சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 31, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 79


ரியாக 29 நிமிடம் 12 வினாடிகளில் மாராவுக்கு போனில் தகவல் வந்தது.

சார். வாங் சாவொ சம்யே மடாலயத்தில் வேவு பார்த்திருக்க நியமித்திருக்கும் ஆட்கள் இரண்டு பேர். இருவரும் லாஸா நகரைச் சேர்ந்தவர்கள். போலீஸில் தற்காலிக வேலை நியமனத்தில் இருக்கிறார்கள். இருவரும் நண்பர்கள்..... மற்ற இடங்களில் முக்கியமாக, ரோந்திலும், நேபாள எல்லை நட்பு நெடுஞ்சாலையிலும் நியமித்திருக்கும் ஒவ்வொரு குழுவிலும் வாங் சாவொவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒன்றிரண்டு ஆட்களாவது இருக்கிறார்கள். ஆனால் சம்யேவில் அப்படி நிறுத்த அவனுக்கு ஆள் மிஞ்சவில்லை போல் இருக்கிறது.....

மாரா நினைத்தான். அப்படியும் இருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்டு விட்டது தெரிந்து விட்டதால் இரவில் நடத்தும் ரகசிய வழிபாட்டுச் சடங்குகளை சில நாட்களாவது நிறுத்தி வைப்பார்கள் என்று கூட வாங் சாவொ கணக்குப் போட்டிருக்கலாம்.....

மாரா கேட்டான். அந்த இரண்டு பேரும் எப்படி?

“கண்டுபிடிக்கப்பட மாட்டோம் என்பது உறுதியாகத் தெரிந்தால் விலை போகிற ரகம் தான்.....

“அப்படியானால் விலை பேசி விடு. அவர்கள் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை கோங்காங் மண்டப அருகில் இருக்கக்கூடாது. பணத்தையும் வாங்கிக் கொண்டு வாங் சாவொவுக்குத் தகவலும் தர நினைத்தால் குடும்பத்திற்குப் பிணம் கூடக் கிடைக்காது என்பதைப் புரிய வைத்து விடு

“சரி சார்

“எல்லாம் உறுதியானவுடன் எனக்குத் தெரிவி....

அவனையே பார்த்துக் கொண்டிருந்த முதியவருக்கு அவன் விரைவில் சம்யே மடாலயத்தில் இருந்த அவர்களது வேலையை முடிக்கத் துடிக்கிறான் என்பதை உணர முடிந்தது. மைத்ரேயன் கதையை சீக்கிரம் முடிக்க என்ன எல்லாம் ஆக வேண்டுமோ அதை எல்லாம் செய்து முடிக்காமல் இவன் ஓய மாட்டான்..... அவனிடம் வாய் விட்டுச் சொன்னார். “எனக்கு உன் வெற்றியைக் காணும் வரையாவது ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை இருக்கிறது மாரா....

மாரா சொன்னான். “நீங்கள் அதைப் பார்க்காமல் சாக மாட்டீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்தால் குறைந்தது பத்து வருடங்களாவது வாழ்வீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் அதிக பட்சமாய் பதினோரு மாதங்களுக்குள் நாம் அவனை வென்று காட்டுவதைப் பார்க்க இருக்க மாட்டீர்களா என்ன?

அவனுக்குத் தன் வெற்றியில் சின்னதொரு சந்தேகம் கூட இல்லை என்பதை முதியவர் கவனித்தார். அவனைப் பார்க்கையில் அவருக்கும் அதில் சந்தேகம் இருக்கவில்லை. இவன் அடைந்திருக்கும் உயரங்கள் என்னவெல்லாம் என்பதை அறியக் கூட மைத்ரேயனின் ஆயுள் போதாது..... ச்சே! அந்த மைத்ரேயன் பற்றியும் அமானுஷ்யன் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொண்டிருந்தால் இன்னும் கூடத் தைரியமாக இருக்கலாம்.

மாராவிடம் அவர் கேட்டார். “அமானுஷ்யனும், மைத்ரேயனும் எதற்கு அந்த மலைக்குப் போயிருக்கிறார்கள். ஒளிந்து கொள்ளவா, அங்கிருந்து தப்பித்து நேபாளத்திற்குள் நுழையவா? அந்த மலையைத் தாண்டினால் நேபாளம் தானே?

மாரா யோசனையுடன் சொன்னான். “அந்த மலையைத் தாண்டினால் நேபாள் எல்லை தான். என்றாலும் அது வரை அவர்களால் கண்டிப்பாகப் போக முடியாது. நான் நம் குகைக் கோயிலுக்குப் பல முறை போயிருக்கிறேன் என்றாலும் அதைத்தாண்டி அந்த மலை உச்சி வரை ஒரே முறை தான் போயிருக்கிறேன். மலை உச்சியில் இப்போது அதிகமாய் நீலக்கரடிகள் இருக்கும் என்பது மட்டுமல்லாமல் அந்த மலை உச்சியில் சிகரங்கள் கூர்மையான முட்கள் போல் இருப்பவை. எந்த உச்சியை அடைந்தாலும் அதன் மறுபக்கம் மிக ஆபத்தான, செங்குத்தான பள்ளத்தாக்கு தான்.  நீலக்கரடிகளைத் தாண்டி ஏதாவது உச்சியை அடைந்தாலும் அந்தப் பள்ளத்தாக்கில் அமானுஷ்யன் அல்ல வேறு யாருமே இறங்க முடியாது. அதனால் தான் திபெத்தின் அந்தப் பகுதியில் எந்தக் காவலையும் சீனா வைத்திருக்கவில்லை. அந்த மிக ஆழமான பள்ளத்தாக்கு தாண்டி இன்னொரு மலை ஆரம்பமாகிறது அது தான் நேபாள் எல்லை. அந்த மலை இது போல செங்குத்தானதல்ல. அந்த மலை உச்சியில் நேபாள நாட்டின் எல்லைக்காவல் பலமாக இருக்கிறது. அப்படி இருக்கையில் அமானுஷ்யன் அங்கு பயணித்திருப்பதன் உத்தேசம் என்ன என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒருவேளை யாரும் அங்கு வந்து தேட மாட்டார்கள், அதனால் ஒளிந்து கொள்ள வசதி என்று அவன் நினைத்தான் என்றால் அவன் மீது வைத்திருக்கும் மதிப்பை நாம் குறைத்துக் கொள்ளத் தான் வேண்டும்....

வெளியே நன்றாகவே வெளிச்சமாகி விட்டிருந்தது. மாரா அவரிடம் விடை பெற்றுக் கிளம்பினான்.

அவன் காரில் பயணிக்கும் போது போனில் தகவல் வந்தது. சம்யே மடாலயத்தில் இருக்கும் இரண்டு கண்காணிப்பு போலீஸ்காரர்களையும் விலைக்கு வாங்கி விட்டாயிற்று என்றும் அவர்கள் காவலுக்கு உள்ள வரை அங்கு நடப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்யே மடாலயத்தில் இருக்கும் தன் ஆட்களுக்குப் போன் செய்து இரவு நேர ரகசிய வழிபாட்டைத் தொடரச் சொன்னவன் விளைவுகளை வேகமாக எட்ட வேண்டிய அவசரத்தையும் வலியுறுத்திச் சொன்னான்.

மறுபடி பயணத்தைத் தொடர்ந்த அவன் மனதில் அமானுஷ்யனின் திட்டம் பற்றிய யூகங்களே நிறைந்திருந்தன. எந்த யூகமும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. வாய் விட்டு முணுமுணுத்தான். “அமானுஷ்யா!. உன் மனதில் என்ன தான் திட்டம் இருக்கிறது?



லையில் மேலும் சிறிது தூரம் சென்ற பிறகு அக்‌ஷய் நின்று தன் பையில் இருந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துத் திறந்தான். அதன் வாடை ஒரு மாதிரியாக இருந்தது. மைத்ரேயன் அது என்ன என்பது போல அக்‌ஷயைப் பார்த்தான்.

அக்‌ஷய் சொன்னான். “இது ஒரு செடி இலைகளின் சாறு. நீலக்கரடிகளுக்கு இதன் வாடை சிறிதும் ஆகாது. அதனால் இதைப் பூசிக் கொண்டால் நம்மை நீலக்கரடிகள் நெருங்காது....

ஒரு நீலக்கரடியின் நட்பைப் பெற்றுக் காட்டிய பிறகும் இந்த தற்காப்பு நடவடிக்கை தேவை தானா என்பது போல் மைத்ரேயன் பார்த்தான். அக்‌ஷய் நீலக்கரடிகள் விஷயத்தில் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள விரும்பவில்லை. ஒரு நீலக்கரடி போல் எல்லாமே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் என்ன இருக்கிறது. ஒரு நீலக்கரடி எதிர்த்து நின்றாலும் கூட அவன் ஏதோ செய்து அதை வென்று விடலாம் என்கிற நம்பிக்கை அவனிடம் இருக்கிறது. ஆனால் கும்பலாக நீலக்கரடிகள் வந்தால் - அவை மைத்ரேயனின் அன்புக்கு மசியாமல் போனால்- அவர்கள் இருவரும், இரண்டு ஆடுகளும் சில நிமிடங்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது.

அவன் அமைதியாக மைத்ரேயனிடம் சொன்னான். “நீலக்கரடிகளைப் பரிசோதித்துப் பார்க்க நமக்கு நேரமில்லை மைத்ரேயா! தேவையில்லாமல் ஆபத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை

மைத்ரேயன் முகத்தில் சின்னதாய் ஒரு சுளிப்போ, தயக்கமோ கூட வரவில்லை. அமைதியாகத் தலையசைத்தான்.

அக்‌ஷய் முதலில் மைத்ரேயனின் முகம், கைகாலுக்கு அதைப் பூசினான். நெடி மூக்கை அதிகமாகவே துளைத்தது. அப்போதும் அந்தச் சிறுவன் எந்த வெறுப்பையும் காட்டவில்லை. அக்‌ஷய்க்கு அதை நினைக்கையில் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

அக்‌ஷய் தானும் பூசிக் கொண்டான். ஆடுகளுக்கும் சிறிது பூச அக்‌ஷய் நினைத்தான். தப்பிக்கும் திட்டத்தில் அவற்றிற்கும் முக்கிய பங்கு உண்டு. அது வரை அவை உயிருடன் இருப்பது மிக அவசியம்.... ஆனால் அவன் அந்த சாறோடு நெருங்கிய போது ஆடுகள் ஓட்டமெடுத்து தூரப் போய் நின்று பார்த்தன. என்ன செய்வது என்று அக்‌ஷய் யோசித்த போது மைத்ரேயன் அவனிடம் இருந்து அந்த பிளாஸ்டிக் டப்பாவை வாங்கி அந்த ஆடுகளுக்கு புன்னகையுடன் சைகை காண்பித்தான். இரண்டும் வேண்டா வெறுப்பாக வர ஆரம்பித்தன. அக்‌ஷய் வியப்புடன் பார்த்தான்.

மைத்ரேயனை நெருங்கி வந்த ஆட்டுக்குட்டிகள் அவன் பூச வரும் போது விலகி ஓடி விளையாட்டு காட்டி கடைசியில் ஒத்துழைத்தன. அவன் இரண்டு ஆடுகளுக்கும் அந்த சாறைப் பூசினான். அவை இரண்டும் அவனை உரசிக் கொண்டே நின்றன.

மறுபடி மேலே ஏற ஆரம்பித்தார்கள். தூரத்தில் ஒரு நீலக்கரடி அவர்களைப் பார்த்தது. ஆனால் அவர்கள் நெருங்க நெருங்க அது ஓடிப்போனது. மறுபடி தூரத்தில் நின்று அவர்களைப் பார்த்தபடி நின்றது. மைத்ரேயன் கையசைத்தான். அது ஒருவிதமாய் உறுமியது. அது அன்று காலையில் அவன் அருகே வந்த நீலக்கரடி போலத் தான் தெரிந்தது. மைத்ரேயன் சாந்தமாக அந்த நீலக்கரடியைப் பார்த்தான். அது ஓடிப் போய் மறைந்தது.

அக்‌ஷய் அந்த மலையில் ஒரு இடத்தை அடைந்தவுடன் நின்றான். மைத்ரேயனையும் ஆடுகளையும் ஒரு பாறையில் மறைவாக நிறுத்தி விட்டுத் தன் பையில் இருந்து ஒரு பைனாகுலரை எடுத்து அதன் வழியே பார்த்தான். நேபாள எல்லை மலை தெளிவாகத் தெரிந்தது.   


சேகர் அன்று தன் மகனை நேரில் சந்தித்துப் பேசி விடுவது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தான். தானாடா விட்டாலும் சதை ஆடும் என்பார்கள். நீரடித்து நீர் விலகாது என்பார்கள். இந்தப் பழமொழிகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இன்று சோதித்துப் பார்த்து விடுவது என்று எண்ணினான். கர்னாடகாவில் குடகு மலையில் இருக்கும் வேலையும், எந்த நேரத்திலும் சஹானாவின் இரண்டாம் கணவன் திரும்பி வந்து விடலாம் என்கிற எண்ணமும் அவனை அந்த முடிவுக்கு அவசரப்படுத்தியது.

வருண் அன்று இருட்டிய பின் வெளியே கிளம்பியதைப் பார்த்தான். அவன் தெருக்கோடியில் இருக்கும் மளிகைக் கடைக்குத் தான் போகிறான் என்பது அவன் எடுத்துக் கொண்ட வழக்கமான மஞ்சள் நிற பெரிய பையைப் பார்த்தவுடன் தெரிந்தது.

இந்த இருட்டும், தனியாக மகன் கிடைப்பதும் தன் நோக்கத்திற்கு அனுகூலமாக இருக்கும் என்று கணக்குப் போட்ட சேகர் மகனைப் பின் தொடர்ந்து சென்றான். மகன் தெருக்கோடியை அடைந்து அந்தக்கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு திரும்பும் வரை பொறுமையாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைவில் நின்று கொண்டிருந்த அவன் மகன் அருகில் வந்ததும் மறைவில் இருந்து வெளியே வந்து அழைத்தான். “வருண்

(தொடரும்)
என்.கணேசன்  

வாசக அன்பர்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு தங்களுக்கு அமையட்டும்!

என்.கணேசன்

11 comments:

  1. Superb reality Writing style AnNa..

    Wish a very Happy New year to you and your Family Na..

    With Love MuThuKuMaR.S

    ReplyDelete
  2. வரதராஜன்December 31, 2015 at 6:32 PM

    அமானுஷ்யனின் திட்டம் என்ன என்று அறிய எங்களுக்கும் ஆவலாக உள்ளது. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Happy New year sir... We request new year bonus posts....

    ReplyDelete
  4. Happy new year Anna
    Shall we get one more Bonus post? :)

    ReplyDelete
  5. வருடத்தில் ஒரு முறை தான் போனஸ். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete

  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Happy new year.
    Suvarasyamum, aduthu yenna endra. Ethirpappum koodikkonde pokirathu.

    ReplyDelete
  9. Thanks ganesan sir, happy new year to you and to your family members.

    ReplyDelete