சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 28, 2015

அனைத்துமான ஆண்டவனை அணுகுவது எப்படி?


கீதை காட்டும் பாதை 39

காபாரதம் எழுதப்பட்ட காலம் யாக யக்ஞங்கள் மற்றும் வைதீக கர்மங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த காலம். அந்த வேள்விகளில் போடப்படும் மூலிகைகளும், நெய்யும், சொல்லப்படும் மந்திரங்களும், எரியும் அக்னியும் நானே என்று சொல்லி அந்த யாக யக்ஞங்களின் ஒவ்வொரு அம்சமும் தானே என்று அறிவிக்கிற ஸ்ரீகிருஷ்ணர்  தொடர்ந்து சொல்கிறார்.

இந்த உலகமனைத்தையும் தாங்குபவனும், கர்மங்களுக்குப் பயன் அளிப்பவனும், தந்தையும், தாயும், பாட்டனாரும், அறியத்தக்கவனும் புனிதமானவனும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் வேதங்களும் நானே!

கதியும் நானே; தாங்குபவனும் நானே; ஆள்பவனும் நானே; சாட்சியும் நானே; இருப்பிடமும் நானே; அடைக்கலமும் நானே; நண்பனும் நானே; பிறப்பிடமும் நானே; ஒடுங்கும் இடமும் நானே; புகலிடமும் நானே; அழியாத விதையும் நானே!

அர்ஜுனா! வெயிலும் நானே; மழையும் நானே; அதை நிறுத்துபவனும், பொழிவிப்பவனும் நானே; சாகாமையும்  நானே; மரணமும் நானே; அழியாததும் நானே; அழியக்கூடியதும் நானே.

எந்த மகாசக்தியால் பிரபஞ்சம் முழுவதும் இயங்குகிறதோ, எந்த மகாசக்தி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறதோ அந்த மகாசக்தியை அறிவதை விட வேறு எதுவும் அறியத்தக்கதில்லை. வேறெதுவும் புனிதமானதில்லை. அந்த மகாசக்தியே மாபெரும் புகலிடம். அதுவே அனைத்துக்கும் சாட்சி. அந்த மகாசக்தியே நமக்கு மகத்தான நண்பன்.  எதையும் இயக்குவதும் அதுவே. இயங்காமல் தடுத்து நிறுத்துவதும் அதுவே. அழிந்ததும், அழிவதும் அதுவே. இதுவரை அழியாததும், இனிவரும் உலகங்களை சிருஷ்டிக்கும் அழியாத விதையும் அதுவே. அந்த மகாசக்தியையே நாம் கடவுள் என்கிறோம்.

அந்தக் கடவுளை நாம் எப்படி அணுகுகிறோம்? அந்தக் கடவுளிடம் நான் என்ன வேண்டுகிறோம். பதிலாக நாம் பெறுவதென்ன? அப்படிப் பெறுவது எத்தனை காலம் நீடிக்கிறது? இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. இதில் இருந்து கிடைக்கும் பதில்களே நம் வாழ்க்கையை செதுக்க முடிந்தவை.

எல்லாம் தரவல்ல கற்பக விருட்சமாக கடவுள் இருந்த போதும் நாம் வேண்டிப் பெறுபவை நிரந்தர மகிழ்ச்சியையோ, நிரந்தர நிம்மதியையோ தர வல்லவையாக பெரும்பாலும் இருப்பதில்லை. நம் பிரார்த்தனைகளும், நம் வேண்டுதல்களும் சொற்ப காலத்திற்கானதாகவே இருக்கின்றன. இந்த நன்மையைக் கொடு, இந்தத் தீமையை நீக்கு, இந்த சந்தோஷத்தைக் கொடு, இந்த துக்கத்தை நீக்கு என்று தனிப்பட்ட வேண்டுதல்களோடே நாம் கடவுளை அணுகுகிறோம். கடவுளிடம் கேட்டவை எதுவும் மறுக்கப்படுவதில்லை. அது நிறைவேறி முடிந்தவுடன் அடுத்த பிரார்த்தனை அல்லது வேண்டுதல் தயாராகி விடுகிறது. இதுவா புத்திசாலித்தனமான அணுகுமுறை?

சொர்க்கத்தையே வேண்டிப் பெற்றாலும் அங்கு கூட நிரந்தரமாய் தங்கி விட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார்.

மூன்று வேதங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ள முறைகளின்படி, பயனை நல்கக்கூடிய கர்மங்களைச் செய்து, யாகத்தில் சோமபானத்தை அருந்தி, பாவங்கள் அகன்று தூயமை பெற்றவர்கள் என்னை யாகங்களால் உபாசித்து சுவர்க்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின் பயனாக சுவர்க்கத்தை அடைந்து அங்கு திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.

அவர்கள் விசாலமான சுவர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள். ஆகவே வைதிக தர்மங்களைக் கடைபிடித்து கோரிக்கைகளை வேண்டுபவர்கள், ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்.

வேதங்கள் சொல்லி இருக்கும் வேள்விகளையே முறைப்படி செய்து சொர்க்கத்தையே அடைந்தாலும் செய்த புண்ணியங்கள் தீர்ந்த பின் இந்த உலகில் மீண்டும் பிறவி எடுக்க நேரிடும். இது தான் வேள்விகள் செய்து கூட நாம் பெறும் பலன்களின் நிலை என்றால் சாதாரண வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் மூலம் நாம் பெறுவது எந்த அளவில் இருக்க முடியும்.

சரி அப்படியானால் கஷ்ட நஷ்டங்கள் நம்மை பாடாய் படுத்துகையில் நாம் என்ன தான் செய்வது? நாம் மனிதர்கள் தானே, கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நம்மால் இருக்க முடியுமா? அதைப் போக்க என்ன தான் செய்வது?

இதற்கு அடுத்த சுலோகத்தில் பகவான் பதில் அளிக்கிறார்.

வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், யார் என்னையே தியானித்து உபாசிக்கிறார்களோ அவர்களது யோக க்‌ஷேமத்தை நானே தாங்குகிறேன்.

இல்லாத நன்மையைப் பெறுவது யோகம். பெற்ற நன்மையை காத்துக் கொள்வது க்‌ஷேமம். நம் உண்மையான தேவைகளின் குறைபாடுகளை நீக்கி தேவையானவற்றைத் தந்தருளி, பெற்றிருக்கும் அவசிய நன்மைகளை இழந்து விடாமல் காத்தும் அருளி நம் யோக க்‌ஷேமங்களை இறைவன் பார்த்துக் கொள்வான் என்கிற உத்திரவாதம் இருக்கையில் அவனைச் சரணடைவதை விட வேறு என்ன தான் நமக்கு அதிகமாக உதவ முடியும்.

தாயையே பற்றிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன எல்லாம் தேவை என்பதை அறிந்து அத்தனையும் செய்து கொடுக்கும் தாய் போல பகவானையே பற்றிக் கொண்டிருக்கும் பக்தனின் அனைத்து தேவைகளையும் பகவான் பார்த்துக் கொள்வான். குழந்தை என்ன கேட்கிறது என்பதை விட குழந்தைக்கு எது நல்லது என்பதற்கு தாய் முக்கியத்துவம் தருவாள். அதற்கு எது எல்லாம் நன்மையோ அதை எல்லாம் குழந்தை கேட்காமலே செய்து தருவாள். அது போலவே பகவானும் தன்னை சரணடைந்த உண்மையான பக்தனுக்கு எதெல்லாம் நன்மையோ அதை எல்லாம் ஏற்படுத்தித் தருவான்.

எனவே இறைவனையே தியானி. அவனையே சரணாகதி அடைந்து விடு. அவனையே உபாசனை செய். அப்படிச் செய்தாயானால் தனித்தனியாகப் பல விஷயங்களுக்காக நீ பிச்சை கேட்க வேண்டியதில்லை. ஏன், எதையுமே அவனிடம் வேண்டிக் கேட்கத் தேவை இல்லை. உன்னுடைய யோக க்‌ஷேமங்களை அவன் பார்த்துக் கொள்வான்.

பாதை நீளும்....

என்.கணேசன்



2 comments:

  1. இறைவனிடம் வேண்டும் முறை இவ்வளவு எளிமையாக இருக்கும்போது... நாம் எவ்வளவு சிரமப்பட்டு வேண்டிக் கொண்டிருக்கிறோம்....? தகவல் அருமை சார்...

    ReplyDelete