சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 14, 2015

கர்ம வினைகளும் பாபாவின் கருணையும்!

மகாசக்தி மனிதர்கள்-44


வ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற விளைவுகள் இருக்கவே செய்கின்றன. கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிக்க வழியே இல்லை.  மனிதப்பிறவியே முந்தைய கர்மவினைகளின் கணக்குத் தீர்க்கும் களமாக இருக்கிறது. முந்தைய தீவினைகளின் பலனாக வரும் துன்பங்களை அனுபவிக்கும் போது அதிலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் தேடாத வழிகள் இல்லை. கடவுள் மற்றும் தெய்வாம்சம் பொருந்தியவர்களின் கருணைக்குப் பாத்திரமானால் பழைய தீவினைப் பயன்களை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் ஷிரடி பாபாவின் கருணை பல பக்தர்களுக்கு பேருதவி புரிந்திருக்கிறது. சில உண்மைச் சம்பவங்களைப் பார்ப்போம்.

டாக்டர் சிதம்பரம் பிள்ளை என்ற பக்தர் கினியா புழு நோயால் தாக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி இருந்தார். இன்றும் கினியா புழு நோய்க்குச் சரியான மருத்துவம் இல்லை என்று மருத்துவ ஏடுகள் சொல்கின்றன. அப்படி இருக்கையில் சுமார் நூறு வருடங்களுக்கும் முந்தைய காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று கூற வேண்டியதில்லை. ஒரு தாங்க முடியாத கட்டத்தில் அவர் தன் நண்பர் மூலம் பாபாவிற்குச் சொல்லி அனுப்பினார். இந்தக் கஷ்டங்களை அடுத்து பத்து பிறவிகளுக்குப் பகிர்ந்தளிக்க பாபாவிடம் சொல். இந்த ஒரு பிறவியிலேயே இந்த வலி முழுவதையும் என்னால் அனுபவிக்க முடியவில்லை.

பாபா சொன்னார். “என்னது இன்னும் பத்து பிறவிகளா? பத்து பிறவிகளின் கர்மவினைகளையும் பத்து நாட்களில் இறுக்கி முடித்து விட முடியும் போது ஒரு பிறவியின் துன்பங்களைப் பத்து பிறவிகளுக்குப் பகிர்வதா? துவாரகமயியிக்கு வந்து காலை நீட்டி சில நாட்கள் உட்காரச் சொல். ஒரு காகம் வந்து கால்களில் உள்ள அந்தப் புண்களைத் தீண்டும். அதன் பின்னால் நோய் குணமாகும் என்று சொல்

சிதம்பரம் பிள்ளை உடனடியாக ஷிரடி வந்து பாபா கூறியபடி துவாரகமயியில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார். பாபாவின் சேவகனான அப்துல் என்பவன் சிலநாட்கள் கழித்து தற்செயலாக அவருடைய புண் இருக்கும் காலை நன்றாக மிதித்து விட்டான். அவர் புண்களில் இருந்த கினியாபுழுக்கள் அவன் கால்பட்டு நசுங்கி மடிந்தன. அப்போது உயிர் போவது போல் சிதம்பரம் பிள்ளை துடித்தார். பாபா அவரிடம் சொன்னார். “இனி ஒரு காகம் வந்து தீண்ட வேண்டியதில்லை. அப்துலே சென்ற பிறவியில் காகமாக இருந்தவன் தான். அதனால் இனி நீ உன் வீட்டுக்குப் போகலாம். உன் நோய் விரைவில் குணமாகி விடும்”  சிதம்பரம் பிள்ளை அவர் சொன்னபடி ஊர் திரும்பினார்.  பத்து நாட்களில் வியக்கத்தக்க வகையில் அவர் பூரண குணமானார்.

அதே போல பீமாஜி என்பவன் ஆஸ்துமா மற்றும் காச நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனை ஒருவர் பாபாவிடம் அழைத்து வந்தார் சென்ற பிறவியில் திருடனாய் இருந்தவனை அழைத்து வந்து அவனைக் குணமாக்கும் பாரத்தை என் மேல் ஏன் சுமத்துகிறாய்”  என்று அவரிடம் சொல்ல பீமாஜி அதிர்ந்து போனான். அவன் பாபாவின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்து கதறினான். “அனாத ரட்சகரே! ஆபத் பாந்தவரே! நீங்களும் என்னைக் கைவிட்டால் நான் எங்கே போவேன். எனக்கு கருணை காட்டி காப்பாற்றுங்கள்

மனம் இளகிய பாபா “கர்மவினைகளின் பலன்களை யாருமே ஒதுக்கி விட முடியாது. ஆனால் அவற்றைப் பெருமளவு குறைக்க முடியும். நீ சில நாட்கள் ஈர வராந்தாவில் வசித்து உன் கர்மவினைப் பலன்களைக் குறைத்துக் கொள்என்று கட்டளை இட்டார். பீமாஜியும் அது போலவே செய்தான். அப்படி சில நாட்கள் அந்த ஈர வராந்தாவில் வசிக்கையில் பீமாஜி இரண்டு கனவுகள் கண்டான். ஒரு கனவு அவன் சிறுவனாக இருப்பதாகவும் ஒரு ஆசிரியர் அவனைக் கடுமையாக அடித்து தண்டிப்பது போலவும் இருந்தது. இன்னொரு கனவு அவன் மார்பில் ஒரு பாறையை வைத்து யாரோ அழுத்தி உருட்டுவது போல இருந்தது. மரணபயத்தையும் தாங்க முடியாத வலியையும் அந்தக் கணங்களில் பீமாஜி உணர்ந்தான்.

அவனிடம் பாபா சொன்னார். “உன் முன் பிறவி தீவினைகளின் பலனை மிகச்சுருக்கி கனவுகளிலேயே அனுபவிக்க வைத்து முடித்து விட்டேன். இது நீ திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம். இனி நீ நேரான பாதையில் வாழ்வது முக்கியம்”. அவர் சொன்னது போலவே சில நாட்களில் பீமாஜி குணம் அடைந்து விட்டான். அதன் பின் அவன் வாழ்க்கை மிக நேர்மையானதாகவும் தர்மசிந்தனை நிறைந்ததாகவும் மாறி விட்டது. 

சில சமயங்களில் பாபாவின் பக்தர்களே அவரை ஏமாற்ற நினைப்பதுண்டு. காரணம் பணத்தாசை. பணத்தாசை வந்து விட்டால் பகவானையே ஏமாற்ற நினைக்கும் மனோ பாவம் மனிதர்களுக்கு வந்து விடும். பணத்தின் மகிமை அது. ஒரு பக்தர் அவரிடம் வருவதற்கு முன் தன்னிடம் இருந்த பணத்தைக் கூட வரும் நண்பர் கையில் தந்து விட்டார். பாபா தட்சிணை கேட்டால் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி விடலாம் என்று சொல்லி பணம் தராமல் தப்பிக்கலாம் என்று திட்டமிட்டு தான் அப்படி செய்தார். பாபாவை அவர் சந்தித்த போது பாபா சொன்னார். “தட்சிணை கொடு. உன்னுடன் வந்திருக்கும் நண்பரிடமிருந்து வாங்கிக் கொடுஅந்த பக்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அசடு வழிந்தபடி உடனே தன் நண்பரிடம் தந்து வைத்திருந்த தட்சிணைப் பணத்தை வாங்கி பாபாவிடம் தந்தார். 

ஒருசிலர் பாபாவிடம் தர மனதில் ஆரம்பித்தில் உத்தேசித்திருந்த பணத்தைத் தராமல் அதற்கும் குறைவான பணத்தைத் தருவதுண்டு. பாபா மிகச்சரியாக அவர்கள் எவ்வளவு குறைத்துத் தருகிறார்களோ அந்தத்  தொகையைக் கேட்டு வாங்குவார். அதே போல சிலர் தங்களைக் கஷ்டப்படுத்திக் கொண்டு மிக அதிகமாகத் தரும் தொகையையும், முன்பு உத்தேசித்ததை விட அதிகம் தரும் தொகையையும் அவர் திருப்பித் தருவதும் உண்டு.

பகதர்கள் தரும் பணம் முழுவதும் அவ்வப்போதே தர்ம காரியங்களுக்குப் பகிர்ந்து அளிக்கபடும் என்பதை முன்பே சொல்லி இருந்தோம். ஒரு சல்லிக் காசு கூட அவர் தன் தனிப்பட்ட செலவுக்கோ ஆடம்பரத்துக்கோ எடுத்துக் கொள்வதில்லை. அப்படி இருக்கையில் முழு மனதோடு தராத பணத்தை அவர் ஏன் பக்தர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம். அதற்கும் ஒரு ஆழ்ந்த காரணம் இருக்கிறது.

ஒரு காரியம் ஆக வேண்டும் என்று வேண்டி அக்காரியம் நிறைவேறினால் இத்தனை பணம் தருகிறேன் என்று சில பகதர்கள் வேண்டிக் கொள்வதுண்டு. அப்படி அந்தக் காரியம் நிறைவேறி, நினைத்த பணத்தை அவர்கள் தராமல் போனால் நேர்த்திக்கடன் நிறைவேற்றாத கடன்காரர்களாகி அதன் மூலம் ஏற்படும் துன்பங்களுக்கு ஆளாவார்கள். அதைத் தவிர்க்கவும், உண்மையான தர்ம காரியங்களினால் அவர்களுக்கு ஏற்படும் புண்ணியத்தைக் கூட்டவுமே பாபா அப்படிச் செய்தார்.

இப்படி கர்மவினைகளின் கடுமையான பலன்களை வெகுவாகக் குறைத்து விட பாபா சிலருக்கு உதவி புரிந்தாலும் சில சந்தர்ப்பங்களில் மற்றவர் கர்மவழிப் பயணத்தில் இடையில் புகுவதைத் தவிர்த்தார். ஒரு மூதாட்டியின் ஒரே மகனைப் பாம்பு கடித்து விட்டது. அந்த மூதாட்டி அழுது கொண்டே தன் மகனைக் காப்பாற்ற பாபாவிடம் ஓடோடி வந்தார். பாபா கையால் திருநீறு வாங்கிப் போனால் மகனைக் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆனால் பாபா அவருக்கு திருநீறு அளிக்கவில்லை. அந்த மூதாட்டியின் மகன் இறந்து போனான்.  

அருகே இருந்த அவருடைய பக்தர் காரணம் கேட்ட போது அந்த மூதாட்டியின் மகனின் கஷ்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது. இனி நல்லதொரு பிறவி எடுத்து நன்மைகள் பெறப் போகிறான்.  அதைத் தடுப்பது தர்மம் அல்லஎன்று பாபா கூறினார். இப்படி ஒரு யோகியின் சக்திகள் தர்மத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 19.06.2015



2 comments:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  2. Beautifully descibed about the powers of Shirdi Sai Baba. Thank you very much. Om Sai Ram.

    ReplyDelete