சங்கிலியையே அறுத்துக் கொண்டு பாயும்
ஆவேசமும், வலிமையும் கொண்ட அந்த கொடும்புலி பாய்ந்து தோள் சதையையும் ருசி
பார்த்ததில் ஷ்யாமகண்ட உபாத்யாயா இரத்த வெள்ளத்தில் அப்படியே கீழே சாய்ந்தாலும் உடனடியாக
சுதாரித்துக் கொண்டார். ஆனால் மனித ரத்தத்தின் ருசி பார்த்து விட்ட அந்த பசித்த
புலியை ஒரு கையால் மட்டும் சமாளிக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். இடது கையால்
அவர் வேகமாக புலியைத் தாக்க புலியும்
அவரைக் கடுமையாகத் தாக்கியது. கூண்டுக்குள் இரத்த வெள்ளம் வழிந்தோட
ஆரம்பித்தது.
கூடியிருந்த கூட்டத்தினர் அவர் உயிரை
ராஜா பேகம் பறித்து விடும் என்று பயந்து போய் கத்தினார்கள். “புலியைச் சுட்டுத்
தள்ளுங்கள்.... புலியைச் சுட்டுத் தள்ளுங்கள்”. ஆனால் காவலாளிக்கு புலியும்,
ஷ்யாமகண்ட உபாத்யாயாவும் வேகமாகப் புரண்டு இடம் மாறிக் கொண்டிருந்ததால் துப்பாக்கியைச் சரியாகக் குறிபார்க்கவும்
முடியவில்லை. கடைசியில் ஷ்யாமகண்ட உபாத்யாயா அந்தப் புலியைக் கீழே தள்ளி அதன் மீது
விழுந்து தன் எடையைக் கூட்டி அதை அசைய விடாமல் செய்து சகல
பலத்தையும் திரட்டி தன் இடது கையால் இடி போல சரமாரியாகப் புலியைத் தாக்க ராஜா
பேகம் புலி சோர்ந்து போய் மயங்கி சாய்ந்தது. பின்பு மிக ஜாக்கிரதையாக அந்தப்
புலியை மறுபடியும் பலமாகக் கூண்டுக் கம்பியில் கட்டி விட்டு வெற்றியுடன் ஷ்யாமகண்ட
உபாத்யாயா வெளியே வந்தார். இந்த முறை கூடி இருந்தவர்களின் கரகோஷம் இரண்டு மடங்காக
இருந்தது. கூடி இருந்த அனைவரும் ஒருமனதாக அவரைப் பாராட்டினார்கள். ஆனால் எப்போதும்
வெற்றி அடைந்த பின்பு அடையும் பெருமிதம் அவருக்கு அப்போது ஏனோ இருக்கவில்லை.
கட்ச் பீகார் அரசர் அவருடைய வெற்றியை
ஒத்துக் கொண்டு அவருக்கு ராஜா பேகம் புலியையும் பணத்தையும் பரிசளிக்க ஷ்யாமகண்ட உபாத்யாயாவின் வெற்றி
எல்லோராலும் பரிபூரணமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அந்தப் புலியோடு சண்டையிட்ட
போது ஏற்பட்ட காயங்களில் விஷக்கிருமிகள் தாக்கி துறவி முன்பு எச்சரித்தது போல ஷ்யாமகண்ட உபாத்யாயா
கடும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். மரணத்தின் விளிம்புக்கே சென்று விட்ட
அவருக்கு மருத்துவம் மிகவும் தாமதமாகத் தான் பலனளிக்க ஆரம்பித்தது. அவர் குணமாக
ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. அந்த ஆறு மாத காலம் அவருக்கு சுயபரிசோதனைக் காலமாக
மாறியது. அவர் மனம் பழைய வாழ்க்கை முறையில் சலிப்பை உணர்ந்தது.
சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து
தன் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் புதிய மனிதராய் மாறி இருந்தார். அவருடைய தந்தையிடம் முன்பு ஒரு துறவி
எச்சரிக்கை விடுத்திருந்தது எத்தனை சரியாகப் போயிற்று என்பதை அவர் அடிக்கடி
எண்ணிப் பார்த்தார். அந்தத் துறவி ஒரு மகானாக இருக்க வேண்டும் என்று அவருக்குத்
தோன்ற ஆரம்பித்தது. அந்த மகானை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்ற பேராவல்
அவருக்குள் எழ ஆரம்பித்தது. அதைத் தன் தந்தையிடமும் தெரிவித்தார்.
அவர் விருப்ப்பபடியே திடீரென்று ஒரு
நாள் அந்தத் துறவி அவரைச் சந்திக்க வந்தார். ”மனதில்
இருக்கும் கொடிய விலங்குகளை வெல்லாமல் வனத்தில் இருக்கும் விலங்குகளை வெல்வதில்
என்ன பலன்?” என்று கேட்டார். அந்தக் கேள்வியில்
இருந்த உண்மை அவர் மனதில் தைத்தது.
அந்தத் துறவி மேலும் தொடர்ந்து சொன்னார்.
”என்னுடன் வா. உன்
மன விலங்குகளை அடக்கி உன்னை நீ வெற்றி கொள்வது எப்படி என்று நான் கற்றுத்
தருகிறேன். இத்தனை நாட்கள் சில நூறு மனிதர்கள் முன் உன் சாதனையைக் காட்டப்
பழக்கப்பட்டிருக்கிறாய். பிரபஞ்சத்தின் தேவதைகள் முன் உன்னை நீ வென்று சாதனையைக்
காட்ட இனி பழகிக்கொள்.”
தன்
வாழ்வில் அந்தத் தருணத்திற்காகவே இது வரை காத்திருந்ததாய் ஷ்யாமகண்ட உபாத்யாயா
உணர்ந்தார். உடனடியாக அவர்
அந்தத் துறவியை குருவாக ஏற்றுக் கொண்டு சன்னியாசியாக மாறினார். அந்தத் துறவி வேறு
யாருமல்ல. திபெத்திய பாபா தான்.
திபெத்திய பாபா தன் முதல் தவத்தை தான்
மிகவும் நேசித்த ஆட்டை மனதில் நிறுத்திச் செய்தது நினைவிருக்கலாம். அப்படி
ஆரம்பித்து அஷ்டமகா சித்திகளை அடைந்திருந்த அவருக்கு மற்ற மனிதர்களுடைய எண்ணங்கள்
மட்டுமல்ல, விலங்கினங்களின் உணர்வுகளையும் படிக்க முடிந்திருந்தது. அதனால் தான்
அவர் புலி இனத்தின் உணர்வுகளைப் படித்து ஷ்யாமகண்ட உபாத்யாயாவுக்கு எச்சரிக்கை
விடுக்க முடிந்தது. அஷ்டமகாசித்திகளைப் பெற்றிருந்த அவருக்கு எதிர்காலத்தையும்
அறிய முடிந்திருந்ததால் தான் ஆறு மாத காலம் நோய்வாய்ப்பட வேண்டி இருக்கும்
என்பதையும் தெரிவித்திருந்தார்.
அப்படிப்பட்ட மகாசக்தி வாய்ந்த திபெத்திய
பாபாவுடன் ஷ்யாமகண்ட உபாத்யாயா இமயமலைக்குப் பயணமானார். அவருடைய குருவான திபெத்திய
பாபா அவருக்கு வைத்த பெயர் “சோஹம் சுவாமி”. சோஹம் என்றால் சமஸ்கிருதத்தில் ’நானே அது’ என்று
பொருள். தன்னிடம் இருக்கும் இறைத்தன்மையை உணர்ந்த சுவாமி என்ற பொருளில்
அழைக்கப்பட்ட அவருடைய ஆன்மிகப் பயணம் 1899 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. புலிகளை
அடக்குவதை முழுமையாக விட்டு விட்டு ஆன்மிக மார்க்கத்தில் அவர் பயணிக்க ஆரம்பித்தாலும்,
அவரை குரு வைத்த சோஹம் சுவாமி என்ற பெயரில் அழைப்பதை விட அதிகமாய் ’புலி
சுவாமி’ என்ற பெயரிலேயே பலரும் அழைத்தார்கள்.
புலன்களை முழுமையாக வெல்வதற்கு
புலிகளை வெல்வதை விட கூடுதல் மகாசக்தி தேவை அல்லவா? புலி சுவாமியிடம் இயல்பாகவே
அமைந்திருந்த மன உறுதி துறவறத்திலும் முழுமையான புலனடக்கத்துடன் இருந்து மன
விலங்குகளை அடக்கி சாதனை புரிய வைத்தது. அது வரை அவர் ஓய்ந்து விடவில்லை.
ஆன்மிக ஞானத்திலும் முத்திரை பதித்த புலி
சுவாமி தான் பெற்ற ஞானத்தை பிற்கால மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நைனிடாலிலும்
ஹரித்வாரிலும் ஆசிரமங்கள் அமைத்தார். சோஹம் கீதா, சோஹம் சம்ஹிதா, பொது அறிவு,
உண்மை, முதலான நூல்களையும் எழுதி அறிவுபூர்வமான ஆன்மிகத்தைப் பரப்பினார். பொது
அறிவு என்ற நூலில் ஆன்மிகம் என்ற பெயரில் பின்பற்றப்படும் மூட பழக்க வழக்கங்களை
அவர் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
அவருடைய
உபதேசங்களில் மிக முக்கியமான கருத்து மனிதன் தன்னை உடல்ரீதியாக அடையாளம் கண்டு
உடலே தான் என்று இருத்தல் ஆகாது என்பதே. உடலே தான் என்று எண்ணுகையில் கர்வமும்,
அச்சமும் மனிதனுக்கு வரலாம். ஆனால் அழிவற்ற ஆத்மாவாகவே தன்னை அறியும் போது மட்டுமே
அவன் பிரச்னைகளில் இருந்து விடுபட்டவனாகிறான் என்கிறார் புலி சுவாமி. உடலே தான்
என்று வாழ்ந்து, உடல் ரீதியாக நாடு போற்றும் பலத்தையும் பெற்று, பின் தெளிவு பெற்ற
அவருடைய உபதேசத்தின் உண்மைக்கு அவருடைய வாழ்க்கை வரலாறே சான்று அல்லவா?
அடுத்த
வாரம் இன்னொரு சுவாரசியமான மகாமனிதரைப் பார்ப்போம்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 20-03-2015
Good One. Keep wrting such inspirign articles.
ReplyDeleteThank you.