என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, October 21, 2013

மூன்றும் உண்மைகளே!

அறிவார்ந்த ஆன்மிகம்-23

த்வைதம் உபதேசித்த ஆதிசங்கரரும், த்வைதம் உபதேசித்த மத்வரும், விசிஷ்டாத்வைதம் உபதேசித்த ராமானுஜரும் மகா ஞானிகள். வேதங்களில் கரை கண்டவர்கள். பகவத்கீதைக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதியவர்கள். ஆனால் அவர்கள் உபதேசங்களோ ஒன்றிற்கு ஒன்று மாறாக இருந்தன. இந்த மூவரும் காட்டிய மூன்று வழிகளில் எது சரியான வழி?

இவை மூன்றும் உண்மைகளேஇந்த தத்துவ சித்தாந்தங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக நமக்குத் தோன்றலாம். இப்படி முரண்பாடுகளாகத் தோன்றுவது ஒரு மாபெரும் உண்மையைப் பார்க்கின்ற கோணங்கள் வேறு வேறாக இருப்பதால் ஏற்படக்கூடிய நிலைகள் என்றே நாம் சொல்ல வேண்டும்.

நம் தினசரி வாழ்க்கையிலேயே இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். மனிதனுடைய தினசரி வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் உண்மையாக இருக்கின்றன. மனிதன் விழித்திருக்கையில் பல வேலைகளைச் செய்கிறான். அப்போது அவன் வேறு, மற்றவர்கள் வேறு, இந்த உலகம் வேறாக இருக்கிறது. அது த்வைத நிலை. உறங்கும் போது கனவு காண்கிறான். கனவில் தென்படும் மனிதர்களும் உலகமும் வேறு வேறாகத் தோன்றினாலும் உண்மையில் அவை தனியாக இல்லை. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. அது விசிஷ்டாத்வைத நிலை.  பிறகு கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் வருகிறது. அதில் அவனைத் தவிர எதுவுமில்லை. உலகம் இல்லை, மற்றவர்கள் இல்லை. அது அத்வைத நிலையாகும்.

மனித வாழ்க்கையிலும் அவன் அடையும் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப இந்த மூன்று வேதாந்த உண்மைகளும் சரியாக இருக்கின்றன. ஆரம்ப நிலையில் மனிதன் எல்லாவற்றையும் வேறு வேறாகவே காண்கிறான். தன்னையும் அவனால் மிக உயர்வாக நினைக்க முடிவதில்லை. “நீ பிரம்மம், சக்தி உடையவன் என்று மற்றவர்கள் போதித்து அவன் நம்ப ஆரம்பித்தாலும் கூட பிரச்சினை என்று ஒன்று வரும் போது அவன் பிரம்மமாக பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. கேட்டதும், படித்ததும் காற்றாய் பறந்து விட அவன் நிலைகுலைகிறான், பரிதவிக்கிறான்.  அந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அதிலிருந்து விடுபட அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. இறைவன் தேவைப்படுகிறான். அவனைப் பக்தியுடன் வேண்டுவது சிக்கலான சமயங்களில் அவனுக்கு மிகவும் அவசியமாகிறது. இது த்வைத நிலை.

இந்த த்வைத நிலையில், அவன் சாதாரண மனிதனாக இருக்கையில், அவனைக் காப்பாற்றுவது பக்தியே. அவன் ஒரு போதும் பிரம்மம் அல்ல. அவன் ஜீவாத்மா. வாழ்க்கையை நடத்தவும், மேல் நிலைக்கு உயரவும் பரமாத்மாவின் திருவருள் அவனுக்குத் தேவைப்படுகிறது. பக்தியுடன் அவன் இறைவனின் உயர்வை எண்ணுகிறான், பேசுகிறான், அந்த நினைவுடனேயே நடந்து கொள்கிறான்.

இந்த த்வைத நிலையில் முறையாகவும், ஆத்மார்த்தமாகவும் நடந்து கொள்பவனுக்கு விசிஷ்டாத்வைத நிலை சித்திக்கின்றது. எதைப் பற்றி அதிகம் நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகின்றோம் என்பது உயர்ந்த மனோதத்துவ விதி. இறைவனின் திருக்குணங்களை அதிகம் நினைக்கையில், அதைப் பாடியும் சொல்லியும் மகிழ்கையில் நம்மை அறியாமல் இறைவனது தன்மைகளிலும் சக்திகளிலும் மனிதன் சிறிதளவாவது பெற்று விடுகின்றான்.

இந்த விசிஷ்டாத்வைத நிலையில் மனிதன் தெய்வீக குணங்களை ஓரளவு அடைகிறான். அறியாமை திரை விலகப் பெற்று தனக்குள் இருக்கும் இறைவனை அவ்வப்போதாவது உணர ஆரம்பிக்கிறான். அவனுடைய அந்தராத்மா சாதாரணங்களில் திருப்தி கொள்ளாமல் உயர் நிலைகளில் அதிக ஆர்வம் கொள்ள ஆரம்பிக்கின்றது. இப்போது பிரச்சினைகளை சந்திக்கையில் பழையது போல் அல்லாமல் ஓரளவு கட்டுப்பாடுடனும், நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அவற்றை அணுக ஆரம்பிக்கின்றான். அவன் பக்தியின் வலிமை கூடுகிறது.  இறைவனிடம் சரணாகதி அடைந்து அந்த நம்பிக்கையில் நிம்மதியாக அவனால் இருக்க முடிகிறது.

இந்த விசிஷ்டாத்வைத நிலை அடுத்த நிலையான அத்வைத நிலைக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. தன்னில் அவ்வப்போது இறைநிலையை உணர ஆரம்பிப்பது சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே போகிறது. நதி நீர் கடலில் சங்கமித்து கடலாகவே மாறி விடுவது போல ஒரு முடிவு நிலையில் அவன் பரமாத்மாவில் ஒன்றி விடுகிறான். அதற்குப் பிறகு என்ன நேர்ந்தாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. செய்ய வேண்டியவற்றை பற்றில்லாமல் செய்து விளைவுகளை ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது. வெகுசிலரே அந்த முழுமை நிலையை அடைய முடியும் என்றாலும் அதுவே நம் வேதாந்தங்கள் பெருமைப்படுத்தும் உன்னத கடைநிலை.

விவேகானந்தர் கூறுகிறார். “ஆன்மா எல்லா சக்திகளும் நிறைந்தது. ஆன்மாவின் இயல்பை அறியும்போது சிறிதும் வலிமையற்றவர்களுக்கும், மிகவும் இழிவானவர்களுக்கும்,  மிகவும் துன்பப்படும் பாவிகளுக்கும் கூட நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை இழக்காதீர்கள் என்றே நம் சாஸ்திரங்களும் முழங்குகின்றன. நீ என்ன செய்தாலும் நீதான் உன் இயல்பைக் மாற்ற உன்னால் முடியாது. இயற்கையே இயற்கையே அழிக்க முடியாது. உங்கள் இயல்பு தூய்மையானது. அது லட்சக்கணக்கான  யுகங்களாக மறைக்கப்பட்டு இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது வென்று மேலே வந்தேதீரும். எனவே அத்வைதம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையைக்கொண்டு வருகிறது. நம்பிக்கையை இழக்காதீர்கள்.

இந்த மூன்று மார்க்கங்களையும் பற்றிப் படித்துக் குழப்பமடைந்த ஒரு பக்தர் ரமண மகரிஷியைப் பார்க்கச் சென்றார். போகும் போது ரமண மகரிஷிக்குத் தர ஒரு பெரிய மாம்பழம் கொண்டு போயிருந்தார். அதைத் தந்துவிட்டு ரமண மகரிஷியை அவர் வணங்கினார்.  

அந்த மாம்பழத்தை வாங்கிய ரமண மகரிஷி அதையே பிரசாதமாய் அந்தப் பக்தரிடம் தந்து விட்டார். அவர் திருப்பிக் கொடுத்து விட்டாரே என்று ஒருபுறம் பக்தருக்கு வருத்தம். மறுபுறம் அவர் கையால் பிரசாதமாக அது கிடைத்ததே என்று மகிழ்ச்சி.

 “பகவான்,  நீங்கள் பக்தர்களிடம் த்வைதம், அத்வைதம் என்றெல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் அதிகம் படிப்பறில்லாதவன். எனக்கு இந்த வேத, வேதாந்தம் எல்லாம் புரியாது. ஒன்றுமே படிக்காத, தெரிந்து கொள்ளும் சக்தி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் ஞானம், மோட்சம் எல்லாம் கிடைக்குமா? நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று வருத்தத்துடன் அவர் ரமண மகரிஷியைக் கேட்டார்.

உடனே பகவான், “இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்?  த்வைதம்என்றால் என்ன? ’ இரண்டுஎன்று அர்த்தம். நீ இருக்கிறாய். இதோ இந்த மாம்பழம் இருக்கிறது. நீ வேறு, இந்தப் பழம் வேறு இல்லையா? அதுதான் த்வைதம்’. இதோ இந்தப் பழத்தை நீ சிறிது வாயில் போட்டுக் கொண்டு விட்டாய் என்று வைத்துக் கொள். இப்போது பழம் உன்னுள் இருக்கிறது. நீயும் பழமும் ஒன்றாக இருக்கிறீர்கள். ஆனாலும் முழுவதுமாக ஒன்றில்லை. அதுதான் விசிஷ்டாத்வைதம்’. இந்தப் பழம் உன் வயிற்றுக்குள் போய் நன்றாக ஜீரணமாகி விட்டது என்று வைத்துக் கொள். இப்போது உனக்குள் பழம் இரண்டற ஒன்றாகக் கலந்து விட்டது. நீயும் பழமும் ஒன்றாகி விட்டீர்கள். இதுதான் அத்வைதம். இந்த மாதிரி தத்துவத்தையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல்,  இறை பக்தியோடு உன் கடமைகளையும் ஒழுங்காகச் செய்து வா. உனக்கு ஞானமும் மோட்சமும் கிடைக்கும்என்று ஆசிர்வதித்தார் ரமண மகரிஷி.

அந்தப் பக்தருக்கு எப்படிப் புரியுமோ அப்படி அவர் கொண்டு வந்த மாம்பழத்தை வைத்தே மூன்று வேதாந்த மார்க்கங்களையும் ரமண மகரிஷி அருமையாக விளக்கி இருக்கிறார்.  இப்போது இந்த மூன்று வழிகளின் அடிப்படை அம்சங்களும் வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். இந்த மார்க்கங்கள் நம் அறிவுக்குப் பிடிபடுகிறதோ இல்லையோ, ரமண மகரிஷி சொன்னது போல நாம் இறை பக்தியோடு நம் கடமைகளையும் ஒழுங்காகச் செய்து வருவது மிக முக்கியம்.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 13-8-2013


7 comments:

 1. மனித வாழ்வை வைத்தே நீங்கள் சொன்ன உவமானமும், ஸ்ரீ ரமண மகரிஷி மாம்பழத்தை சொன்ன விளக்கமும், மிகவும் அருமை. மிக்க நன்றி.

  ReplyDelete
 2. வணக்கம்
  பதிவும் அதற்கான விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அத்வைதம்... த்வைதம் குறித்து அறிந்து கொள்ள ஒரு அருமையான ஆன்மீகப் பகிர்வு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நல்ல தத்துவ பகிர்வு.. நன்றிகள் பல...

  ReplyDelete
 5. good explanation of concepts
  - Rajaram

  ReplyDelete
 6. nice explanation by Bhagavan Ramana maharshi.. it's very easy to understand the differences.... for people like me .. :)

  ReplyDelete