சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 2, 2015

யோகசக்தியில் ஒரு மாயமாளிகை!

13. மகாசக்தி மனிதர்கள்

கா அவதார் பாபாஜியைப் பற்றி பெரும்பாலான ஆன்மீகவாதிகள் அறிய ஆரம்பித்தது பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுயசரிதம்” 1946 ஆம் ஆண்டு வெளியான பின்னர் தான். தமிழகத்தில் ஆன்மீகவாதிகள் மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களும் அவரைப்பற்றி கேள்விப்பட ஆரம்பித்தது திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அவரது பக்தராக மாறி, பாபா என்ற திரைப்படமும் வெளி வந்த பிறகு தான். நம் நாட்டில் துறவிகளை பாபாஜி என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அதனால் மற்ற துறவிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்ட மகா அவதார் பாபாஜி என்று அழைக்கிறார்கள்.

இமயமலையில் இன்றும் வாழ்ந்து வரும் மகா அவதார் பாபாஜியின் வயது 620, 1200, 1800, 2000 க்கும் மேல் என்று பலரும் பல விதமாகச் சொல்கிறார்கள்.  ஆனால் அவர் வயது 1800 க்கும் மேல் என்பவர்கள் அவர் கிபி 203ல் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டை என்ற கடலோர கிராமத்தில் பிறந்தவர் என்று பிறந்த நாளையும் குறிப்பிடுகிறார்கள். இந்த வயதுகளில் எந்த வயதினராக அவர் இருந்தாலும் அது ஆச்சரியப்படத் தக்க விஷயமே. அதை விட ஆச்சரியப்படுத்தும் தகவல் என்ன என்றால் தோற்றத்தில் அவர் வயதை சுமார் 25க்கு அதிகமாகச் சொல்ல முடியாது என்று பார்த்தவர்கள் தெரிவிப்பது தான். பொன்னிறத்தில் மிக இளமையான தோற்றத்தில் தெரிந்த அவர் தோலில் சுருக்கம் சிறிதும் இருக்கவில்லை என்றும், இடுப்பில் இருந்து முழங்கால் வரை மறைத்த ஒரு ஆடையைத் தவிர வேறு எந்த ஆடையையும் அணிந்திருக்கவில்லை என்றும், அவருடைய நீண்ட தலைமுடி லேசான சென்னிறத்தில் இருந்தது என்றும், தெய்வீகமான ஆழமான பார்வை உடையவராக இருந்தார் என்றும் அவரைச் சந்தித்தவர்கள் கூறுகின்றனர்.  

அவரை நேரில் பார்த்த அனுபவங்களை பரமஹம்ச யோகானந்தர் ‘ஒரு யோகியின் சுயசரிதையிலும்அவருடைய குரு யுக்தேஷ்வர் The Holy Science  என்ற நூலிலும்,  ஸ்ரீ எம் என்ற பெயரில் அறியப்படும் மும்தாஸ் அலி என்கிற முகமதிய யோகி  Apprenticed to a Himalayan master: a yogi's autobiography  என்ற நூலிலும் எழுதியுள்ளார்கள்.  அதுமட்டுமல்லாமல் ராபர்ட் மன்றோ (Robert Monroe) என்ற மேலை நாட்டு ஆன்மிக எழுத்தாளர் 1994 ல் எழுதிய Ultimate Journey என்ற நூலில் தன் ஆவி வடிவ ஆன்மீகப்பயணத்தில் சுமார் 1800 வயதுடைய ஒரு மகாத்மாவை சந்தித்ததாகவும் அவர் கிபி 203 ஆண்டு வாக்கில் பிறந்தவர் என்றும் குறிப்பிடுகிறார். அவர் பெயர் எதுவும் குறிப்பிடா விட்டாலும் அவர் கூறுவது மகா அவதார் பாபாஜியையே என்று பலரும் கூறுகிறார்கள்.

அவரைப் பற்றி எழுதியவர்களுக்கும் கூட பாபாஜியின் பூர்விக வாழ்க்கை பற்றி தெளிவான ஒருமித்த கருத்து இல்லை. ஒரு குறிப்பு அவர் இயற்பெயர் நாகராஜன் என்றும், தமிழகத்தில் பிறந்த அவரை ஐந்து வயதாக இருக்கும் போதே ஒரு கொள்ளையர் கும்பல் வடநாட்டிற்குக் கடத்திச் சென்று விட்டதாகவும், அவரது தெய்வீகத் தன்மை உணர்ந்து அவரை விடுவித்து விட்டதாகவும் சொல்கிறது. பின்பு பாபாஜி நாடோடித் துறவிகளுடன் சுற்றித் திரிந்ததாகவும் அவர்களிடம் வேத உபநிடதங்களைக் கற்றதாகவும், போகர் என்ற சித்தரிடமும், பின் அகத்திய முனிவரிடமும் கிரியா குண்டலினி மகாசக்தி பயிற்சி பெற்று கடைசியில் பத்ரிநாத்தில் 18 மாத காலம் தான் கற்றதை எல்லாம் பயிற்சி செய்து மகாசக்திகளை அடைந்ததாகவும் அந்தக் குறிப்பு கூறுகிறது.  

மகா அவதார் பாபாஜி செய்து காட்டிய அற்புதங்களாக பலவற்றைப் பலரும் சொல்கிறார்கள் என்றாலும் சாதாரண மனிதர்கள் அல்லாத சிலரின் அனுபவங்களை மட்டும் இனி பார்ப்போம்.

பரமஹம்ச யோகானந்தரின் குருவின் குருவான லாஹிரி மஹாசாயா குடும்பஸ்தர். அக்கவுண்டண்டாக இராணுவ பொறியியல் துறையில் தனப்பூர் என்ற ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். திடீரென்று 1861 ஆம் ஆண்டில் ஒரு நாள் அவருக்கு இமயமலையில் நந்தாதேவி பர்வதத்தின் அடித்தளத்தில் உள்ள ராணிகேத் என்ற இடத்திற்கு இடமாற்ற உத்தரவு தந்தியில் வந்தது.  500 மைல்கள் தள்ளி உள்ள ராணிகேத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர முடியாததால் ஒரு வேலையாளுடன் அங்கு சென்றார்.

அங்கு ஒரு நாள் மதியம் மலைப்பகுதியில் அவர் உலாவிக் கொண்டிருந்த போது தொலைவிலிருந்து அவர் பெயரை யாரோ அழைப்பது போல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி லாஹிரி மஹாசாயா நடக்க ஆரம்பித்தார். நீண்ட தூரம் யாரும் தெரியவில்லை. கடைசியில் ஒரு குகை வாசலில் புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்த பாபாஜியை அவர் கண்டார்.

“கங்காதர், வந்து விட்டாயா?என்று பாபாஜி பாபாஜியைப் பற்றி அறிந்திராத லாஹிரி ஏதோ ஒரு இளைஞன் நம்மை ஏன் வேறு பெயரில் அழைக்கிறான் என்று யோசித்தார்.  பாபாஜி அவரை அந்தக் குகைக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே சில கமண்டலங்களும், கம்பளிகளும் இருந்தன.

ஒரு மடித்து வைக்கப்பட்ட கம்பளியைக் காட்டிய பாபாஜி “எல்லாம் நினைவுக்கு வருகிறதா என்று கேட்க லாஹிரி மஹாசாயாவுக்கு நடக்கின்ற எதுவும் இயல்பாகப் படவில்லை. இருட்டுவதற்குள் தங்குமிடத்திற்குத் திரும்பி விட வேண்டும் என்ற எண்ணமே மேலிட்டது.

“நான் இருட்டுவதற்குள் திரும்ப வேண்டும். ஆபிசில் நாளை காலை வேலை இருக்கிறதுஎன்று லாஹிரி சொன்னார்.

“உனக்காக தான் அந்த உத்தியோகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தியோகத்திற்காக நீ உருவாக்கப்படவில்லைஎன்று பாபாஜி சொன்னார். “உன்னை இங்கு வரவழைக்கவே வேலையிட மாற்றல் தந்தியை அனுப்ப ஏற்பாடு செய்தேன். உண்மையில் ராணிகேத்திற்கு உன் மேலதிகாரி வேறொரு ஆளைத் தான் நினைத்திருந்தார். அவர் மனதில் அந்த எண்ணத்தை மாற்றியது நான் தான்

ஒருவர் மனதில் புகுந்து எண்ணத்தை மாற்றிவிட முடியுமா என்ன என்று லாஹிரி மஹாசாயா திகைத்தார். பாபாஜி சொன்னார். “மனித இனம் முழுவதிலுமே தனக்கு இருக்கும் ஒருமைத் தன்மையை ஒருவன் பரிபூரணமாக உணர முடிகிற போது எல்லா மனிதர்களுடைய எண்ணங்களிலும் ஒருவன் ஆதிக்கம் செலுத்த முடியும்

என்ன சொல்வதென்று தெரியாமல் லாஹிரி மஹாசாயா விழித்த போது பாபாஜி அவரை நெருங்கி நெற்றியில் புருவமத்திக்கு மேல் லேசாகத் தட்டினார். மின்சாரத்தினால் தாக்கப்பட்டது போல உணர்ந்த லாஹிரி மஹாசாயாவுக்கு முந்தைய பிறவியின் நினைவுகள் மடை திறந்த வெள்ளம் போல் வந்தன. முந்தைய பிறவியில் தன்னுடைய பெயர் கங்காதர் என்றும், அந்தக் குகையில் அவர் பல ஆண்டுகள் தவம் புரிந்திருக்கிறார் என்றும் ஞானத் தேடலில் பேரார்வத்துடன் இருந்த தனக்கு பாபாஜி தான் குரு என்றும் நினைவுக்கு வர லாஹிரி மஹாசாயா கண்களில் ஆனந்தக் கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது.

பாபாஜி அவரிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெயைத் தந்து அதைக் குடிக்கச் சொல்லி பிறகு அருகிலிருந்த கோகாஷ் என்ற நதியில் குளித்து படுக்கச் சொன்னார். ஆன்மிக சுத்திக்கென பிரத்தியேகமாய் செய்யும் ஒரு வழிமுறை அது. லாஹிரி மஹாசாயா அவ்வாறே செய்தார்.

அப்போது இரவாகி விட்டிருந்தது. இமயத்தின் அந்த நதி நீர் சில்லிட்டிருந்தது.  நதி இருந்த ஒரு பாறையில் கண்களை மூடி லாஹிரி மஹாசாயா படுத்திருந்த போது பேய்க் காற்று வீசியது. புலிகள் உறுமும் சத்தம் அருகில் கேட்டது. ஆனாலும் எந்த ஒரு பயமும் இல்லாமல் லாஹிரி மஹாசாயாவால் படுத்திருக்க முடிந்தது.
                                      
சிறிது நேரத்தில் பாபாஜியின் சீடர் ஒருவர் அவரை எழுப்பி இருட்டில் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். தூரத்தில் பொன்னிறமாய் ஏதோ ஒளிர லாஹிரி மஹாசாயா அதை சூரிய ஒளியென நினைத்து விடிந்து விட்டதா என்று கேட்டார். அதற்கு சீடர் சிரித்தபடி அது பாபாஜி உங்களுக்கென உருவாக்கிய தங்க மாளிகையின் ஜொலிப்புசென்ற பிறவியில் ஒரு அரண்மனை போன்ற மாளிகை அழகை ரசித்து வசிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டிருந்தீர்களாம். அந்த ஆசையை முடித்து பழைய கர்ம வாசனையை நீங்கள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தான் பாபாஜி உருவாக்கியிருக்கிறார்என்று சொன்னார்.

இரவைப் பகலாக்கி ஜொலித்த அந்த தங்க மாளிகையை நெருங்கிய போது அந்த பேரழகில் லாஹிரி மஹாசாயா மெய் மறந்து போனார்.
  
(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி –   5-12-2014

7 comments:


  1. மகா அவதார் பாபாஜியின் அளப்பரிய சக்தியை பற்றி படித்த போது நானும் மெய் மறந்துதான் போனேன் அண்ணா. . .


    பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. . .

    >> முத்துக்குமார்
    >*ஊதியூர்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    மலர்

    ReplyDelete
  3. every ordinary person cannot understand and accept this, who are having basic knowledge of spiritual they can only understand the singularity of universe. whatever u telling it is really interesting keep it up brother.

    ReplyDelete
  4. பாபாஜியின் பொன்னிற முகத்தில், லேசான பிறை வடிவ சந்தன கீற்று இருக்கும். அது இருப்பதே தெரியாது. அவருடைய சிகையும் இடுப்பு வரை இருக்கும்.

    ReplyDelete
  5. பாபாஜியை பற்றி அறிய மேலும் ஆவலாக உள்ளோம். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. Wonderful words from Ganesan Sir.

    My heart overflows with joy on reading this article.

    Babaji's divine blessing flows all over my body, and the divine grace overflows.

    ReplyDelete
  7. நன்றிங்க.பாபாஜி அவர்களைப்பபற்றி வெளியிட்டமைக்கு.

    ReplyDelete