என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, March 22, 2015

அமெரிக்காவில் மழை வர வைத்த யோகி!

16 .மகாசக்தி மனிதர்கள்


காஷ்மீரத்தில் 1907 ஆம் ஆண்டு பிறந்த சுவாமி லக்‌ஷ்மண்ஜு ரைனா (Swami Lakshmanjoo Raina )வுக்கு சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அளவுகடந்த ஆர்வம் இருந்தது. அவர் மூன்று வயதில் மண்ணிலேயே சிவலிங்கத்தை உருவாக்கி வணங்கும் விளையாட்டில் ஈடுபட்டவர். ஐந்து வயதில் தியானத்தில் ஈடுபட முடிந்தவர்.   தங்கள் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல இல்லாமல் இப்படி இருந்தது அவர் பெற்றோரைக் கவலை கொள்ள வைத்தது. அவர்கள் தங்கள் குலகுருவிடம தங்கள் கவலையைத் தெரிவித்த போது அவர் ‘உங்கள் மகன் முப்பிறவியில் யோகப்பயிற்சியிலும், ஆன்மீகத்திலும் ஆழமான நாட்டம் உடையவனாக இருந்திருக்க வேண்டும். அந்த மார்க்கத்தில் இன்னும் முன்னேறவே இந்தப் பிறவி எடுத்திருக்க வேண்டும்என்றார்.

முதுமை வரையில் ஆன்மிகத்தில் ஈடுபட்டு தியானம் செய்து வந்தால் கூட மனம் அதில் லயிக்க மறுக்கிற நிலைமையில் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிற போது ஐந்து வயதில் தியானத்தில் ஆழ்ந்து போக முடிவது ஒரே பிறவியில் முடியக்கூடிய காரியமல்ல அல்லவா? ஒரு முறை பள்ளியிலும் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டு சுற்றியுள்ள அனைத்தையும் மறந்து போன லக்‌ஷ்மண்ஜூ தியானத்திலிருந்து மீண்டு வந்த பிறகு ஒரு ஆசிரியர் ஆர்வத்துடன் தியானத்தில் என்ன உணர்ந்தாய்?என்று கேட்டதற்கு அவர் “பிரம்மாண்டமான இறைவனை உணர்ந்தேன்என்று சொல்லி இருக்கிறார்.   

இப்படி சிறு வயதிலிருந்தே இருந்த ஆன்மீகத் தேடல் வளர வளர சுவாமி லக்‌ஷ்மண்ஜூவிற்கு அதிகரித்துக் கொண்டே வந்தது. பெரும்பாலான யோகிகள் பண்டிதர்களாக இருந்ததில்லை. ஆனால் நிறைய படித்தும், பல யோகிகளிடம் பயிற்சிகள் எடுத்தும் லக்‌ஷ்மண்ஜூ யோகியாகவும், பண்டிதராகவும் இருந்து தனிமுத்திரை பதித்தார். கிட்டத்தட்ட அனைவராலும் மறக்கப்பட்டிருந்த காஷ்மீர சைவ சமய சித்தாந்தம் லக்‌ஷ்மண்ஜூவால் உயிர்ப்பிக்கப்பட்டது.  அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்க இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வந்தார்கள்.

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ யோகசக்திகளையும் பெற்றிருந்தார் என்ற போதிலும்  அவற்றை மிக அத்தியாவசியமான போதும் பொதுநலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினார். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அவர் அமெரிக்காவில்  லாஸ் ஏஞ்சல்ஸில் மழை வரவழைத்த நிகழ்ச்சியைச் சொல்லலாம்.

1991 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில் சுவாமி லக்‌ஷ்மண்ஜூ சென்ற போது லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக மழை இல்லாமல் வறட்சியில் இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நதி சுத்தமாய் வரண்டு போயிருந்தது. அதனால் தண்ணீர் பஞ்சம் அங்கு கடுமையாக இருந்தது. விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீருக்கு கூட கட்டுப்பாடு விதிக்கின்ற நிலை இருந்தது. அந்த மாநிலத்தில் அவர் சென்றிருந்த தெற்கு கலிபோர்னியா பகுதியில் உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் வழியில்லாமல் இருந்தது.  ஏனென்றால் கோடை காலத்தில் அங்கு எப்போதுமே மழை பெய்வது கிடையாது.

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ சென்று தங்கிய வீட்டுக்காரர் அவருடைய பக்தர். அவர் அந்தப் பகுதியில் ஐந்தாவது வருடமாக சரியாக மழை பெய்யாததால் ஏற்பட்டிருந்த தண்ணீர் பஞ்சத்தைப் பற்றிக் கூறினார். அதைக் கேட்ட லக்‌ஷ்மண்ஜூ மழை பெய்ய உடனே ஏற்பாடு செய்வதாகச் சொன்ன போது பக்தருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் இந்தியாவில் ஒரு முறை இது போல சுவாமி லக்‌ஷ்மண்ஜூ மழை வரவழைத்ததை நேரில் கண்டவர். சிறிது கூட மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்த வானில் சுவாமி லக்‌ஷ்மண்ஜூ கருமேகங்களை ஏற்படுத்தி மழை வரவழைத்ததை அவர் மற்றவர்களிடம் நினைவுகூர்ந்தார். ஆனால் அவருடன் இருந்தவர்களுக்கு சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. மழை பெய்ய வேண்டிய காலத்திலேயே மழை பெய்யவில்லையே. அப்படி இருகையில் இவர் மழை எப்போதுமே மழை பெய்யாத காலத்தில் மழை பெய்ய வைப்பதாகச் சொல்கிறாரே. யோகியாக இருந்தாலும் இயற்கைக்கு எதிராக இயங்குவது எப்படி சாத்தியம்?என்று அவர்கள் எண்ணினார்கள்..

அபூர்வ சக்திகள் பெற்றிருந்தாலும் அதை மந்திரம் போல் செய்து காட்டாமல் முறைப்படியான ஒரு நிகழ்வாக செய்து காட்ட விரும்பிய சுவாமி லக்‌ஷ்மண்ஜூ ஒரு ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். 22-06-1991 சனிக்கிழமை அன்று ஹோமம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கிளம்பிய புகையைப் பார்த்தவுடன் பயந்து போன அண்டை வீட்டுக்காரர்கள் தீயணைப்புத் துறையில் புகார் தந்து விட்டார்கள். உடனே வந்த தீயணைப்புப்படை அந்த ஹோமத்தை நிறுத்தியது தீயணைப்புத் துறையில் முன் அனுமதி வாங்காமல் இது போல் ஹோமம் வளர்த்தக்கூடாது என்று அவர்கள் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள்.   

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ தன் பக்தர்களுடன் தீயணைப்புத் துறை அலுவலகம் சென்று ஹோமம் செய்ய அனுமதி வேண்டினார். தீயணைப்புத் துறை மார்ஷல் எதற்காக குடியிருப்புப்பகுதியில் தீயை மூட்டுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு லக்‌ஷ்மண்ஜூ இப்பகுதியில் மழை பொழிய வைக்கத் தான் நாங்கள் ஹோமம் நடத்த அனுமதி கோருகிறோம் என்றார்.

நவீன காலத்தில் இது போன்ற காரியங்களா என்கிற வகையில் அந்த மார்ஷல் சிந்தித்திருக்க வேண்டும். அப்படி நாட்டில் மழை பெய்வதானால் பெய்யட்டும் என்பது போல லேசான சிரிப்புடன் மார்ஷல் ஹோமம் நடத்த அனுமதி வழங்கினார். 30-06-1991 ஞாயிற்றுக்கிழமை அன்று மறுபடி ஹோமத்தை சுவாமி லக்‌ஷ்மண்ஜூ நடத்தினார்.  சுமார் ஒரு மணி நேரம் ஹோமம் நடந்தது. ஹோமத்தில் பூக்களும், மற்ற பொருள்களும் ஆவாஹனம் செய்யப்பட்டது.

ஹோமத்தின் போது அங்கிருந்த ஒருவர் சுவாமி லக்‌ஷ்மண்ஜூவைக் கேட்டார். “இங்கு ஹோமம் செய்வதால் இந்தப் பகுதி முழுவதும் எப்படி மழை பெய்யும்?

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ சொன்னார். “இந்த ஹோம அக்னியில் உள்ள ஜூவாலைகளும் சூரியனின் ஜூவாலைகளும் ஒன்று தான். இந்த சிறிய ஜூவாலை அந்த சூரிய ஜூவாலைகளுக்கு செய்தி அனுப்பும். சூரியன் தான் தன்னைச் சுற்றும் எல்லா கிரகங்களையும் கட்டுப்படுத்தும் வலிமை பெற்றிருக்கிறது. அது இங்கு மழை பொழிய ஏற்பாடு செய்யும். விளைவுகள் ஏற்பட சில காலம் ஆகலாம். ஆனால் சிரத்தையுடன் சுயநலமில்லாமல் நாம் செய்வதால் கண்டிப்பாக இங்கு மழை பொழியும்

அந்த நபர் சொன்னார். “இங்கு கோடையில் மழை பொழிவதில்லை. அப்படி ஒரு வேளை நீங்கள் கூறுவது போல மழை பெய்தால் அது கண்டிப்பாக அதிசயம் தான்.

ஆனால் அந்த அதிசயம் நிகழவே செய்தது. சரியாக எட்டாவது நாளில் அதாவது 08-07-1991 அன்று பெய்ய ஆரம்பித்த மழை சாதாரண தூறலாக இருக்கவில்லை. சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே போய் பெருமழையாகப் பெய்ய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த மழையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நதி நிறைந்து மணிக்கு முப்பது மைல் வேகத்தில் கடலுக்குச் செல்ல ஆரம்பித்தது.  அங்குள்ள முக்கிய அணைக்கட்டான செபுல்வெடா அணைக்கட்டு (Sepulveda dam ) நிரம்பி வழிந்தது. சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. மோட்டார் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் பலர் திடீர் வெள்ளத்தை எதிர்பார்க்காமல் சிக்கிக் கொண்டு அவர்களை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் பஞ்சம் ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்தது.

வானிலை ஆய்வாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள்.  1877 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பதிவு செய்திருந்த கோடைகால வானிலை அளவுகளில் இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கவேயில்லை என்பதே அவர்கள் வியப்பிற்கு காரணம்.

 

வின்சண்ட் ஜே. டாக்சின்ஸ்கீ (Vincent J. Daczynski)  என்ற அமானுஷ்ய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர், லக்‌ஷ்மண்ஜூ நடத்திய ஹோமத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அவர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார். அந்த அபூர்வ மழை பெய்த நிகழ்வை டெய்லி ந்யூஸ் என்ற பத்திரிக்கை  வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பின் புகைப்படத்தை இங்கே காணலாம். மழையே பெய்யாத ஒரு கோடை காலத்தில் மழை பெய்து பஞ்சம் நீங்க காரணம் அங்கு நடந்த ஒரு மணி நேர ஹோமம் அல்ல, சுவாமி லக்‌ஷ்மண்ஜூவின் யோகசக்தியே காரணம் என்று வின்சண்ட் ஜே. டாக்சின்ஸ்கீ போன்றவர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு சுவாமி லக்‌ஷ்மண்ஜூ நீண்ட காலம் உயிர் வாழவில்லை. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல் மாண்ட பிறகும் அவருடைய சொற்பொழிவுகளுக்காகவும், எழுதிய காஷ்மீர சைவசமயம் சம்பந்தமான புத்தகங்களுக்காகவும், அவருடைய யோகசித்திக்காகவும் உள்நாட்டு அறிஞர்கள் மட்டுமல்லாமல் மேனாட்டு அறிஞர்கள் பலரும் அவரை நினைவு வைத்திருக்கிறார்கள்!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 26-12-2014


5 comments:

 1. Arumai. thadal thodaratum. vaalthukal.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் !! அன்பு நண்பரே, என். கணேசன் அவர்களே!

  ReplyDelete
 3. Replies
  1. அன்பின் கணேசன் அண்ணா. . .

   அருமையான பதிவு.
   பகிர்ந்தமைக்கு நன்றி.

   Delete
 4. ஆனால். இந்த செய்தியில் இவரைப் பற்றிய குறிப்பு இல்லையே. இது ஒரு அதிசயமான நிகழ்வாக செய்தி பதிவானபோது அதற்கு இப்படிஒரு காரணம் உள்ளது என்று அந்த தீயணைப்புத்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் இருப்பாரா?

  ReplyDelete