மைத்ரேயன்
பேரமைதியுடன் இருந்ததை அந்தக் கிழ திபெத்தியர் ரசிக்கவில்லை என்பது அக்ஷய்க்குத்
தெளிவாகத் தெரிந்தது. ஏதோ ஒரு உணர்ச்சியாவது தெரியும் என்று அந்தக் கிழவர்
எதிர்பார்த்தது போல இருந்தது. எதிர்பார்த்த எதையும் முகத்தில் காண்பிக்க மாட்டேன்
என்பது போல மைத்ரேயன் இருந்தான். அபூர்வமாகத் தெரியும் அவனது மந்தஹாசப் புன்னகை கூட
அவன் முகத்தில் தெரியவில்லை.
கிழவர் மறுபடி
முன்பக்கம் திரும்பிக் கொண்டார். பின் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. சிறிது
தூரம் போன பிறகு இரண்டு சாலைகள் தொடங்கிய ஒரு வளைவில் கிழவர் வண்டியை நிறுத்தும்படி
டிரைவரிடம் சமிக்ஞை செய்தார். டிரைவர் நிறுத்தினான். ஒரு வார்த்தை கூடப் பேசாமல்
கிழவர் இறங்கிக் கொண்டார். டிரைவரும் எதுவும் சொல்லாமல் ஜீப்பைக் கிளப்பினான்.
கிழவர்
ஜீப்பில் இருந்த மைத்ரேயனையே பார்த்தபடி நின்றார். மைத்ரேயன் தன் பார்வையை அவர்
மேல் திருப்பவில்லை. அக்ஷய் தான் கண்ணிலிருந்து அவர் மறையும் வரை அவரையே
பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜீப் சிறிது
தூரம் போன பின் டிரைவரிடம் அக்ஷய் கேட்டான். “யார் அந்தக் கிழவர்?”
டிரைவர்
உடனடியாகப் பதில் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது என்றூ அவன் யோசித்தது போலத் தெரிந்தது.
பிறகு சொன்னான். “திபெத்தில் சில வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள்
ரகசியக்கலைகளில் ஆர்வம் உடையவர்கள். ஆபத்தானவர்கள். சித்து வித்தைகளில்
கைதேர்ந்தவர்கள். நாம் வாழும் பகுதிகளில் வாழ மாட்டார்கள். காட்டிலும்,
குகைகளிலும் தான் அதிகம் வாழ்வார்கள். இந்த ஆள் அவர்களில் ஒருவர்....”
ஜெர்மானியப்
பெண்மணிக்கு அவன் சொன்னது ஆர்வத்தைக் கூட்டியது. அவள் கேட்டாள். “உங்களுக்கு
எப்படி அந்த மாதிரி ஆள்களை அடையாளம் தெரியும்?”
”அதிகம் வாய் திறந்து பேச மாட்டார்கள். நாம்
ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். நம்முடன் சேர மாட்டார்கள்.
நாம் பேச்சுக் கொடுத்தாலும் பேச மாட்டார்கள். நம்மை அனாவசியமாக நேராகப் பார்க்கக்
கூட மாட்டார்கள்....”
“ஆபத்தானவர்கள்
என்று ஏன் சொன்னீர்கள்?” அக்ஷய் கேட்டான்.
“அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்?”
ஜெர்மானியர்களுக்கும்
அக்ஷய்க்கும் ஆர்வம் கூடியது. மைத்ரேயன் அந்தக் கிழவரை விட தூரத்து மலைமுகடு
சுவாரசியமானது என்பது போல் இந்தப் பக்கம் திரும்பவில்லை.
டிரைவர்
சொன்னான். “அவர்கள் அதிகம்
நம்மிடம் உதவி எதுவும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி எதிர்பார்த்து நாம்
செய்யா விட்டால் நமக்கு பிரச்னை ஏற்படுத்தி விடுவார்கள். ஆறு மாதத்துக்கு முன்னால்
ஒரு நாள் என் நண்பன் ஜீப்பில் போய்க் கொண்டிருந்தான். வழியில் இந்தக் கிழவர் ரக
ஆள் ஒருவர் தன்னையும் ஏற்றிக் கொள்ள கை காட்டி இருக்கிறார். இவர்கள் காசு எல்லாம்
தர மாட்டார்கள் என்பதால் அவன் வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான். ஐம்பது அடி
கூடப் போயிருக்க மாட்டான். அவன் ஜீப் டயர் வெடித்து விட்டது. இதில் அவனுக்கு
ஆச்சரியம் என்ன என்றால் வெடித்த டயர் ஒரு மாதத்திற்கு முன் மாட்டிய புதிய டயர்....” பின்னால் திரும்பிப் பார்த்து ஜெர்மானியத் தம்பதியரிடம் சொன்னான். “அதனால்
தான் இன்று அந்த ஆள் கை காட்டியவுடன் உங்களிடம் கேட்டுக் கொள்ளாமல் கூட ஜீப்பில்
ஏற்றிக் கொண்டேன்.”
ஜெர்மானியன்
அக்ஷயிடம் கேட்டான். “நீங்கள் இது போன்ற ஆட்களை முன்பு பார்த்திருக்கிறீர்களா?”
அக்ஷய் தன்
முந்தைய திபெத்திய நாட்களில் இது போன்ற ஆட்கள் ஓரிருவரைச் சந்தித்திருக்கிறான்.
அவர்களை மறந்தும் இருக்கிறான். அதனால் தான் இந்த திடீர் சூழ்நிலையில் பார்க்கக்
கிடைத்த இந்தக் கிழவர் அந்த வகை மனிதர் என்று ஆரம்பத்திலேயே அவனுக்கு
உறைக்கவில்லை.
அக்ஷய்
சொன்னான். “பார்த்திருக்கிறேன். இவர்கள் பெரும்பாலும் உணவுக்கும், பயணத்துக்கும்
மட்டும் தான் அடுத்தவர்கள் உதவியைக் கேட்பார்கள். மற்றபடி தேவையில்லாமல் நம்
பார்வைக்கு சிக்க மாட்டார்கள்”
ஜெர்மானியப்
பெண்மணி கேட்டாள். “இவர்களும் உங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தானா?”
அக்ஷயை
முந்திக் கொண்டு டிரைவர் சொன்னான். “இவர்கள் சைத்தானை வணங்குபவர்கள் என்று எங்கள்
ஊர் மடாலய தலைமை பிக்கு சொல்லி இருக்கிறார்”
ஜெர்மானியப்
பெண்மணி அக்ஷயை “இவன் சொல்வது சரிதானா” என்பது போலப்
பார்த்தாள். அக்ஷய் நடுநிலையாகச் சொன்னான். “இவர்கள் எப்போதுமே கோயில்களுக்கோ, மடாலயங்களுக்கோ
வருவதில்லை என்பது மட்டும் நிச்சயம். சைத்தானை வணங்குபவர்களா என்பதெல்லாம்
எனக்குத் தெரியாது. காரணம் தங்களுடைய எல்லா செயல்களையும் ரகசியமாய்
வைத்திருப்பவர்கள் அவர்கள்.”
சிறிது நேர
மௌனத்திற்குப் பிறகு டிரைவர் அக்ஷயிடம் சொன்னான். ”அந்த ஆள் உங்கள்
சீடனையே அதிக நேரம் பார்த்தார். உங்கள் சீடன் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது
நல்லது.”
அக்ஷய்
மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் காதில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. இந்தச்
சிறுவன் மகா அழுத்தக்காரன் தான் என்று அக்ஷய்க்குத் தோன்றியது. அவன் மனம் நடந்ததை
எல்லாம் மறுபடி ஒரு முறை அசை போட்டது. டிரைவர் சம்யே மடாலயத்தில் முடக்கப்பட்டு
இருந்த தீயசக்திகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய பலம் பெற்று வருகின்றன என்று
சொன்ன போது தான் அந்தக் கிழவரின் கண்கள் ஜொலித்தன என்பதை அக்ஷய் நினைவு கூர்ந்தான். அந்தச் செய்திக்கு மைத்ரேயனின்
எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்ளத் தான் அந்தக் கிழவர் திரும்பி
பார்த்திருக்கிறார்.
ஒரு சாதாரண
புத்தபிக்குச் சிறுவனின் எதிர்வினை என்ன என்று அந்தக் கிழவர் பார்த்திருக்க
வாய்ப்பே இல்லை. அப்படியானால் அவர் இவன் மைத்ரேயன் என்று தெரிந்து கொண்டே
பார்த்திருக்க வேண்டும்.
‘இது என்ன
புதிய தலைவலி’ என்று அக்ஷய்க்குத் தோன்றியது. உடனே இவனை மைத்ரேயன்
என்று அந்தக் கிழவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.
இத்தனைக்கும் முதல் பார்வையிலேயே இவன் மைத்ரேயன் என்று அவர் கண்டுபிடித்து விட்டார் என்றால் ’எது காட்டிக் கொடுத்திருக்க முடியும்?’ என்று அக்ஷய் யோசிக்க ஆரம்பித்தான். அதற்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை.
அடுத்த கேள்வி மனதில் எழுந்தது. அவர்கள் வந்த சாலை இரண்டாகப் பிரியும்
இடத்தில் அந்தக் கிழவர் இறங்கிக் கொண்டதற்கு அர்த்தம் அந்த ஜீப் போகப் போகும்
சாலையில் போக வேண்டியவரல்ல, பிரிந்த இன்னொரு சாலையில் போகப் போகிறார் என்பதாகத்
தான் இருக்க முடியும். அந்த இன்னொரு சாலை எங்கே போகிறது? அந்தக் கேள்வியை அவன்
மெல்ல டிரைவரிடம் கேட்டான்.
டிரைவர் சொன்னான். “அது பெரிய நகரங்களுக்குப் போகிற சாலை அல்ல. சில கிராமங்களுக்குப்
போய் கடைசியில் மலைப்பகுதியோடு முடிகிறது. அந்தக் கிழவர் அந்த மலைப்பகுதிக்குப்
போகிறவராகத் தான் இருக்க வேண்டும்....”
அக்ஷய்
தலையசைத்தான். ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனைகளில் மூழ்கி இருக்க,
ஜீப் சம்யே மடாலயத்தை நெருங்க ஆரம்பித்தது.
தர்மசாலாவில் தன் மாளிகையில் அமர்ந்திருந்த
தலாய் லாமா சொடென்னிற்கு சில கடிதங்கள் அனுப்ப குறிப்புகள் தந்து அப்போது தான்
முடித்திருந்தார். சோடென் எழுந்து போகும் போது டிவியில் செய்திகள் சேனலைப் போட்டு
விட்டுப் போகும்படி கட்டளை இட்டார். சோடென் அப்படியே செய்த போது தான் டிவியில்
வழுக்கைத் தலையர் தெரிந்தார். தலாய் லாமா அதிர்ந்து போனார்.
வழுக்கைத் தலையரின் புகைப்படத்தைக் காட்டி விட்டு, இந்திய வரலாற்று
ஆசிரியர்களில் ஒருவரான சந்திரகாந்த் முகர்ஜியை பணத்திற்காகவும், நகைகளுக்காகவும்
யாரோ கொன்று விட்டதாக செய்தி வாசிக்கப்பட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த மனிதரை சில வினாடிகள் காட்டினார்கள். கொல்லப்பட்டது
நகைக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல என்பதை அறிந்திருந்த தலாய் லாமாவிற்கு நடந்ததை
ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது.
சோடென் அவரையே திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். தலாய் லாமா சமாளித்துக்
கொண்டு வருத்தத்துடன் சொன்னார். ”வெறும் சில ஆயிரம் ரூபாய்களுக்காக விலை மதிக்க முடியாத
மனித உயிரை எடுப்பது கொடுமையிலும் கொடுமை”
பணத்திற்காக
கீழ்த்தரமாய் சோரம் போயிருந்த சோடென் தலையசைத்து ஆமோதித்து விட்டு அவரது
அதிர்ச்சியை பீஜிங் ஆசாமிக்குத் தெரிவிக்க விரைந்தான். அவன் போய் ஒரு நிமிடம்
கண்களை மூடி அமர்ந்திருந்த அவர் தன் தனியறைக்குப் போய் தன் ரகசிய அலைபேசியில்
ஆசானை அழைத்தார்.
“ஹலோ” ஆசான் குரல் கேட்டது. “சொல்லு டென்சின்”
தலாய் லாமா சந்திரகாந்த் முகர்ஜி கொல்லப்பட்டதைத் தெரிவித்தார். ஆசானும்
அதிர்ச்சியில் சில வினாடிகள் பேச்சிழந்தார். பின் மெல்ல சொன்னார். “மைத்ரேயர்
கண்டுபிடிக்கப்படுவதை லீ க்யாங்கும் விரும்பவில்லை....”
நோக்கம் வேறு
வேறாக இருந்த போதும் இரண்டு அணியினருமே மைத்ரேயன் கண்டுபிடிக்கப்படுவதை
விரும்பாததில் ஒன்றுபடும் வினோதத்தை எண்ணுகையில் ஆசானுக்கு வேடிக்கையாக இருந்தது.
அதே நேரத்தில் மிக நெருங்கியிருந்த ஆபத்தையும் அவரால் உணர முடிந்தது.
அதைத் தலாய்
லாமா வாய் விட்டுச் சொன்னார். “இறப்பதற்கு முன் மைத்ரேயர் பற்றி தனக்குத்
தெரிந்ததை எல்லாம் முகர்ஜி சொல்லி இருப்பார். இன்னேரம் மைத்ரேயர் யார் என்பதை லீ
க்யாங் கண்டுபிடித்திருப்பான் அல்லவா ஆசானே”
”ஆமாம்” ஆசான் சொன்னார். ஒரு
சின்ன தகவல் கிடைத்தால் அதை வைத்து பல நூறு தகவல்களைக் கண்டுபிடிக்கவும்
அனுமானிக்கவும் முடிந்த அதிபுத்திசாலி லீ க்யாங்.... அவன் கண்டிப்பாகக்
கண்டுபிடித்திருப்பான்....
“இன்னொரு போன்
கால் வருகிறது ஆசானே. முக்கியமானது போலத் தெரிகிறது. பேசி விட்டு
மறுபடி தொடர்பு கொள்கிறேன்” என்று இணைப்பைத் துண்டித்த தலாய்லாமா இரண்டு நிமிடங்களில்
மறுபடி ஆசானைத் தொடர்பு கொண்டார்.
“ஆசானே, அமானுஷ்யனின் பாஸ்போர்ட் போலி என்பதைக் கண்டுபிடித்து அதை முடக்கி
வைத்திருக்கிறார்களாம்.... “ தலாய் லாமாவின் குரலில் பரபரப்பும் கவலையும்
இருந்தது.
ஆசான் அதிர்ச்சியில் சிலையானார். ஆசானின் மௌனம் தலாய் லாமாவை என்னவோ
செய்தது. தன் மனதில் இமயமாய் எழுந்த கேள்வியை அவர் வாய் விட்டுக் கேட்டார். “லீ
க்யாங்கை அமானுஷ்யன் சமாளிப்பானா ஆசானே! நம் மைத்ரேயரைப் பாதுகாப்பாக அழைத்து
வருவானா அவன்?”
ஆசான் சுதாரித்துக்
கொண்டு தைரியம் சொன்னார். “லீ க்யாங்குக்கு இணையான புத்திசாலி ஒருவன் இருக்க
முடியும் என்றால் அது அமானுஷ்யன் தான் டென்சின். அவன் இதை விடப் பெரிய ஆபத்துகளை சந்தித்து தாண்டி
வந்திருப்பவன்.....”
அதற்கு மேல் பேச அவராலும் முடியவில்லை.
பிரார்த்தனை செய்வதைத் தவிர அவர்களால் வேறெந்த வகையிலும் அமானுஷ்யனுக்கு
உதவ முடியாது என்பதால் அன்று இருவரும் நீண்ட நேரம் பிரார்த்தித்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
Vaalthukal.
ReplyDeleteமணதை வசிகரிக்கும் அற்புதமான தொடர்..
ReplyDeleteநாங்களும் திக் திக் மனதுடன் வியாழன் வரை காத்திருக்கிறோம் அண்ணா. . .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா. . .
சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. கதையோடு நாங்கள் இணைந்து விட்டோம்.
ReplyDeleteExcellent, awaiting for next episode , keep it up
ReplyDeleteடிவி தொடர் மாதிரி ரொம்ப ஆவலாக இதையையும் எதிர் பார்த்து கொண்டே இருக்கிறோம்...
ReplyDeleteமலர்
https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.app.android.wayofcross