திபெத்தில்
இருந்து பழைய வேடத்தில் விமானம் வழியாகத் தப்பிப்பது முடியாத காரியம் என்று
உறுதியான பிறகு அக்ஷய் மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தான். வேறு வேடங்களில்
போகலாமா என்று முதலில் யோசித்தான். தனியனாக இருந்தால் கண்டிப்பாக அவன் சீன
உளவுத்துறை அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவி விட்டுப் போக முடியும். இளைஞன் முதல்
முதியவர் வரை எத்தனையோ வேடங்களை அவனால் தத்ரூபமாகப் போட முடியும். போலி பாஸ்போர்ட்
கூடப் பெரிய பிரச்னை இல்லை. உண்மையான பிரச்னை மைத்ரேயன். மைத்ரேயனுக்கு என்ன வேடம்
போட்டாலும் அவனைப் பெரியவனாக்கி விட முடியாது. சீன உளவுத் துறை ஆட்கள் அவன் வயதும்
உயரமும் இருக்கும் சிறுவர்களை முழுமையாகப் பரிசோதிக்காமல் விடமாட்டார்கள். அந்தச்
சிறுவர்கள் கூடச் செல்கின்றவர்களும் அந்தப் பரிசோதனையில் இருந்து தப்பிக்க
முடியாது. அக்ஷய் திபெத்தில் புத்த பிக்கு உடையில் நுழைந்ததைக்
கண்டுபிடித்தவர்கள் இனி உஷாராகவே இருப்பார்கள்.....
அவன் ஆழ்ந்து
யோசித்துக் கொண்டிருந்ததை புத்தபிக்கு கவலையுடன் பார்த்தார். இரவின் குளிர்
அதிகரித்திருந்த போதிலும் அறையில் மூட்டி இருந்த தீக்கனல்களின் வெப்பம் ஓரளவு
அதைத் தணித்திருந்தது. மைத்ரேயன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் லேசாகப்
புரண்டு படுத்த போது உடனடியாக அக்ஷய் திரும்பி அவனை ஒரு முறை பார்த்து விட்டுத்
தன் சிந்தனையைத் தொடர்ந்தான். பிக்குவுக்கு அவன் அந்த ஆழ்ந்த சிந்தனையிலும்
கவனத்தின் ஒரு பகுதியை மைத்ரேயன் மீது வைத்திருப்பது ஆச்சரியமாகவும்
நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அக்ஷயை விடத் தகுதி வாய்ந்த இன்னொரு பாதுகாவலர்
மைத்ரேயனுக்குக் கிடைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டார்.
அக்ஷய் ஒரு
முடிவுக்கு வந்தவனாய் எழுந்து அவர் அருகே வந்து எதிரில் அமர்ந்தான். புத்த பிக்கு
ஆவலோடு கேட்டார். “இனி என்ன செய்வது என்று முடிவு செய்து விட்டீர்களா அன்பரே”
அக்ஷய்
தலையசைத்தான். “இந்த வேடத்தில் இனி தொடர முடியாது. நாங்கள் இருவரும் இனி வேறு
வேடத்தில் தான் வெளியேற வேண்டும். அதற்கு உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படும்
பிக்குவே”
“என் உயிரைத்
தரச் சொன்னாலும் சிறிதும் யோசிக்க மாட்டேன் அன்பரே. என்ன வேண்டுமானாலும்
செய்கிறேன். ஆனால் நீங்கள் இந்த சூழ்நிலையில் வெளியேறிப் போகத்தான் வேண்டுமா?
அவர்கள் இங்கே வந்து தேடி நீங்கள் இல்லை என்று போய் விட்டார்கள். அதனால் இங்கே
திரும்ப வந்து தேட மாட்டார்கள். அதனால் இங்கேயே சில நாட்கள் தங்குவது உங்கள்
இருவருக்கும் பாதுகாப்பல்லவா?”
அக்ஷய் பொறுமையாகச்
சொன்னான். “திபெத்தில் இருந்து வெளியேறும் வரை எங்கள் இருவருக்கும் ஆபத்து இருந்து
கொண்டே தான் இருக்கும். அது மட்டுமல்ல நாளுக்கு நாள் ஆபத்தின் அளவும் அதிகரித்துக்
கொண்டே போகும். மேலும் எங்களை மற்ற இடங்களில் தேடி நாங்கள் கிடைக்காத பட்சத்தில்
அவர்கள் மீண்டும் இங்கே கண்டிப்பாக வருவார்கள். அதனால் நாங்கள் நாளை இரவு போயே ஆக
வேண்டும்.....”
புத்தபிக்குவின்
முகம் வாடியது. “சரி... நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அன்பரே. எதைக் கேட்பதானாலும்
தயக்கம் வேண்டாம்....”
அக்ஷய்
சொன்னான்.
வாங்
சாவொ அதே நேரத்தில் அந்த கண்சிமிட்டி மனிதனைத்
தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தான். அந்த மனிதன் சொல்ல வந்ததற்கும் மைத்ரேயனுக்கும்
சம்பந்தம் இல்லை என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொண்டால் பின் அவனை வாங் சாவொ
ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். அது வரை அவன் முக்கியமானவன் தான்.
வாங் சாவொ சம்யே
மடாலயத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற எல்லா மருத்துவ மனைகளுக்கும் போன்
செய்து கழுத்து திருகிய மனிதன் ஒருவன் அனுமதிக்கப்பட்டுள்ளானா என்று கேட்டுக்
கொண்டிருந்தான். எல்லா மருத்துவ மனைகளில் இருந்தும் ஒரே பதில் வந்தது. ‘இல்லை’. கடைசி மருத்துவமனையில் இருந்தும் அந்தப் பதில்
வந்தது அவனைத் திகைக்க வைத்தது. ஆம்புலன்ஸில் பின் அவனை எங்கே கொண்டு போனார்கள்?
திபெத்தில் சில
லாமாக்கள் மருத்துவம் பார்ப்பதில் வல்லவர்கள். நவீன மருத்துவம் முடியாத பல நோய்களை
அவர்கள் குணப்படுத்துகிறார்கள் என்று சிலர் நம்புவதுண்டு. அது போல இவனையும்
யாராவது மருத்துவ லாமாக்களிடம் கொண்டு போயிருக்கக்கூடுமோ என்று சந்தேகப்பட்டவன்
அந்த லாமாக்கள் இருப்பிடத்திற்கு ஆட்கள் அனுப்பி விசாரித்தான். அங்கேயும் இல்லை
என்ற பதில் வரவே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டு
அது வலுக்க ஆரம்பித்தது. உடனடியாக அவன் மறுநாள் அதிகாலையில் மறுபடி சம்யே மடாலயம்
புறப்பட்டான்.
பார்வையாளர்கள்
நேரம் துவங்கும் முன்பே போய்ச் சேர்ந்த அவனை ஓடோடி சென்று புத்தபிக்கு வரவேற்று
அலுவலக அறையில் உட்கார வைத்தார். அவன் தனதறைக்கு வந்து விடுவானோ என்ற பயம் அவரை
ஆட்கொண்டிருந்தது. அவர் அறையில் இன்னமும் மைத்ரேயரும் அக்ஷயும்
இருக்கிறார்கள்....
அலுவல் அறையில்
அமர்ந்த வாங் சாவொ தன் வழக்கமான விசாரணைப் பார்வையை அவர் மீது படர விட்டு சிறிது
நேரம் கேள்விகள் எதுவும் கேட்காமல் இருந்தான். அவருக்குத் திகிலாக இருந்தாலும்
கஷ்டப்பட்டு இயல்பான முகபாவனையைக் காட்டினார்.
திடீரென்று
வாங் சாவொ தடாலடியாக மிகவும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவரிடம் கேட்டான். ”நீங்கள் கண்சிமிட்டி பாஷையைக் கற்றுக் கொண்டது எப்போது?”
புத்தபிக்குக்கு
பகீரென்றது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு சொன்னார். “அப்படி ஒரு பாஷையை நான்
அறியேன் ஐயா”
“பின் எப்படி
நேற்று ஒருவன் என்னைப் பார்த்து கண் சிமிட்டி ஏதோ சொல்ல முற்பட்டதை நீங்கள்
புரிந்து கொண்டது போல் பேசினீர்கள்?”
”அதைப் புரிந்து கொள்வதில் கஷ்டம் இல்லை ஐயா”
வாங் சாவொ
கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான். “எப்படிச் சொல்கிறீர்கள்?”
”நீங்கள் வருவதற்கு முன் என்னையும்
மற்றவர்களையும் பார்த்து அவன் அப்படியே தான் கண்சிமிட்டினான். அவன் படும்
கஷ்டத்தைப் பார்த்து அவன் சொல்ல வந்தது அதுவாகத் தான் இருக்கும் என்று புரிந்து
கொண்டேன் ஐயா”
“பார்ப்பவர்களை
எல்லாம் பார்த்து அப்படிச் சொல்ல அவன் பைத்தியமா?”
“எனக்கு அந்த
சந்தேகமும் இருக்கிறது ஐயா. கழுத்து திருகியதால் ஏதோ நரம்பு பிசகி பைத்தியமும்
பிடித்திருக்கலாம்... இல்லா விட்டால் அவன் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பார்த்து
அப்படிக் கண்சிமிட்டி இருக்க மாட்டான்..... ” புத்தபிக்குவுக்கு
பேச்சு சரளமாக வந்தது. எல்லாம் மைத்ரேயரின் அருள்.
வாங் சாவொ சிறிது நேரம் அவரையே சந்தேகத்தோடு பார்த்தான். அப்படியும் இருக்குமோ? பின் திடீரென்று
கேட்டான். “அவனை எந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறீர்கள்?”
“தெரியவில்லை
ஐயா” பிக்கு உண்மையாகவே சொன்னார்.
“தெரியவில்லையா?” வாங் சாவொ குரல் கடுத்தது.
“அவன் உறவினர் இருவர் வந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு
போவதாகச் சொன்னார்கள். ஆனால் எந்த மருத்துவமனைக்கு என்று அவர்கள் சொல்லவில்லை.
நானும் கேட்கவில்லை”
“அவன்
உறவினர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?”
“இல்லை ஐயா.
அவர்களை அப்போது தான் நானும் பார்க்கிறேன்....”
“அவனை யாரும் எந்த மருத்துவமனையிலும்
சேர்க்கவில்லை. அவன் மாயமாய் மறைந்து விட்டான்.....” என்று வாங் சாவொ
அவரைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
புத்தபிக்கு திகைத்துப் போனார். மகிழ்ச்சி பிறகு தான் ரகசியமாய் மனதில்
மலர்ந்தது. புத்தபிக்கு சந்தேகத்துடன்
கேட்டார். “பின் எங்கே கூட்டிக் கொண்டு போனார்கள்?”
வாங் சாவொ
கடுமையாகச் சொன்னான். “இங்கே நான் மட்டும் தான் கேள்வி கேட்பேன். என்னிடமே
கேள்விகள் கேட்பது எனக்குப் பிடிக்காது”
புத்தபிக்கு தலையசைத்தார்.
வாங் சாவொ அவரிடம் கடுமை மாறாத தொனியில் கேட்டான். “தற்காலிகமாகச்
சேர்ந்தவர்களானாலும் அவர்களின் விலாசம் வாங்கிக் கொள்ளும் வழக்கம் இந்த
மடாலயத்தில் இருக்கிறதா இல்லையா?”
“இருக்கிறது
ஐயா” என்ற புத்தபிக்கு பவ்யமாக அதைத் தேடி எடுத்துக்
காண்பித்தார். அதைக் குறித்துக் கொண்ட வாங் சாவொ ”அவன் அப்படி
கழுத்து திருகி விழுந்த போது பக்கத்தில் யாரெல்லாம் இருந்தார்கள்”
“பல சுற்றுலாப்
பயணிகள் இருந்தார்கள் ஐயா..... எங்கள் மடாலயத்து ஆட்கள் யாரும் பக்கத்தில்
இருக்கவில்லை....”
“எவ்வளவு
வசதியாகப் போய் விட்டது...” என்று கடுமையும் ஏளனமுமாக வாங் சாவொ சொன்னதற்கு புத்த
பிக்கு ஒன்றுமே சொல்லவில்லை.
“எனக்கு உங்கள் மடாலயத்து ஆள்களை விசாரிக்க வேண்டும்” என்றான் வாங்
சாவொ.
”அவசரமாய் பேச வேண்டும்” என்ற குறுந்தகவல் மாராவின் அலைபேசியில் வந்த போது அவன் பல கோடி டாலர்கள்
மதிப்புள்ள பன்னாட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் இருந்தான். குறுந்தகவலைப்
பார்த்தவுடன் உடன் இருந்தவர்களை ஐந்து நிமிடங்கள் பொறுக்கச் சொல்லி விட்டுத் தன்
தனியறைக்குச் சென்று, தகவல் அனுப்பியவனிடம் பேசினான். “என்ன விஷயம்”
“வாங் சாவொ நம் ஆளை இங்கேயுள்ள மருத்துவமனைகளில் தேடிக் கிடைக்காததால்
இப்போது சம்யே மடாலயம் வந்திருக்கிறான்.
இங்கு எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருக்கிறான்..... சம்பவம் நடந்த போது
யார் இருந்தார்கள், என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான்.......”
எது நடந்து
விடுமோ என்று மாரா பயந்தானோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. அவன் ஆளின் ஒரு
முட்டாள்தனம் வேறு பல பிரச்னைகளை உருவாக்க ஆரம்பித்து விட்டது. மாரா அடுத்த கட்ட
நடவடிக்கையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
வாங்
சாவொ அங்கிருந்தவர்களை விசாரித்து அந்த கண்சிமிட்டி மனிதனுக்கு கோங்காங்
மண்டபத்தில் என்ன ஆயிற்று என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சி
செய்து கொண்டிருந்தான். அவர்களில் யாருமே அந்த நேரத்தில் கோங்காங் மண்டபத்தில்
இருந்திருக்கவில்லை என்றாலும் என்ன நடந்தது என்பதைக் கேள்விப்பட்டிருப்பார்கள்
அல்லவா?. அதை அனைவரிடமும் கேட்டான். அந்த
மனிதன் திடீரென்று கழுத்து திருகி விழுந்தான் என்றும் யாரோ பிடித்துக் கொண்டதாகப்
பார்த்தவர்கள் சொன்னதாகவும் பலர் சொன்னார்கள். அவனைப் பிடித்துக் கொண்ட ஆள் ஒரு
புத்த பிக்கு என்று கேள்விப்பட்டதாகச் சிலர் சொன்னார்கள். வாங் சாவொ மூளையில் ஒரு
பொறி தட்டியது.
அக்ஷயின்
புத்தபிக்கு வேடப் புகைப்படத்தைக் காட்டி, பிடித்துக் கொண்ட புத்த பிக்கு இந்த
ஆளாக இருக்குமா என்று கேட்க ஆரம்பித்தான். சிலர் அந்த புத்த பிக்குவை இந்த
மடாலயத்தில் அன்று பார்த்ததை நினைவு கூர்ந்தார்கள். ஆனால் கோங்காங் மண்டபத்தில்
அந்த சமயத்தில் அங்கே அந்த பிக்கு இருந்தாரா, அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டது
அந்த பிக்கு தானா என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
அந்த நேரத்தில்
அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டி யாராவது இருந்தானா என்று வாங் சாவொ
கேட்டான். சுற்றுலாப்பயணிகளைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிப்பது முடியாத காரியம்.
ஆனால் சுற்றுலா வழிகாட்டி அங்கேயே இருக்கக் கூடியவன். அவனை விசாரித்தால் உண்மை
விளங்கும்.
அந்த நேரத்தில்
சுற்றுலா வழிகாட்டியும் இருந்ததாகப் பதில் வந்தது. ஆனால் எந்த சுற்றுலா வழிகாட்டி
என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
“இங்கு மொத்தம்
எத்தனை சுற்றுலா வழிகாட்டி இருக்கிறார்கள்.?” என்று வாங் சாவொ
கேட்டான்.
“நான்கு பேர்” என்ற பதில் வந்தது. அந்த நான்கு பேரையும் உடனடியாக
அழைத்து வர வாங் சாவொ கட்டளை இட்டான்.
அழைத்து வர வாங் சாவொ கட்டளை இட்டான்.
(தொடரும்)
என்.கணேசன்
செம ரைட்டிங். கண் சிமிட்டி பாஷை பத்தி பிக்கு சமாளித்த விதம் சிரிப்பு வரவழைத்து விட்டது.
ReplyDeletesuper sir.
ReplyDeleteSuper AnNa.....
ReplyDeleteஉங்கள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கின்றது ......
ReplyDeleteஉங்களுக்கு என் நன்றிகள்....
நல்லாயிருக்கு..
ReplyDeleteSuper Sir.
ReplyDeleteOn reading this story, I really felt the heart beat of the Bikku.
The presentation is like a live relay.