சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 5, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 36


க்‌ஷயும் மைத்ரேயனும் சுமார் ஒரு மணி நேரம் சாலையோரம் காத்திருந்தார்கள். ஒரு பஸ்ஸும், ஒரு மினி பஸ்ஸும் அவர்களைக் கடந்து சென்றன. அந்த வாகன்ங்கள் கடக்கும் போது அக்‌ஷயின் அறிவுரையின்படி மைத்ரேயன் தலைகுனிந்தே நின்றிருந்தான். அதனாலும், அவனுடைய புத்தபிக்கு ஆடையாலும், கூடவே புத்தபிக்குவாக அக்‌ஷய் நின்றிருந்ததாலும் அந்த வாகனங்களில் சென்றவர்களில் அவனை நன்றாகத் தெரிந்தவர்கள் கூட அவனை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. சிலர் வண்டியில் இருந்தபடியே அக்‌ஷய்க்கு வணக்கமும் தெரிவித்தார்கள். அக்‌ஷய் கனிவுடன் ஆசிகள் வழங்கினான்.

ஒரு மணி நேரம் கழிந்து ஒரு ஜீப் வந்தது. டிரைவரைத் தவிர அதில் ஒரு நடுத்தர வயது ஜெர்மானிய தம்பதிகளும்,  ஒரு வயதான திபெத்தியனும் மட்டும் இருந்தார்கள். அந்த ஜீப்பில் அவர்கள் இருவருக்கும் கூடத் தாராளமாய் இடம் இருந்தது. அக்‌ஷய்க்கு அதில் பயணிக்க அவர்கள் அனுமதித்தால் மிக நல்லது என்று தோன்றியது. எவ்வளவு சீக்கிரம் அந்த இடத்திலிருந்து வெளியேற முடியுமோ அவ்வளவு ஆபத்தின் அளவு குறையும் என்று நினைத்தான்.

உள்மனதைக் குவித்து புத்தரைப் பிரார்த்தித்த அவன் வந்து கொண்டிருந்த ஜீப்பைக் கூர்ந்து பார்த்தான். ஜீப் அருகில் வரும் போது ஜெர்மானியத் தம்பதியர் புன்னகையுடன் கையசைத்தார்கள். அக்‌ஷய் தானும் கையசைத்து விட்டு எங்களையும் ஏற்றிச் செல்ல முடியுமா என்று சைகையிலேயே கேட்டான். ஜெர்மானியன் அந்த டிரைவரிடம் ஏதோ சொல்ல டிரைவர் வண்டியை நிறுத்தினான்.

ஜெர்மானியன் அக்‌ஷயிடம் கேட்டான். “புனிதரே தங்களுக்கு எங்கு செல்ல வேண்டும்?

அக்‌ஷய் சொன்னான். “நாங்கள் சம்யே மடாலயத்திற்குப் போக வேண்டும். அங்கு போக வசதியாக எங்களை எங்காவது இறக்கி விட்டால் பெரிய உதவியாக இருக்கும்

ஜெர்மானியன் முகம் மலரச் சொன்னான். “நாங்கள் அங்கு தான் போய்க் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏறிக் கொள்ளலாம்

அக்‌ஷய் மனதார நன்றி தெரிவித்தான். அப்போது தான் டிரைவர் அருகே அமர்ந்திருந்த வயதான திபெத்தியனின் பார்வை மைத்ரேயன் மேல் தங்கி இருந்ததை அவன் கவனித்தான். அந்த திபெத்தியனின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.  

அதைக் கண்டு துணுக்குற்ற அக்‌ஷய்க்கு அந்த ஜீப்பில் செல்வது உசிதம் தானா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்தது. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியில்லை என்று நினைத்தவனாய் ஏறி அந்த ஜெர்மானியத் தம்பதியருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தான். மைத்ரேயனும் ஏறி அக்‌ஷய் அருகில் அமர்ந்தான். மெல்ல மைத்ரேயனிடம் ரகசியமாய் கேட்டான். அந்த வயதான ஆள் உனக்குத் தெரிந்தவரா? எப்போதாவது பார்த்திருக்கிறாயா?

மைத்ரேயன் மெல்லிய குரலில் சொன்னான். “அவர் இந்தப் பகுதி ஆள் இல்லை. அவரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை....

சற்று நிம்மதி அடைந்தாலும் ‘பின் ஏன் இந்த ஆள் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்?என்ற கேள்வி அக்‌ஷய் மனதில் எழுந்தது.

ஜீப் கிளம்பியது. ஜெர்மானியத் தம்பதியர் அக்‌ஷயிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அக்‌ஷய் கனிவான புன்னகையுடன் “நேபாளில் இருந்துஎன்று தெரிவித்தான். டிரைவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அக்‌ஷய்க்கு டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த வயதான திபெத்தியரை நன்றாகக் கண்காணிக்க முடிந்தது. அந்த ஆள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பது தெரிந்தது. அந்த ஆளுக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த மைத்ரேயன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவன் முகத்தில் லேசான மந்தஹாஸப் புன்னகை வந்து மறைந்ததை அக்‌ஷயால் கவனிக்க முடிந்தது. மைத்ரேயன் அந்த ஆளை இது வரை பார்த்ததில்லை என்று சொன்னது பொய்யாய் இருக்காது என்றாலும் கூட தனக்கு இன்னும் விளங்காத ஏதோ ஒன்று இவர்களிடையே இருக்கிறது என்று தோன்றியது.

அந்த ஜெர்மானியத் தம்பதியர் அவனிடம் புத்தமதம் சம்பந்தமான சில சந்தேகங்களைக் கேட்க ஆரம்பிக்க அக்‌ஷய் அவர்களுக்குப் புரிகிற மாதிரி பதில்கள் சொன்னான். சொல்லச் சொல்ல அக்‌ஷய் மைத்ரேயனை பக்கவாட்டில் பார்த்துக் கொண்டான். புத்தரின் மறு அவதாரம் என்று தலாய்லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் நம்புகிற அவனை வைத்துக் கொண்டு புத்த மதத்தைத் தான் விளக்குவது அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. தவறாக எதாவது சொல்லி விட்டால் மைத்ரேயன் மந்தஹாஸப் புன்னகை செய்தாலும் செய்வான்!

ஆனால் எதிர்பார்த்த எதையும் செய்து விட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் போல மைத்ரேயன் எந்த உணர்ச்சியையும் காண்பிக்கவில்லை. பேச்சு சம்யே மடாலயம் சம்பந்தமாக ஆரம்பித்தவுடன் டிரைவர் வண்டியை ஓட்டிக் கொண்டே அந்த விஷயத்தை விளக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அவன் காரோட்டி மட்டுமல்ல கைடு(guide)ம் கூட என்பது அக்‌ஷய்க்குப் புரிந்தது.

டிரைவர் மனப்பாடப் பகுதியை வாசிப்பது போல் சொன்னான். “ஒரு ராட்சஸ மண்டல அமைப்பில் கட்டப்பட்ட சம்யே மடாலயம் பிரபஞ்சத்தைப் பற்றிய புத்தர்களின் அபிப்பிராயத்தை ஒட்டிக் கட்டப்பட்டது. மையத்தில் இருக்கும் புத்தர் கோயில் மேரு மலை என்றும் சுற்றி இருக்கும் பகுதிகள் அந்தப் புனித மலையை மையமாய் கொண்டு இயங்கும் பிரபஞ்சத்தின் பகுதிகள் என்றும்  காட்டும் வகையில் கட்டினார்கள்.  அப்போதைய திபெத்திய சக்ரவர்த்தி, சாந்தரக்‌ஷிதா என்கிற இந்திய புத்தமத துறவியின் ஆலோசனையின்படி கட்ட ஆரம்பித்த சம்யே மடாலயம் ஒவ்வொரு முறையும் கட்டிடம் ஒரு குறிப்பிட்ட அளவு முடிந்தவுடன் இடிந்து விழ ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கட்டிடத் தொழிலாளிகள் வேலை செய்யப் பயந்தார்கள். ஏதோ தீய சக்தி அந்த இடத்தில் இருக்கிறது, அது தான் மடாலயம் முழுமையடைய விட மாட்டேன்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

“சாந்தரக்‌ஷிதாவிடம் சக்ரவர்த்தி ஆலோசனை கேட்டார். சாந்தரக்‌ஷிதா இன்னொரு இந்தியத் துறவியும் மந்திர தந்திரங்களில் வல்லவருமான பத்மசாம்பவா மனம் வைத்தால் எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அங்கிருந்து அகற்றி விட முடியும் என்றார். திபெத்திய சக்ரவர்த்தி அவர் சொன்னபடியே பத்மசாம்பவாவை வேண்டிக் கொள்ள பத்மசாம்பவா திபெத் வந்தார். தீய சக்திகளைக் கட்டிப் போட்டு முடக்கி வைத்து சம்யே மடாலயத்தைக் கட்டி முடிக்க வைத்தார். திபெத்தின் முதல் புத்த மடாலயம் இப்படி தான் கட்டி முடிக்கப்பட்டது.

ஜெர்மானியத் தம்பதியர் சுவாரசியத்துடன் இந்தத் தகவல்களைக் கேட்டுக் கொண்டார்கள். டிரைவரின் அருகே அமர்ந்திருந்த வயதான திபெத்தியர் முகத்தில் ஏதோ இனம் தெரியாத உணர்ச்சி வந்து போனதை அக்‌ஷய் கவனித்தான்.

டிரைவர் தொடர்ந்து சொன்னான். “பத்மசாம்பவா முடக்கி வைத்த துஷ்ட சக்திகள் முழுவதும் பலமிழந்து போய் விடவில்லை என்றும் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய பலம் பெற்று வருகின்றன என்றும் சிலர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரி என்கிற மாதிரி சம்யே மடாலயம் திரும்பத் திரும்பக் கட்டப்பட்டாலும் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் இரண்டு முறை தீக்கிரையானது, இரண்டு முறை பூகம்பத்தால் அழிந்து போனது. 38 வருஷங்களுக்கு முன்பு வரை பாழடைந்து கிடந்த அந்த மடாலயத்தின் உள்ளே பன்றிகள் ஆடுகள் எல்லாம் கூட மேய்ந்து கொண்டு இருந்தன. பத்தாவது பஞ்சன்லாமா 1986 ல் அதை மறுபடியும் கட்டி இது வரை அந்த மடாலயம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகிறது.

அந்த வயதான திபெத்தியரின் கண்கள் தீக்கனலாய் திடீரென்று ஜொலிக்க ஆரம்பித்தது அவர் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால் அக்‌ஷய்க்குத் தெரிந்திருக்காது. மைத்ரேயன் முகத்தை அந்தக் கணத்தில் பார்க்க ஆசைப்பட்டதால் தான் அந்தத் திபெத்தியர் திரும்பிப் பார்த்தது போலத் தெரிந்தது. அவர் கண்களில் ஜொலிப்பைப் பார்த்து திகைத்த அக்‌ஷய் உடனே மைத்ரேயனைப் பார்த்தான். இருவர் பார்வைக்கும் மைத்ரேயன் முகம் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. அவன் தூரத்தில் தெரிந்த மலைமுகட்டை பேரமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்....

   
வாங் சாவொ உடனடியாக திபெத் வந்து சேர்ந்தான். லீ க்யாங் கிளம்பச் சொன்னவுடன் அவன் ஒன்றரை மணி நேரத்தில் விமானம் ஏறி இருந்தான். லீ க்யாங் மிக முக்கியம் என்று நினைத்திருந்த்து மட்டுமல்லாமல் அவனே போக வேண்டும் என்றும் நினைத்திருந்த இந்த விவகாரத்தில் அவனுக்குப் பதிலாக திபெத் வந்து சேர்ந்தது தன் பாக்கியம் என்று வாங் சாவொ நினைத்தான். லீ க்யாங்குக்கு தன்னை நிரூபிக்க இறைவனாய் அளித்த பெரிய சந்தர்ப்பம் என்று இதைக் கருதினான். அடிமட்டத்தில் இருந்த அவனை ஒரு மேல் மட்டத்திற்குக் கொண்டு வந்த லீ க்யாங்குக்கு அவன் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறான். லீ க்யாங் அளவுக்கு பேரறிவு யாருக்குமே இருக்க முடியாது என்றாலும் ஓரளவுக்காவது அவன் செய்ய முடிந்ததைத் தன்னாலும் செய்ய முடியும் என்று காட்ட வேண்டும் என்கிற உறுதி வாங் சாவொவிடம் குடிகொண்டிருந்தது.

அவன் திபெத் வந்து சேர்வதற்குள் மைத்ரேயனின் புகைப்படமும், விலாசமும் லீ க்யாங் அனுப்பி வைத்திருந்தான். மைத்ரேயன் வீட்டுக்கு மட்டும் வாங் சாவொவே நேரில் போய் விசாரிக்க வேண்டும் என்பது லீ க்யாங்கின் கட்டளையாக இருந்தது. மைத்ரேயனையும் அந்த ரகசிய மனிதனையும் தேடும் பொறுப்பில் ஈடுபடுபவர்களுக்குக் கூட அவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிய வேண்டியதில்லை என்றும் லீ க்யாங் தெரிவித்திருந்தான்.

திபெத் வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக ரகசியப் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை வாங் சாவொ கூட்டினான். பதினோரு முக்கிய அதிகாரிகள் வந்திருந்தார்கள். அவர்களிடம் வாங் சாவொ ரகசிய மனிதனின் பாஸ்போர்ட்டில் இருந்த புத்தபிக்கு வேடப் போட்டோவைக் காட்டி அந்த நபர் போலி பாஸ்போர்ட்டில் திபெத் நுழைந்திருப்பதாகத் தெரிவித்தான். அவன் மிக ஆபத்தானவன் என்றும் அவனை எத்தனை விரைவாகக் கண்டுபிடிக்க முடியுமோ அத்தனை நல்லது என்றும் தெரிவித்தான். அதோடு மைத்ரேயன் புகைப்படத்தையும் காட்டி அந்த ரகசிய மனிதன் இந்த சிறுவனுடன் காணப்பட அதிக சாத்தியக்கூறு உள்ளது என்றும் இருவரையும் தனித்தனியாகவோ சேர்ந்தோ எங்கு கண்டாலும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வாங் சாவொ கட்டளையிட்டான். அவர்களைக் கண்டுபிடிக்கிற அதிகாரிக்கும் அந்தக் குழுவுக்கும் பண வெகுமதி, பதவி உயர்வு இரண்டும் தர ஏற்பாடு செய்வதாக லீ க்யாங் உறுதியளித்திருக்கிறான் என்பதையும் வாங் சாவொ தெரிவித்தான்.     

அங்கு வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் கேட்டார். “இவர்கள் இருவர் புகைப்படங்களையும் ஏன் நாம் டிவியிலும், பத்திரிக்கைகளிலும் தரக்கூடாது. அவர்களைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு சன்மானம் கூட நாம் அறிவிக்கலாமே?

இந்தக் கேள்வியை வாங் சாவொவும் லீ க்யாங்கைக் கேட்டிருந்தான். லீ க்யாங் பதிலளித்திருந்தான். அது அவர்களைக் கண்டுபிடிக்க சற்று கூடுதல் உதவியாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பின் பத்திரிக்கையாளர்களும், டிவிக் காரர்களும் எழுப்பும் கேள்விகள் நமக்கு தர்மசங்கடத்தைத் தரும்படியாகத் தான் இருக்கும். மைத்ரேயன் என்ற பெயர் கூட இந்த நேரத்தில் வெளிப்படக் கூடாது வாங் சாவொ. அது நம் எதிர்காலத் திட்டத்தைக் கெடுத்து விடும்

வாங் சாவொ தன் தலைவன் சொன்னதை அப்படியே தெரிவித்து விடாமல் சாதுரியமாகச் சொன்னான். சில விஷயங்களை நாம் இவர்களிடமிருந்து கண்டு பிடிக்க வேண்டி இருப்பதால் அது கண்டுபிடிக்கப்படும் வரை விளம்பரம் வேண்டாம் என்று நினைக்கிறோம்

அடுத்த கேள்வி இன்னொரு அதிகாரியிடம் இருந்து எழுந்தது. “இவர்களைக் கண்டுபிடித்த பிறகு இவர்கள் ஒருவேளை எங்களிடம் இருந்து தப்பிக்க முயன்றால் சுட்டுக் கொன்று விடலாமா, இல்லை உயிரோடு தான் பிடித்து ஒப்படைக்க வேண்டுமா?

வாங் சாவொ அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். உயிரோடு பிடித்தால் உத்தமம். ஆனால் அது முடியா விட்டால்- பிணமாகத் தான் பிடிக்க முடியும் என்றால்- தாராளமாகக் கொன்று விடலாம். அவர்கள் தப்பித்துப் போவதை விட அது நல்லது.

(தொடரும்)


என்.கணேசன்

4 comments:

  1. viruvirupaga poguthu. mitheran photo epdi kidithathu. g

    ReplyDelete
  2. yar anta old tibetan guy????? tik tik tik tik tik .....

    ReplyDelete
  3. சுந்தர்March 5, 2015 at 6:24 PM

    முடிச்சுகள் அதிகமாகி சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. வாரா வாரம் காத்திருப்பது தான் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு மூன்று வாரங்கள் கழித்து ஒரேமுட்டாய் படிக்கலாம் என்று நினைத்தால் கூட வியாழன் மாலை ஆறு மணியானால் தானாய் உங்கள் ப்ளாக் வந்து விடும் அளவு தங்கள் தொடர் அடிமைப்படுத்தி விட்டது. அமானுஷ்யன் படிக்க ஆரம்பித்ததில் இருந்து பரமன், புத்தம் வரை இப்படியே எழுத்தால் எங்களை ஈர்த்து விடுகிறீர்கள்.

    ReplyDelete
  4. விஷ்ணுMarch 6, 2015 at 6:43 PM

    மைத்ரேயன் மந்தஹாஸப்புன்னகை செய்தாலும் செய்வான் என்று அக்‌ஷய் நினைப்பது செம யதார்த்தம். கண் முன்னால் கேரக்டர்களை பார்க்க வைக்கிறீகள் சார். நன்றாகப் போகிறது.

    ReplyDelete