ஜீப்
தன் பார்வையிலிருந்து மறையும் வரை மைத்ரேயனையே பார்த்துக் கொண்டிருந்த திபெத்திய
கிழவர் இன்னொரு வாகனம் வரும் வரை அந்த சாலைப்பிரிவிலேயே நின்றிருந்தார். நாற்பது
நிமிடம் கழித்து ஒரு மினிபஸ் வந்தது. அதில் ஏறி சில மைல் தூரங்கள் பயணித்து விட்டு
ஒரு கிராமத்தில் இறங்கிக் கொண்டார். அவரோடு அந்தக் கிராமவாசி ஒருவனும் இறங்கினான்.
தன் கிராமத்தில் இறங்கும் பரிச்சயமில்லாத அந்தக் கிழவரை அவன் ஆச்சரியத்துடன்
பார்த்தான். அந்தக் கிழவர் அவனையே வெறித்துப் பார்த்தவுடன் பயந்து போய் வேகமாக
நடையைக் காட்டினான். சில அடிகள் சென்ற பின் அவன் மெல்லத் திரும்பிப் பார்த்த போது
கிழவரைக் காணவில்லை. திகைப்புடன் அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தான்.
அந்தக் கிழவரைக் காணவே காணோம்...
உண்மையில் அவன்
ஆரம்பத்தில் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தக் கிழவர் அந்தச் சாலையிலிருந்து
பிரிந்த ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதையில் வேக வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தார். இருமருங்கும்
மரங்கள் சூழ்ந்திருந்த அந்தக் குறுகலான பாதை ஒரு பாழடைந்த வீட்டை அடைந்து
முடிந்தது. கிழவர் அந்தப் பாழடைந்த வீட்டின் பின்பகுதிக்குப் போனார்.
பின்பகுதியில் அடர்த்தியாக வளர்ந்திருந்த செடிகொடிகள் பகுதிக்கு வந்து சுற்றும்
முற்றும் பார்த்தார். யாரும் அவரைக் கவனித்துக் கொண்டு இல்லை. செடிகொடிகளை ஒரு
இடத்தில் இரு கைகளாலும் விலக்கினார். சின்னதாய் ஒரு பாதை தெரிந்தது. உள்ளே
புகுந்தவர் பழையபடி செடிகொடிகளை சேர்த்து விட்டு பாதையை மறைத்து விட்டார். பிறகு அந்தச் சின்னப்
பாதையில் நடக்க ஆரம்பித்தார்.
பாதையில் ஒரு
காட்டு நரியும், ஒரு விஷப்பாம்பும் கிடைத்தன. எந்தப் பயமும் இல்லாமல் அவற்றைக்
கடந்து கிழவர் முன்னேறினார். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்த பின் மலையடிவாரத்தை
வந்து சேர்ந்தார். கவனமாக பாறைகளில் ஏற ஆரம்பித்தார். சுமார் நூறடிகள் மேலே ஏறிய
பிறகு ஒரு குகை வாசல் வந்தது. சுமார் மூன்றடி மட்டுமே அகலம் இருந்த அந்த குகை
வாசலில் மண்டியிட்டபடியே உள்ளே சென்றார். ஐம்பதடிகள் சென்ற பின் பிரம்மாண்டமாய்
குகை விரிந்தது. எழுந்து நின்றார்.
ஒரு பெரிய அறை
போல் அங்கே இடம் விசாலமாய் இருந்தது. நடுவில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க அதைச்
சுற்றி மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். மூவரில் ஒருவன் அழகான இந்திய இளைஞன்.
இடுப்பில் கருப்பாடை மட்டும் அணிந்திருந்தான். அவன் சிவந்த முகமும், உடலும்
செதுக்கினது போல் இருந்தன. இன்னொருவர் நடுத்தர வயது ஆங்கிலேயர். கோட்டு சூட்டில்
இருந்தார். மூன்றாமவர் வயதான சீனாக்காரர். சீனப் பழங்கால உடையில் இருந்தார். உள்ளே
நுழைந்த திபெத்தியக் கிழவரை மூவரும் பார்த்து லேசாய் தலை சாய்த்து வணக்கத்தைக்
காண்பித்தார்கள். திபெத்தியக் கிழவரும் அப்படியே வணக்கம் தெரிவித்தார்.
அந்த அழகான
இளைஞன் திபெத்திய மொழியில் அவரிடம் கேட்டான். “ஏன் பதட்டமாய் இருக்கிறீர்கள்?”
அவர் பதட்டமாய்
இருந்தது மைத்ரேயனைப் பார்த்த போது தான். அந்தப் பதட்டம் குறைந்து நிறைய நேரம் ஆகி
விட்டிருந்தது. இப்போது வெளிப்பார்வைக்கு அவர் அமைதியாகவே இருந்தார். இருந்த
போதிலும் அவர் மனதினுள்ளே ஆழத்தில் இருந்த பதட்டத்தை அவனால் உணர முடிந்தது அவரை
ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் சக்தி சாதாரணமானதில்லை. அவன் சக்தியின் எல்லையைச் சோதித்து அறிந்தவர்கள்
யாருமில்லை. அதனால் தான் உலகெங்கிலும் பிரதிநிதிகள் உள்ள அந்த ரகசியக் குழுவுக்கு
இந்த இளம் வயதிலேயே அவன் தலைவனாகி இருக்கிறான். அவனுடைய நிஜப்பெயர் என்ன என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள் எல்லோரும் வணங்கும் தெய்வத்தின் பெயரையே வைத்து அவனை
மாரா என்றே அழைத்தார்கள்.
திபெத்தியக்
கிழவருக்கு அவனைச் சோதித்துப் பார்க்கத் தோன்றியது. சில சமயங்களில் அப்படிச்
சோதித்துப் பார்க்கையில் அவன் எரிச்சலடைவதும் உண்டு. அப்படி அவன் கோபித்துக்
கொண்டாலும் பரவாயில்லை என்று எண்ணியவராக அவனிடம் சொன்னார். “உண்மை மாரா. என்னைப்
பதட்டமடையச் செய்தது என்ன என்பதைச் சரியாகச் சொல் பார்ப்போம்”
மாரா அவரையே
கூர்ந்து பார்த்தான். அவன் பார்வை அவரை ஊடுருவியது. அவனுக்குக் கிடைத்த பதில் அவனை
ஆச்சரியப்படுத்தியது போல இருந்தது. திகைப்புடன் கேட்டான். “மைத்ரேயன்?”
அந்தப் பெயரைக்
கேட்டவுடன், கூட இருந்த மற்ற இருவர்களும் திபெத்தியக் கிழவரை அதிர்ச்சியுடன்
பார்த்தார்கள். திபெத்தியக் கிழவர்
ஆமென்று தலையசைத்தார்.
மாரா ஒருவித
இறுக்கமான அமைதியாகச் சொன்னான். “ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்”
மைத்ரேயனைப்
பார்த்த முதல் கணத்திலேயே அவன் தான் மைத்ரேயன் என்று தன் உள்ளுணர்வு ஓலமிட்டதிலிருந்து
அவர் சொல்ல ஆரம்பித்தார். மூவரும் முழு கவனத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்
முடித்த பிறகும் சிறிது நேரம் அங்கு பலத்த அமைதி நிலவியது. அந்த ரகசியக் குழு
அங்கத்தினர் அனைவரும் உள்ளுணர்வு கூர்மைப்படுத்தப்பட்டவர்கள். அந்த நுட்ப நிலையை எட்டாதவர்கள் அந்தக் குழுவின்
அங்கத்தினராக முடியாது. அதனால் மூத்த உறுப்பினரான அவர் தன் உள்ளுணர்வு சொன்னதை
அவர்கள் சந்தேகப்படவில்லை.
இனி என்ன
என்பது போல மாராவை மூவரும் பார்த்தார்கள். மாரா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்....
மைத்ரேயனின்
அவதார காலம் பற்றி பத்து வருடங்களுக்கு முன் பேசப்பட்ட போதிருந்து அவர்களும்
ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் லாமாக்கள் மௌனமாகிய பிறகு எல்லாம் அமுங்கிப்
போனது. மைத்ரேயர் என்று நம்பப்பட்ட மூன்று குழந்தைகளையும் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன்
சென்று மரணத்திற்கு முன்பே ரகசியக்குழு உறுப்பினர்கள் சிலர் சந்தித்தனர். அக்குழந்தைகள்
மைத்ரேயன் அல்ல என்பதை உணர அவர்களுக்கு ஓரிரு நிமிடங்கள் கூடத் தேவைப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் கொன்று விட்டு மைத்ரேயன்
ஒழிந்தான் அல்லது பிறக்கவே இல்லை என்று சீன உளவுத்துறை எண்ண ஆரம்பித்தாலும் அந்த
ரகசியக்குழு அந்தத் தவறான அனுமானத்திற்கு வந்து விடவில்லை. அவர்கள்
பத்மசாம்பவாவின் கணிப்பு பொய்யாகும் என்று நம்பவில்லை.
மாராவிற்கு
முன் அந்தக்குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த எகிப்திய குரு பல அபூர்வ சக்திகளை
தன் வசப்படுத்தியவர். அவர் மூன்றாண்டுகளுக்கு முன் இறக்கும் வரை தன் அத்தனை
சக்திகளையும் பயன்படுத்தி மைத்ரேயனைக் கண்டுபிடிக்கப் பார்த்தார். முடியவில்லை.
அவர் இறப்பதற்கு
ஒரு வாரம் முன் தான் எகிப்தில் ஒரு ரகசியக் கட்டிடத்தில் அந்தக் குழுவின் மொத்த
உறுப்பினர்களின் கூட்டத்தில் மாராவை தனக்கு அடுத்த தலைவனாக நியமித்தார். ஏனிந்த
திடீர் நியமனம் என்று ஒரு உறுப்பினர் கேட்ட போது தன் அந்திம காலம் நெருங்கி விட்டதென்று
மட்டும் சொன்ன அவர் பிறகு, இறக்கின்ற நாளுக்கு முந்தைய நாள் வரை யாரிடமும் ஒரு
வார்த்தை கூடப் பேசவில்லை.
கடைசி நாளில்
அவர் மாராவை மட்டும் அழைத்துப் பேசினார். ”நம் ரகசியக் குழுவின் நோக்கத்தை முழுவதுமாக
நிறைவேற்றும் பொறுப்பும் வாய்ப்பும் உனக்குத் தான் வாய்த்திருக்கிறது மாரா.
மைத்ரேயனைக் களத்தில் நீ தான் சந்திக்கப் போகிறாய். இந்தக் குழுவில் இது நாள் வரை
இருந்த யாருமே அடைந்திராத சக்திகளை எல்லாம் நீ அடைந்திருக்கிறாய். அத்தனையும் உனக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். …. கலிகாலம் நமக்குத் தான்
சாதகமாக இருக்கப் போகிறது என்றாலும் கூட எதிரியைக் குறைத்து மதிப்பிட்டு விடாதே....
ஜாக்கிரதையாய் இரு....”
அவருக்கு
மூச்சிறைக்க ஆரம்பிக்கவே சிறிது நேரம் பேச்சை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு
விட்டு மறுபடி தொடர்ந்தார். “பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி நமக்கும்
உபகாரமாகவே இருக்கிறது. பத்து வயது முடிந்த பிறகு ஒருவருட காலம் மைத்ரேயனுக்கு
ஆபத்தான காலம் என்று அவர் சொல்லி இருப்பதன் மூலம் எந்தக் காலத்தில் அவனை நாம் வீழ்த்த
வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ளலாம். என் அனுமானம்
சரியாக இருந்தால் அந்த ஆபத்தான காலம் ஆரம்பிக்கும் போது தான் மைத்ரேயன்
வெளிப்படுவான். அந்த ஒரு வருட காலத்தில் அவனை வீழ்த்த முடியவில்லை என்றால் பின்
என்றென்றும் அவனை நம்மால் வீழ்த்த முடியாது. அதனால் அந்த ஒரு வருட காலம் நமக்கு
மிக முக்கியமான அனுகூலமான காலம் என்பதை நினைவு வைத்திரு மாரா...”
’அன்று எகிப்திய குரு சொன்னது போலவே இத்தனை நாட்கள் மறைவாய் இருந்த
மைத்ரேயன் இன்று வெளிப்பட்டிருக்கிறான்...’ என்று நினைத்த மாரா
திபெத்தியக் கிழவரிடம் மைத்ரேயனுடன் இருந்த மனிதனைப் பற்றி விவரிக்கச் சொன்னான்.
“கூட இருந்த
ஆளுக்கு வயது சுமார் 35 இருக்கலாம்.... மூங்கிலாய் வளைய முடிந்த உடம்பு..... புத்த
பிக்கு உடையில் இருந்தாலும் குடும்பஸ்தன் என்று அவனைச் சுற்றி உள்ள அலைகள்
சொல்கின்றன. ஆனால் புத்த மதத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.....”
மாரா அவரைக்
கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “அவன் குடும்பஸ்தன் என்று மட்டும் தான் அவனைச்
சுற்றி உள்ள அலைகள் சொல்கின்றனவா வேறேதும் சொல்லவில்லையா?”
திபெத்தியக்
கிழவருக்கு அதற்கு மேல் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் கவனம் முழுவதும்
மைத்ரேயன் மீதே இருந்தது தான் என்பது மாராவிற்குப் புரிந்தது.
அவன் அடுத்த
கேள்வியை அமைதியாக எழுப்பினான். “மைத்ரேயனைச் சுற்றி இருந்த அலைகள் என்ன
தெரிவித்தன? எந்த விதமான சக்திகளை அவன் பெற்றிருக்கிறான்?”
“அவன் தான்
மைத்ரேயன் என்பதைத் தவிர வேறெந்த தகவலையும் என்னால் அறிய முடியவில்லை மாரா.
எல்லாவற்றையும் அவன் ரகசியமாய் தன்னுள்ளே பூட்டி வைத்திருக்கிறது போலவே தோன்றியது...
என்னை மிகவும் பாதித்தது என்ன தெரியுமா மாரா. என்னை, அதன் மூலம் நம்மை, இருப்பதாகக்
கூட அவன் அங்கீகரிக்கவில்லை. நாமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல்
அலட்சியமாய் இருந்தான்.... அதைத்தான் தாங்க முடியவில்லை.....”
மாரா
புன்னகையுடன் சொன்னான். “ஒரு காலம் விரைவில் வரும்.... அவன் நம்மைத் தவிர
வேறெதையும் யோசிக்க முடியாத காலமாய் அது இருக்கும்....”
திபெத்தியக்
கிழவரும் மற்ற இருவரும் புன்னகைத்தார்கள். மாரா வெற்று வார்த்தைகளை வீசுபவன்
அல்ல.... சொன்னால் கண்டிப்பாகச் செய்து காட்டுவான்.
சீனர் சிறிது
யோசனைக்குப் பிறகு சொன்னார். “அதெல்லாம் பிறகு பார்ப்போம். மைத்ரேயனை அவன்
எதிரியான லீ க்யாங் இப்போது தேடிக் கொண்டிருக்கிறான். சம்யே மடாலயம் நோக்கி தான்
மைத்ரேயன் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை லீ க்யாங்குக்குத் தெரிவித்தால் என்ன?
மீதியை அவன் பார்த்துக் கொள்வான்....”
(தொடரும்)
என்.கணேசன்
vaalthukal thodarugal. . .
ReplyDeleteஅருமையாய் விரிகிறது களம். மிக வித்தியாசமான சிறந்த தொடர்கதை.
ReplyDeleteநல்லாயிருக்கு...
ReplyDeleteஅசத்திடீங்க கணேசன் சார். மாரா அறிமுகம் அருமை. அமானுஷ்யன், லீ க்யாங், மாரா என்ற மூன்று கேரக்டர்களும் வலிமையாக காண்பித்து இருக்கிறீர்கள். இவர்களுடன் புதிர் போன்ற மைத்ரேயன் கேரக்டர். அடுத்து என்ன ஆகும் என்கிற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஒருவரை சுற்றி உள்ள அலைகளை படிக்க முடிவது என்பதை படிக்க முடிந்த போது தங்கள் ஆழ்மனசக்தி புத்தகம் நினைவு வந்தது. தத்துவம், விஞ்ஞானம், ஆன்மிகம், வாழும் கலை என்ற நல்ல விஷயங்களை சுவையான நாவலில் அங்கங்கே புகுத்தி எழுதும் தங்கள் எழுத்து உத்திக்கு பாராட்டுகள்.
ReplyDeleteada kadhavule !!!!! innoru kuluva ?lee kwang + mara VS akshay? god bless akshay.....
ReplyDelete