சம்யே
மடாலயம் நோக்கி தான் மைத்ரேயன் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை லீ க்யாங்குக்குத்
தெரிவிக்கலாம் என்ற சீனரின் ஆலோசனையை மாரா உடனடியாக மறுத்தான்.
“லீ க்யாங்
இருமுனைக்கத்தி. அவனைக் கையாள்வது ஆபத்தானது... நம் அமைப்பு பற்றி பெரிதாக எதுவும்
தெரியாமல் இருக்கிற அவனுக்கு நாம் எந்த அளவு வளர்ந்திருக்கிறோம் என்பது சுத்தமாகவே
தெரியாது. அப்படி இருக்கும் போது அவன் கவனத்திற்கு வராமல் இருப்பதே நமக்கு நல்லது”
“எதிரிக்கு
எதிரி நண்பன் என்கிற வகையில் இப்போதைக்கு லீ க்யாங் நமக்கு நண்பன் தானே” ஆங்கிலேயர் சொன்னார்.
“அது பொதுவான எதிரியை வீழ்த்துகிற வகையில் தான். அது முடிந்த பின் லீ
க்யாங் நம்மைப் போன்றவர்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டான். நம்மையும் எதிரியாகவே
நினைப்பான். அதனால் இப்போதைய பலனை மட்டும் நினைத்து செயல்படுவது புத்திசாலித்தனம்
அல்ல. அதற்குப்பின்னும் யோசிக்க வேண்டும்....”
”நாம் அனாமதேயமாக அழைத்துத் தெரிவிக்கலாம் என்று
தான் சொன்னேன்” சீனர் மெல்ல சொன்னார்.
”அப்படித் தெரிவித்தால் கூட மைத்ரேயனுக்குத்
தங்களைத் தவிர வேறு எதிரியும் இருப்பதை அவன் தெரிந்து கொள்வான். லீ க்யாங்குக்கு
சின்ன இழை கிடைத்தால் போதும் அவன் அதை வைத்து முழுவதுமே தெரிந்து கொள்ளாமல்
திருப்தி அடைய மாட்டான். தகுந்த காலம் வரும் வரை அவன் நம்மைத் தெரிந்து கொள்வது
நல்லதல்ல...”
அவர்கள்
மூவரும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. அவன் சொன்னது சரியாகவே அவர்களுக்கும்
தோன்றியது.
திபெத்தியக்
கிழவர் கேட்டார். “அப்படியானால் நேரடியாக நாமே மைத்ரேயனை ஏதாவது செய்ய
வேண்டாமா...?” அவருக்கு அந்தச் சிறுவன் காட்டிய அலட்சியம் இன்னும்
வலித்தது. உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் துடித்தது.
மாரா அவர் அளவு உணர்ச்சிகளால் உந்தப்படாமல் அமைதியாகச் சொன்னான். ”மைத்ரேயன் தன்னை யார் என்று வெளிப்படுத்தி விட்டிருக்கிறானே ஒழிய அவன் எந்த
அளவு சக்தியோடு இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தவில்லை. அவனைக் காக்க வந்தவன்
பற்றியும், அவன் சக்தி பற்றியும் நமக்கு எதுவுமே தெரியாது. எதிரியின் பலம் பலவீனம்
தெரியாமல் நேரடியாக மோதப் போவது தோல்விக்கு நாம் போடும் அஸ்திவாரம் ஆகி விடும்.
பொறுங்கள். லீ க்யாங்கை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்ப்போம்...
பிறகு யோசிப்போம்....”
மைத்ரேயன்
பற்றிய பேச்சு அத்துடன் நின்றது. நால்வரும் தாழ்ந்த குரலில் மற்ற விஷயங்களைப்
பற்றிப் பேசினார்கள். முக்கால் மணி நேரம் கழிந்து திபெத்தியக் கிழவர் தான் வந்த
வழியே திரும்பினார். ஆங்கிலேயரும் சீனரும் மலையிலேயே வேறு பாதையில் சென்றார்கள்.
கடைசியாக வெளியே வந்த போது மாரா மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞனின்
உடையில் இருந்தான். அவனிடம் மலை ஏறும் உபகரணங்களும் இருந்தன. சிறிது நேரத்தில் அவன் அனாயாசமாக மலையின் செங்குத்தான பகுதியில் மேலே ஏற
ஆரம்பித்தான்.
ஓரிடத்தில் அவனுக்கு சற்று உயரத்தில் ஒரு திபெத்திய நீலக்கரடி தெரிந்தது.
அந்த நீலக்கரடி பசியோடு இருந்த்தை அவனால் உணர முடிந்தது. அவனைக் கண்டதும் வேகமாக
அவனை நோக்கி அது வர ஆரம்பித்தது. அதன் கண்களில் இரையைக் கண்ட திருப்தியும் பசியும்
தெரிந்தன. ஒவ்வொரு வருடமும் நீலக்கரடிகள் நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கொன்று
தின்றிருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மாரா அந்த நீலக்கரடியையே
கூர்ந்து பார்த்தான். கரடி ஒரு கணம் சிலையாக நின்று பிறகு பின் வாங்கியது. பின்
வேகமாக அங்கிருந்து ஓடியது. மாரா அது கண்ணில் இருந்து மறையும் வரை அதைப் புன்னகையுடன்
பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுடைய இடத்தில் மைத்ரேயன் இருந்திருந்தால் என்ன
செய்திருப்பான் என்று யோசித்து
பார்த்தான். அவனால் கச்சிதமாக யூகிக்க முடியவில்லை. இனி ஒவ்வொரு முக்கியமான
கட்டத்திலும் அவனால் மைத்ரேயனை நினைக்காமலும் தன்னுடன் அவனை ஒப்பிடாமலும் இருக்க
முடியாது.....
காதல்
வந்து விட்டாலே ஒருவன் எப்படி எல்லாம் மாறிவிடுகிறான் என்று சஹானா
ஆச்சரியப்பட்டாள். வருண் எதிர் வீட்டின் கீழ் பகுதிக்கு குடி வந்திருக்கும் தன்
காதலி குடும்பத்திற்காக சாமான்கள் எல்லாவற்றையும் லாரியில் இருந்து இறக்கி கொண்டு
போய் வீட்டின் உள்ளே வைத்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக ஏதாவது வேலை சொன்னால் அது
அக்ஷய் வாயிலிருந்து வந்தால் ஒழிய அந்த வேலையை அவன் உடனடியாகச் செய்ய மாட்டான்.
கூடுமான வரை தாமதித்து அந்த வேலையைத் தவிர்க்கப் பார்த்து வேறு வழியில்லாமல்
போகும் போது சலிப்போடு செய்வது தான் அவனது வழக்கம். வேலை சொல்வது அம்மாவோ
பாட்டியோவாக இருந்தால் அவர்கள் மேல் எரிந்து விழுவதும் உண்டு. அப்படிப்பட்டவன்
காதலி வந்தனா வீட்டில் பம்பரமாய் சுழன்று வேலை செய்வது அவளுக்கு வேடிக்கையாக
இருந்தது.
அக்ஷய்
போவதற்கு முன் வருண் வந்தனா என்று ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண்
எதிர்வீட்டில் குடிவரப் போவதாகச் சொன்னதாகவும் சொல்லி விட்டுப் போயிருந்தான். காதலைக்
கூட மகன் தன்னிடம் முதலில் சொல்லாமல் அக்ஷயிடம் சொல்லி வைத்திருப்பது அவன் அக்ஷய்
மேல் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை மறுபடியும் கோடிட்டுக் காட்டியது போல
இருந்தது. சில சமயங்களில் வருண் அக்ஷயின் குழந்தை என்றும் அவள் தான் மாற்றாந்தாய்
என்பது போலவும் கூட அவளுக்குத் தோன்றும்....
கௌதம் வந்து
ஆச்சரியப்பட்டான். “என்ன அண்ணன் அதிசயமாய் எதிர் வீட்டில் இப்படி வேலை செய்கிறான்?”
சஹானா பதில்
சொல்லாமல் மாமியாரைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். மரகதமும் புன்னகை செய்தாள்.
கௌதம் அவர்கள் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே விளையாட ஓடி விட்டான். அவனையே
மரகதம் பாசத்துடன் பார்த்தாள். மாமியாரும் வருணை விட அதிகமாக கௌதம் மேல் பாசம்
வைத்திருக்கிறாள் என்பதைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் காரணம் அக்ஷய் தான் என்று
தோன்றியது. அக்ஷயுடன் பழகிய பிறகு யாராலும் அவனை நேசிக்காமல் இருக்க
முடியாது..... அக்ஷய் திபெத்தில் என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான்,
பாதுகாப்பாக வந்து சேர்வானா என்ற கேள்விகள் மனதில் ஒவ்வொன்றாய் எழ அவள் மனம்
லேசாகக் கலக்கமடைந்தது.
மருமகளையே
பார்த்துக் கொண்டிருந்த மரகதம் சொன்னாள். “பயப்படாதே சஹானா அக்ஷய் பத்திரமாய்
வந்து சேர்வான்.”
சஹானா எதோ
சொல்ல வாய் திறந்த போது வருண் வியர்வை வழிந்தோட வேகமாக வந்தான். சஹானாவிடம்
சொன்னான். “அம்மா நான் வந்தனாவையும் அவங்கம்மா, அப்பாவையும் நம் வீட்டுக்கே
சாப்பிட வரச் சொல்லி விட்டேன்.... சாமான்களை சரியாக எடுத்து வைக்காமல் எப்படி
அவர்களால் சமைக்க முடியும்.....”
சஹானா
புன்னகையுடன் தலையசைத்தாள். அவன் சந்தோஷமாய் மறுபடியும் எதிர்வீட்டுக்கு ஓடினான். மாமியாரும்
மருமகளும் எழுந்து சமையலுக்குத் தயாரானார்கள்.
வந்தனாவும்,
அவள் பெற்றோரும் சாப்பிட வந்த போது சஹானாவுக்கு அவர்களை நன்றாகத் தெரிந்து கொள்ள
முடிந்தது. வந்தனா அழகாக இருந்தது மட்டுமல்லாமல் தைரியமான, கறாரான, சுறுசுறுப்பான
பெண்ணாகவும் இருந்தாள். அவள் பெற்றோரும் நல்ல மனிதர்களாய் தெரிந்தார்கள். தந்தை
மாதவன் அதிகம் பேசாத நபர் என்றாலும், தாய் ஜானகி அவருக்கும் சேர்த்து நிறைய
பேசுபவளாகத் தெரிந்தாள். பல நாட்கள் பழகியவர்கள் போலப் பேசினார்கள். அவர்கள்
இருவரும் தங்கள் மகள் மேல் உயிரையே வைத்திருப்பது தெரிந்தது.
வருண் விழுந்து
விழுந்து அவர்களை உபசரித்தான். அவன் வந்தனாவைப் பார்த்த விதமும், வந்தனா அவனைப்
பார்த்த விதமும் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த காதலை சத்தமாக
பிரகடனப்படுத்தியது. காதலை அடக்கி வாசிப்பது அத்தனை சுலபமல்ல என்று நினைத்த சஹானா
தனக்குள் புன்னகைத்தாள்....
அவர்கள் சாப்பிட்டு
முடித்து ஹாலில் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் எதிர் வீட்டு
மாடியில் புதிதாய் குடி வந்திருந்தவன் பைனாகுலர் மூலம் அவர்களுடைய ஒவ்வொரு
நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய சந்தோஷம், அன்னியோன்னியம்
எல்லாம் அவனை ஆத்திரம் கொள்ளச் செய்வதாய் இருந்தது. அவனுடைய எண்ணம் எல்லாம் அங்கே
இருக்காத இன்னொருவன் மீது அடிக்கடி போய் வந்தது. ”எங்கே அவன்?”
வாங்
சாவொ மைத்ரேயனின் குடும்பத்தாரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக்கூடிய அளவு அறிந்து
முடித்திருந்தான். மைத்ரேயனின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவன் தன் மனதினுள்
அறிந்ததை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தான்.
ஏழ்மையும்,
எளிமையும் தவிர அந்தக் குடும்பத்தினர் பற்றிப் பெரிதாகச் சொல்ல எதுவுமே
இருக்கவில்லை. மைத்ரேயனை அவன் குடும்பத்தினர் அடையாளம் தெரிந்து வைத்திருந்ததற்கான
அறிகுறி எதுவும் இல்லை. மைத்ரேயனைப் பற்றியோ தகவல்கள் நிறைய கிடைத்தன என்றாலும்
அந்தத் தகவல்களை வைத்து தீர்மானமான அனுமானத்திற்கு அவனால் வர முடியவில்லை.
பள்ளியில் அவன் சாதாரணமாய் தான் படிப்பவனாக இருந்தான். மற்ற பிள்ளைகளுடன்
சாதாரணமாய் எல்லோரும் விளையாடுவது போல் தான் விளையாடுபவனாக இருந்தான். அவனைப்
பலரும் மந்த புத்திக்காரன் என்று அழைத்தார்கள். சொல்வது அவனுக்கு அவ்வளவு
சீக்கிரம் புரியாது என்று சொன்னார்கள். ஆனால் அவன் மைத்ரேயனாக இருக்கும்
பட்சத்தில் அப்படி இருக்க சாத்தியமே இல்லை என்று தோன்றியது. அப்படி மற்றவர்கள்
நினைக்கும் அளவு நடித்திருக்கிறான் என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.
அடிக்கடி தனியாகப் பல இடங்களுக்குப் போய் நேரம் காலம் தெரியாமல் அமர்ந்திருப்பான்
என்கிற தகவல் துறவு மனப்பான்மைக்கு உகந்ததாகத் தோன்றினாலும் அவன் சேடாங்கில்
இருந்த புத்த மடாலயத்துக்குக் கூட சென்றதில்லை என்பது அவனுக்கு முரண்பாடாகத்
தோன்றியது.
அதை அவன் லீ
க்யாங்கிடம் தெரிவித்த போது லீ க்யாங் சொன்னான். “அவன் புத்தரின் அவதாரமாக
இருந்தால் அவனுடைய ஆலயத்துக்கு அவனே போவதில் அர்த்தம் என்ன இருக்கிறது”
வாங் சாவொ தன்
இன்னொரு சந்தேகத்தையும் லீ க்யாங்கிடம் சொன்னான். “அவன் உடலில் புனிதச்சின்னம்
எதுவும் இருந்ததாக அவனைத் தெரிந்த யாருமே சொல்லவில்லை.”
லீ க்யாங்
உடனடியாகச் சொன்னான். “அது அவன் உடலில் மற்றவர்கள் பார்க்க முடிந்த இடத்தில்
இல்லாமல் இருக்கலாம்”
வாங் சாவொ தன்
பலத்த சந்தேகத்தை வெளிப்படுத்தினான். “அவன் பார்க்க புத்தரின் மறு அவதாரம் மாதிரி
இல்லையே”
லீ க்யாங்
கேட்டான். “நீ புத்தரைப் பார்த்திருக்கிறாயா?”
வாங் சாவொ
இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “இல்லை” என்றான்.
“பின் எதை வைத்து இவன் புத்தரின் மறு அவதாரம் அல்ல என்கிறாய்?”
புத்தரின் பல ஓவியங்களையும்,
சிலைகளையும் பார்த்திருக்கிறேன் என்றால் அவை நேரில் பார்த்தவர்கள் உருவாக்கியதா
என்று கேட்பான். அவன் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை என்று தோன்றவே வாங் சாவொ
வேறு எதுவும் சொல்லத் துணியவில்லை. ஒட்டு மொத்தமாக யோசிக்கையில்,
எத்தனையோ பேர் மத்தியில் பத்து வருடங்களாக மைத்ரேயன் வாழ்ந்திருந்தாலும் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் புதிராகவே இருந்திருக்கிறான் என்றே அவனுக்குத் தோன்றியது.....
எத்தனையோ பேர் மத்தியில் பத்து வருடங்களாக மைத்ரேயன் வாழ்ந்திருந்தாலும் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் புதிராகவே இருந்திருக்கிறான் என்றே அவனுக்குத் தோன்றியது.....
வாங் சாவொ
மைத்ரேயன் வீட்டை வந்தடைந்து கதவைத் தட்டினான்.
(தொடரும்)
என்.கணேசன்
vaalthukal. naanum rasithan, magilthan. . .
ReplyDeleteI could not think of any troubles to Shagana & Maragatham by the mysterious person.. Please sir...
ReplyDeleteபடு சுவாரசியம். பாராட்ட வார்த்தை இல்லை.
ReplyDeleteமூன்று ட்ரேக் குகளிலும் சுவாரசியம் + சஸ்பென்ஸ் என அருமையாய் கதை செல்கிறது.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா. . .
அழகாய் போகிறது நாவல்.
ReplyDeleteபல தடவை படிக்க வைக்கிற எழுத்து நடை. கேரக்டர்களின் சின்ன சின்ன உணர்வுகளையும் நாங்களே உணர்கிற மாதிரி வெளிக் கொண்டு வருவதால் கதை நடக்கும் இடத்தில் நாங்களே இருப்பதாக உணர்கிறோம். தொடருங்கள்.
ReplyDelete