15. மகாசக்தி மனிதர்கள்
மரணத்தை
வென்ற ஒரு மகாயோகியை நேருக்கு நேராக சந்தித்த பேரனுபவத்தில் லாஹிரி மஹாசாயாவின்
மொராதாபாத் நண்பர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தார்கள். அந்த அனுபவத்திற்குப் பின் அவர்களில்
ஒருவரான மைத்ரா என்பவர் லாஹிரி மஹாசாயாவின் சீடராக மாறி விட்டார். மைத்ரா மஹாசாயா
என்ற பெயரில் பெரிய ஆன்மிக குருவாக மாறியிருந்த அவரை பரமஹம்ச யோகானந்தர்
பிற்காலத்தில் சந்தித்த போது மொரதாபாதில் பாபாஜியை சந்தித்த நிகழ்ச்சியை அவர்
உறுதிபடுத்தியிருக்கிறார்.
லாஹிரி
மஹாசாயா பிற்காலத்தில் அலகாபாத்தில் கும்பமேளா நடந்த போது சென்றிருந்தார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் சாதுக்கள் பலரும் அங்கு வந்திருந்தார்கள். அலகாபாதில்
காணும் இடமெல்லாம் அவர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சாது உடலெல்லாம் திருநீறு
பூசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடனேயே அவர் போலி சாது என்ற எண்ணம் லாஹிரி
மஹாசாயாவுக்கு வந்தது. வெளிப்புற வேஷத்திற்குப் பொருத்தமில்லாத மனம் உடையவராக அந்த
சாதுவை நினைத்தார். அந்த எண்ணம் வந்த போதே அந்த சாதுவின் காலில் விழுந்து வணங்கிக்
கொண்டிருந்தவரைப் பார்த்து லாஹிரி மஹாசாயா துடுக்குற்றார். வணங்கிக்
கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல பாபாஜியே தான்.
அவரைக்
கண்டதும் வியந்து போன லாஹிரி மஹாசாயா பாபாஜியிடம் விரைந்தார். “குருவே நீங்கள்
இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“இந்தத்
துறவியின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன். இது முடிந்தவுடன் அவருடைய
உணவுப்பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து வைப்பேன்” என்று அமைதியாக
பாபாஜி சொன்னார். தன்னுடைய நடவடிக்கையின் மூலம் பாபாஜி அறிவுறுத்துவது என்ன என்பது
லாஹிரி மஹாசாயாவுக்கு நன்றாகப் புரிந்தது. “யாரைப்பற்றியும் விமர்சனம் செய்யாமல்,
உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ எல்லோரிடமும் குடிகொண்டுள்ள இறைவனை வணங்குவது முக்கியம்!”
பாபாஜி லாஹிரி மஹாசாயாவிடம் சொன்னார். ”ஞானிகளுக்கும், அஞ்ஞானிகளுக்கும் சேவகம் செய்வது மூலம் இறைவனுக்குப்
பிடித்த நற்குணங்களிலேயே தலையாய பண்பான ’பணிவை’ நான் கற்றுக் கொள்கிறேன்” வியக்கத்தக்க மகாசக்திகளைப் பெற்றிருந்த போதும்
பாபாஜியிடம் கர்வம் சிறிதும் இருக்கவில்லை என்பதற்கு
இந்த நிகழ்வை உதாரணமாகச் சொல்லலாம்.
கர்மவினைப்
பலன்களும் கூட பெரிதாகத் தன் பக்தர்களையும், சீடர்களையும் பாதிக்காதபடி கவனமாக
அவர்களைப் பாதுகாத்து அருள்புரிகிறார் என்று சொல்லப்படுகிறது. லாஹிரி மஹாசாயா ஒரு
நிகழ்ச்சியை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்.
இமயத்தில்
ஒரு இரவு தீயை மூட்டி அவரும் அவருடைய சீடர்களும் குளிர்காய்ந்து கொண்டிருந்த போது
திடீரென்று ஒரு எரியும் கொள்ளியை எடுத்து தன் சீடன் ஒருவரின் தோள்பட்டையில் பாபாஜி
சொருகினாராம். அருகில் இருந்த லாஹிரி மஹாசாயா தாங்க முடியாமல் “என்ன ஒரு குரூரமான
செய்கை இது” என்று வாய் விட்டுச் சொன்னாராம்.
”இவனது முந்தைய
கர்மவினைப்படி இவன் தீயில் வெந்து போய் விட வேண்டி இருந்தது. முற்றிலும் விளக்க
முடியாத கர்ம வினையை ஓரளவு அனுபவித்து இவன் முடித்து விடத் தான் அப்படிச் செய்தேன்” என்று பாபாஜி விளக்கம் தந்திருக்கிறார்.
மஹாத்மா
காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு சிகிச்சை அளித்தவர் என சொல்லப்படுகிற டாக்டர்
ராம் போஸ்லே (Dr Ram
Bhosle) விடுதலைப்
போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மும்பையைச் சேர்ந்த அவர் ஆங்கிலேயர்
சிறைப்பிடித்தி விடுவார்கள் என்று பயந்து இமயமலைக்குத் தப்பித்து ஓடியவர். இமயமலையில்
அவர் பதுங்கி இருந்த போது மகா அவதார் பாபாஜியைச் சந்தித்து அவருடைய சீடரானவர். 2005 ஆம் ஆண்டு
காலமான அவர் இறுதி வரை மிகுந்த துடிப்புடன் செயல்பட்டவர். அவரும் பாபாஜியுடனான தன்
அனுபவங்களை விரிவாகக் கூறியிருக்கிறார். பாபாஜி செய்து காட்டிய பல அற்புதங்களைக்
கூறியிருக்கும் அவர் அந்த அற்புதங்கள் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தினாலும் அவை எல்லாமே
சூட்சும விஞ்ஞான அடிப்படையைக் கொண்டவையே என்று கூறுகிறார். அந்த விஞ்ஞான அடிப்படைகள் புரியாத போது தான்
எல்லாமே அற்புதங்களாகத் தெரிகின்றன என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது.
இப்படி
நமக்குத் தெரிந்து 19 ஆம் நூற்றாண்டு லாஹிரி மஹாசாயாவிலிருந்து 21 ஆம் நூற்றாண்டு
ரஜினிகாந்த் வரை ஏராளமான பக்தர்களைக் கொண்டிருக்கிற மகா அவதார் பாபாஜியை நம்பி
வணங்கினோர் கைவிடப் படமாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை பலரிடத்தும் இருக்கிறது. லாஹிரி
மஹாசாயா ”மகா அவதார் பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் உச்சரித்தாலும்,
உச்சரித்தவர்களுக்கு உடனடியாக அவர் அருள் வந்து சேரும்” என்று கூறி
இருக்கிறார்.
பாபாஜியின்
உபதேசமான கிரியா யோகா, மூச்சுப்பயிற்சியுடன் தியானப் ப்யிற்சி கலந்த ஒரு யோக முறை.
இக்காலத்திற்குத் தகுந்தாற்போல் எளிமையாக அமைக்கப்பட்டதென்று கூறுகிறார்கள். பீகாரில் உள்ள ராஞ்சியில் பரமஹம்ச யோகானந்தர்
அமைத்துச் சென்ற யோகதா சத்சங்க சொசைட்டி மூலமாக கிரியா யோகா
பயிற்றுவிக்கப்படுகிறது. பாபாஜியை நம்பிக்கையோடு வணங்குபவர்களுக்கும், கிரியா யோகா
பயிற்சியை முறையாக சிரத்தையோடு பின்பற்றுபவர்களுக்கும் அவர் அருள் பரிபூரணமாகக்
கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இது வெறும்
நம்பிக்கை அல்ல, அனுபவ உண்மை என்று மகா அவதார் பாபாஜியின் அருளுக்குப் பாத்திரமான
பலரும் இன்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.
சமீப காலங்களில் இமயமலையில் இருக்கும் மகா அவதார் பாபாஜியின் குகை
மிகவும் பிரபலமாகி வருகிறது. அங்கு நிறைய பேர் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பாபாஜி
குகை துனகிரி (Dunagiri) மலையில் குகுசினா (Kukuchina) என்ற
இடத்தில் இருக்கிறது. அங்கு
செல்பவர்கள் கத்கொடம் (Kathgodam) என்கிற இடம் வரை ரயிலில்
சென்று அங்கிருந்து ராணிகேத் வழியாக த்வாரஹத் (Dwarahat) என்ற இடம் வரை கார் அல்லது ஜீப் அல்லது பஸ்ஸில் செல்கிறார்கள்.
த்வாரஹத்தில் இருந்து குகுசினா சுமார் 15 கிமி தொலைவில் உள்ளது. அங்கு செல்ல ஜீப்
அல்லது கார் கிடைக்கிறதாம் குகுசினாவில் இருந்து பாபாஜி குகைக்கு நடந்து செல்ல
வேண்டுமாம். சுமார் ஒரு மணி நேரம் நடந்தால் பாபாஜி குகையை அடைந்து விடலாம்
என்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று ஆட்கள் மட்டுமே நுழைய முடிந்ததாக மட்டுமே
இருக்கும் பாபாஜியின் அந்தச் சிறிய குகையில் சில நிமிடங்கள் தியானம் செய்து விட்டு
வருவதை அவர் பக்தர்கள் ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவமாகச் சொல்கிறார்கள்.
அந்தக் குகையில் மகா அவதார் பாபாஜியை நேரடியாக பார்க்க முடிந்த
அனுபவம் கிட்டத்தட்ட இக்காலத்தினரில் யாருக்கும் இல்லை என்றாலும் அங்கு சூட்சும
சரீரத்தில் அவர் இருக்கிறார் என்பது போல பலரும் உணர்வதாகச் சொல்கிறார்கள். யோகிகளும்
சித்தர்களும் மனித உருவில் மட்டும் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
அவர்கள் எந்த உருவிலும் இருக்க முடிந்தவர்கள். உருவமே இல்லாமல் சூட்சும
சரீரத்திலும் இருக்க முடிந்தவர்கள் என்பதால் அந்த பக்தர்கள் அவரை உணர முடிந்தது
உண்மையாகவும் இருக்கக்கூடும்.
ஆனால்
செல்லும் இடங்களை விட அணுகும் மனநிலையின் தூய்மை தான் எல்லாவற்றையும் விட
முக்கியம். அந்தத் தூய்மை மனத்தில் இருந்தால் மகா அவதார் பாபாஜி போன்ற யோகிகளின்
அருளை இருக்கும் இடத்தில் இருந்தே ஒருவர் பெற்று விட முடியும்!
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:
தினத்தந்தி : 19-12-2014
ஆவலுன் எதிர்பார்க்கிறோம்....பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteமலர்
https://play.google.com/store/apps/details?id=com.ezdrivingtest.me.bdl.app.android
We feel much gratitude for your sharing
ReplyDelete