சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 29, 2015

கீதையையும் பைபிளையும் இணைத்த யோகி!


மகாசக்தி மனிதர்கள்-29

பிரியாநாத் கராரின் வாழ்க்கை மனைவியின் மரணத்திற்குப் பின்னால் மாறிப் போனது. ஆன்மிகத்திலும், வேதாந்த தத்துவங்களிலும் உண்மையாகவே நாட்டம் இருந்த அவருக்கு ஒரு குருவின் வழிகாட்டல் அந்தக் கணத்தில் அதிகமாகத் தேவைப்பட்டது. .அந்த சமயத்தில் கோஸ்வாமி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வாரணாசியில் ஒரு யோகியிடம் ஏதோ உபதேசம் பெற்று திரும்பி வந்தார். அவர் தினமும் தன் அறையின் உள்ளே கதவை மூடிக் கொண்டு ஒரு ஆன்மிகப் பயிற்சியைச் செய்து வந்தார். பிரியாநாத் கரார் அவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்த போது அவர் ‘வாரணாசியில் இருக்கும் ஒரு யோகியிடம் கற்று வந்த பயிற்சியைத் தினம் செய்து வருகிறேன்என்று மட்டும் பதில் அளித்தார். ஆனால் யார் அந்த யோகி என்பதையோ, என்ன பயிற்சி என்பதையோ சொல்ல அந்த கோஸ்வாமி மறுத்து விட்டார். அக்காலத்தில் சில தீட்சை பெற்றவர்கள் தங்கள் குருவைப் பற்றியோ, அவரிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் பற்றியோ மிக நெருங்கியவர்களிடம் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படித் தெரிவித்தால் அந்த வித்தைகளின் பலிதம் குறைந்து விடும் என்கிற அச்சம் தான் அதற்குக் காரணம்.

திடீரென பிரியாநாத் கராரின் மனம் அந்த வாரணாசியில் இருக்கும் யோகியைக் காணத் துடித்தது.  அதற்கான சரியான காரணம் அவருக்கே விளங்கவில்லை. பெரும்பாலான ஆன்மிக முடிவுகளுக்கு அறிவு ரீதியான பதில் கிடைப்பதில்லை அல்லவா? பிரியாநாத் கரார், பெயரோ விலாசமோ கூடத் தெரியாத தன் குருவைத் தேடி வாரணாசிக்குக் கிளம்பினார். ரயிலில் வாரணாசியை வந்தடைந்த அவருக்கு அங்கு ஒரு குருவைத் தேடுவது என்பது திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போலத் தான். பல விதமான துறவிகள், குருக்கள் வாரணாசியில் ஆயிரக் கணக்கில் இருந்தார்கள்.

தன் மனதில் இருந்த குருவைப் பலரிடமும் விசாரித்து கிடைத்த பதில்களில் இருந்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு கடைசியில் ஒரு யோகியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டில் ஒரு அறையில் அந்த யோகி யோகாசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் சில சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கே பேரமைதி நிலவியது. அந்த அமைதியில் அவர்கள் ஆழ்ந்து போயிருந்தார்கள். அந்தக் காட்சி பிரியாநாத் கராரின் அந்தராத்மாவை அசைத்தது. இந்த அமைதியைத் தேடி அல்லவா அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்! அவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் அந்த சீடர்கள் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். அந்த யோகி மட்டும் தனித்திருந்தார். பிரியாநாத் கரார் எழுந்து அவர் காலடியில் வணங்கினார். “பல ஜென்மங்களாக நீங்களே எனக்கு குருவாய் இருந்திருக்கிறீர்கள் என்று உணர்கிறேன்என்ற வார்த்தைகள் அவர் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தன.

அந்த யோகி பெருங்கருணையுடன் புன்னகைத்தார். கங்கையில் குளித்து விட்டு வா சீடனே. உனக்கு தீட்சை அளிக்கிறேன்என்று கனிவுடன் சொன்னார். பிரியாநாத் கரார் அவர் சொன்னபடியே கங்கையில் குளித்து விட்டு வந்தார். அவருக்கு கிரியா யோகா பயிற்சிக்கான தீட்சை அந்த யோகியால் தரப்பட்டது. அந்த யோகி வேறு யாருமல்ல, மகா அவதார் பாபாஜியின் நேரடிச் சீடரான ஷ்யாம்சரண் லாஹிரி மஹாசாயா தான். (இவருக்காக தான் தங்கத்தால் ஆன மாளிகையை இமயமலையில் மகா அவதார் பாபாஜி உருவாக்கினார் என்பதை மகாசக்தி மனிதர்கள் 13, 14 அத்தியாயங்களில் படித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்).

1884 ஆம் ஆண்டு அவரது சீடரான பிரியாநாத் கரார் தான் பிற்காலத்தில் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி என்ற பெயரில் பிரபல யோகியானவர்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உடனடியாக துறவியாகி விடவில்லை. கிரியா யோகா தீட்சை துறவுக்கானதும் அல்ல. சில ஆன்மிகப் பயிற்சிகளை குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து செய்ய குருவிடம் இருந்து கற்றுக் கொண்டு திரும்பவும் வீட்டுக்கே வந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி மேலோட்டமாக அந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறவராக இருக்கவில்லை. எதிலும் ஆழம் வரை செல்லும் அவர் தூய்மையும் உறுதியும் கொண்ட மனதுடன் யோக மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவ்வப்போது வாரணாசிக்குப் போய் குருவிடம் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டும் தன்னை மெருகு படுத்திக் கொண்டும் இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோக மார்க்கத்தில் விரைவாகவே நல்ல முன்னேற்றம் அடைய ஆரம்பித்தார். அது பலரை அவரைப் பின்பற்ற வைத்தது.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருக்கும் மிட்னாப்பூரில் அவருக்கு நிறைய சீடர்கள் உருவாகி இருந்தார்கள். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அப்போதும் கூடத் தன் ஆன்மிகத் தாகத்தைத் தீர்க்கும்படியாக எங்காவது மகான்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அங்கு போய் பலனடைந்து வரும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்தச் சீடர்களும் போவார்கள். அப்படிப் போகும் போது ஒரு நதியை அவர்கள் படகில் அடிக்கடி கடக்க வேண்டி இருக்கும்.

அப்படி ஒரு முறை சென்று படகில் அவர்கள் மிட்னாப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது படகில் திடீரென்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தியான சமாதியில் லயிக்க ஆரம்பித்தார். திடீரென்று படகை பனியும் சூழ்ந்து கொள்ள படகை ஓட்டி வந்த அவருடைய சீடர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இந்த உலகில் இருப்பதாகத் தெரியவில்லை. படகை பனிமூட்டம் சூழ்ந்து கொண்டதால் போகிற வழியும் தெரியவில்லை.

ஒரு சீடர் பீதியுடன் “மிட்னாப்பூர் எங்கிருக்கிறது?என்று கேட்டார்.
தியான சமாதி நிலையிலேயே இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எதோ ஒரு உலகில் இருந்து பதில் அளிப்பவர் போலச் சொன்னார். “மிட்னாப்பூர்... இந்த உலகில் இல்லை....

சிறிது நேரத்தில் அவர் பழைய நிலைக்கு வந்தார். பனியும் விலகியது. ஆனால் அந்த சமாதி நிலையில் அவர் எந்த உலகத்தில் இருந்தார், என்ன உணர்ந்தார் என்பதை தன் சீடர்களிடம் விவரிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே அது போன்ற சக்திகளை பிரபலப்படுத்திக் கொள்கிறவர்கள் மீது அவருக்கு சந்தேகம் அதிகம் இருந்ததாலோ என்னவோ தன் சக்திகளைப் பற்றியும் அவர் அதிகம் யாரிடமும் விவரிப்பதில் நாட்டம் கொள்ளவில்லை.

மாறாக அவருடைய உபதேசம் எல்லாம் வேதாந்த தத்துவங்களை எளிமையாக்கி மக்களிடம் பரப்பும் விதமாகவே இருந்தது. அவருடைய குருவான லாஹிரி மஹாசாயா அவரிடம் பகவத் கீதைக்கு எளிமையாகத் தெளிவுரை எழுதச் சொல்ல, அவர் அப்படியே செய்தார். 

1894 ஆம் ஆண்டு அலகாபாத்தில் கும்பமேளாவுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த யாரோ அவரை “சுவாமிஜி, சுவாமிஜிஎன்று அழைப்பது கேட்டது. அப்போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி துறவியாகி இருக்கவில்லை என்பதால் வியப்புடன் திரும்பிப் பார்த்தார். தெய்வீகக் களையுடன் நின்று கொண்டிருந்த அந்த சாதுவுக்கு லாஹிரி மஹாசாயாவின் சாயல் இருந்தது.  நான் துறவியல்லஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தெரிவித்தார்.

அதற்கு அந்த சாது “இன்றில்லா விட்டாலும் நாளை ஆவீர்கள். அதனால் தான் அப்படி அழைத்தேன்என்று சொன்னார். உற்றுப் பார்த்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்கு அந்த சாது வேறு யாருமல்ல மகா அவதார் பாபாஜி தான் என்பது புலனாகியது. பரவசத்தில் என்ன செய்வதென்று அறியாமல் திக்குமுக்காடிப் போன ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பேரானந்தத்துடன் வணங்கினார்.

அப்போது பாபாஜி அவரிடம் பைபிளையும் கீதையையும் இணைத்து இந்த மதங்களில் உள்ள ஒருமைத் தன்மையை உலகத்திற்குப் புரியும்படி ஒரு நூலாக எழுதச் சொன்னார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கிறிஸ்துவ மிஷினரி கல்லூரியில் படிக்கையில் பைபிளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது நினைவிருக்கலாம். அடிப்படையில் எல்லா மதங்களுக்கும் மத்தியில் இருந்த ஒருமைத் தன்மையை விளக்கும் பொறுப்பை பாபாஜி அவருக்கு அளித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் இருப்பிடத்திற்கு வந்தருளும்படி பாபாஜியை வேண்டிக் கொண்டார். பாபாஜி மறுத்தார். தன் குருவின் குருவுக்கு எதுவுமே தராமல் விடைபெற மனதில்லாத ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவரை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து பல பொருள்களை எடுத்துக் கொண்டு திரும்பி அதே இடத்திற்கு வந்த போது பாபாஜி அங்கிருக்கவில்லை. அங்கு விசாரித்த போது யாருமே அவர் சொல்கிற அடையாளங்கள் இருக்கிற சாதுவைத் தாங்கள் பார்க்கவே இல்லை என்றார்கள். பாபாஜி இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும் தனக்கு மட்டுமே காட்சி அளித்திருந்த பாபாஜிக்கு அவர் சொன்ன நூலை எழுதி வெளியிடுவதே உண்மையான சமர்ப்பணம் என்பதை பாபாஜி மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாக ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உணர்ந்தார்.

(தொடரும்)   

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி: 04-03-2015



No comments:

Post a Comment