதற்குப் பதில் கிடைக்கவில்லை....

அவர் யோசித்துப் பார்த்தார். அவருக்கும் பதில் கிடைக்கவில்லை. அவனுடன் அந்தப் பாதுகாவலன் இல்லாமல் இருந்திருந்தால் தான் நமக்கு பதில் கிடைத்திருக்கும். மொத்தத்தில் விதி அவனுக்கு அன்று அனுகூலமாக இருந்திருக்கிறது...என்று மட்டும் தான் அவரால் சொல்ல முடிந்தது.

சிறிது நேரம் மைத்ரேயனைப் பற்றி சிந்தித்து விட்டு அவர் அவனிடம் சொன்னார். “அவன் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள்படி அவன் இது வரை எதற்கும் சண்டை போட்டதில்லை. யாரையும் எதிர்த்ததில்லை....சொல்லி நிறுத்தி விட்டு அவனை அர்த்தத்துடன் பார்த்து விட்டுச் சொன்னார். “சண்டையே போடாதவனை ஜெயிப்பது கஷ்டம் மாரா...

மாரா புன்னகைத்தான். “அவன் வாழ்க்கையில் நாம் நுழைந்த பின்னும் அவனால் சண்டை போடாமல் இருக்க முடியுமா?

அவரும் புன்னகைத்தார்.


அவன் தொடர்ந்து சொன்னான். “நான் இங்கே வந்ததே, இப்போதே அந்த மலையில் அவனை சந்தித்து, நேரடியாகவே அவனை சோதித்துப் பார்த்து விடட்டுமா என்று உங்கள் ஆலோசனையைக் கேட்கத்தான்.


சொல்லும் போதே அவனிடம் மைத்ரேயனை நேரில் சந்தித்து அவனை ஒழித்துக்கட்டி விட்டு வரும் வேகம் தெரிந்தது. 

(தொடரும்)
என்.கணேசன்


5 comments:

  1. சுந்தர்December 10, 2015 at 6:09 PM

    சூப்பராக போகிறது. மைத்ரேயன் எங்களுக்கும் கூட புதிராக இருக்கிறான்.

    ReplyDelete
  2. Sema thrilling Sir....
    Fantastic...
    Engalukkum silirkirathu.....

    ReplyDelete
  3. மிக நன்றாக போகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete