சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, June 23, 2015

குறும்புச் சிறுவனின் ஆன்மிகப் பயணம்!

மகாசக்தி மனிதர்கள்-28

ங்கை நதிக்கரையோரம் செராம்பூர் என்ற ஊரில் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுள்ள பெற்றோருக்கு 1855 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளை பிரியாநாத் கரார். இளம் வயதிலேயே அவர் தந்தையை இழந்தாலும் அவர் குடும்பம் வசதியான குடும்பமாக இருந்ததால் பள்ளிக்குச் செல்வதிலும், கல்வி கற்பதிலும் அவருக்குப் பிரச்னைகள் இருக்கவில்லை. இயல்பிலேயே அறிவுக்கூர்மை, தைரியம், பல துறைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்த அவருக்குப் பல மொழிகள் படிக்கும் ஆர்வமும் இருந்தது. அதனால் அவர் இளம் வயதிலேயே பெங்காலி, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவராக விளங்கினார். ஆனால் கூடவே குறும்பும் நிறையவே அவரிடம் இருந்தது.  

சிறு வயதிலேயே எதைக் கேள்விப்பட்டாலும் அது எந்த அளவு உண்மை என்று அறிவதில் அவர் அதிக அக்கறை காட்டினார்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

என்று திருவள்ளுவர் சொன்னதைச் சிறுவயதில் இருந்தே கடைபிடித்தவர் நம் பிரியாநாத் கரார்.

மகனின் குறும்பை அடக்கி பயமுறுத்தி வைக்க அவரது தாய் ஒருமுறை ஒரு இருட்டான அறையில் பேய் வாசம் செய்வதாகச் சொல்ல, அடுத்த கணம் அவர் அந்த இருட்டான அறைக்கு விரைந்தார். பேயை அந்த அறையில் காண முடியவில்லை என்பதில் அவருக்கு பெரிய வருத்தமும் கூட ஏற்பட்டது.  அன்றிலிருந்து மகனிடம் பேய்க்கதைகள சொல்வதை அவர் தாய் தவிர்த்தார்.

அவரிடம் ஒரு யோகி தினமும் இரவு அந்தரத்தில் மிதந்தபடி தியானம் செய்வார் என்று பலரும் சொன்னார்கள். அவர் தன்னிடம் கூறியவர்களிடம் எல்லாம் கேட்டார், “நீங்கள் அதை நேரில் கண்டிருக்கிறீர்களா?”.  சிலர் தாங்கள் கண்டதில்லை, மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று  சொன்னார்கள். சிலர் தாங்கள் கண்டதில்லை, ஆனால் தங்களுக்குத் தெரிந்தவர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். சிறுவன் பிரியாநாத் கராருக்கு அந்தப் பதில்கள் திருபதி அளிக்கவில்லை. இந்தியாவில் அக்காலத்திலும் கூட போலிகள் நிறைய இருந்ததால் கேள்விப்பட்ட தகவல் உண்மையா பொய்யா என்று அறியும் ஆர்வம் அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்டது.

அந்த யோகியின் இருப்பிட விலாசம் தெரிந்து கொண்டு நேராக தானே அங்கு ஒரு மாலை நேரத்தில் சென்று விட்டார். யாருக்கும் தெரியாமல் அந்த யோகியின் அறைக்குள் சென்று பிரியாநாத் கரார் கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். இரவு வந்தது.  அந்த யோகி தனதறைக்கு வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார். பின் கட்டிலில் அந்த யோகி படுத்துக் கொண்டார்.

காலம் சென்று கொண்டே இருந்தது. பிரியாநாத் கரார் அடிக்கடி ரகசியமாய் அந்த யோகி அந்தரத்தில் மிதக்க ஆரம்பிக்கிறாரா என்று கவனித்துக் கொண்டே இருந்தார். யோகி மிதக்க ஆரம்பிக்கிறது போல் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து போய் பிரியாநாத் கரார் கட்டிலுக்கு அடியிலிருந்தபடியே கேட்டே விட்டார். “ஏன் இன்னும் நீங்கள் மிதக்க ஆரம்பிக்கவில்லை

திடுக்கிட்டுப் போன யோகி எழுந்து கட்டிலுக்கு அடியே எட்டிப் பார்த்து “பொடியனே, நீ இருப்பதால் தான் எனக்கு இன்று இன்னும் சமாதி நிலை எட்ட மாட்டேன்கிறதா?என்று திட்டி விரட்டி விட்டார். ஒரே ஓட்டத்தில் அந்த இடத்தைக் காலி செய்த பிரியாநாத் கராருக்கு அன்று அந்த ஆள் நிஜமாகவே யோகி தானா, அந்த சக்தி உண்மையாகவே இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற பெரும்பாலான அசாதாரண சக்திகள் பெற்றவர்கள் பற்றிய கதைகள் எல்லாம் கட்டுக்கதைகளே என்கிற எண்ணம் அவரிடம் தங்கி விட்டது.

பிரியாநாத் கரார் குடும்பத்திற்கு கோஸ்வாமி என்ற குலப்பெயர் கொண்ட குடும்பத்துடன் நெருங்கிய நட்பு இருந்தது. அந்த கோஸ்வாமி குடும்பத்தினரும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் ஆன்மிகப் பெரியோரைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து கௌரவித்து அவர்கள் உபதேசங்களையும், ஆன்மிகக் கருத்துகளையும் கேட்பது வழக்கம். அப்படி ஒரு முறை ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்த நபர் சம்ஸ்கிருத சுலோகங்களைக் கரைத்துக் குடித்தவராக இருந்தார். என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு சில சம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி இதில் பதில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அதற்கு திருப்தி அளிக்கக் கூடிய கருத்துச் செறிவு மிக்க மேலதிக விளக்கங்கள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதிலும் பிரியாநாத் கரார் அப்போதே சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். அந்த சம்ஸ்கிருத வல்லுனர் மொழிப் புலமை பெற்றிருந்த போதும் ஆன்மிக மெய்யறிவு இல்லாதவர் என்பது பிரியாநாத் கராரின் அபிப்பிராயமாக இருந்தது. வேத நூல்களில் இருந்து மேற்கோள்கள் மட்டும் காட்டி விட்டு அது ஏன் சரி என்ற அறிவார்ந்த விளக்கமோ, அனுபவ விளக்கமோ தர முடியாமல் இருப்பது மெய்ஞானம் அல்ல என்று அவர் எண்ணினார்.

அந்த சம்ஸ்கிருத வல்லுனர் இது போல சுலோகங்களைப் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் காது கேட்கும் படி தன் வயதை ஒத்த சிறுவர்களிடம் சற்று தள்ளி இருந்தபடி இவரும் ஒரு சுலோகத்தைச் சொல்லி இது மெய்ஞானத்தை அடைய ஒரே வழி என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறுவர்களுக்கு அந்தச் சுலோகத்தின் பொருள் என்ன என்று விளங்கவில்லை. அவர்களிடம் தாழ்ந்த குரலில் பிரியாநாத் கரார் சொன்னார். “இதை அடைய ஒரே வழி தெருவெல்லாம் சிறுநீர் கழித்துக் கொண்டு போவதேஎன்பது தான் நானே உருவாக்கிய இந்த சம்ஸ்கிருத சுலோகத்தின் பொருள்”.  அங்கிருந்த சிறுவர்களுக்குத் தங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த சம்ஸ்கிருத வல்லுனருக்கு பிரியாநாத் கரார் உருவாக்கிய சுலோகத்தின் பொருளும் கேலியும் புரிய சிறிது நேரம் பிடித்தது. கடுமையாக சினம் கொண்ட அவர் ராஸ்கல் நீ என்ன சொன்னாய்? என்னையே கேலி செய்கிறாயா?என்று கேட்டுக் கொண்டே நெருங்குவதற்குள் பிரியாநாத் கரார்  அங்கிருந்து ஓட்டமெடுத்து விட்டார்.

அங்கிருந்த கோஸ்வாமி வீட்டுப் பெரியவர்கள் பிறகு தனியாக பிரியாநாத் கராரை அழைத்துக் கடிந்து கொண்டார்கள். அப்போது பிரியாநாத் கரார் சொன்னார். “எதையுமே உணர்ந்து விளக்குவதற்கு அந்த ஆளுக்குத் தெரியவில்லை. . நான் சொன்னதும் ஒரு சம்ஸ்கிருத சுலோகம் தான். அதனால் என்ன பலன்? எதையும் விளங்கிக் கொள்ளாமல் சும்மா சுலோகங்களைச் சொல்வதால் மட்டும் யாராவது ஞானம் பெற முடியுமா? அதைச் சுட்டிக் காட்டத் தான் நான் அப்படிச் செய்தேன் பெரியவர்களுக்கு அவர் சொன்னதில் உள்ள உண்மையை மறுக்க முடியவில்லை.

இப்படி வயதிற்கு மீறிய அறிவுக்கூர்மையும், உண்மையானதை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என்கிற கொள்கையும் கொண்ட பிரியாநாத் கரார் கல்வியிலும் வேகமாக முன்னேறினார். ஒரு கிறிஸ்துவ மிஷினரி கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற அவருக்கு பைபிள் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது.  இந்திய வேதாந்த நூல்களைப் போலவே அவர் பைபிளையும் ஆழமாகப் படித்தார். கிறிஸ்துவ மிஷனரிக் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் சுமார் இரண்டாண்டுகள் பயின்றார்.

கல்வியை முடித்த அவர் தங்கள் குடும்ப சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார். அவருடைய தாய் அவருக்கு ஒரு பெண் பார்த்து மணம் முடித்து வைத்தார். எதிர்காலத்தில் ஒரு சிறந்த யோகியாய் ஆகப் போகிற அவரைக் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாய் நிலைத்து விட விதி விடவில்லை. ஒரு பெண் குழந்தையைப் பெற்றுத் தந்து அவர் மனைவி இறந்து விட்டார். பிரியாநாத் கராரிடம் இயல்பாகவே இருந்த ஆன்மிக வேட்கை அதிகரித்தது.

ஒரு மகாசக்தி மனிதராய் எப்படி அவர் மாறினார், அவரது பிற்காலப் பிரபலமான பெயர் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?

-          என்.கணேசன்

-          நன்றி: தினத்தந்தி: 27-03-2015

2 comments:

  1. ஆழம் காணும் ஆன்மீகம்...

    அடுத்தவாரம் வரை காத்திருக்கிறோம் ஐயா.

    ReplyDelete
  2. அவர் பெயர் இதுதான் சரிதானே!

    https://en.wikipedia.org/wiki/Yukteswar_Giri

    ReplyDelete