சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 3, 2013

பரம(ன்) ரகசியம் – 64



பாபுஜி உடனடியாக குருஜியிடம் சென்றார். குருஜி ஜான்சனுடன் பேசிக் கொண்டிருந்தார். பாபுஜியின் முகத்தைப் பார்த்தே ஏதோ ஒன்று பாபுஜியை நிறையவே பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட குருஜி கேட்டார். “என்ன பாபுஜி?

உங்க நண்பர் உதயன் நினைச்ச மாதிரி எங்கப்பா நினைக்கலை. அவர் சொல்றதும் அர்த்தம் இல்லாமல் இல்லை குருஜி. வியாபாரத்துல நமக்கு சாதகமான சூழ்நிலையை விட சாதகமில்லாத சூழ்நிலைய அதிகமாய் தெரிஞ்சு வச்சுக்கிறவன் நான். அதனால அவர் சொன்னதை என்னால் அலட்சியப்படுத்திட முடியல...
                                                                                  
சுத்தி வளைக்காமல் விஷயத்துக்கு வா பாபுஜி. அவர் என்ன சொன்னார்?

பிரதாப்ஜி சொன்னதை பாபுஜி தயக்கத்துடன் அப்படியே தெரிவித்தார். கேட்டு குருஜியின் முகத்தில் புன்னகை மாறாதது அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது.இவ்வளவு தானா?என்று கேட்டார்.

என்ன இப்படிக் கேட்டு விட்டார் என்று நினைத்தவராக பாபுஜி “ஆமாஎன்றார்.

குருஜி கேட்டார். “பாபுஜி, வீட்டில் தீ பயன்படுத்தறியே, அதை நீ தொடுவாயா? இல்லை தானே. கால காலமா பயன்படுத்தற தீயை நாம் இன்னும் தொடறதில்லை. ஆனால் பாத்திரம் தீயை சிரமம் இல்லாமல் தொடுது. அப்படின்னா உன்னை விட பாத்திரம் சிறப்பானதுன்னு சொல்ல முடியுமா? இல்லை பாத்திரம் தான் தீயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்குன்னு சொல்ல முடியுமா? பாத்திரத்தையும் தீயையும் நீ தானே உன் விருப்பப்படி பயன்படுத்தறே. நீ தானே கட்டுப்படுத்தறே.

“அதே மாதிரி தான் மின்சாரம். அதை எத்தனையோ விதங்கள்ல பயன்படுத்தலாம். பயன்படுத்தறோம். ஆனா அதை நாம் வெறும் கையில் தொட முடியறதில்லை. ஆனால் மின்சாரத்தை ஒரு மரக்கட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் தொடுது. அப்படின்னா நம்மளை விட மரக்கட்டை உசத்தின்னு அர்த்தப்படுத்திக்க முடியுமா?

ஜான்சன் குருஜியின் பதிலை ரசித்தார்.  இந்த மனிதருக்கு எங்கிருந்து தான் உதாரணங்கள் கிடைக்கிறதோ? பாபுஜிக்கும் குருஜி சொன்னதைக் கேட்டு மனம் சமாதானம் அடைந்தது.

தப்பாய் நினைக்க வேண்டாம் குருஜி. இது நாள் வரைக்கும் உலகத்தில் யாருமே செய்யாத பரிசோதனைகளை நாம் செய்யப் போறோம். விசேஷ மானஸ லிங்கத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சவங்க யாருமே இல்லை. அப்படி இருக்கறப்ப நாம யோசிச்சுப் பார்க்காத பாதகமான விஷயங்களைக் கேள்விப்பட்டா மனசுல சஞ்சலம் வர ஆரம்பிச்சுடுது..... நாளைக்கு காலைல போலீஸ் கண்பார்வைல இருந்து தப்பிச்சு சிவலிங்கத்தை அங்கே கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும் ஒரு டென்ஷன் இருக்கத் தான் செய்யும்.”  பாபுஜி சொன்னார்.

குருஜி புன்னகை செய்தபடி சொன்னார். “நீ என் நண்பனைப் பார்த்ததில்லை பாபுஜி. அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை. ஆனால் மாந்திரிகம், அபூர்வ சக்திகள்ல ஆர்வமும், ஓரளவு ஞானமும் இருக்கிறவங்களுக்கு அவனைத் தெரியாமல் இருக்க முடியாது. உதயன் சுவாமின்னா அது உலகப் பிரசித்தம். மாந்திரிகத்தில் அவனுக்கு மிஞ்சிய ஆள் இல்லைன்னு நான் சொன்னவுடனே ஜான்சன் கூட உதயன் சுவாமியான்னு கேட்கணும்னா பார்த்துக்கோயேன்.....

ஜான்சன் சொன்னார். “அவரைப் பற்றி நான் நிறையவே கேள்விப்பட்டிருக்கேன் பாபுஜி. எத்தனையோ பேர் எந்தெந்த நாடுகள்ல இருந்தோ அவரைப் பார்க்க இந்தியா வந்துட்டு போறதா கேள்விப்பட்டிருக்கேன். இருக்கற பொருட்களைக் கண்ணுல இருந்து மறைக்கறது, இல்லாத பொருட்களை இருக்கறதா காட்டறது, செய்வினை வைக்கறது, எடுக்கறது  இந்த மாதிரி விஷயங்கள்ல எல்லாம் அவர் நிபுணர்னு சொல்வாங்க.  அவர் நம்ம குருஜியோட நண்பர்னு சில நாள் முன்னாடி தான் தெரியும்....

பாபுஜிக்கு இதை எல்லாம் எந்த அளவிற்கு நம்பலாம் என்று தெரியவில்லை. ஆனால் ஆராய்ச்சிக்கூடத்தில் கிடைத்த அனுபவத்தை யோசித்துப் பார்க்கையில் இந்த மாந்திரிகம் கூட  உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. உதயன் சுவாமி நிஜமாகவே சக்தி வாய்ந்தவராக இருக்கலாம்...

ஜான்சன் குருஜியாகச் சொல்வார் என்று எதிர்பார்த்து அவர் சொல்லாததால் பாபுஜிக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய தகவலைத் தெரிவித்தார். “பாபுஜி, இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த சிவலிங்கத்தை பசுபதி கிட்ட கொண்டு வந்து கொடுத்த அக்னிநேத்திர சித்தர் கிட்ட சில காலம் சிஷ்யனாய் உதயன் சுவாமி இருந்திருக்கார்...

பாபுஜி ஆச்சரியப்பட்டார். “அப்படியா? குருஜி, நாம ஏன் உங்க நண்பரை நம்மோட ஆராய்ச்சிகள்ல சேர்த்துக்கக் கூடாது.  அவருக்கு என்ன வேணுமோ அதை நாம் செய்து தரலாம்....

பில் கேட்ஸை என்னோட கம்பெனில ஏன் வேலைக்கு சேர்த்துக்கக்கூடாது. அவர் என்ன சம்பளம் கேட்கிறாரோ கொடுத்து விடலாம்என்று பாபுஜி சொன்னது போல குருஜி பார்த்தார். நல்லவேளையாக இவன் அக்னிநேத்திர சித்தரையே ஆராய்ச்சிக்கு அழைக்கவில்லை

ரிஷிகேசத்தில் குருஜி கூட உதயனிடம் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார். என்றாலும் அதற்கு ஒரு கூலி தந்து விடலாம் என்று பாபுஜி நினைத்தது அகங்காரத்தின் உச்சமாக குருஜிக்குத் தோன்றியது.

குருஜியின் பார்வையைப் பார்த்த பிறகு தான் தவறாகக் கேட்டு விட்டோம் போல இருக்கிறது என்று பாபுஜிக்குப் புரிந்தது.

குருஜி சொன்னார். “உலகத்துல பணத்தால வாங்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு பாபுஜி.

பாபுஜி சொன்னார். “நான் அந்த அர்த்தத்துல சொல்லலை குருஜி. உங்க நண்பராச்சே. அதனால நல்ல சக்தி வாய்ந்த அவர் நம்ம ஆராய்ச்சில கலந்துகிட்டா சிறப்பா இருக்கும்னு நினைச்சேன். அதான்...

குருஜி சொன்னார். “இந்த விசேஷ மானஸ லிங்க விவகாரத்தில் ஈடுபட உதயன் விருப்பமில்லைன்னு தெளிவா முதல்லயே சொல்லிட்டான். நான் உதயன் கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனில் பேசினதை நீ கேட்டிருப்பாய்னு நினைக்கிறேன் பாபுஜி. “இனி கண்டிப்பா உன் கிட்ட உதவி எதுவும் கேட்டு தர்மசங்கடப்படுத்த மாட்டேன் உதயா. இதுவே கடைசின்னு சொன்னேன். இந்த விவகாரத்தில் ஈடுபட மாட்டேன்னு அவன் சொன்ன பிறகும் அவன் கிட்ட அந்த சித்தர் கிட்ட இருந்து நான் பாதுகாப்பு கேட்டதுக்கு அவன் ஒத்துகிட்டதே அதிகம். இப்ப இன்னொரு உதவி கேட்டிருக்கேன். அதுக்கும் அவன் சரின்னு சொன்னான். இதெல்லாம் அவன் என் மேல் வச்சிருக்கிற அன்பைக் காட்டுது. அந்த அன்பு ஒன்னுக்காக தான் அவன் ஒத்துகிட்டான்....

பாபுஜி கேட்டார். “தன் நண்பனுக்கு தன்னால முடியக் கூடிய உதவிகள் செய்யறதுல ஒருத்தருக்கு என்ன நஷ்டம் குருஜி?

“எனக்கு உதவறதுக்காக அவன் செலவழிக்கப் போகிற சக்தியை அவன் திரும்ப சேர்த்தணும்னா அதுக்குப் பல வருஷங்கள் ஆகும் பாபுஜி.

பாபுஜி ஆச்சர்யப்பட்டார். குருஜி சொன்னார். “பாபுஜி உன் கிட்ட மொத்தமா பத்து ரூபாய் இருக்குன்னு வச்சுக்குவோம். உன் உயிர் நண்பன் அதில் பாதி கேட்டால் அஞ்சு ரூபாயை நீ யோசிக்காமல் கொடுத்துடுவாய். ஆனால் உன் சொத்து இப்ப ஏழாயிரம் கோடி. அதுல பாதி கேட்டால் என்ன செய்வே? யோசிப்பே இல்லையா? அந்த மாதிரி தான் நான் அவன் கிட்ட கேட்டிருக்கேன். ஒரு சித்தரோட சக்தி எந்த அளவுக்கு இருக்கும்கிறதை சாதாரண ஜனங்களால கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவு சக்தி நம்ம ஆராய்ச்சியை பாதிக்கக் கூடாதுன்னு தடுக்கணும்னா அந்தத் தடுப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கணும்னு யோசிச்சுப் பார். உதயன் வாழ்நாள் எல்லாம் சேர்த்துன தன்னோட சக்தியில பாதிக்கு மேல் செலவு செய்தால் தான் அது முடியும்? பல வருஷங்களாய் அவனைப் பார்க்கக் கூட நான் போகலை. இன்னொருத்தனாய் இருந்தால் வேலை இருந்தால் மட்டும் வர்றான் பாருன்னு நினைச்சிருப்பான். என்னோட குருவுக்கு எதிரா நான் வேலை செய்ய முடியாதுன்னு சொல்லி இருப்பான். என் நண்பன் என்னைத் தப்பா நினைக்கல. நான் கேட்டதுக்கு மறுப்பு சொல்லல. அப்படிப்பட்ட நண்பன் கிட்ட நான் திருப்பித் திருப்பி உதவி கேட்டு அவனை அந்த நிலைக்குத் தள்ளிடக் கூடாது.

“அப்புறம் ஆராய்ச்சியில் கலந்து எதையாவது நிரூபிக்கிற கட்டத்தை எல்லாம் அவன் எப்பவோ  தாண்டி இப்ப பெரிய நிலையில் இருக்கான். ஆரம்ப காலத்துலயே ஆக்ரோஷமாய் பாய்ந்து வந்த சிங்கத்தைத் தன் சக்தியால அப்படியே நிறுத்தினவன் அவன். இப்ப காலம் அறுபது வருஷங்களுக்கும் மேல கடந்துடுச்சு. எத்தனை சக்திகள் வச்சிருப்பான் யோசிச்சுப் பார். அவனை எல்லாம் ஆராய்ச்சிக்குக் கூப்பிடறது எடுபிடி வேலைக்குக் கூப்பிடற மாதிரி...

சாதாரணமாக உணர்ச்சிவசப்படாத குருஜி நண்பனைப் பர்றிப் பேசிய போது உணர்ச்சி வசப்பட்டார். ஜான்சனும் பாபுஜியும் குருஜியின் புதிய பரிணாமத்தை வியப்புடன் பார்த்தார்கள்.

குருஜி சொன்னார். “மணி பத்தரை ஆச்சு. சரி முடிஞ்சா கொஞ்ச நேரமாவது தூங்கப் பாருங்க. நாளைக்கு காலைல சரியா ஆறு மணிக்கு சிவலிங்கத்தோட வேதபாடசாலையை விட்டுக் கிளம்பணும்....

ஜான்சனும், பாபுஜியும் கிளம்பினார்கள். போகும் போது பாபுஜி தன் அடக்க முடியாத ஆர்வத்துடன் ஜான்சனைக் கேட்டார். “நாளைக்கு காலைல உதயன் சுவாமி நமக்கு எப்படி உதவுவார்னு நினைக்கிறீங்க. நம்மளை மாயமாக்கிடுவாரா?

ஜான்சன் சொன்னார். “தெரியல.

அவர்கள் போன பிறகு குருஜி  நீண்ட நேரம் விழித்திருந்தார். பாபுஜியைப் போல் காலையில் எப்படிப் போவோம் என்ற சிந்தனை அவருக்கு எழவேயில்லை. அவர் சிந்தனைகள் எல்லாம் விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றியதாக இருந்தது....

குருஜி விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட ஆரம்பித்தது ஆன்மிகத் தேடல்களுடன் அவர் இமயமலைச் சாரல்களில் சுற்றிக் கொண்டிருந்த இளமைக் காலத்தில். அந்தக் காலத்தில் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் அவருக்கும், உதயனுக்கும் கதை போல இருந்தது.

சித்தர்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே பூஜிக்கப் பட்ட விசேஷ மானஸ லிங்கம் எல்லையில்லாத சக்திகளைக் கொண்டது என்றும், அவ்வப்போது ஒளிரும் தன்மை உடையது என்றும் அவர் அக்காலத்திலேயே கேள்விப்பட்டிருக்கிறார். முதலாம் ராஜாதி ராஜனின் அகால மரணத்தால் தான் விசேஷ மானஸ லிங்கத்தின் பெயர் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றதே தவிர அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சோழ மண்ணில் விசேஷ மானஸ லிங்கம் பூஜிக்கப்பட்டு வந்தது என்றும் அதை அடைய ஆசைப்பட்ட பலரும் பைத்தியம் பிடித்தோ, கொடிய வியாதிகள் வந்தோ, விபத்துக்கள் நேர்ந்தோ இறந்து போயிருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது.  

இந்தியாவில் இது போன்ற மிகைப்படுத்தப்படும் கதைகளுக்குக் குறைவில்லை என்பதால் அவரும் உதயனும் அதற்கு அப்போது அதிக முக்கியத்துவம் தரவில்லை. திடீரென்று சோழ நாட்டில் இருந்து இடம் மாறி  கைலாஷ் மலையருகே விசேஷ மானஸ லிங்கம் வந்திருக்கிறது, சித்தர்கள் அதை மறைவாக வைத்திருக்கிறார்கள் என்ற வதந்தி பரவ ஆரம்பித்தது. சிலர் கைலாஷ் மலையருகே இருக்கும் ரகசிய லிங்கம் விசேஷ மானஸ லிங்கம் அல்ல எல்லா நோய்களையும் போக்க வல்ல நவபாஷாண லிங்கம் என்று சொன்னார்கள்.

இந்த வதந்தியைக் கேள்விப்பட்டு இந்த இரண்டு லிங்கங்களில் எது கிடைத்தாலும் சரி என்று தேடிக் கொண்டு வந்த பல சாதுக்களை குருஜி பார்த்திருக்கிறார். ஒரு ஆர்வத்தில் அவரும், உதயனும் கூட கைலாஷ் மலைக்குப் போயிருக்கிறார்கள். போய் கிடைக்காத போது ஒரு பனி பெய்யும் இரவில் இருவரும் வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறார்கள். பின் அந்த வதந்திகள் நின்று போயின.

மறுபடி அவர் விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டது உதயனைப் பிரிந்து  சில வருடங்கள் கழித்து காசியில் கும்பமேளாவின் போது வந்த ஒரு அகோரி சாதுவிடம். கங்கையில் மூழ்கி எழுந்தபடியே அந்த அகோரி சாது விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிச் சொன்னார்.

குருஜி கேட்டார். “அப்படி ஒரு லிங்கம் இருப்பது உண்மையா?

அந்த சாது உறுதியாகச் சொன்னார். “உண்மை தான்

“இப்போது எங்கே இருக்கிறது?

“தெரியலை. ஆனால் அது சித்தர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிற வரைக்கும் வெளிப்படாது. இனி ஒரு காலம் வரும். சித்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து கடைசியில் முழுவதுமாக சித்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்து அது விடுபடும். அப்போது அது தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும். அது கலி முற்றின காலமாய் இருக்கும். அந்தக் காலத்தில் அது யார் கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும் என்று விதி இருக்கிறதோ தெரியவில்லை....

குருஜி ஆவலோடு கேட்டார். “அந்தக் காலம் எப்ப வரும்?

பதில் சொல்லாமல் அந்த அகோரி சாது கங்கையில் மூழ்கினார். எழுந்து பதில் சொல்வார் என்று எதிர்பார்த்த குருஜி ஏமாந்து போனார். அந்த சாது மூழ்கிய இடத்தில் இருந்து எழவில்லை. பிறகு அந்த சாதுவை குருஜி பார்க்கவில்லை. சற்று தள்ளிப் போய் எழுந்து போயிருக்க வேண்டும் என்று குருஜி எண்ணினார்.  

பின் அவர் அதைப் பற்றிக் கேள்விப்பட்டது தென்னரசு மூலமாக. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய ஆன்மிக பாரதம் புத்தகத்தைக் கொண்டு வந்து காட்டி தனக்கும் ஒரு ஒளிரும் லிங்கத்தைத் தெரியும் என்று தென்னரசு சொன்ன போது அந்த அகோரி சாது சொன்னபடியே தெரிய வேண்டியவர்களுக்கு தெரிவிக்கப் பட்டதாகவே குருஜி நம்பினார்.....

அன்று அவருக்குத் தன் குருவான சித்தர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. “சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன் சராசரியாக இருந்து சாவது தான் உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம்.

அவர் சராசரியாக வாழ்ந்து மடிய மாட்டார்.....

ன்று இரவு உறங்க முற்பட்ட போது சொல்லி வைத்தாற் போல் குருஜி, பாபுஜி, ஜான்சன் மூவருக்கும் கணபதியிடம் நீ தயார் தானே என்று கேட்டதற்கு சிவலிங்கம் ஒளிர்ந்தது நினைவுக்கு வர தூக்கம் போயிற்று. மூவருக்கும் அது சிவலிங்கம் சொன்ன பதிலாகவே தோன்றி மூவரும் அது தங்கள் பிரமையே என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றார்கள். தற்செயலாக ஒளிர்ந்ததிற்கு என்னவெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என்று குருஜி தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார். ஜான்சன் அந்த சிவலிங்கம் ஒளிர வேண்டும் என்று எதிர்பார்த்ததன் விளைவு சில நிமிடங்கள் கழித்து நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அனுமானத்திற்கு வந்தார். ஸ்விட்ச் போட்டு சில சமயம் சிறிது நேரம் கழித்து பல்பு எரிவதில்லையா?’.  பாபுஜி தன் தகப்பனாரின் அனாவசிய பயம் தன்னையும் தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்தார். அந்த சிவலிங்கம் அவ்வப்போது ஒளிர்வது அதன் இயல்பு. ஒவ்வொரு தடவை ஒளிர்வதும் அது பதில் சொல்கிற மாதிரி என்று எடுத்துக் கொள்வது முட்டாள் தனம் இல்லையா என்று கேட்டுக் கொண்டார். சிவலிங்கம் ஒளிர்வதை ஒதுக்கித் தள்ளிய போதும் அவர்களுக்கு உறக்கம் வரவில்லை.  அதற்கு வேறு காரணங்கள் இருந்தன.

பரபரப்பு காரணமாக குருஜி தூங்கவில்லை. ஆராய்ச்சிகள் எப்படிப் போகும் என்ற பலவித சிந்தனைகள் காரணமாக ஜான்சன் தூங்கவில்லை. ரிஷிகேசத்தில் இருக்கும் உதயன் சுவாமி தமிழகத்தில் இருக்கும் இந்த வேதபாடசாலையில் மாந்திரிக சக்தியை வெளிப்படுத்த முடியுமா, முடியாதா என்ற கேள்விக்கு அறிவு மாறி மாறி பதில் அளித்துக் கொண்டே இருந்ததால் குழப்பத்தில் பாபுஜியும் தூங்கவில்லை. அன்று எந்தக் கவலையும், சிந்தனை ஓட்டமும், பரபரப்பும் இல்லாமல் படுத்துத் தூங்கியது கணபதி தான்.

அதிகாலை எழுந்து குளித்து பூஜை செய்யும் போது கணபதியின் மனநிலை மகனை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் தாயின் மனநிலையாக இருந்தது. சிவலிங்கம் தன்னை இந்த ஆராய்ச்சியில் நிரூபித்துப் பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. சற்று தள்ளி ஜபம் செய்கிற சாக்கை வைத்துக் கொண்டு ஒரு மாணவன் உட்கார்ந்திருந்ததால் வாய் விட்டுப் பேச முடியாமல் மனதிற்குள் சிவனிடம் பேசினான்.

“பாரு குருஜி உன் மேல நிறைய நம்பிக்கை வச்சு தான் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கார். ஆராய்ச்சி செய்ய ஒருத்தர் அமெரிக்கால இருந்து வந்திருக்கார். இன்னொருத்தர் எல்லா செலவும் ஏத்துக்கறதா சொல்லி இருக்கார். நீ உன்னோட முழு சக்தியையும் காட்டிடணும் புரியுதா? அவங்க எல்லாரும் அசந்து போகணும்.... அப்ப தான் உன் பேர் உலகம் முழுசும் பரவும். உன் பிள்ளைக்கும் பெருமையா இருக்கும்... அப்ப நான் கூட பெருமையா சொல்லிக்குவேன். “நான் கூட சில நாள் அந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்திருக்கேன்னு. ஆனா அப்ப நீ “நீ எந்த லட்சணத்துல பூஜை செய்திருக்கேன்னு தெரியாதா. மந்திரமும் சரியா சொல்லலை. சீடை கிடைச்சப்ப என்னை மறந்து அதை சாப்பிட்டு மெய் மறந்தவன் தானேன்னு கேட்டுடக் கூடாது.  நான் அப்பவே உன் கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கேன். அதை மறந்துடாதே.....

சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடீர் என்று ஒரு நினைவு வந்து அவனுக்கு வாய் விட்டுச் சிரிக்கத் தோன்றியது. சிரித்தான். ஜபம் செய்து கொண்டிருந்த மாணவன் கணபதியை ஒரு மாதிரி பார்த்தான். கணபதி சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

பின் சிரித்த காரணத்தை  சிவனிடம் மனதிற்குள் சொன்னான். “இனி சீடையை சாப்பிடறப்ப எல்லாம் உன் ஞாபகம் தான் எனக்கு வரும் பாரு

காலை ஐந்தரை மணிக்கு குருஜி வந்தார். “கணபதி கிளம்பலாமா? நீ தயார் தானே?என்று கேட்டு விட்டு சிவலிங்கத்தை அவர் பார்த்தார். சிவலிங்கம் இப்போது ஒளிரவில்லை. குருஜிக்கு திருப்தியாக இருந்தது.

கிளம்பத் தயாரானார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்




12 comments:

  1. கணபதியின் வெள்ளை உள்ள நினைவுகள் சுவாரஸ்யமாக இருக்கிறது
    மற்றவர்களின் காரியார்த்த சிந்தனைகளை விட உன்னதமானது..!+

    ReplyDelete
  2. குருஜியின் வாதம் பிரமாதம். பில் கேட்ஸிற்கு வேலை தரும் உதாரணத்தையும், சீடை சாப்பிடறப்ப எல்லாம் உன் நினைவு வரும் பாரு என்று கணபதி சொல்லும் இடத்தையும் ரசித்தேன். த்ரில்லிங்காக போகிறது சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சுவாமிநாதன்October 3, 2013 at 6:48 PM

    கண் முன் விரிகிறது காட்சிகள். அறிவு பூர்வமான வாதங்களும் வெள்ளந்தியான கணபதியின் மன ஓட்டமும் கதை போகும் வேகமும் சூப்பர். அமானுஷ்யனையும் இது மிஞ்சுவதாகவே நினைக்கிறேன். அதில் அக்‌ஷய் என்ற கேரக்டர் மனதில் இடம் பிடிக்கிற மாதிரி இதில் குருஜி, கணபதி, ஆனந்தவல்லி போன்ற ஹீரோ அல்லாத கேரக்டர்களும் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ReplyDelete
  4. கணபதி கேரக்டர் சூப்பரோ சூப்பர். அவனுக்கு ஒரு ரசிகர் மறமே ஆரம்பித்து விடலாம் என்ரு நினைக்கிறேன். “நீ எந்த லட்சணத்துல பூஜை செய்தானு தெரியாதா’ என்று சிவலிங்கத்தை கேட்க வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் சிரிப்பும் வருகிறது. கண்ணில் நீரும் வருகிறது.

    ReplyDelete
  5. “கதையல்ல நிஜம்” அற்புதம் .., இறையின் சித்தத்தின் பால் தொடரட்டும் தொடருங்கள் வாழ்த்துக்கள் .,

    ReplyDelete
  6. மிக அற்புதம் எனக்கும் இது ஒரு நாவல் என்ற எண்ணம் துளியும் இல்லை. ... . இது எங்கோ நடக்கும் சம்பவம் நம் கண்முன் தெரிவது போல ஒரு உணர்வு (கிரிக்கெட் ஆட்டத்தை தொலைகாட்சியில் பார்ப்பது போல) மிகுந்த ஆவலோடு உள்ளேன் அடுத்த வார தொடருக்காக. ... .

    ReplyDelete
  7. I too agree with pulipani and dheva. This novel seems so real with its lively characters and your interesting portrayal. I haven't read any such an interesting and intelligent tamil novel after sujatha. This novel is really superb.

    ReplyDelete
  8. தொடருங்கள்.... தொடர்கிறோம்....

    ReplyDelete
  9. உதாரணங்கள் அருமை. குறிப்பாகத் தீ, பாத்திரம் உதாரணம். கணபதி வழக்கம் போலவே ச்சோ ச்வீட் :)

    ReplyDelete
  10. Ganesan Sir,
    Expectation standards becoming higher and higher week by week. Keep it up.

    I have doubt when you develop story plot it is week by week or one whole plot is done before the writing the story, only week by week script is released. Both has advantage and disadvantage, earlier one is beginning and end is known to the author how it is going to flow it is all fixed and proof read, where as later purely depends on the mood and imagination of that week, problem with later one is that might miss out some sequence, story telling flow. I don't see any flaw as of now in the continuity, in that sense you should have scripted as a whole and being released week by week, is my understanding correct. As part of continuous reading/following week by week I am also trying to learn story telling and scripting from your blog.

    Do you take any help on proof read, debate on the flow etc.

    Eager to know the response from you how it is all being scripted.

    Thanks and regards,
    B. Sudhakar.

    ReplyDelete
    Replies
    1. Each author has his own way of writing.

      I usually develop a story plot and main characters only, in the beginning. The chapters are not predetermined in the beginning. Before writing each chapter I'll think about the chapter. Incidents will flow naturally. Sometimes it will be very smooth and sometimes story will be stuck out. Then I'll wait till the flow comes. I must see the incidents and I must feel the feelings of each character in the chapter. Then only the story and characters will be whole. Whatever we feel deeply that only would be felt by readers generally. Before writing the chapter I'll check my earlier chapters that have connection with the present chapter theme. So the continuity will be there.

      I don't take any help for proof reading. I'll do myself. Hope I have given you a general idea.

      I wish you all the best in your efforts to write a story.

      Regards
      N.Ganeshan

      Delete
  11. Very interesting.. waiting for next episode..

    ReplyDelete