சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 4, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 48


காலை பதினோரு மணி அளவில் சம்யே மடாலயம் வந்து சேர்ந்து விட்ட போதும்  வாங் சாவோ உடனடியாக உள்ளே நுழைந்து விடவில்லை. அரை மணி நேரம் வெளியே நின்று கொண்டு அங்கு நின்றிருந்த வாகனங்களை ஆராய்ந்தான். மடாலயத்தின் வெளியே இருந்த கூட்டத்தை ஆராய்ந்தான்.  பிரதான கட்டிடத்தின் பின்னால் இருந்த குன்றுகளையும் அரைகுறைக் கட்டிடங்களையும் ஆராய்ந்தான். நீண்ட தூரம் வரை பாழடைந்த அரைகுறைக் கட்டிடங்கள் தெரிந்தன. யாராவது ஒளிந்து கொள்ள நினைத்தால் அந்தக் கட்டிடங்களை விடப் பொருத்தமான வேறு இடம் அந்தப் பகுதியில் இருக்க முடியாது. 

அவன் அந்தப் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்த போது முப்பது ஆட்கள் துப்பாக்கிகளுடன் ஒரு பெரிய வேனில் வந்து இறங்கி வேனின் அருகிலேயே அணிவகுத்து நின்றார்கள். அவர்களின் தலைவன் ராணுவ மிடுக்குடன் வாங் சாவொ அருகில் வந்து நின்று சல்யூட் அடித்தான். வாங் சாவொ லேசாகத் தலையை அசைத்து அவன் மரியாதையை அங்கீகரித்து விட்டு அக்‌ஷய் புத்த பிக்கு வேடத்தில் இருந்த புகைப்படத்தையும், மைத்ரேயன் சாதாரண உடையில் இருந்த புகைப்படத்தையும், அக்‌ஷயுடன் லாஸா விமான நிலையத்தில் இறங்கிய புத்தபிக்குச் சிறுவனின் புகைப்படத்தையும் தந்து விட்டு தாழ்ந்த குரலில் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னான்.

அவன் அந்தப் புகைப்படங்களை உற்றுப் பார்த்து விட்டு அந்தப்படங்களை எடுத்துக் கொண்டு வேன் அருகில் சென்றான்.  அந்தத் துப்பாக்கி வீரர்களிடம் அந்தப் புகைப்படங்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொள்ளச் சொன்னான். ஒவ்வொருவரும் அந்தப் புகைப்படங்களை நன்றாகப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள். பிறகு அந்தப் புகைப்படங்களைத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்ட அவர்களை அவன் மூன்று பிரிவாகப் பிரித்தான்.

முதல் பத்து பேரிடம் சொன்னான். “இந்த மடாலயத்தின் பின் பகுதிக்குச் செல்லுங்கள். இந்த இரண்டு சிறுவர்களில் ஒருவனும், போலி பிக்குவும் பின்னால் எங்காவது ஒளிந்து கொண்டிருக்கலாம். அப்படி ஒளிந்து கொண்டிருந்தால் உயிரோடு பிடிக்க முடிந்தால் பிடித்து வாருங்கள். முடியா விட்டால் சுட்டுப் பிணமாகவாவது எடுத்து வாருங்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் தப்பிக்கக் கூடாது.

அடுத்த இரண்டாவது பத்து பேரிடம் வாங் சாவொவைக் காட்டிச் சொன்னான். “அந்த உயரதிகாரியுடன் மடாலயத்திற்குள் செல்லுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள். அவர் அதிருப்திக்கு ஆளானால் தண்டனை கடுமையாக இருக்கும். இந்த மடாலயத்திற்குள் புகைப்படங்களில் பார்த்தவர்களைக் கண்டால் அவர்களைப் பிடித்துக் கொடுங்கள்

பின் மற்றவர்களிடம் சொன்னான். “நாம் இங்கேயே நின்று கண்காணிப்போம். பிரதான மடாலயத்தின் உள்ளிருந்தோ, பின்பகுதியில் இருந்தோ இந்தப் புகைப்படங்களில் இருப்பவர்கள் வெளியேறி வந்தால் அவர்கள் நம்மைத் தாண்டிப் போய் விடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். தூரத்தில் பார்த்தால் காலில் சுட்டுப் பிடிக்கப் பாருங்கள். உயிரோடு பிடிக்க முடியாது என்று தோன்றினால் அவர்களைச் சுட்டுக் கொன்றே விடலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

முதல் குழு பிரதான கட்டிடத்தின் பின்புறத்திற்கு முன்னேற ஆரம்பித்தது.  வெளியே இருந்த பயணிகள் பயத்துடன் மூன்று குழுக்களையும் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் மெல்ல ஒரு துப்பாக்கி வீரனை நெருங்கிக் கேட்டான். “என்ன விஷயம் சார்?

“தீவிரவாதிகள் இங்கிருக்கலாம் என்கிற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது... அவர்களைத் தான் தேடுகிறோம்.....

“தீவிரவாதிகள் மடாலயங்களையும் விட்டு வைப்பதில்லை. இந்தப் போக்கு கண்டிக்கப்பட வேண்டியதுஎன்று அவன் முணுமுணுத்து விட்டு நகர்ந்தான்.

வாங் சாவொ நிதானமாக சம்யே மடாலயத்தில் நுழைய பத்து துப்பாக்கி வீரர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் உள்ளே இருந்த பயணிகளிடம் லேசாக சலசலப்பு எழுந்தது. அந்த சலசலப்பை லட்சியம் செய்யாமல் அவர்களில் அக்‌ஷயோ மைத்ரேயனோ தெரிகிறார்களா என்று வாங் சாவொ பார்வையால் கூட்டத்தை சலித்தான். அவனுடன் சென்ற துப்பாக்கி வீரர்களும் கூர்மையாக அங்கிருந்தவர்களைப் பார்த்தார்கள். யாரும் தென்படவில்லை.

வாங் சாவொவின் பிரவேசத் தகவல் தலைமை பிக்குவுக்குக் கிடைத்தது. அதிர்ந்து போன அவர் தனதறையின் உள்ளே உள்ள அக்‌ஷயையும்,  மைத்ரேயனையும் எச்சரிக்கலாமா என்று நினைத்தார். ஆனால் அவருடன் வேறு சில சீடர்களும் அப்போது உடனிருந்தனர். அவர்கள் முன் இந்த சூழ்நிலையில் தனதறைக்குச் சென்று வருவது உகந்ததல்ல என்று அவர் உள்ளுணர்வு அவரை எச்சரித்தது. அந்த உளவுத்துறை அதிகாரி அங்கு வருவதற்கு முன் சென்று அந்த ஆளை முதல் தளத்தின் ஆரம்பத்திலேயே சென்று பார்த்து அங்கிருந்து அப்படியே அனுப்பி விடுவது உத்தமம் என்று தோன்றவே வேகமாக வாங் சாவொவைச் சந்திக்க அவர் விரைந்தார்.

அந்த நேரமாகப் பார்த்து கழுத்து திருகிய நிலைமையில் இருந்த மாராவின் ஆளை மருத்துவமனைக்குச் சேர்க்க ஒரு பலகையில் வைத்து எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். மாராவின் ஆள் வாங் சாவொவை அறிவான். லீ க்யாங்கின் வலது கை என்று பலராலும் நம்பப்படும் வாங் சாவொ பிரசித்தமானவன். அவனைப் பார்த்ததும் மாராவின் ஆளுக்கு மைத்ரேயனின் பாதுகாவலனைப் பழி வாங்கும் எண்ணம் வலுவடைந்தது. ஒரு நாளுக்கும் மேலாக அவன் அனுபவித்து வரும் கஷ்டமும், வலியும் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் தான் கடுங்கோபத்தில் இருந்த அவன் வாங் சாவொவின் கவனத்தை கவர எண்ணினான். கண்களைத் தவிர வேறெந்த பகுதியையும் அசைக்க வழியில்லாத அவன் வாங் சாவொவைப் பார்த்து கண்களை வேக வேகமாகத் திறந்து மூடினான்.

வாங் சாவொ அந்த ஆளைச் சுமந்து வருபவர்களைச் சைகையால் நிறுத்தினான். அவர்கள் அப்படியே நின்றார்கள். வாங் சாவொ அவர்களிடம் கேட்டான். “என்ன ஆயிற்று இவனுக்கு?

கோங்காங் மண்டபத்தின் துஷ்ட சக்திகள் இவனை இந்த நிலைக்குத் தள்ளி விட்டனஎன்று ஒருவன் சொல்ல வாங் சாவொ எரிச்சலடைந்தான். இது போன்ற அமானுஷ்ய சக்திகளில் நம்பிக்கை இல்லாத அவனுக்கு இவற்றை நம்பிப் பேசுபவர்கள் மீது கோபம் தான் வரும்.

“என்ன உளறுகிறாய்என்று வாங் சாவொ கோபத்துடன் கேட்க அந்த நேரத்தில் மடாலயத்தின் தலைமை பிக்கு அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

அவர் சமயோசிதமாக  துஷ்ட சக்திகள் பற்றிச் சொன்னவனைக் கடிந்து கொண்டார். “படித்த அறிவாளிகளிடம் உன் மூட நம்பிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பது தவறு. சொல்லி முடித்தவுடனேயே வாங் சாவொவைப் பார்த்து பவ்யமாகச் சொன்னார். திடீரென்று இப்படியாகி மயங்கி விழுந்திருக்கிறான். எதனால் இப்படி ஆகி இருக்கிறது என்பதை மருத்துவர்கள் தான் சோதனைக்குப் பிறகு சொல்ல வேண்டும் ஐயா

வாங் சாவொ கழுத்து திருகியவனைக் கூர்மையாகப் பார்த்தான். மாராவின் ஆள் “நீங்கள் தேடி வந்தவன் தான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன். அவன் இங்கேயே தான் இருக்கிறான். அவனையும் மைத்ரேயனையும் தேடிப்பிடியுங்கள். “ என்று சொல்லும் பாவனையில் கண்களைப் படபடத்தான்.

“என்ன சொல்ல வருகிறான் இவன்?வாங் சாவொ கேட்டான்.

தலைமை பிக்கு “அவனைக் குணமாக்க உதவச் சொல்கிறான் பாவம்என்று சொன்னார்.

மாராவின் ஆள் கோபமாக புத்த பிக்குவைப் பார்த்து விட்டு “முட்டாள் பிக்குவே நான் என்ன சொல்கிறேன் நீ என்ன சொல்கிறாய்?என்ற பாவனையுடன் கண்களைப் படபடத்தான்.

புத்த பிக்கு அவனைக் கனிவோடு பார்த்து சொன்னார். “இவர் மருத்துவரல்ல மைந்தனே. இவர் அதிகாரி. ஏதோ விசாரணைக்கு வந்திருக்கிறார். இவரிடம் நீ குணப்படுத்த உதவச் சொன்னால் இவரென்ன செய்ய முடியும். போதிசத்துவரைப் பிரார்த்தனை செய். ஏதாவது வழியை அவர் கண்டிப்பாகக் காண்பிப்பார்.

“பாவி பிக்கு. என்ன உளறுகிறாய்? ஏன் விஷயத்தைத் திசை திருப்புகிறாய்?என்று அவன் கண்களை வேகமாகக் கசக்கினான்.

வாங் சாவொவிற்கு கண்ணைக் கசக்கும் ஆளையும் பிடிக்கவில்லை. அந்த பிக்குவின் பேச்சும் பிடிக்கவில்லை. அலட்சியமாக ’அந்த ஆளை எடுத்துக் கொண்டு போங்கள்’ என்று சைகையிலேயே தெரிவித்தான் வாங் சாவொ. உயிர் போவது போல வலி எடுத்த போதிலும் சகல பலத்தையும் திரட்டி ஏதோ சத்தம் செய்த மாராவின் ஆளை மறுபடி பார்க்கும் சிரமத்தையும் அவன் மேற்கொள்ளவில்லை. மாராவின் ஆளை அவசரமாக வெளியே கொண்டு போனார்கள்.

அலட்சியமாகவே புத்த பிக்குவைப் பார்த்து வாங் சாவொ கேட்டான். “நீங்கள் யார்?

“இந்த மடாலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பை போதிசத்துவர் என்னிடம் சுமத்தி இருக்கிறார் ஐயாதாங்கள் என்ன விஷயமாக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?

அவருக்கு உடனடியாகப் பதில் அளிப்பது அனாவசியம் என்பது போல் பார்த்து விட்டுத் தன் பின்னால் துப்பாக்கியுடன் நின்றிருந்த ஆட்களிடம் வாங் சாவொ சொன்னான். “இரண்டிரண்டு பேராகப் போய்த் தேடுங்கள். ஒரு இடம் பாக்கி விடக்கூடாது

அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் கலந்தாலோசித்து பேசி யார் யார் எங்கெங்கு போகலாம் என்று முடிவு செய்து விட்டு நகர்ந்தார்கள். தலைமை புத்த பிக்குவின் படபடப்பு அதிகமாகியது. ஆனால் அது வெளியே தெரியாதபடி கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டார். இது அமைதி தவழும் புனித இடம். இங்கே என்ன தேடுகிறீர்கள்?என்று கேட்டார்.

பதில் எதுவும் சொல்லாமல் “எங்கே உங்கள் அலுவலக அறை?என்று மட்டும் வாங் சாவொ கேட்டான்.

புத்த பிக்கு அவனை அங்கு அழைத்துச் சென்றார். அவன் பின் தொடர்ந்தான். அங்கு சென்று அமர்ந்தவன் ஒரு குற்றவாளியைப் பார்க்கும் நீதிபதியைப் போல அவரைப் பார்த்தான். அவர் அந்தப் பார்வையில் உடைந்து போய் விடக்கூடாது என்று மனதில் மைத்ரேயனை வேண்டிக் கொண்டார். “போதிசத்துவரே நான் உங்களைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாது. அதற்கு எனக்கு நீங்கள் அருள் புரியுங்கள்

அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று மூன்று புகைப்படங்களை வாங் சாவொ வெளியே எடுத்தான். தனது கூர்மையான பார்வையை அவர் மீதிருந்து எடுக்காமல் முதலில் மைத்ரேயன் புகைப்படத்தை அவரிடம் காண்பித்து வாங் சாவொ வேகமாகவும் அழுத்தமாகவும் கேட்டான். இந்தப் பையனைப் பார்த்திருக்கிறீர்களா?

அவன் பார்வைக் கூர்மை அவரை ஊடுருவிப் பார்த்தது. அவன் பார்வை அவர் மன உறுதியைக் கலைப்பது போல இருந்தது.

புத்த பிக்கு மெல்லச் சொன்னார். “பார்த்திருக்கிறேன்

(தொடரும்)  

என்.கணேசன்


3 comments:

  1. We travel with the characters who seem real and this makes this story more interesting. Last week we really missed the episode.

    ReplyDelete
  2. சுஜாதாJune 4, 2015 at 6:54 PM

    பரபரப்பாய் போகிறது. டென்ஷனான சீன் என்றாலும் மத்தியில் மாராவின் ஆள் கண்பாஷையும், புத்தபிக்கு சமாளித்த விதமும் வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டது.

    ReplyDelete