என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, June 1, 2015

அஷ்டமகா சித்திகள் பெற்ற திபெத்திய பாபா


மகாசக்தி மனிதர்கள்-25

திபெத்திய பாபா என்றழைக்கப்பட்டாலும் உண்மையில் அவர் இந்திய யோகி தான். மேற்கு வங்காளத்தில் பிறந்த அந்த யோகியின் இயற்பெயர் நவீன்சந்திர சட்டோபாத்யாயா. பிறந்த வருடம் யாருக்கும் தெரியாது. இறந்த வருடம் 1930 (நவம்பர் 19). இந்தியாவில் பிறந்த அவர் அஷ்டமகா சித்திகள் பெற்றவர் என்று சான்றோரால் அறியப்பட்டவர். ஆனாலும் அந்த சித்திகளை தனிப்பட்ட பெருமைக்காக உபயோகிக்காதவர். இந்தியா, திபெத், நேபாளம், பர்மா, சீனா, ஆப்கானிஸ்தான், ரஷியா ஆகிய நாடுகளில் அக்காலத்திலேயே பயணம் செய்தவர்.  ஹிந்தி, வங்காள மொழிகள் மட்டுமல்லாமல் ஆங்கிலம், பர்மிய, சீன, ரஷிய மொழிகளையும் நன்றாக அறிந்தவர். அத்தகைய மகாசக்தி மனிதரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

சிறு வயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த அவர் தந்தையை சிறு வயதிலேயே இழந்திருந்தார். அவர் தாய் ஒரு சிறந்த சிவபக்தை. தாயும், மற்ற பெரியோர்களும் கடவுள் பற்றி கொண்டிருந்த கருத்துகளும், அவர் அறிவுபூர்வமாக கடவுள் பற்றி அனுமானித்திருந்த கருத்துகளும் ஒத்துப் போகவில்லை. அவருக்கு இதில் எது சரி என்று முழுமையாகத் தெரிந்து கொள்ளும் பேராவல் இளம் வயதிலேயே ஏற்பட்டிருந்தது. தர்க்கவாதங்களாலும், புனித நூல்களாலும் இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அவர் இளம் வயதிலேயே ஒரு சிவராத்திரி அன்று வீட்டை விட்டு வெளியேறி இமயமலைக்குப் பயணமானார்.

இமயமலையில் ஒரு நதி அருகே சிறிய குடிசை ஒன்றை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு துறவியுடன் சில காலம் தங்கி இருந்தார். ஒரு கடுங்குளிர் கால இரவு நேரத்தில் அந்தத் துறவியிடம் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனைக் காண வேண்டும் என்ற தன் பேராவலைத் தெரிவித்து விட்டு அதற்கு உதவ தன்னை ஒரு சீடராக ஏற்றுக் கொள்ள நவீன்சந்திரர் வேண்டினார். அந்தக் காலத்தில் தகுதி வாய்ந்தவர்களையே சீடர்களாக உண்மையான துறவிகள் ஏற்றுக் கொள்வார்கள். தேடி வந்தவர்களை எல்லாம் சீடர்களாக ஏற்றுக் கொள்ளாமல் பரீட்சித்துப் பார்த்தே ஏற்றுக் கொள்வார்கள். துறவி அப்போதே நதியில் குளித்து வர நவீனைப் பணித்தார். இமயமலையில் கடுங்குளிர் காலத்தில் இரவு நேரத்தில் நதியில் குளிப்பது என்பதே ஒரு பரிட்சை தான். இந்தக் குளிரிலா, இந்த நேரத்திலா என்பது போன்ற கேள்விகளை எழுப்பாமல் உடனடியாகச் சென்று நவீன்சந்திரர் நதியில் மூழ்கி குளித்து வந்தார்.  

பொதுவான உபதேசங்கள் தன் சீடனின் இறைவேட்கைக்குப் பதிலாகாது என்பதை உணர்ந்திருந்த துறவி நவீன்சந்திரரிடம் நீ உன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கையில் மிகவும் நேசித்தது எதை என்று கேட்டார். நவீன்சந்திரர் ஒரு சிறிய ஆட்டுக்குட்டியைத் தான் மிகவும் நேசித்து வந்ததாகக் கூறினார். அந்த ஆட்டுக்குட்டியை மனதில் எண்ணி உன் முழு கவனத்தையும் அதில் செலுத்தி தியானம் செய்என்று குருவான துறவி பணித்தார். சில ஆண்டுகள் தொடர்ந்து அப்படி தியானம் செய்து வேதாந்தத்தில் சகுண பிரம்மம் என்று சொல்லப்படுகிற வகை பிரம்ம ஞானத்தை நவீன்சந்திரர் அடைந்தார்.

அது தான் தேடிய மெய்ஞானத்தில் ஒரு பகுதி தான் என்பதை உணர்ந்த நவீன்சந்திரர் மேலும் தன் ஞானத்தை விருத்தியாக்கிக் கொள்ள திபெத்தில் இருக்கும் மானசரோவர் புனிதக் குளத்தை நோக்கிப் பயணித்தார். அக்காலத்தில் கால்நடையாக அங்கு சென்றடைவது அவ்வளவு சுலபமல்ல. கடுமையான குளிரில், சரியில்லாத சிக்கலான ஆபத்தான பாதைகளில் பயணித்து மானசரோவரை அடைந்தார்.  அங்கு ஒரு குகையில் தொடர்ந்து சில ஆண்டுகள் தவம் புரிந்தும் அவர் நாடியது கிடைக்கவில்லை. காரிருளே மிஞ்சியது.

ஒரு நாள் அவர் தியான நிலையில் இருந்து கண் விழித்த போது குகை வாசலில் ஒரு புத்த பிக்கு நிற்பதைக் கண்டார். தன் தேடுதலுக்கு வழி காட்ட இறைவனே வேறொரு குருவைத் தன்னிடம் அனுப்பி உள்ளார் என்று நினைத்த நவீன்சந்திரர் அவரிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். நவீன்சந்திரரோ இது வரை வேதாந்த நெறிப்படி வந்தவர். பிக்குவோ புத்தரின் மகாயான தத்துவத்தைப் பின்பற்றுபவர். அந்த வித்தியாசங்களை நவீன்சந்திரருக்குப் புத்த பிக்கு சுட்டிக் காட்டினார். தன்னால் மகாயான புத்தமத வழிகளையே போதிக்க முடியும் என்றும் சொன்னார்.

வேதாந்தக் கருத்துகளையே புத்தரும் தன் போதனைகளில் பெரிதும் பின்பற்றி இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டிய நவீன்சந்திரர் அந்த மகாயானக் கருத்துகளும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்துகளும் ஒருமித்துப் போகின்றன என்பதால் அந்த வழியிலேயே தனக்கு வழிகாட்டச் சொன்னார். யோகிகள் தங்களுக்கு வேண்டிய ஞானத்தை மாறுபட்ட மதங்களில் இருந்தும் பெற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

சில வருடங்கள் மகாயான புத்த மத வழியில் தியானம் செய்து நிர்குண பிரம்ம ஞானத்தையும் நவீன்சந்திரர் பெற்றார். இரு வகை பிரம்ம ஞானத்தையும் பெற்ற ஒரு யோகிக்கு அஷ்டமகா சித்திகள் தானே வந்து சேர்கின்றன என்பதால் இமயமலையில் அவற்றையும் பெற்றார்.  ஒரு சின்ன சக்தியைப் பெற்று விட்டால் தன்னைக் கடவுளாகவே எண்ணிக் கொண்டு தன்னை வழிபட கூட்டத்தையும் சேர்த்துக் கொள்ளும் உலகில் அஷ்டமகா சக்திகளைப் பெற்றிருந்தாலும் நவீன்சந்திரர் சாதாரண துறவியாகவே மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார்.

ஆன்மிகக் கருத்துகளை மக்களிடம் பரப்புவது மட்டுமல்லாமல் நோய்களால் அவதிப்படும் ஏழை எளிய மக்கள் குணப்பட இயற்கை மூலிகை வைத்தியங்கள் இலவசமாகச் செய்தார். மூலிகைகளால் குணப்படுத்த முடியாத நோய்களை தன் யோகசக்தியால் குணப்படுத்தி இருக்கிறார் என்று அவர் வாழ்க்கை வரலாறை எழுதிய சீடர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

முன்பு குறிப்பிட்டது போல பல அண்டை நாடுகளுக்குப் பயணித்த நவீன்சந்திரர் அந்த நாடுகளிலும் கூடத் தன் சேவையைத் தொடர்ந்திருக்கிறார். வியாதிகளைக் குணப்படுத்தியது அல்லாமல் அவர் யோக சக்திகளை உபயோகித்த இரண்டு சந்தர்ப்பங்களை அவர்கள் சீடர்கள் பதிந்திருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.

1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்த போது நவீன்சந்திரர் கான்பூர் நகருக்கு வந்திருந்தார். நானா சாஹிப் பேஷ்வாவாக அறிவிக்கப்பட்டு, பிரச்னையாகி ஆங்கிலேயர் டிசம்பர் மாதம் கான்பூரை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். நானா சாஹிப்பும் அவர் தளபதி டாண்டியா டோபும் கான்பூரில் இருந்து தப்பித்துச் சென்றார்கள். அந்தக் கோபத்தை பிரிட்டிஷ் அதிகாரி பொதுமக்கள் மீது காட்டினார். பொதுமக்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது. அப்பாவிப் பொதுமக்களில் பலர் சிறைப்படுத்தப்பட்டனர். பொதுமக்களின் துயரத்தைப் பார்த்து மனம் வருந்திய நவீன்சந்திரர் போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவிப் பொதுமக்களைத் துன்புறுத்துவது எந்த விதத்திலும் நியாயமல்லஎன்பதை அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரியிடம் தெரிவித்தார்.

ஒரு துறவியிடம் அறிவுரை கேட்டுத் திருந்துகிறவராக அந்த பிரிட்டிஷ் அதிகாரி இருக்கவில்லை. வன்முறை தொடர்ந்தது. நவீன்சந்திரர் தன் யோக சக்தியால் அந்த பிரிட்டிஷ் அதிகாரியின் இராணுவ வீரர்களைத் தற்காலிகமாகச் செயலற்றவர்களாக்கினார். அந்த இராணுவ வீரர்கள் பொதுமக்கள் மீது எந்த அடக்குமுறையையும் பிரயோகிக்க முடியவில்லை. அதைக் கண்டு திகைத்துப் போன பிரிட்டிஷ் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்ட பொதுமக்களை விடுவித்ததோடு, இனி போராட்ட வீரர்கள் தவிர யாரையும் துன்புறுத்தக் கூடாது என்ற கட்டளையையும் பிறப்பித்தார். பின் அந்த இராணுவ வீரர்கள் பழைய நிலைக்கு வந்தனர். விடுதலையாகிய பொதுமக்கள் தங்களை விடுவிக்கக் காரணமாய் இருந்த துறவி திபெத்தில் பல காலம் இருந்து யோக சக்திகளைப் பெற்றவர் என்று கேள்விப்பட்டிருந்ததால் திபெத்திய பாபா எங்களைக் காப்பாற்றினார் என்று கொண்டாடினர். அதிலிருந்து அவருக்கு திபெத்திய பாபா என்ற பெயரே நிலைக்க ஆரம்பித்தது.

தன் முதிய வயதில் உடல் மிக பலவீனமாக இருக்கையில் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்தார் என்றும் சொல்கிறார்கள். பர்மா இளவரசனின் இறந்த உடலில் அவர் ஆவி சேர்ந்தது என்று ஒரு சாராரும், திபெத்திய இளம் பிக்கு ஒருவரின் உடலில் அவர் ஆவி சேர்ந்தது என்று ஒரு சாராரும் கூறுகிறார்கள். இதில் ஒருமித்த கருத்து இல்லை.

இந்தியாவில் இரண்டு இடங்களில் ஆசிரமங்கள் அமைத்து தன் சீடர்கள் மூலம் ஆன்மிக சேவையை திபெத்திய பாபா தொடர்ந்தார். அவர் சீடர்களும் மிகப் பிரபலமானார்கள். அப்படி பிரபலமான ஒரு சீடரின் மகாசக்தியைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போமா?

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 6-3-2015

1 comment: