என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, March 9, 2015

பாபாஜி நேரில் வருவாரா?


மகாசக்தி மனிதர்கள் 14

நள்ளிரவில் தங்க மாளிகை வண்ண விளக்குகளால் ஜொலித்தது மட்டுமல்லாமல் அருகே இந்த அமைதியான குளங்களில் அந்த பொன்னிற ஜொலிப்புகள் தெரிந்தது பேரழகாய் இருந்தது. அந்த மாளிகையை மேலும் லாஹிரி மஹாசாயா நெருங்கிய போது அங்கங்கே வளைவுகளில் வைரங்களும், வைடூரியங்களும், பவளங்களும், மாணிக்கங்களும் பதிக்கப்பட்டிருந்தன. மலர்களின் நறுமணங்கள் அந்த மாளிகையில் நிறைந்திருந்தன. பார்க்கிற பக்கமெல்லாம் அழகும், கலைத்தன்மையும் நிரம்பி இருந்த அந்த மாளிகையை மாயத்தோற்றம் என்று முதலில் லாஹிரி மஹாசாயா நினைத்தார். ஆனால் அந்த மாளிகையில் நுழைந்த முடிந்த போது அது மாயத்தோற்றமாக இருக்க சாத்தியமில்லை என்பது புரிந்தது.

தன் அருகில் இருந்த அந்த சீடரிடம் திகைப்போடு லாஹிரி மஹாசாயா கேட்டார். ”இந்த மாளிகையின் கட்டமைப்பின் அழகு கற்பனைக்கும் எட்டாததாக எனக்குத் தோன்றுகிறது. இந்தக் காட்டில் இப்படி ஒரு மாளிகையை உருவாக்குவது எப்படி சாத்தியம்?”

லாஹிரி மஹாசாயாவுக்கு மிகவும் விரிவாக அந்த சீடர் பதில் அளித்தார். அதன் சாராம்சம் இது தான். “பிரபஞ்சமே ஆரம்பத்தில் இறைவனின் கற்பனையில் உருவானது தான். ஆரம்பத்தில் இறைவனின் எண்ணமாக இருந்த பிரபஞ்சம் அவர் சக்தியின் பிரயோகத்தால் வடிவமும் கொண்டது. இறைவன் தன் எண்ணத்தை நிறுத்தி தன் சக்தி பிரயோகத்தையும் நிறுத்திக் கொள்ளும் போது வடிவங்கள் உருக்குலைந்து மறுபடியும் எல்லாமே அந்த மூலசக்திக்குத் திரும்பி விடுகின்றன. இதே தத்துவத்தின் படி தான் பாபாஜி தன் சக்தியால் இந்த மாளிகையையும் உருவாக்கி இருக்கிறார். இந்த உலகம் எந்த அளவு உண்மையோ அந்த அளவு இந்த மாளிகையும் உண்மை.”
என்ன தான் விளக்கம் சொன்னாலும் அதை முழுவதுமாக நம்ப முடியாமல் தவித்த லாஹிரி மஹாசாயாவிடம் ஒரு அழகான ஜாடியை எடுத்துத் தந்த அந்த சீடர் நன்றாக பரிசோதனை செய்து சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சொன்னார். லாஹிரி மஹாசாயா அந்த ஜாடியில் பதிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வைரங்களைத் தொட்டுப் பார்த்தார். எல்லாமே உண்மை வைரங்கள் தான். அங்கிருந்த தங்கச்சுவர்களையும் தொட்டுப் பார்த்தார். அந்தத் தொடு உணர்வும் பொய்யல்ல.

அந்தக் கணத்திலேயே தங்க மாளிகை குறித்து அவர் உள் மனதில் ஆழமாய் ஜென்ம ஜென்மங்களாய் தங்கியிருந்த ஆசை திருப்தி அடைந்து விலகிச் சென்றது போன்ற உணர்வை லாஹிரி மஹாசாயா பெற்றார். அவரை அந்த சீடர் மாளிகையின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே தங்க சிம்மாசனத்தில் பாபாஜி அமர்ந்திருந்ததை அவர் கண்டார். அவர் காலடியில் லாஹிரி மஹாசாயா மண்டியிட்டார்.

பாபாஜி லாஹிரி மஹாசாயாவிடம் இனி உலக ஆசைகள் அனைத்தும் முற்றிலுமாக அவரை விட்டு நீங்கி விடும் நேரம் வந்து விட்டது என்று உறுதி அளித்தார்.

”கிரியா யோகா வழியாக இறையுணர்வை அடைய தீட்சை எடுத்துக் கொள்”

என்று சொல்லி பாபாஜி கையை நீட்ட அங்கு ஒரு ஹோம குண்டம் தோன்றியது. அதில் அக்னியும் எரிய ஆரம்பித்தது. ஹோம குண்டத்தைச் சுற்றி விதவிதமாக பழங்களும், பூக்களும் சூழ்ந்தன. அதிகாலை வரை லாஹிரி மஹாசாயாவுக்கு தீட்சை தரும் சடங்குகள் நடந்தன. எல்லாம் முடிந்த பிறகு பாபாஜி லாஹிரி மஹாசாயாவைக் கண்களை மூடச் சொன்னார். லாஹிரி மஹாசாயாவும் கண்களை மூடிக் கொண்டார்.

கண்களை அவர் மறுபடியும் திறந்த போது அந்த தங்க மாளிகை மாயமாகி இருந்தது. அவரும் பாபாஜியும் சில சீடர்களும் மறுபடியும் காட்டுக்குள் இருந்தனர். ”அந்த மாளிகை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டதால் இனி அது இருக்க வேண்டிய அவசியமில்லை.” என்று அமைதியாகச் சொன்னார்.


லாஹிரி முந்தைய நாள் மதியத்திலிருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்ததால் அவர் பசியோடு இருப்பார் என்று அறிந்திருந்த பாபாஜி ஒரு காலி மண்சட்டியை அவரிடம் நீட்டி ”உனக்கு சாப்பிட என்ன உணவுப் பதார்த்தம் பிடிக்குமோ அதை நீ சாப்பிட்டுக் கொள்” என்று சொன்னார்.


லாஹிரி மஹாசாயா தனக்குப் பிடித்த பதார்த்தங்களை நினைத்துக் கொள்ள அந்த மண்சட்டி அந்தப் பதார்த்தங்களால் நிறைந்தது. தங்க மாளிகையே பார்த்த பின்னர் பின் எது தான் லாஹிரி மஹாசாயாவை ஆச்சரியப்படுத்த முடியும்? பாபாஜியின் மகாசக்திகளை நினைத்துக் கொண்டே லாஹிரி மஹாசாயா வயிறார சாப்பிட்டார். அவர் எடுக்க எடுக்க அந்த மண்சட்டி மறுபடி மறுபடி நிறைந்து கொண்டே இருந்தது. சாப்பிட்டு முடிந்த பின் அவருக்குத் தாகம் ஏற்பட பாபாஜி அந்த மண் சட்டியை நோக்கி கையை நீட்ட அந்த பதார்த்தங்கள் மறைந்து போய் தண்ணீரால் சட்டி நிறைந்தது. அந்த நீரைக் குடித்து தாகம் தீர்ந்த லாஹிரி மஹாசாயா ஆன்மிக அலைகளில் லயிக்க ஆரம்பித்தார். ஏழு நாட்கள் முழுவதும் நிர்விகல்ப சமாதியில் இருந்து விட்டு எட்டாவது நாள் மீண்ட அவருக்கு எல்லாவற்றையும் துறந்து விட்டு பாபாஜி கூடவே இருந்து விட வேண்டும் என்கிற ஆவல் மிகுந்தது.


தன் ஆவலை அவர் பாபாஜியிடம் சொல்லிய போது பாபாஜி அவரிடம் சொன்னார். “நீ இல்லறத்தில் இருந்து கொண்டே சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதால் தான் நான் உன்னை சந்திக்கவில்லை. உன் வாழ்வின் நோக்கம் இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மிகத்தை அணுகுபவர்களுக்கு வழி காட்ட வேண்டியதில் தான் உள்ளது. கிரியா யோகாவை தகுந்த உலக மக்களுக்கு பரப்பு. நீ எப்போது அழைத்தாலும் நான் உன்னிடம் வருவேன்.”


பாபாஜியின் அறிவுறுத்தலின்படி தன் உலகியல் வாழ்விற்குத் திரும்பினார். நாட்கணக்கில் இமாலயக் காடுகளில் காணாமல் போன லாஹிரி மஹாசாயா அலுவலகத்திற்குத் திரும்பவும் வந்து சேர்ந்த போது அலுவலக நண்பர்கள் நிம்மதி அடைந்தார்கள். சில நாட்களிலேயே அவருக்கு பழைய இடமான தனப்பூருக்கே இட மாற்றம் கிடைத்தது. தவறுதலாக இவர் பெயர் இடம் மாற்ற ஆணையில் வந்து விட்டதென்றும் உண்மையில் அந்த இட மாற்றம் இன்னொருவருக்குத் தரப்பட்டதென்றும் தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு பாபாஜியின் சித்தம் தான் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.


தனப்பூருக்குத் திரும்பிச் செல்லும் வழியில் மொராதாபாத் நகரில் ஒரு வங்காள குடும்ப நண்பர்களுடன் ஒரு சில நாட்கள் லாஹிரி மஹாசாயா தங்கினார். அங்கு ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கையில் பேச்சு யோகிகளைப் பற்றி வந்தது.


அந்த நண்பர்கள் இந்தியாவில் நிஜமான யோகிகள் மிகவும் குறைந்து வருகிறார்கள் என்று ஆதங்கத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கு பாபாஜி போன்ற ஒரு யோகி இருக்கிறார் என்று தெரிவிக்க ஆசைப்பட்ட லாஹிரி மஹாசாயா தன் இமாலய அனுபவத்தைச் சொன்னார். அங்கு பாபாஜி நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களை அவர் சொன்ன போது அவர்கள் நம்பவில்லை. “உங்களுக்கு அலைச்சல் அதிகமானதால் மனப்பிராந்தி ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இப்படி எல்லாம் உணர்ந்திருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.


உடனே லாஹிரி மஹாசாயா “நான் அழைத்தால் என் குரு இந்த இடத்துக்கே வருவார்” என்று பெருமையாகச் சொல்லி பாபாஜியைத் தியானம் செய்து அழைத்தார்.


அடுத்த கணம் மங்கிய ஒளி ஒன்று அந்த அறையில் ஒளிர ஆரம்பித்தது. ஒளியைத் தொடர்ந்து பாபாஜி அந்த அறையில் பிரத்யட்சமானார். வந்தவர் லாஹிரி மஹாசாயாவைக் கடிந்து கொண்டார். “இது போன்ற சில்லறைக் காரியங்களுக்கா என்னை அழைப்பது?”


பாபாஜியிடம் மன்னிப்பு கோரிய லாஹிரி மஹாசாயா அவர்களுக்கு உண்மை விளங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாகச் சொன்னார். பாபாஜி சொன்னார். “இனி நீ அழைக்கும் போதெல்லாம் நான் வர மாட்டேன். உனக்கு உண்மையான தேவை இருக்கும் போது மட்டுமே வருவேன்”


பாபாஜியைப் பார்த்த பிறகும் ஹிப்னாடிச வேலையாக இது இருக்கலாம் என்று ஒருவர் சந்தேகப்பட தன் சிஷ்யனுக்காக அந்த நபரைத் தன்னைத் தொட்டுப்பார்க்கவும் பாபாஜி அனுமதித்தார். சிறிது நேரம் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு பாபாஜி பின்னர் மறைந்தார்.


(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 12-12-2014

5 comments:

 1. 12.12, baba padam, aran manai ena oru porutham.

  ReplyDelete
  Replies
  1. ஏக பொருத்தம் நண்பரே. . .

   Delete
 2. உங்களின் பதிவு ரொம்ப நல்லா இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

  மலர்

  ReplyDelete
 3. அருமை அண்ணா. . .
  பகிர்வுக்கு நன்றி அண்ணா. . .

  ReplyDelete