சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 24, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 78


 ந்த ரகசியச் சடங்கை ஆரம்பிக்கலாம் என்று மாரா சமிக்ஞை செய்தான்.

முதியவர் மேசையில் இருந்த அந்த தடிமனான கயிறை எடுத்து அந்த நாற்காலியோடு அவனைக் கட்டிப் போட ஆரம்பித்தார். அவர் முடிச்சு போடுவதற்கு முன் அவன் சற்று அசைந்து பார்த்து விட்டு மேலும் இறுக்கமாகக் கட்டச் சொன்னான்.  அவன் சொன்னபடியே அவர் இறுக்கமாகக் கட்டிப்போட்டார். அவருடைய முதுமை அவர் உடல்பலத்தை அதிகமாகக் குறைத்து விடவில்லை என்பதை அவன் புன்னகையுடன் கவனித்தான். அவர் அந்தச் சிலையை எடுத்து மாராவின் மடியில் வைத்தார். அவன் கைகள் அந்தச் சிலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டன.

பின் அந்த பழங்கால ஓலைச்சுவடியைத் தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அந்த உள் அறை மின் விளக்குகளையும் அணைத்தார். கும்மிருட்டு அங்கு சூழ்ந்தது. அந்த ஓலைச்சுவடிகளை இறுக்கப்பிடித்தபடியே அவனுக்குப் பக்கத்து நாற்காலியைத் தட்டுத் தடுமாறி அடைந்து அதில் அமர்ந்தார்.

மாரா ஆழ்நிலைத் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தான். அவர் அவர்களது அந்தப் புனிதச் சுவடியை கையில் வைத்தபடியே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

இருபது நிமிடங்களில் மெல்லிய நீல நிறத்தில் அந்தச் சிலை ஒளிர ஆரம்பித்து அதன் ஒளி அறையெல்லாம் பரவ ஆரம்பித்தது. பழைய தலைமையுடனான அவருடைய முந்தைய அனுபவங்களில் இது நிகழ மூன்று மணி நேரம் ஆகி இருந்திருக்கிறது. அவர் பிரமிப்புடன் அவனைப் பார்த்தார். மெல்ல அவனுள்ளும் அந்த நீல நிற ஒளி பரவ ஆரம்பித்தது...

இது முந்தைய தலைமைப் பொறுப்பில் இருந்தவரிடம் நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்பீடுகள் அவசியமில்லை, அதில் அர்த்தமுமில்லை என்ற போதும் அவரால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இன்றைய அனுபவம் வித்தியாசமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. பிரமிப்புடன் அவர் பார்த்தார்.

அவன் சிறிது சிறிதாக அதிர ஆரம்பித்தான். அவன் அமர்ந்திருந்த நாற்காலியும் அதிர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவன் உடல் முழுவதும் மின்சாரத்தால் தாக்கப்பட்டது போல் துடிக்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அவன் உடல் முழுவதும் மாற ஆரம்பித்தது. முகம் கோரமாக மாற ஆரம்பித்தது. அவனது கை கால்கள் தடிக்க ஆரம்பித்தன. அவன் கைகள் அந்தத் தடிமனான கயிறை மீறி பிதுங்க ஆரம்பித்தன. அவன் நாற்காலி வேகமாக ஆட ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழிந்த பின் பேரழகனும், கவர்ச்சிகரமானவனுமான ஒரு இளைஞன் தான் அவன் என்பதற்கு எந்த அறிகுறியும் அந்த உடலில் இல்லை. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபலப் பத்திரிக்கை ஒன்று உலகின் மிக அழகான, கல்யாணம் ஆகாத, பணக்கார இளைஞர்களில் ஒருவனாக அவனை அறிவித்திருந்தது நினைவுக்கு வந்தது.

மனம் தற்போதைய இந்த சடங்கின் நோக்கத்தில் இருந்து விலகுவதை உணர்ந்த அவர் உடனடியாக எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதியவரின் கைப்பிடி அந்த ஓலைச்சுவடியில் தானாக இறுகியது. அவர் பிரார்த்தனையில் ஆழம் கூடியது.      

அவன் மிக ஆழமாக மூச்சுவிட ஆரம்பித்தான். சிறிது சிறிதாக அவன் அதிர்வது நின்று போனது. அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் ஆட்டமும் நின்று விட்டது. அவன் மூச்சும் இயல்பாக மாற ஆரம்பித்தது. ஆனால் பழைய தோற்றத்தின் சுவடே அந்த உடலில் இப்போது இல்லை. மாறாக அவன் கையிலிருந்த சிலையின் நகலாய் அவன் முகம் மாறி விட்டிருந்தது.

பழைய தலைமையுடனான அனுபவத்தில் அவரது முகம் கோரமாக ஆகி இருந்ததே ஒழிய இப்படி சிலையின் நகலாய் அவர் முகம் மாறி இருக்கவில்லை. மற்றபடி அதிர்வது, பின் அடங்குவது எல்லாம் கிட்டத்தட்ட இதே போலத் தான்..... மனதை திரும்ப நிகழ்காலத்திற்கு இழுத்து வந்த முதியவர் மண்டியிட்டு மாராவிடம் பிரசன்னமாகி இருந்த  கடவுள் மாராவை வணங்கினார்.

சிறிது நேர அசாதாரண அமைதிக்குப் பின்னால் எதற்காக என்னை வரவழைத்தீர்கள்?கேள்வி மெல்லிய கரகரத்த குரலில் எழுந்தது. அது அவர்களுடைய தலைவன் மாராவின் குரலே அல்ல. அது இரத்தத்தை உறைய வைக்கும் மிக அமானுஷ்யமான குரல். ஆனால் அதே குரலைத் தான் அவர் அதற்கு முந்தைய இரு சடங்குகளிலும் கேட்டிருந்தார்.

முதியவர் பயபக்தியுடன் சொன்னார். “மைத்ரேயன் விஷயத்தில் எங்களால் ஒரு தீர்மானத்தை எட்ட முடியவில்லை. அவன் இப்போது நம் குகைக்கோயில் மலையில் தான் இருக்கிறான். மாரா இப்போதே சென்று அவனை அழித்து விட எண்ணுகிறான். அது உசிதமா? இது விஷயத்தில் தங்கள் வழிகாட்டுதல் என்ன?

மைத்ரேயன்.....” குரல் கிறீச்சிட்டது. முதியவரின் நாடி நரம்பெல்லாம் நடுங்கியது. யாரும் ஒரு பெயர் உச்சரிப்பிலேயே அவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்த முடியுமா என்று முதியவர் வியந்தார். 

அந்தக் குரல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது போல அடுத்த வார்த்தைகளை கிறீச்சிடாமல் மிக அழுத்தமாக நிறுத்தி நிறுத்திச் சொன்னது. “சம்யே மடாலயத்தில்..... நம் சக்தியை பலப்படுத்தி...... நிறுவுவதற்கு முன் ........... அவனை நெருங்க வேண்டாம்......

“இந்த சந்தர்ப்பம் விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று மாரா சந்தேகப்படுகிறான்.....

சில்லிட வைக்கும் ஒரு அமானுஷ்யமான சிரிப்பு எழுந்தது. “இனி பதினோரு மாதங்கள்..... மைத்ரேயனுக்கு ஆபத்துக் காலம் தான்........... அவன் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது............. அவனை அழிக்க நினைக்கும் எவருக்கும்..... சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது..... அந்தக்காலத்தை கோட்டை விட வேண்டாம்.....

முதியவருக்கு அந்த வார்த்தைகளைக் கேட்டு தெம்பு வந்தாலும் இன்னொரு சந்தேகம் கூடவே எழுந்தது. நாக அம்சம் கொண்ட ஒருவன் மைத்ரேயனை இந்த ஆபத்துக் காலத்தில் காக்க வருவான் என்று பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி சொன்னபடி அமானுஷ்யன் வந்திருக்கிறானே. மைத்ரேயனை அழிக்க நினைப்பவர்களுக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் இந்தக் காலக்கட்டத்தில் அமானுஷ்யன் பங்கு என்னவாக இருக்கும்?  

அந்த சந்தேகத்தை முதியவர் வாய் விட்டே கேட்டார்.  அப்படியானால் அமானுஷ்யன்....?

உடனடியாக மாராவின் உடல் பலமாய் ஒரு முறை அதிர்ந்தது. மறு கணம் அந்தச் சிலையில் இருந்தும் மாராவின் உடலில் இருந்தும் அந்த மெல்லிய நீல ஒளி மங்க ஆரம்பித்த போது தான் முதியவருக்குத் தன் தவறு புரிந்தது.  அமானுஷ்யன் என்ற சொல் மாராவை சுயநிலைக்கு வரவழைக்கும் குறிச்சொல். அவருடைய கேள்வியில் அந்தக் குறிச்சொல் ஒரு பகுதியாக வந்திருக்கக்கூடாது..... அவருக்குள் குற்ற உணர்ச்சி பலமாக எழுந்தது. என்னவொரு முட்டாள்தனம் என்று தன்னையே திட்டிக் கொண்டார்.

அவன் உடல் முந்தைய அழகிய தோற்றத்தை எட்ட ஐந்து நிமிடம் தேவைப்பட்டது.  ஆனால் பழைய வலிமை அந்த உடலில் இருக்கவில்லை. அவன் உடலில் அனைத்து சக்திகளையும் அந்த சக்தி எடுத்துச் சென்று விட்டது போல் இருந்தது. கஷ்டப்பட்டு மாரா கண்களைத் திறந்து பார்த்து அவரைக் கேட்டான். “உடனடியாகச் செய்ய வேண்டியது எதாவது இருக்கிறதா?”. அவன் குரல் கூட பலவீனமாக இருந்தது. உடனடியாக இயங்க ஏதாவது உத்தரவு கிடைத்திருந்தால் அந்த பலவீனமான நேரத்தில் கூட அவன் கிளம்பி இருப்பான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இருக்கவில்லை.

அவர் எழுந்து அவன் கட்டுகளை அவிழ்த்தபடியே சொன்னார். “இல்லை

“அப்படியானால் நான் தூங்குகிறேன்....என்று சொன்னவன் அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு உறங்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவரும் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தார்.

நாற்காலி நகர்த்தப்படும் ஓசை கேட்டு அவர் கண்விழித்தார். அவன் தான். “நல்ல உறக்கமா?என்று கேட்டான். வெளியே விடிய ஆரம்பித்திருந்தது ஜன்னல் வழியே தெரிந்தது. அவர் புன்முறுவலுடன் தலையசைத்தார்.

அவன் சக்தி வாய்ந்த, சுறுசுறுப்பான பழைய மாராவாக மாறி இருந்தான். அவன் அவரை ஆர்வத்துடன் பார்த்தான். அவர் குற்ற உணர்ச்சியுடன் நடந்ததைச் சொன்னார். மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டே வந்தவன் முடிவில் ஏமாற்றம் அடைந்தது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சீக்கிரமாகவே சுதாரித்துக் கொண்டவன் கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.

அவர் வருத்தத்துடன் சொன்னார். “நான் மைத்ரேயனின் பாதுகாவலன் என்று சொல்லி இருக்க வேண்டும்....

“இல்லை உங்கள் மேல் தவறில்லை. நான் தான் வேறு குறிச்சொல்லை வைத்திருக்க வேண்டும். காண்டாமிருகம் என்று வைத்திருக்கலாம்..... அவன் நிஜமாகவே அமானுஷ்யன் தான். அவன் பெயர் கூட நமக்குப் பிரச்னையைத் தந்து விடுகிறது.....சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு சொன்னது அவர் குற்ற உணர்ச்சியைக் குறைத்தது.

அவன் மேலும் சொன்னான். “நமக்கு முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது இப்போது அங்கே போகலாமா என்பது தான். அதற்கு நமக்குப் பதில் கிடைத்து விட்டது. மைத்ரேயன் இனியும் பதினோரு மாதங்கள் பலவீனமானவன் தான், அவனை வீழ்த்த சந்தர்ப்பங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதும் உறுதியாகத் தெரிந்து விட்டது. மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியமல்ல.....

அவன் மனம் உடனடியாக அடுத்து நடக்க வேண்டியது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது. சம்யே மடாலயத்தில் தங்கள் சக்தியைப் பலப்படுத்துவதற்கு முன் அவனை எதிர்கொள்வது உசிதம் அல்ல என்ற ஆணை சம்யே மடாலயத்தில் நடத்தி வந்த இரவு ரகசிய வழிபாட்டைத் தொடர்வதும், சீக்கிரமே அங்கு சாதிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவனுக்கு உணர்த்தியது. வாங் சாவொ மடாலயத்திற்குள் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கும் இவ்வேளையில் என்ன செய்வது என்று யோசித்தவன் உடனடியாக ஒரு எண்ணிற்குப் போன் செய்தான்.

“ஹலோஒரு தாழ்ந்த குரல் மிகவும் எச்சரிக்கையாக ஒலித்தது.

“சம்யே மடாலயத்தில் உள்ளே கண்காணிக்க வாங் சாவொ ஏற்பாடு செய்திருக்கும் ஆட்களைப் பற்றி எனக்கு உடனடியாகத் தெரிய வேண்டும். நாம் விசாரிப்பதும் அவர்களைக் கையாளப் போவதும் எந்தக் காரணத்தைக் கொண்டும் லீ க்யாங், வாங் சாவொ கவனத்தை எட்டக்கூடாது…..”

“அரை மணி நேரத்தில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் சார்

(தொடரும்)
என்.கணேசன்   



5 comments:

  1. அருமையாக செல்கிறது நாவல் கணேசன் அவர்களே. அவன் நிஜமாகவே அமானுஷ்யன் தான் அவன் பெயர் கூட நமக்குப் பிரச்னையைத் தந்து விடுகிறது என்று மாரா சொல்வதை ரசித்தேன்.

    ReplyDelete
  2. பின் அந்த பழங்கால ஓலைச்சுவடியைத் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும்...
    //தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அந்த உள் அறை மின் விளக்குகளையும் அணைத்தார். கும்மிருட்டு அங்கு சூழ்ந்தது.//
    .
    .
    இவ்வரிகளை வாசிக்கும்போது நிஜமாகவே poweroff... பெரியவர் "அமானுஷ்யன்" என்று சொன்னபோது வந்துவிட்டது.... செம..... சிலிர்க்கிறது.....

    ReplyDelete
  3. தொடருங்கள்.... தொடர்கிறோம்.

    ReplyDelete