வாங் சாவொவின் ஆட்கள் போவதையே அக்ஷய்
பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் எழுப்பி விட்டு நெருப்புகள் இன்னும் சற்று
தள்ளி எரிந்து கொண்டிருந்தன. அவர்களில் கடைசி ஆளும் பார்வையில் இருந்து மறைந்த
பின் மைத்ரேயனுடன் அந்த பாறைக்குக் கீழேயே அமர்ந்து கொண்டான். அந்த ஆடுகள்
அவர்களுக்கு முன்பே அங்கே இளைப்பாற ஆரம்பித்திருந்தன. நெருப்புகள் காலை வரை
தொடர்ந்து எரியும் போல இருந்தது. அதனால் காலை வரை நீலக்கரடிகள் வரும் அபாயம்
இல்லை. மைத்ரேயன் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். பாறையில்
சாய்ந்து கொண்ட அக்ஷய்க்கும் களைப்பின் மிகுதி காரணமாக சீக்கிரமே உறக்கம் வந்து
விட்டது.
எத்தனை நேரம் அவன் உறங்கி இருப்பானோ, அவனுக்கே தெரியவில்லை. ஒரு
விசித்திர சத்தம் கேட்டு கண்விழித்த போது அவன் இதயம் துடிக்க மறந்தது. காரணம் சில
அடிகள் தள்ளி ஒரு நீலக்கரடி நின்று கொண்டிருந்தது. அவனை எழுப்பியது அதன் உறுமல்
தான். மைத்ரேயன் மெல்லிய புன்னகையுடன் அந்த
நீலக்கரடியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆடுகள் இரண்டும்
பெரும் பயத்துடன் மைத்ரேயனுக்குப் பின்னால் ஒடுங்கி இருந்தன. அக்ஷய் எரிந்து
கொண்டிருந்த நெருப்புகளை திரும்பிப் பார்த்தான். ஒரு ஓரமாய் எரிந்து கொண்டிருந்த
ஒன்றைத் தவிர மற்றவை அணைய ஆரம்பித்திருந்தன. ஆனாலும் அவற்றின் அக்னித் துண்டங்கள்
இப்போதும் கனன்று கொண்டு தான் இருந்தன. அக்ஷய் மெல்ல தன் தோள்பையில் இருந்து
மெல்லிய கத்தியை வெளியே எடுத்தான். வேகமாக அதை எடுத்து நீலக்கரடியின் மீது அவன்
வீச யத்தனித்த போது அதிசயமாய் மைத்ரேயனின் கை அவன் கையைப் பிடித்துத் தடுத்தது.
நீலக்கரடி எத்தனை அபாயமான விலங்கு என்பது இவனுக்குத் தெரியுமா
என்று சந்தேகத்துடன் அக்ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயனின் பார்வை அந்த
நீலக்கரடி மீதிருந்து விலகாததும், அவன் புன்னகை மங்காததும், நீலக்கரடியுடன் அவன் மௌன
மொழியில் ஏதோ பேசிக் கொண்டிருப்பது போலத் தோன்றியதும் அந்த நிலவொளியில் ஒரு
அசாதாரணக் காட்சியாய் அவனுக்குத் தெரிந்தது.
அக்ஷய் மெல்ல முணுமுணுத்தான். “அது மிக அபாயமான விலங்கு...”
மைத்ரேயன்
நீலக்கரடி மேல் வைத்திருந்த பார்வையை விலக்காமல் சொன்னான். “அது ஒன்றும் செய்யாது.”
“விஷப்பரிட்சை
வேண்டாம் மைத்ரேயா”
”நீங்கள் பயப்படாதீர்கள்.... அதுவும் உங்களைப் பார்த்துத் தான்
பயப்படுகிறது... நீங்கள் கத்தியை பைக்குள்ளேயே போட்டு கையை வெளியே எடுங்கள்....”
அவன்
புத்தனின் மறு அவதாரமாகவே இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் அவன் சொல்வதைக் கேட்க
அக்ஷய்க்கு சிரமம் இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு கத்தியைப் பையிலேயே போட்டு
விட்டுக் கையை வெளியே எடுத்தான். மைத்ரேயன் மனிதரிடம் பேசுவது போல நீலக்கரடியிடம்
செல்லக் குழந்தையிடம் பேசும் தாயின் அன்பான குரலில் பேசினான்.
“நீ
பயப்படாமல் வா. இவர் ஒன்றும் செய்ய மாட்டார்... நல்லவர்.”
இரண்டடி முன்
வைத்த நீலக்கரடி அக்ஷயைப் பார்த்தபடி அப்படியே நின்றது. அவனைப் போலவே அதுவும்
சந்தேகப்பட்டது போலத் தெரிந்தது.
மைத்ரேயனே
எழுந்து அதன் அருகில் போனான். அக்ஷய் இதயம் வேகம் எடுக்க ஆரம்பித்தது. மைத்ரேயன்
அந்த நீலக்கரடியைத் தடவிக் கொடுத்தான். அவன் ஆடுகளிடம் நெருக்கமாய் இருந்தது போலவே
நீலக்கரடியிடமும் நெருங்கிப் பழகியது இப்போதும் அக்ஷய்க்குத் திகைப்பாய் தான்
இருந்தது. நீலக்கரடி மைத்ரேயனின் கைபட்டு மெல்லியதாய் சிலிர்த்தது. அவன் அதன் காதுகளில் மிகத் தாழ்ந்த குரலில் ஏதோ
பேசினான். நீலக்கரடியிடம் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அது அவனை நட்புடன்
பார்த்தது. இரண்டே நிமிடங்களில் மைத்ரேயன் அதை அழைத்துக் கொண்டு வந்தான்.
அக்ஷய்க்கு
எல்லாம் கனவில் நடப்பது போல் இருந்தது. அது வரை கிலியுடன் இருந்த ஆடுகளும் அமைதியடைய
ஆரம்பித்தன. அக்ஷய் பிரமிப்புடன் பார்த்தான். ஆனால் நீலக்கரடி நெருங்கிய போது
மனம் தானாக அலறியது. மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “இது ஒன்றும் செய்யாது. பயப்பட
வேண்டாம்”
ராட்சஸ
நாய்கள் வளர்த்துபவர்கள் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைத்
தைரியப்படுத்துவது போலத் தான் அவனும் பேசினான். அந்த நீலக்கரடியும் எஜமானுக்குக்
கட்டுப்பட்டு நிற்கும் நாய் போலத் தான் அவன் அருகில் சாதுவாக நின்றது. கண்ணில்
கண்டது கருத்திலும் பதிய சிறிது நேரம் அக்ஷய்க்குத் தேவைப்பட்டது. அவர்களுடன்
நீலக்கரடியும் அமர்ந்து கொண்டது.
மைத்ரேயன் அதைத் தடவியபடியே சொன்னான். “இது தைரியமானது. அந்த
நெருப்புகளைத் தாண்டிக்கூட வந்து விட்டது பாருங்கள்”
சிறிது
நேரத்தில் மைத்ரேயனும் கண்ணயர்ந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த
நீலக்கரடியும் கண்ணயர்ந்தது. அக்ஷய்க்கு உறக்கம் வரவில்லை. அந்தக் காட்சியையே
அவன் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மெள்ள மெள்ள அவனையும் அமைதி சூழ
ஆரம்பித்தது.
இரண்டு மணி
நேரத்தில் விடியல் வந்தது. நீலக்கரடி மெல்ல கண் விழித்தது. அதை உணர்ந்தது போல
மைத்ரேயனும் கண் விழித்தான். நீலக்கரடி மெல்ல எழுந்து மலை உச்சியைப் பார்த்தது.
“போகிறாயா?” என்று மைத்ரேயன் கேட்டான். அதன் லேசான
உறுமலில் ஏதோ பதில் பெற்றவன் போல அவன் நட்புடன் வழியனுப்பினான். “சரி போ”
நீலக்கரடி
சில அடிகள் போய் பின் திரும்பி அவனை ஒரு முறை பார்த்து விட்டு வேகமாகப் போய்
பார்வையில் இருந்து மறைந்தது.
நீலக்கரடி
விஷயத்தில் இன்னமும் பிரமிப்பு விலகாத போதும் உடனடியாகச் சோதித்துப் பார்க்க
வேண்டிய ஒன்றின் மீது அக்ஷயின் ஆர்வம் வந்து நிலைத்தது. அங்கிருந்து போவதற்கு
முன் அந்த ரகசியக்குகை பற்றிய விவகாரத்தில் நேரடியாக உண்மையை அறிந்து கொள்ள அக்ஷய்
விரும்பினான். உடனே எழுந்தான்.
மகனின் திடீர் மாற்றம் சஹானாவை
ஆச்சரியப்படுத்தியது. என்ன தலை போகிற வேலையாக இருந்தாலும் ஒரு முறையாவது
எதிர்வீட்டுக்குப் போகாமல் இருக்காத வருண் இரண்டு நாளாக அங்கு போகாமல் இருந்ததும்,
தன் அறையிலேயே அடைபட்டுக் கிடந்ததும், யாரிடமும் சரியாகப் பேசாமல் இருந்ததும்
அவளுக்கு ஏதோ சரியில்லை என்பதைப் புரிய வைத்தது.
“என்னடா எதாவது ப்ரச்னையா?” என்று அவனிடம் வாய் விட்டுக் கேட்டாள்.
“ஒன்றுமில்லை” என்றவன் அவள்
அடுத்த கேள்வி எதாவது கேட்டு விடுவாளோ என்று பயந்து அறைக்குள் புகுந்து கதவைத்
தாளிட்டுக் கொண்டான்.
சஹானா மாமியாரிடம் கேட்டாள். “எதிர் வீட்டுப் பெண்ணிடம் ஏதாவது
சண்டை போட்டு விட்டானா என்ன?”
மரகதம் ”அப்படித்தான் போல் இருக்கிறது” என்று பட்டும் படாமலும் சொன்னாள்.
அவளுக்குத் தன் பேரன் சின்ன விஷயத்தை அனாவசியமாகப் பூதாகரமாக்குவது போலத்
தோன்றியது. அப்பா என்று சொல்ல சங்கடமாக இருந்தால் மாமன் என்றோ, உறவுக்காரன் என்றோ
கூடச் சொல்லி சமாளிப்பதை விட்டு விட்டு நிஜமாக சேகரே நேரில் வந்தது போல் வருண் ஏன்
பதற்றமடைகிறான் என்பது புரியவில்லை.
ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் மூன்று நாட்கள்
படுத்திருந்த மகனை மரகதம் நினைவுபடுத்திப் பார்த்தாள். அந்தக் கடைசி மூன்று
நாட்களில் கூட அவனுக்கு அவளிடம் சொல்ல எதுவும் இருக்கவில்லை. அவன் அருகிலேயே
கவலையோடு அமர்ந்திருந்த அவளிடம் அவன் கடைசியாக அவன் பேசியது கூட அன்பானதல்ல. “சும்மா
என் பக்கத்திலேயே இப்படி சோகமாய் உட்கார்ந்து என் உயிரை எடுக்காதீர்கள்,
வீட்டுக்குத் தான் போங்களேன்”
இப்போதும்
அந்த வார்த்தைகள் மரகதத்தைக் குத்தின. அவன் சொன்னதில் இருந்து அவள் அவன் கண்ணில்
படாமல் தள்ளியே ஒதுங்கி இருந்தாள். ஆனால் அவன் கடைசியாக சஹானாவிடம் பேசிய வார்த்தைகளோ
மிகவும் கொடூரமானவை. ”நான் செத்த
அடுத்த நாளே யார் கூடவாவது படுக்கப் போய் விடாதே. என் மகனை நன்றாக வளர்க்கப் பார்” அவன் அதைச் சொன்ன போது மரகதம் சில அடிகள் தள்ளி மறைவில் தான்
இருந்தாள். அவளுக்கே மனம் பதறியது. வயிறு எரிந்தது. குடும்பத்தினர் நல்லபடியாக
நினைவுபடுத்திக் கொள்ள வாழ்க்கையின் கடைசி நாட்களையும் அவன் பயன்படுத்திக்
கொள்ளவில்லை. அந்தப் பாவம் தானோ என்னவோ மருத்துவமனை தீ விபத்துக்குள்ளாகி அவன்
தீக்கிரையாகிப் போனான். கரிக்கட்டையாகிப் போன உடல் தான் அந்திமச் சடங்குகள் செய்ய
அவர்களுக்குக் கிடைத்தது....
சாவதற்கு
முன்னால் அவன் அக்கறை காட்டிய ஒரே நபர் வருண் தான். மகனை நன்றாக வளர்க்கப் பார்
என்று மனைவியிடம் சொன்னானே! சஹானாவும் பாவம் நன்றாகவே வளர்த்தாள். அக்ஷய் வந்த
பின் குடும்பம் சொர்க்கமாகவே மாறியது.... அக்ஷயை நினைக்கையில் மரகதத்தின் முகம்
மென்மையாகியது. அவன் அவள் பெறாத மகன். பத்தரை மாற்றுத் தங்கம்.... வருணை அவன்
சொந்த மகனை விட மேலாகத் தான் பார்க்கிறான். வருண் அவன் மேல் உயிராய் இருப்பது
காரணமில்லாமல் அல்ல....
மரகதத்தின் சிந்தனை மறுபடி நிகழ்காலத்திற்கு வந்தது. வருண்
சொன்ன புகைப்படம் எப்படி வந்தனா கையில் கிடைத்திருக்கும் என்பது அவளுக்கு
விளங்கவில்லை. அவளே கூட மகனின் புகைப்படம் எதையும் தன்னிடம் வைத்திருக்கவில்லை. வீட்டில்
இருந்த சேகரின் ஒன்றிரண்டு புகைப்படங்களைக் கூட அக்ஷய் அப்பா என்றான பிறகு வருண்
எரித்து விட்டதை அவளே கண்கூடாகப் பார்த்திருக்கிறாள். என்ன தான் மகன் நல்லவன் அல்ல
என்ற போதும் வருண் அப்படிச் செய்தது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. வருண்
அக்ஷயின் மகன் அல்ல என்று சாட்சி சொல்லும் சிறிய பழைய அடையாளங்கள் கூட வேண்டாம்
என்று அவன் நினைத்தது பத்து வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்து விட்ட மாற்றம். அதனால்
பழைய புகைப்படங்கள் எதுவும் அந்த வீட்டில் இருக்கவில்லை. அப்படி இருக்கையில்
வந்தனா கையில் எப்படி பழைய புகைப்படம் கிடைத்திருக்க முடியும் என்று ஹாலில்
அமர்ந்தபடி யோசித்தாள்.
அவள் மகன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதையும், அவன் அந்தக்
கணத்தில் எதிர் வீட்டில் இருந்து கொண்டு பைனாகுலர் வழியாக அவளையே பார்த்துக்
கொண்டிருக்கிறான் என்பதையும், சொர்க்கமாக இருக்கும் அவர்களது குடும்பத்தில் வீச
ஒரு புயல் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
இரு பக்கமும் சுவாரசியம் கூடுகிறது கணேசன் சார். வரும் வியாழனுக்காக இப்போதிருந்தே காத்திருக்க வைக்கிறீர்கள். தீபாவளி போனஸ் போல் கிறிஸ்துமஸ், பொங்கல் போனஸ் எல்லாம் உண்டா?
ReplyDeleteMaithreyan slowly reveals himself. Very natural write up.
ReplyDeleteஅன்பின் கணேசன்,
ReplyDeleteஒரு தெய்வக்குழந்தையின் கேரக்டரையும், ஒரு தாயின் மனப்போராட்டத்தையும் அருமையாக இந்த அத்தியாயத்தில் சொல்லி இருக்கிறீர்கள். அப்பா என்று சொல்ல சங்கடமாயிருந்தால் மாமா என்றோ உறவுக்காரன் என்றோ சொல்லி சமாளித்திருக்கலாமே என்று மரகதம் நினைப்பது யதார்த்தம். மகன் கடைசி காலத்தில் கூட குடும்பத்தினர் நல்லதாய் நினைக்க எதையுமே விட்டு விட்டுப் போகவில்லையே என்று பொய்யில்லாமல் நினைத்துப் பார்க்க முடிவதும், அவன் தீயவன் என்பதை மறுக்காத போதும் மன்னிக்க முடிவதும் மரகதம் என்ற சின்ன கேரக்டரை கண் முன் வாழ வைத்து விட்டீர்கள்.
Fantastic Ganesan sir. very nice . waiting for next Thursday.
ReplyDeleteமதிப்பிற்குரிய எழுத்தாளர் கணேசன் அவர்களே, உங்கள் எழுத்துக்களுக்கும் கற்பனைக்கும் நான் புதிதானவன் என்பது வருத்தமே. இத்தனை காலமும் இப்படியொரு எழுத்தாளன் பால் என் கவனம் திரும்பாமல் இருந்தது என் நூல் ஆர்வத்தின் அடிப்படையை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறது.
ReplyDeleteஎனினும் தங்களது அமானுஷ்யன் என்ற தொடரை படித்து முடித்துவிட்ட எனக்கு, அதன் தொடர்ச்சியான இந்த புத்தம் சரணம் கச்சாமி என்ற தொடரின் 75 ஆம் அத்தியாயத்தில் ஒரு எழுத்தாளராக நீங்கள் தவறிழைத்தவராகவே எண்ணத் தூண்டுகிறது. காரணம், அமானுஷ்யன் தொடரில் அமானுஷ்யன் ஒரு நாயை வசியம் செய்ததாக எழுதி உள்ளீர்கள். எனினும் இங்கு நீலக்கரடியை அதுபோல் வசியம் செய்ய முற்படாததும் அதை தாக்க முற்பட்டதும் ஆச்சரியம் தருகின்றது. அது மட்டுமில்லாமல் மைத்ரேயன் அதை வசியம் செய்த போது அமானுஷ்யன் அதைக் கண்டு வியந்ததாக நீங்கள் எழுதி இருப்பது அது தவறுதான் என்பதை உறுதிப்பட வைக்கிறது.