வாங் சாவோ புத்த பிக்குவிடமிருந்து வாங்கிய சாவியை தன்னிடம் பூட்டி இருந்த அறை பற்றிச் சொன்ன துப்பாக்கி வீரனிடம் தந்தான். அந்தத் துப்பாக்கி வீரன் தன் சகாவுடன் வேகமாகப் போனான். போகும் இருவரையும் படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த புத்த பிக்கு அவர்கள் மைத்ரேயனையும், அந்தப் பாதுகாவலனையும் அந்த அறையில் பார்த்து விட்ட பிறகு என்ன ஆகும் என்று பயந்தார். அந்தப் பாதுகாவலன் மின்னல் வேகத்தில் நகரக் கூடியவன், சாமர்த்தியமானவன் என்பதெல்லாம் இந்த மடாலயத்திலேயே நிரூபணம் ஆகி இருந்த போதும் அவன் சமாளிக்க வேண்டி இருப்பது வாங் சாவொவின் இரண்டு துப்பாக்கி வீரர்களை மட்டும் அல்ல என்கிற உண்மை அவரை கதிகலங்க வைத்தது. தன் அலுவலக அறை வழியாக வெளியே பல இடங்களில் தெரிந்த துப்பாக்கி வீரர்களைக் கவலையுடன் பார்த்தார். இத்தனை பேரையும் அவன் சமாளிப்பானா, மைத்ரேயர் ஏதாவது மகிமையை நிகழ்த்துவாரா, அவர்கள் பிடிபடுவார்களேயானால் அவர்களை ஒளித்து வைத்து இருந்ததற்கு கிடைக்கும் தண்டனை என்னவாக இருக்கும் போன்ற கேள்விகள் பெரிதாக எழும்பி அவரை அழுத்தின.
அவரையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்த வாங் சாவொ சந்தேகத்துடன் கேட்டான். ”நீங்கள் எதற்கோ
பயப்படுவது போல் தெரிகிறதே?”
புத்த பிக்கு வறண்ட
புன்னகை ஒன்றை வரவழைத்தார். “நீங்கள் இருக்கிற போது பிரச்னை இல்லை, நீங்கள் இல்லாத
போது அந்தத் தீவிரவாதி வந்தால் என்ன செய்வது என்று யோசிக்கிறேன். எந்த வழியும்
பிடிபடவில்லை”. அப்போதைக்கு
அவர் ஏதோ சொல்லி சமாளித்தாரே ஒழிய மைத்ரேயனையும் பாதுகாவலனையும் ஒருவேளை அவர்கள்
பிடித்து விட்டால் இப்படி பொய் பேசியதற்கும் சேர்த்து இந்த அதிகாரி தண்டிப்பான்
என்ற பயம் வந்தது....
வாங் சாவொ அவரைத் தைரியப்படுத்தினான். “கவலைப்படாதீர்கள். அவர்களை கூடிய சீக்கிரமே உயிரோடோ பிணமாகவோ
பிடித்து விடுவோம்....” அவன்
வார்த்தைகள் நாராசமாக அவர் காதுகளில் ஒலித்தன. வெளிறிய
முகத்துடன் அவர் தலையசைத்தார்.
புத்த பிக்குவின் அறையில் இருந்த அக்ஷய்
வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தது அந்தத் துப்பாக்கி வீரர்கள் ஆரம்பத்தில் அந்த
அறையின் பூட்டை வெளியே இழுத்துப் பார்த்த போது தான். யாரோ சாவி இல்லாமல் பூட்டை
இழுத்துப் பார்க்கும் சிறிய சத்தம் அமைதியாக அமர்ந்திருந்த அவனை
உஷார்ப்படுத்தியது. மூளையின் அத்தனை செல்களும் பரபரப்பாய் வேலை செய்த போதும் தன்
மன அமைதியை இழக்காமல் எழுந்து நின்றான்.
அவன் கண்கள் அந்த அறையை தீர்க்கமாய் பார்வையிட்டன. ஆபத்து காலத்தில்
எதுவுமே பிரச்னையாகலாம், அதே போல எதுவுமே சரியாக உபயோகப்படுத்தும் போது அனுகூலமும்
ஆகலாம். அந்த அறையில் தங்களுக்கு அனுகூலமாகவும்,
ஆபத்தாகவும் இருக்கும் அம்சங்களை வேகமாக ஆராய்ந்து பார்த்தான்.
அந்த அறையில் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. ஒன்று கதவருகே இருந்த, வரவேற்பறையைப்
பார்க்க முடிந்த ஜன்னல். இன்னொன்று அறையின் மறுகோடியில் இருந்த, மடாலயத்தின்
வெளியே பார்க்க முடிந்த ஜன்னல். முன்னெச்சரிக்கையாக வரவேற்பறைப் பக்கம் இருந்த
ஜன்னலை புத்த பிக்கு காலையில் போகும் போதே சாத்தி விட்டுப் போயிருந்தார். வெளியே
நன்றாகப் பார்க்க முடிந்த ஜன்னல் திறந்தால் மட்டுமே நல்ல வெளிச்சம் அறைக்குள்
வரும். ஆனால் அப்படித் திறந்தால் வெளியே இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களைப்
பார்க்க முடியும் என்பதால் மறுகோடியில் இருந்த ஜன்னல் அவர்கள் இருவரும் வந்த பின்
திறக்கப்பட்டிருக்கவில்லை.
மின் விளக்குகளை புத்தபிக்கு போகும் போதே அணைத்து விட்டுப் போய் இருந்ததால்
அறையில் இப்போது வெளிச்சம் தந்து கொண்டிருந்தது நெருப்பு மூட்டும் பகுதியில்
எரிந்து கொண்டிருந்த விறகுகளும், மறு மூலையில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கும்
மட்டுமே. அக்ஷய் அந்த திறக்காத ஜன்னலை
சத்தமில்லாமல் மெல்ல சிறிது திறந்து பார்த்தான். தூரத்தில் துப்பாக்கியுடன்
வீரர்கள் தெரிந்தார்கள். சத்தமில்லாமல் பழையபடி ஜன்னலை மூடிய அக்ஷய் அமைதி
மாறாமல் அறையை மறுபடி கவனமாக ஆராய்ந்தான். பின் கூரையைப் பார்த்தான். மிக உயரமாகத்
தான் மேல் கூரை இருந்தது. மேலே உயரத்தில் ஒன்று முற்பகுதியிலும் மற்றது
பிற்பகுதியிலுமாய் இரண்டு மரப்பலகைகள் அரை அடி அகலத்தில் அறையின் குறுக்கே
சென்றிருந்தன. அவன் பார்வை அந்த மரப்பலகைகளில் தங்கியது.
பின் அக்ஷய் மின்னல் வேகத்தில் இயங்கினான். அறையின் கடுங்குளிரைத்
தடுத்துக் கொண்டிருந்த எரியும் விறகுகளை முதலில் அணைத்தான். இப்போது அனல்
துண்டுகள் மட்டும் நெருப்பைக் கசிய விட்டுக் கொண்டிருக்க ஆரம்பித்தன. மறுமூலையில்
எரிந்து அகல் விளக்கை எடுத்துக் கொண்டு வந்து அறையின் முன் பகுதியிலேயே வைத்தான்.
இப்போது அறையின் முன்பகுதியில் மங்கலான வெளிச்சமும், மற்ற பகுதியில் இருட்டும்
நிலவியது.
பின் அக்ஷய் புத்தக அலமாரியை நெருங்கினான். அங்கு புத்தகங்களின் மேல்
சம்யே மடாலய வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட சில அச்சிட்ட காகிதங்கள் இருந்தன. அதில் சிலவற்றை எடுத்து தனித்தனியாக
நன்றாக சிறுசிறு மடிப்புகளாக மடித்து வைத்துக் கொண்டு வெளிப்புறத்தை நோக்கித்
திறக்கும் ஜன்னலை நெருங்கினான்.
மெல்ல சத்தமில்லாமல் அந்த ஜன்னல் கதவைத் திறந்து அந்த காகித மடிப்புகளை
வெளிப்பார்வைக்குத் தெரியாமல் இடுக்குகளில் கவனமாக வைத்து இறுக்க மூடினான். பின்
ஜன்னல் கதவைத் திறக்கும் கைப்பிடியை சிரமப்பட்டு அகற்றினான். பின் மைத்ரேயனிடம்
கேட்டான். “ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிறிது நேர அசௌகரியத்தைப்
பொறுத்துக் கொள்ள முடியுமா?”
மைத்ரேயன் அக்ஷயின்
ஒவ்வொரு செயலையும் அது வரை கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அக்ஷய்
அப்படிக் கேட்டவுடன் சின்னப் புன்னகையுடன் தலையாட்டினான். ஒரு குறிப்பிட்ட
இடத்தில் அக்ஷய் அவனை நிறுத்தி விட்டு அங்கிருந்த மின் விளக்கு பல்பை எடுத்து அதை
இரண்டு மூன்று முறை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்தான். பல்பின் உள்ளே மின் இழை
ஒன்று அறுபட்டது. அதைக் கவனமாக அப்படியே பழையபடி மாட்டி விட்டு வேகமாக ஓடி வந்து
மைத்ரேயனைப் பிடித்துக் கொண்டு சுவரில் கால் வைத்து எம்பி அந்த அறையின் பிறபகுதியில்
குறுக்கே சென்றிருந்த மரப்பலகையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அதில் மல்லாக்க
படுத்துக் கொண்டு மைத்ரேயனைத் தன் மீது பத்திரமாய் படுக்க வைத்துக் கொண்டான்.
“என்ன ஆனாலும்
சரி பயப்பட வேண்டாம். எதுவும் செய்யப்போகவும் வேண்டாம். எந்த சத்தமும் செய்யாமல்
அமைதியாக இரு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.” என்று தாழ்ந்த
குரலில் அக்ஷய் மைத்ரேயனிடம் சொல்ல மைத்ரேயன் தலையாட்டினான்.
சில வினாடிகளில் வாங் சாவொ கையிலிருந்து சாவி வாங்கியிருந்த துப்பாக்கி
வீரர்கள் இருவரும் பூட்டைத் திறந்து கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தார்கள். இருவரில்
ஒருவன் “மின் விளக்கைப் போடு” என்றான். மற்றவன் சுவரில் ஸ்விட்சைத் தேடினான்.
விளக்கொளி விழும் இடத்திலேயே ஸ்விட்ச் தெரிய அதை அழுத்தினான். விளக்கு எரியவில்லை.
மின் விளக்கைப் போடச் சொன்னவன் அகல் விளக்கை எடுத்து உயர்த்தி பல்பைப் பார்த்தான்.
மின் இழை அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அது போதாதென்று அறையின்
முற்பகுதியில் அணைய முற்பட்டிருந்த விறகுக் கனல்களும், சின்னதாய் எரிந்து
கொண்டிருந்த அகல் விளக்கும் அவர்கள் இருவர் முகங்களிலும் அதிருப்தி ரேகைகளை
ஏற்படுத்தின. வரவேற்பறையை நோக்கித் திறக்கும் ஜன்னலை மெல்லத் திறந்தார்கள். சற்று
மங்கலான வெளிச்சம் மட்டுமே கூடியது.
அகல் விளக்கை வைத்துக் கொண்டிருந்தவன் அறையின் மையப்பகுதிக்கு மெல்ல
வந்தான். மறு கோடியில் இருந்த ஜன்னல் அவன் கவனத்தை ஈர்த்தது. “அந்த ஜன்னலைத் திற.
கண்டிப்பாக வெளிச்சம் வரும்” என்று அவன் சொல்ல மற்றவன் சென்று அந்த ஜன்னலைத் திறக்க
முயற்சி செய்தான். கைப்பிடியும் இல்லாத அந்த ஜன்னல் திறக்க மறுத்தது.
“இந்த ஜன்னலுக்குக் கைப்பிடியும் இல்லை. இறுக்கமாய் இருக்கிறது” என்று சொல்லி அவன் தட்டித் திறக்கப் பார்த்தான்.
ஜன்னலின் மரக்கட்டைகள் சற்று நெருக்கமாகவே இருந்ததால் அவனால் ஜன்னல் கதவைத் திறக்க
அதிக பலம் பிரயோகிக்க முடியவில்லை.
“சரி விடு” என்றான் அகல் விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்தவன்.
மற்றவன் தன் கால்சட்டைப் பையில் இருந்து ஒரு சிறிய டார்ச்சை எடுத்தான்.
மேலே மரக்கட்டையில் படுத்திருந்த அக்ஷய் மிகவும் ஜாக்கிரதையானான்.
பொதுவாகவே ஒரு அறையில் யாராவது இருக்கிறார்களா என்று தேடுபவர்கள் கீழே மூலை
முடுக்கெல்லாம் தேடினாலும் அறையில் பரண் இருந்தால் ஒழிய மேல்தட்டில் ஆட்களைத்
தேடுவதில்லை. முழு வெளிச்சமும் உள்ள அறையில் மேல்தட்டில் உள்ள ஒரு மரப்பலகையில்
ஆள் இருப்பதை பார்வையில் விளிம்பில் ஒருவர் உணர்ந்தாலும் உணர வாய்ப்புண்டு.
அரைகுறை வெளிச்சத்தில், அதுவும் அகல்விளக்கு போன்றதன் வெளிச்சத்தில் பார்க்கும்
போது அவர்களின் நிழல்களே அறைக்குள் பிரம்மாண்டமாய் விரியும் போது மேல்தட்டில்
மரப்பலகையில் இருக்கும் தங்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைவு என்று
கணக்கிட்டு தான் அக்ஷய் இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தான்.
ஆனால் டார்ச் விளக்கு சற்று அபாயமானது தான். குறிப்பிட்ட
நோக்கம் எதுவுமில்லாமல் கூட விளையாட்டாய் மேல் நோக்கி ஒளி பாய்ச்சும் வாய்ப்பும்
உண்டு. அப்படி ஒரு நிகழ்வு நேரும் பட்சத்தில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புண்டு.
அப்படி ஆனால் இருவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிப்பதைத் தவிர வேறு வழி
இல்லை. அதில் பெரிய வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு அன்பாய்
அடைக்கலம் குடுத்த புத்தபிக்கு எதிரிகளிடம் மாட்டிக் கொள்வார். அவர்கள் அவரை
எப்படிச் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயல்வார்கள் என்பதைச் சொல்ல
முடியாது....
டார்ச் விளக்கால் அறையை நிதானமாக அந்த துப்பாக்கி வீரன் சுற்ற மற்றவன் அகல்
விளக்கை ஓரமாக வைத்து விட்டு துப்பாக்கியை குறி வைத்துக் கொண்டு பார்வையைச்
சுழற்றினான். புத்தக அலமாரியை டார்ச் வெளிச்சம் அடைந்த போது சந்தேகத்துடன் அவன் மெல்ல
புத்தக அலமாரியை நெருங்கினான். புத்தக அலமாரியின் பின்புறம் படர்ந்திருந்த
இருட்டில் யாராவது ஒளிந்திருக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்த்த்து போல்
இருந்தது. டார்ச் பிடித்திருந்தவனும் இடது கையில் டார்ச்சை வைத்துக் கொண்டு வலது
கையில் துப்பாக்கியைத் தயாராக வைத்தபடி சற்று தள்ளி நெருங்கி வந்தான்.
புத்தக அலமாரிக்குப் பின்னால் யாரும் இல்லை என்று ஆனதும் அவர்களது அடுத்த
கவனம் சுவர் ஓரமாக வைத்திருந்த புத்தபிக்குவின் நீண்ட மரப்பெட்டி மீது
திரும்பியது. அதையும் திறந்து பார்த்தார்கள். அதில் புத்தபிக்குவின் சில உடைகளும்
உடமைகளும் இருந்தன. இரண்டு கட்டில்களுக்கு அடியில் பார்த்தார்கள். அப்படிப்
பார்க்கும் போதெல்லாம் துப்பாக்கி விசையின் மீது அவர்கள் விரல்கள் தயாராக
இருந்தது. அறையின் முற்பகுதியின் மேலே டார்ச் விளக்கைக் காட்டி அவர்கள் பார்த்த
போது அக்ஷய் மைத்ரேயனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். இப்போது அந்த வீரர்களின்
பின்புறத்தில் அவர்கள் இருந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அந்த வீரர்கள் திரும்பி டார்ச் ஒளியை அதே
போல மறுபக்க மேல் பாகத்திலும் பாய்ச்சினால் மைத்ரேயனும், அக்ஷயும் அவர்கள்
பார்வையில் படுவது உறுதி.
மயிரிழையில் ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்ந்த அக்ஷய்க்கு அவன்
கட்டுப்பாட்டையும் மீறி இதயம் வேகமாக ஓட்டமெடுத்தது. அந்த ஓட்டமும் அவனுக்காக அல்ல
மைத்ரேயனுக்காகவும், அந்த புத்த பிக்குவுக்காகவும்......! எந்தக் கணமும் புலி போல் பாய
அக்ஷய் தயாரானான்.
(தொடரும்)
என்.கணேசன்
அண்ணா excellent . . .
ReplyDeleteதொடருங்கள். . . தொடர்கிறோம்.
padapadpu athikarithu konda poguthu . . .
ReplyDeleteசென்ற வாரம் திக் திக். இந்த வாரம் செம திக் திக் திக்.
ReplyDeleteசினிமா பார்ப்பது போல் தத்ரூபமான எபெக்ட் தந்து விட்டீர்கள். சூப்பர்.
ReplyDeletevery very Interesting...supper..sir
ReplyDeleteVery interesting.
ReplyDeleteNice writting...
ReplyDeleteNo words to comment, totally into the scene...Keep it up...
ReplyDeleteSuperb sir. I've no words to explain my feelings. Sir we want some more pages every week. This is not enough. Pl consider it sir
ReplyDeletevery very interesting sir...,
ReplyDeletesir!!! very nice!!! publish twice a week sir!!!!
ReplyDelete