என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, September 30, 2013

மத்வர் உபதேசித்த த்வைதம்


அறிவார்ந்த ஆன்மிகம் - 21

ல்லாமே பிரம்மம் என்னும் அத்வைத சாரம் பலருக்கும் அறிவுக்கு எட்டும் அளவுக்கு அனுபவத்தில் உணர சாத்தியப்படுவது கஷ்டம். பலவீனங்களும், குறைபாடுகளும், தேவைகளும், பிரச்சினைகளும் நிறைந்திருக்கிற நான் எங்கே? இவை எதுவுமே இல்லாமல் இருக்கும் மகாசக்தி வாய்ந்த இறைவன் எங்கே? எப்படி இரண்டையும் ஒன்று என்று சொல்ல முடியும்?என்று சாதாரண மனிதன் குழம்புவது தவிர்க்க முடியாத யதார்த்தமாக இருக்கிறது.

எல்லாமே கற்பனை, மாயை என்று சொல்லித் தேற்றிக் கொள்ள அவனால் முடிவதில்லை. நான் இருக்கிறேன், இந்த உலகம் இருக்கிறது, உலகத்தில் எத்தனையோ உயிர்களும் பொருள்களும் இருக்கின்றன, அந்தப் பொருள்களைத் தொட முடிகிறது, ஐம்புலன்களாலும் உணர முடிகிறது. பல வகைகளில் வித்தியாசப்படுகிற இதெல்லாமே ஒன்று என்றால் என்னால் ஒத்துக் கொள்ள முடிவதில்லையே. எல்லாவற்றிற்கும் மேலாக நானும், இறைவனும் எப்படி ஒன்றாக முடியும்? இறைவனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிற மகாசக்திகள் எதுவுமே என்னிடம் இல்லையே.என்கிறான்.

மேலும் நானும் இறைவனும் ஒன்று என்றால் இறைவனை வணங்குவது என்னையே வணங்கிக் கொள்வது போல் அல்லவா? வணங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?என்று அவனுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

சாதாரண மனிதனின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலாகவே த்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டும் தோன்றியது. முதலில் த்வைதம் பார்ப்போம். 'த்வி' என்ற சொல்லுக்குப் பொருள் இரண்டு' என்பதாகும். த்வைதம் என்றால் இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது. பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் மத்வாச்சாரியார் என்ற மகான். இவர் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

'மத்வர்' என்றால் 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று பொருள். அவருக்கு இருந்த ஆன்மிக ஞான ஆழமும், அதை வார்த்தைகளில் கொண்டு வந்து வாதிக்கும் திற்மையும் அவருக்கு அந்தப் பட்டத்தை ஏற்படுத்தித் தந்தன.

மத்வர் பரமாத்மா, ஜீவாத்மா, ஜடப் பொருள் என்ற மூன்றும் வெவ்வேறானவை என்று சொன்னார். இவர் ஐந்து வித வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார்.

1.தனி ஜீவாத்மாக்களிலிருந்து பரமாத்மாவான கடவுள் வேறுபட்டவர்.
2. ஜடப்பொருளிலிருந்தும் பரமாத்மாவான கடவுள் வித்தியாசமானவர். ஜடப்பொருள் என்பது அறிவோ உயிரோ இல்லாதது.
3. ஒரு ஜீவாத்மாவிலிருந்து இன்னொரு ஜீவாத்மாவிற்கு வேறுபாடு உள்ளது.
4. ஜீவாத்மாக்கள் ஜடப்பொருளான பிரகிருதியிலிருந்து வேறுபட்டு உள்ளவை.
5.ஜடப்பொருளான  பிரகிருதியும் அது பகுக்கப்பட்டு  பல பகுதிகளாகின்ற சமயத்தில் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கிறது.

இப்படி இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அறிவோனும், அறியப்படும் பொருளும் இன்றி எப்படிப்பட்ட அறிவும் சாத்தியமில்லை என்பது மத்வரின் வாதமாக இருந்தது. ஆகவே அவர் ஐம்புலன்களாலும் உணரப்படும் இந்த உலகம் உண்மை என்றார்.  நம்மைச் சுற்றி உலகிலுள்ள பொருள் மாறுவதாகவோ, மாறாததாகவோ அறியப்படலாம். ஒருபொருள் மாறக்கூடியது என்பதாலும் நிரந்தரமற்றது என்பதாலுமே அது உண்மையில்லாததாகக் கருதச் செய்ய முடியாது. இருக்கும் வரை அது உண்மை தானே!

இறைவன் சிருஷ்டி செய்வது போல ஜீவன்களும் தங்கள் அறிவிற்கேற்பவும் இறைவனால் அருளப்பட்ட சக்திக்கேற்பவும்,  தங்கள் குணத்தால் எழும் விருப்பங்களுக்கு ஏற்பவும் தம்மால் முடிந்த அளவில் சிருஷ்டி செய்கின்றனர். இந்த ஜீவன்களின் சிருஷ்டியே செயற்கை எனப்படுகிறது. ஜீவன்கள் உலக பந்தங்களிலிருந்தும்,  துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைய இறைவனை பக்தி செய்ய வேண்டும். தங்களை கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்டு  சரணாகதி செய்துவிட வேண்டும் என்று மத்வர் உபதேசிக்கிறார்.

மொத்தத்தில் இவரது கருத்துப்படி ஜீவர்கள், உலகம், கடவுள் என்ற மூன்று தத்துவங்களும் உண்மையாகும். இந்த மூன்றிற்குமிடையே உள்ள வேறுபாடும் உண்மையாக இருக்கின்றது.  நிரந்தரமான உண்மையான பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் மட்டுமே சுதந்திரமானவர். ஜீவன்களும், பிரகிருதியும் அவருக்குக் கட்டுப்பட்டவை. இறைவன் எங்கும் இருப்பவராக, எல்லாம் அறிபவராக, எப்போதும் இருப்பவராக விளங்குகிறார் என்கிறார்.

கடவுளே மேலான உண்மை. உலகம் இறைவனின் படைப்பு. அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் பிரகாசிக்கிறார் என்றாலும் அதை வைத்து அந்த ஜீவராசிகளையும் கடவுள் என்று கூறுதல் தவறு என்கிறார். நீர் நிரம்பிய பாத்திரங்களில் எல்லாம் சூரியன் பிரதிபலிப்பதால் அந்தப் பாத்திரங்களை எல்லாம் சூரியனாகச் சொல்ல முடியுமா என்ன?

அவருடைய கூற்றுப்படி இயற்கையில் ஜீவன்கள் ஞானமுடையவர்களே. ஆனால் அவர்கள் ஞானம் எல்லைகள் உள்ள ஞானம். அவர்கள் தங்களை விட மேலான கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐம்புலன்களுடன் ஓர் உடலைப் பெற்று உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பந்தப்பட்டவனே. கட்டுப்பட்டவனே. இந்த பந்தத்திலிருந்து மோட்சம், விடுதலை பெறப் பற்பல பிறவிகளிலும் ஜீவன் உழைத்துப் போராடி கடைசியில் இறைவன் அருள் பெற்று அந்த விடுதலையைப் பெறுகிறான்.

ஒரு ஜீவன் ஞான அறிவு பெறும் வழிகள் மூன்று என்று மத்வர் கூறுகிறார். அவை
1. பிரத்யட்சம் - நேரடியனுபவமாகக் கண்டறிதல்.
2. அனுமானம் - ஒன்றை வைத்து ஒன்றை ஊகித்து உணர்ந்து அறிதல்.
3. ஆகமம் - சான்றோர்களின் அனுபவமாகிய என்றும் உள்ள வேத நூல்கள் படித்து அறிதல்.
இந்த மூன்று வழிகளாலும் உயர் ஞானம் பெற முடிகின்றது என்று மத்வர் கூறுகிறார்.

மத்வர் பகவத்கீதை, உபநிஷத்துகள், பிரும்ம சூத்திரம் ஆகிய மூன்றிற்கும் விளக்கமெழுதி அந்த விளக்கங்களிலும் த்வைத தத்துவத்தை நிலை நாட்டியுள்ளார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் முதலான 37  நூல்களை எழுதியிருக்கிறார். உடுபி கிருஷ்ணர் கோயிலைக் கட்டியவர் இவரே. இன்றும் அவர் ஏற்படுத்திய அஷ்ட மடங்களின் குருமார்களே அங்குள்ள கிருஷ்ணர் விக்கிரகத்திற்குப் பூஜை செய்து வருகிறார்கள்.

இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

மத்வருக்குப் பின் வந்தவர்களில் அன்னாரின் கொள்கையைப் பரப்பி புகழ்பெற்று நிறுத்தியவர் ராகவேந்திர சுவாமிகள் ஆவார். அவரும் த்வைதக் கொள்கையை விளக்கி நூல்கள் இயற்றியுள்ளார். தனது திறமையான வாதங்களால் மாறான கருத்துக்கள் கொண்ட அறிஞர்கள் பலரை வென்றுள்ளார்.

அத்வைத சிந்தனைகள் பாமர மனிதனின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எட்டாத போது அவனுக்குப் புரிகிற விதமாய் த்வைதம் என்ற ஆன்மிக தத்துவத்தை உபதேசித்து பாரத தேசத்தில் ஆன்மிக ஞானம் நீடிக்க வழிவகுத்த பெருமை மத்வருக்கு என்றும் உண்டு.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -30-07-2013


10 comments:

 1. I am not sure whether he is a yogi or just a worshipper. His points are more of worshippnig in nature.

  ReplyDelete
 2. ஆன்மீகப் பகிர்வுகளில் அசத்தல் தொடர்கிறது....
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. // அறிவோனும், அறியப்படும் பொருளும் இன்றி எப்படிப்பட்ட அறிவும் சாத்தியமில்லை என்பது மத்வரின் வாதமாக இருந்தது. ஆகவே அவர் ஐம்புலன்களாலும் உணரப்படும் இந்த உலகம் உண்மை என்றார். // - மிகவும் ஆழமாக சிந்திக்கவைக்கும் விளக்கம்... தொடரவும்...

  நன்றி !

  ReplyDelete
 4. உங்களின் மூலம் மத்வாச்சாரியார் என்ற மகானை பற்றியும் த்வைதம் பற்றியும் அறிந்துகொண்டோம். அவரது கொள்கையைப் பரப்பி புகழ்பெற்று நிறுத்தியவர் ராகவேந்திர சுவாமிகள் என்ற அரிதான தகவலையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  இந்த கட்டுரையில் எனக்கு ஒரு இடத்தில் சரியான புரிதல் தேவைபடுகிறது.
  ஒரு ஜீவன் ஞான அறிவு பெறும் வழிகள் மூன்று என்பது படிகளாக இருக்குமோ ?
  ஆகமம் மூலமாகவே அனுமானத்திற்கும், அனுமானம் மூலமாகவே அடுத்த நிலையான பிரத்யட்சத்திற்கும் செல்லமுடியும் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் மூன்றில் ஏதாவது ஒரு வழியில் சென்றாலே ஞான அறிவை அடையமுடியுமா? என்னுடைய புரிதலில் தவறு இருப்பின் தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

  இன்றைய அறிவில்
  அன்பு வாசகன்,
  பா.சரவணக்குமார்

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் நினைத்தது சரியே. ஆகமம் ஆரம்பக்கட்டம் (கேட்டும் படித்தும் அறிதல்). அனுமானம் இரண்டாம் கட்டம் (கேட்டதை வைத்து சிந்திப்பதாலும், அனுபவத்தாலும் அறிவது). பிரத்தியட்சம் மூன்றாவது கட்டம் (தானாக நேரடியாக அறிவது). முதலிரண்டு கட்டம் கடக்காமல் மூன்றாவது கட்டம் அடைவது கஷ்டம் தான்.

   மூன்று வழிகளிலும் ஞானம் அடைய முடியும் என்று மத்வர் கூறினாலும் பிரத்யட்சத்தில் தெளிவாகத் தெரிவது போல சந்தேகம் சிறிதும் இல்லாமல் புரிந்து கொள்வது மற்ற வழிகளில் சாத்தியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மற்ற வழிகளில் சந்தேகத்திற்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் சிறிதாவது இடம் இருக்கிறது. ஆனாலும் அவற்றிலும் கூட ஞானம் ஓரளவு பெறுவது சாத்தியமே. முழுமையும் அசைக்க முடியாத உறுதியும் பிரத்யட்சத்தில் மட்டுமே உண்டு.

   Delete
  2. தங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி.

   Delete
 5. Dear Mr Ganesan,my mind is also accepting only த்வைதம். Sri Madhawachariyar explained by giving five different reasons to accept the same. But Sir, Would you please kindly explain me how come our Sri Paramacharyal ( No doubt, HE is great Mahan) is not getting convinced this point. Definitely JEEVATHMA and PARAMATHMA are different. This can not be same. I fee just because SRI ADISANAKARAR the followers followed should have followed without any logic. Am I right. Kindly clarify

  Suresh

  ReplyDelete
 6. Dear Mr Ganesan, I also agree with த்வைதம். Definitely Jeevathma and Paramathma can not be same. That too Sir Madhwacharyal has explained by giving five excellent reasons for த்வைதம்.When we ordinary people can accept this logic,. how come the SRI PARAMACHARYAL is not convinced of this logic. Could you please clarfily this point...

  ReplyDelete
  Replies
  1. Please read ”மூன்றும் உண்மைகளே”
   http://enganeshan.blogspot.in/2013/10/blog-post_21.html

   Delete
 7. Nothing to comment, always scope to learn

  ReplyDelete