வெளியே லேசாகப் பனி பெய்து கொண்டிருந்தது.
மூன்று கார்கள் தயார் நிலையில்
வேதபாடசாலையின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்தன. ஒன்று பாபுஜியின் கார்.
மற்றொன்று ஜான்சன் ஒரு மாத வாடகைக்கு எடுத்திருந்த கார். மற்றொன்று குருஜியின்
கார்.
விசேஷ மானஸ லிங்கத்தை குருஜியின் காரிலேயே
கொண்டு போவது என்று தீர்மானித்திருந்தார்கள். குருஜியின் டிரைவர் அவரிடம் முப்பது
வருடங்களுக்கு மேலாக வேலை செய்கிறான். நம்பிக்கைக்குரியவன். அந்தக் காரில் கணபதி
சிவலிங்கத்துடன் செல்வது என்றும் குருஜி பாபுஜியின் காரில் செல்வது என்றும் முடிவு
செய்யப்பட்டிருந்தது.
வேதபாடசாலை ஒரு தெருவின் கடைசியில் இருந்தது.
அதற்குப் பின் வழியோ, வேறு வழிகளோ இல்லை. வேதபாடசாலையின் முகப்பு, நடக்கப் போகும்
நிகழ்ச்சிக்கான அறிகுறிகள் எதையும் காண்பிக்காமல் அமைதியாக இருந்தது. அதிகாலையின்
வேதகோஷங்கள் கேட்ட வண்ணம் இருந்தது.
பாபுஜி தான் நியமித்திருந்த டிடெக்டிவ் ஏஜென்சி
நபரிடம் இப்போது கண்காணிக்கும் போலீஸ் ஆட்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கெங்கு
இருக்கிறார்கள் என்று கேட்டார். வேதபாடசாலையின் மெயின் கேட்டில் இருந்து ஐம்பது
அடி தூரத்தில் பைக்கில் சாய்ந்து கொண்டு பத்திரிக்கை படித்துக் கொண்டு ஒருவன்
இருப்பதாகவும், இருநூறாவது அடி அருகில் வலது பக்கம் உள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில்
பைனாகுலர் வைத்துக் கொண்டு ஒருவன் நிற்பதாகவும், வேதபாடசாலை உள்ள தெரு முடிந்து
மெயின் ரோட்டுடன் இணையும் இடத்தில் ஒருவன் பைக்கில் இருப்பதாகவும் அவன் மூலம்
தெரிந்தது.
கணபதி தயாராக இருக்கிறான் என்பதை அறிந்து
கொண்டு வெளியே வந்த குருஜியிடம் பாபுஜி அந்தத்
தகவலைச் சொன்ன போது குருஜி தலையசைத்தார். பாபுஜிக்குத் தான் பரபரப்பு தாங்கவில்லை.
அந்த உதயன் சுவாமி என்ன மேஜிக் செய்வார் என்ற ஆர்வமும், அவரால் ஏதாவது செய்ய
முடியுமா என்ற சந்தேகமும் அந்த நேரத்திலும் பாபுஜிக்கு இருந்தது.
மற்ற ஏற்பாடுகளையும் ஒரு முறை மேற்பார்வை
பார்த்து விட்டு குருஜி தன் நண்பன் உதயனை நினைத்துக் கொண்டார். ’நாங்க கிளம்பப்
போகிறோம் உதயா”
ஜான்சனையும், பாபுஜியையும் பார்த்துத்
தலையசைத்த குருஜி தன் காரை சிவலிங்கம் இருக்கும் கட்டிட வாசலுக்குக் கொண்டு வர
உத்தரவிட்டு விட்டு கணபதியிடம் போய்ச் சொன்னார். “நல்லா கடவுளை வேண்டிகிட்டு
சிவலிங்கத்தை எடுத்துக்கோ”.
கணபதி முதலில் பிள்ளையாரை நினைத்து மானசீகமாய்
வணங்கி விட்டு பின் சிவலிங்கத்தையும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டு
சிவலிங்கத்தைத் தூக்கினான். சிவலிங்கம் கனத்தது.
குருஜி அவன் முகத்தைப் பார்த்தே புரிந்து
கொண்டு கேட்டார். “ரொம்பவே கனக்குதா கணபதி? தூக்கிட்டு வர முடியும் இல்லையா?”
”அப்படி ஒன்னும் பெரிய கனமில்லை. தாராளமா தூக்கிட்டு வர
முடியும்” என்று சொன்ன கணபதி மனதிற்குள் சிவனிடம் சொல்லியபடியே
நடக்க ஆரம்பித்தான். “என்ன இப்படி கனக்கிறே? என் மானத்தை வாங்கிடாதே. மூச்சு வாங்குது. நான் என்ன பயில்வானா?”
திடீரென்று சிவலிங்கம் கனம் குறைந்த மாதிரி
இருந்தது. கணபதி புன்னகைத்தான். “சமத்து”. பின்
அதற்கு அறிவுரையும் சொன்னான். “இப்படியே தான் அவங்க ஆராய்ச்சி செய்யறப்பவும் சமத்தா
இருக்கணும் சரியா?”
காரில் சிவலிங்கத்துடன் கணபதி உட்கார்ந்து
கொண்டான். வெளியே பனிமூட்டம் அதிகமாக ஆரம்பித்தது. குருஜி முன்புற மெயின் கேட்டைத்
திறந்து வைக்க உத்தரவிட ஒருவனுக்கு சைகை செய்தார்.
முதலில் பாபுஜியின் கார் செல்ல சிவலிங்கம்
இருந்த குருஜியின் கார் பின் தொடர அதற்கும் பின்னால் ஜான்சன் கார் சென்றது. மூன்று
கார்களும் வேதபாடசாலையின் மெயின் கேட்டை அடைந்த போது மெயின் கேட்டே பனிமூட்ட
இறுக்கத்தால் மெல்லியதாய் தான் தெரிந்தது.
பாபுஜியின் டிரைவருக்கு முன்புறம் நான்கடிகள்
மட்டும் வழி நன்றாகத் தெரிந்தது. கார்கள் வெளியேறின.
திடீரென்று பனிமூட்டம் அதிகமாகியதால் முதலில்
பைக்கில் இருந்த போலீஸ்காரனுக்கும் சில அடிகள் தள்ளி ஒரு மொட்டை மாடியில்
பைனாகுலரை வைத்துக் கொண்டு நின்றிருந்த அடுத்தவனுக்கும் ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.
மெயின் கேட் திறந்ததும், கார்கள் வெளியே வந்ததும் ஏக காலத்தில் நிகழ்ந்திருந்தன.
வேதபாடசாலையையும், அங்கு குருஜி இருந்தால் அவர் நடவடிக்கைகளையும் கண்காணிக்கிற
வேலையை ஏற்று முந்திய நாள் மாலையில் தான் வந்த அவர்களுக்கு வெளியே வரும் கார்களில்
குருஜி இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும் முதலாம் போலீஸ்காரன் பைக்கில் பின்
தொடர எண்ணி ஸ்டார்ட் செய்தான். பைக் ஸ்டார்ட் ஆக மறுத்தது. உடனடியாக அவன்
தெருக்கோடியில் இருந்த தன் சகாவிற்குப் போன் செய்தான். அவன் அங்கே போன் எடுத்த போது
பனிமூட்டம் மிக அதிகமாக இருந்தது. கார் விளக்கொளி அவன் அருகே லேசாகத் தெரிந்தது. அவன்
போன் எடுத்து ”ஹலோ” சொன்ன போது டவர் கிடைக்காததால் சத்தம் எதுவும் கேட்கவில்லை. சில
ஹலோக்களுக்கு பதில் எதுவும் இல்லாமல் போகவே உள்ளுணர்வு உந்த அவன் பைக்கை ஸ்டார்ட்
செய்தான். அதற்குள் மூன்று கார்களும் அவனைக் கடந்திருந்தன.
பனி அவனை மேலும்
நன்றாக மூட அவனுக்கு சுத்தமாக எதையும் பார்க்க முடியவில்லை. தெருக்கோடியில்
பனிப்புகை குவியலாக இருந்ததே ஒழிய அதைக் கடந்த பின் சுத்தமாகப் பனி இருக்கவில்லை.
தெருக்கள் தெளிவாகத் தெரிந்தன. மெயின் ரோட்டில் போய்க் கொண்டிருந்தவர்கள் அந்தக்
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பனி மூடிக் கொண்டிருந்ததை ஆச்சரியத்துடன்
பார்த்தார்கள்.
பாபுஜி நம்ப
முடியாமல் பிரமிப்புடன் குருஜியைப் பார்க்க குருஜி புன்னகைத்தார். ஜான்சனும் இந்த
அற்புதக் காட்சியில் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தார்.
வேதபாடசாலை இருந்த
தெருக்கோடியில் இரண்டு நிமிடங்கள் நீடித்த பனி மெல்ல விலக ஆரம்பித்தது... எல்லாம்
தெளிவாகத் தெரிய ஆரம்பித்த போது சிவலிங்கம் நிறைய தூரம் சென்றிருந்தது.
பார்த்தசாரதிக்குத் தகவல் வந்த போது காலை மணி 6.06. எல்லாவற்றையும்
கேள்விப்பட்ட அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஈஸ்வர் சொன்னது போல் அந்த சிவலிங்கம் வேதபாடசாலையில்
இருந்திருந்தால் கண்டிப்பாக இப்போது வெளியே போன கார்களில் அது இருந்திருக்கும்
என்பது புரிந்தது. வெளியே போன கார்களின் எண்களைக் கூட போலீஸ்காரர்களால் பார்க்க
முடிந்திருக்கவில்லை. குருஜியின் சொந்தக் காரும் அதில் இருந்திருக்கலாம்,
இல்லாமலும் இருக்கலாம். குருஜி சம்பந்தப்படாமல் வேறு நபர் சம்பந்தப் பட்டிருந்தால்
போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்குப் போன் செய்து அந்த சுற்று வட்டாரத்தில் அவர் கார்
இருக்கின்றதா என்று பார்த்து பின் தொடரச் சொல்லி இருக்கலாம். ரகசியமாய் செய்ய
வேண்டிய இந்த சூழ்நிலையில் அதுவும் முடியாது. பார்த்தசாரதி பெருமூச்சு விட்டார்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் எதுவும் சாதாரணமாய் இல்லை....
ஆனந்தவல்லி
மகனிடம் கேட்டாள். “ஏண்டா, தென்னரசு பொண்ணு விஷாலியைப் பத்தி என்ன நினைக்கிறே?”
பரமேஸ்வரன் அவளைப்
பற்றி பெரிதாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. ஆனாலும் நல்ல பெண்ணாகத் தான் அவள்
தெரிந்தாள். தாயிடம் சொன்னார். “நல்ல பொண்ணு தான். ஏன் கேட்கிறே?”
“ஈஸ்வர் அந்தப்
பொண்ணைக் காதலிக்கிறான்” ஆனந்தவல்லி அறிவித்தாள்.
பரமேஸ்வரன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அந்தப் பொண்ணு இங்க
வந்தப்ப அவள் கிட்ட அவன் பேசின மாதிரி கூடத்
தெரியலையே”
”அவங்களுக்குள்ளே ஏதோ சண்டை மாதிரி தெரியுது”
“அந்தப் பொண்ணு
கூட ஒரு நாளோ ரெண்டு நாளோ தான் ஈஸ்வர் பழகி இருப்பான் போலத் தெரியுது. நீ என்னடான்னா அதுக்குள்ளே காதலுன்னும்
சொல்றே, சண்டைன்னும் சொல்றே”
“காதலிக்கவும்,
சண்டை போடவும் இந்தக் காலத்துல ரெண்டு நாளே அதிகம் தான்...”
ஆனந்தவல்லியின்
பார்வை கூர்மையானது. அவள் பார்வைக்கு அவ்வளவு சுலபமாக எதுவும் தப்பாது. அதனால்
அவள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம் என்று நினைத்த பரமேஸ்வரனுக்கு இப்போது தான்
அந்தப் பெண்ணிடம் ஆனந்தவல்லி நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது ஏன் என்பது புரிந்தது.
அவர் புன்னகைத்தார்.
“நீ மெல்ல அவன்
கிட்ட என்ன பிரச்சினைன்னு கேட்டுப் பார்” என்றாள் ஆனந்தவல்லி.
பரமேஸ்வரன் தர்மசங்கடத்துடன் கேட்டார். “நானெப்படி அதைக் கேட்கிறது?”
“நீயும் அவனும் தான் இப்ப நகமும் சதையுமா ஆயிட்டீங்களே.
கேட்டுப்பார். சொன்னாலும் சொல்வான். நான் கேட்டா சொல்ல மாட்டான்....”
பரமேஸ்வரன்
உறுதியாய் சொன்னார். “அதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். அதில் எல்லாம் நாம
தலையிடக் கூடாது. எனக்கு சங்கர் விஷயத்தில் தலையிட்ட்திலயே பெரிய பாடம் கிடைச்சுடுச்சு.
உண்மையாகவே காதலிச்சாங்கன்னா தானா சரியாயிடுவாங்க. இல்லைன்னா அவங்க நிஜமா
காதலிக்கலைன்னு அர்த்தம்”
ஆனந்தவல்லி
சொன்னாள். “அவங்க கல்யாணம் செய்துகிட்டு குழந்தை ஒன்னைப் பெத்துக் குடுத்தா அதுகூட
கொஞ்ச நாள் இருந்துட்டுக் கண்ணை மூடலாம்னு பார்க்கறேன். அவங்க தானா சரியாகிறது
எப்ப, நான் ஆசைப்படறது எல்லாம் நடக்கிறது எப்ப?”
பரமேஸ்வரன்
கிண்டலாகத் தாயிடம் கேட்டார். “அப்படின்னா உனக்கு இப்ப சாகிற உத்தேசம் இல்லை?”
ஈஸ்வர் வந்த
பிறகு எல்லோரும் கிண்டல் செய்யப் பழகி விட்டார்கள் என்று நினைத்தபடி ஆனந்தவல்லி
மகனிடம் உறுதியாய் சொன்னாள். “இல்லை.”
சிறிது
சிந்தனைக்குப் பிறகு பரமேஸ்வரனிடம் சொன்னாள். “உன் பொண்ணு கிட்ட கூட அவன் நிறையவே
பிரியமாய் இருக்கான். அவ கேட்டா மனசு விட்டுச் சொன்னாலும் சொல்வான். ஆனா உன்
பொண்ணுக்குச் சொல்லி புரிய வைக்கிறதே கஷ்டம். அது மண்ணு மாதிரி. அதுக்கு நெளிவு
சுழிவு பத்தாது”
மகளைச்
சொன்னவுடன் பரமேஸ்வரன் ஆனந்தவல்லியை முறைத்தார். “இருக்கிறதைச் சொன்னா ஏண்டா
முறைக்கிறே”
அன்று காலை
சாப்பிடும் போது மகேஷைத் தவிர அனைவரும் இருந்தார்கள். ஈஸ்வர் மகேஷைக் கேட்க பரமேஸ்வரன்
சொன்னார். “அவன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கோவா போறாங்களாம். அப்படியே ஷிர்டி, சனி
சிக்னாப்பூர் எல்லாம் போயிட்டு வர்றாங்களாம். ஒரு வார டூராம். நானும் போகட்டுமான்னு
கேட்டான். போயிட்டு வான்னேன்....”
ஆனந்தவல்லி
ஈஸ்வரைப் பார்த்தபடியே மீனாட்சியிடம் கேட்டாள். “ஏண்டி அந்தப் பொண்ணு விஷாலி
எப்படி இருக்கா?”
ஈஸ்வர் சலனமே
இல்லாமல் அவளைப் பார்த்தான்.
மீனாட்சி
சொன்னாள். “நல்லா இருக்கா. காலைல தான் பேசினேன். அவளோட அப்பாவும் இன்னைக்குக்
காலைல தான் எதோ வேலையா டெல்லிக்குக் கிளம்பிப் போனாராம்... வர அஞ்சாறு நாளாகுமாம்”
“ஏண்டி அப்ப
அந்தப் பொண்ணு அங்கே தனியாவா இருக்கு”
“ஆமா. பின்ன
வேற யார் இருக்கா அவங்க வீட்டுல”
“பேசாம நம்ம வீட்டுக்கு வந்து தங்க வேண்டியது தானே.” என்று ஆனந்தவல்லி சொல்ல மீனாட்சி பேராச்சரியத்துடன்
பாட்டியைப் பார்த்தாள்.
ஆனந்தவல்லி சொன்னாள்.
“நீ போன் பண்ணிக் கூப்பிடு. இல்லாட்டி போன் பண்ணி என் கிட்ட குடு. நான் பேசறேன்”
ஈஸ்வருக்கு
பாதிப்பே இல்லாமல் இருக்க முடியவில்லை. எரிச்சலுடன் ஆனந்தவல்லியைப் பார்த்தான். ஆனந்தவல்லி
அவனைப் பொருட்படுத்தவில்லை.
மீனாட்சி
விஷாலிக்குப் போன் செய்தாள். “ஹலோ விஷாலி.... எப்படி இருக்கே?... நீ தனியா அங்கே
இருக்கறதுக்கு பேசாம இங்கேயே வந்து தங்கிடலாமேன்னு பாட்டி சொல்றாங்க....”
பின் விஷாலி
சொன்னதைக் கேட்டு விட்டு மீனாட்சி பாட்டியிடம் சொன்னாள். “அவ வரலைங்கறா...”
ஆனந்தவல்லி
பரமேஸ்வரனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள். ‘இது தான் உன் பொண்ணு. சொன்னா
கோவிச்சுக்கறே.’ பின்
மீனாட்சியிடம் இருந்து போனை வாங்கி தானே பேசினாள்.
”ஏம்மா வர தயக்கப்படறே. இது புது இடமா என்ன? இது உன் வீடு மாதிரி. காலம் கெட்டுக்
கிடக்கு. ஒரு நாள் ரெண்டு நாள்னாலும் பரவாயில்லை. உங்கப்பா திரும்பி வர அஞ்சாறு
நாள் ஆகும்னு மீனாட்சி சொல்றா. உடனே கிளம்பி வா. சொல்றேன்..”
விஷாலி என்ன
சொல்வது என்று யோசித்து விட்டு சொன்னாள். “இங்கே அக்கம் பக்கத்துல எல்லாம் நல்ல
ஆள்கள் இருக்காங்க. பயமில்லை பாட்டி”
“ஏம்மா. என்
வயசுக்காவது மரியாதை தர வேண்டாமா? இத்தனை வயசானவ கூப்பிடறேன்.....”
பேச்சு இந்த
வகையில் போவதைப் பார்த்து தர்மசங்கடப்பட்ட விஷாலி வேறு ஒரு உபாயம் கண்டுபிடித்துச்
சொன்னாள். “அப்பா எதாவது சொல்வார் பாட்டி”
“அதானா
பிரச்னை. உங்கப்பன் கிட்ட நான் பேசறேன் விடு” என்று சொல்லி விட்டு போனை மீனாட்சியிடம் கொடுத்து ”தென்னரசுக்குப் போன் போடும்மா” என்றாள்.
ஈஸ்வர்
எரிச்சலுடன் ஆனந்தவல்லியைக் கேட்டான். “என்ன அவள் மேல அப்படி ஒரு திடீர் அக்கறை
உங்களுக்கு. இதுக்கு முன்னாடி இப்படி இருக்கலையே”
ஆனந்தவல்லி சளைக்காமல் பதில் சொன்னாள். “காலம் மாறுறப்ப நாமளும் மாறுறோம்.
ஒரு காலத்துல நீ உன் தாத்தா கிட்ட கோவமா இருந்தே. இப்ப உங்க ரெண்டு பேரையும் தனியா
பார்க்கறதே அபூர்வமா இருக்கு. அந்த மாதிரி தான் இதுவும்னு வச்சுக்கோயேன்”
மீனாட்சி போன்
செய்த போது தென்னரசு அந்த போலீஸ்காரன் கண்ணில் இருந்து தப்பித்திருந்தார். குருஜி
சொன்னபடி கார் சரியான சமயத்தில் அவர் வீட்டுக்கு வந்திருந்தது. அவர் காருக்கும்
பின் தொடர்ந்த போலீஸ்காரனுக்கும் இடையில் சிறிது தூரத்திலேயே குறுக்காக ஒரு லாரி
வந்து ப்ரேக் டவுனாகி சாலையை அடைத்துக் கொண்டு நின்றது. தென்னரசுவை அந்தக்
கார்க்காரன் சில அடிகள் தூரத்தில் வேறொரு காரில் ஏற்றி விட தென்னரசு பிரச்னை இல்லாமல்
பயணித்துக் கொண்டிருந்தார். போனை எடுத்துப் பேசினார். “ஹலோ”
“ஹலோ அண்ணா,
நான் மீனாட்சி பேசறேன். எங்க பாட்டி பேசணும்கிறாங்க. ஒரு நிமிஷம்...”
தென்னரசுவிற்கு
ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. ஆனந்தவல்லி என்றுமே அவரிடம் பேசியவள் அல்ல.
ஆனந்தவல்லி
பேசினாள். “தென்னரசு சவுக்கியமா? நீ வெளியூர் போய் உன் மகள் தனியா அங்கே
இருக்கிறான்னு மீனாட்சி சொன்னா. இந்தக் காலத்துல வயசுப்பொண்ணு, அதுவும் அழகான
பொண்ணு” (சொன்ன
போது ஈஸ்வரைப் பார்த்தாள்) தனியா இருக்கறது பாதுகாப்பில்லை, எங்க வீட்டுக்கே
வந்துடுன்னு உன் பொண்ணு கிட்ட சொன்னேன். அப்பா சொல்லாமல் வர மாட்டேன்கிறாள். அதான்
உனக்கு போன் செஞ்சேன். நீயே உன் பொண்ணு கிட்ட சொல்லி இங்கே அனுப்பி வை”
தென்னரசு
எத்தனையோ முறை வெளியூர் சென்றிருக்கிறார். விஷாலி எத்தனையோ நாள் தனியாக
இருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இல்லாமல்.... “பரவாயில்லை பாட்டி. உங்களுக்கு
ஏன் வீண் சிரமம்”
“சிரமம் எல்லாம்
இல்லை. இந்த வீடு உனக்கென்ன அன்னியமாப்பா. டவுசர் போட்டிருந்த காலத்துல இருந்து
இங்கே வந்துகிட்டிருந்தவன் தானே நீ. சொன்னதைக் கேள். போன் செஞ்சு சொல்லி அவளை
அனுப்பி வை. சரியா” பதிலுக்குக் காத்திருக்காமல்
ஆனந்தவல்லி வைத்து விட்டாள்.
தென்னரசுவிற்கு
ஒன்றும் புரியவில்லை. இத்தனை தூரம் சொன்ன
பிறகு என்ன செய்வது. மேலும் இப்போது வரும் செய்திகளைப் பார்க்கையில் தனியாக விஷாலி
இருப்பது பாதுகாப்பில்லை தான். மகளுக்குப் போன் செய்து ஆனந்தவல்லி போன் செய்ததைச் சொன்னார்.
“போங்கப்பா.
நான் போகலை”
“அந்தக் கிழவி
என்னை டவுசர் போட்ட காலம் வரைக்கும் இழுத்துகிட்டு போயிடுச்சு. உன்னை அனுப்பற
வரைக்கும் என்னை விடாதும்மா. மீனாட்சி ஆண்ட்டி வீட்டுல இருக்கறதுல என்ன
பிரச்னைம்மா. போய் இரு. இவ்வளவு தூரம் சொன்னப்பறம் உன்னை அனுப்பாமல் இருக்க நான்
என்ன காரணம் சொல்ல முடியும், யோசிச்சுப் பார்”
அடுத்த
ஐந்தாவது நிமிடம் விஷாலிக்கு ஆனந்தவல்லியின் போன் வந்தது.
வேறு
வழியில்லாமல் விஷாலி சொன்னாள். “அப்பா சொல்லிட்டார். நான் வர்றேன் பாட்டி.”
“நல்லது.
வாம்மா. நான் உன்னைக் கூட்டிகிட்டு வர ஈஸ்வரை அனுப்பறேன்”
ஈஸ்வருக்குப்
பொறுமையைத் தக்க வைத்துக் கொள்வது பெரும்பாடாக இருந்தது.
விஷாலி அவசர
அவசரமாக மறுத்தாள். ”வேண்டாம் பாட்டி. அவருக்கு எதுக்கு வீண் சிரமம்.
அவருக்கு எத்தனையோ வேலை இருக்கும். நானே வந்துக்கறேன்”
“அவனுக்கு ஒரு
வேலையும் இல்லை. வருவான். வைக்கட்டா”
ஈஸ்வர்
ஆனந்தவல்லி மீது எரிந்து விழுந்தான். “நான் எனக்கு எந்த வேலையும் இல்லைன்னு உங்க
கிட்ட சொன்னேனா?”
“உனக்கு என்ன
வேலைடா இருக்கு?”
“ம்ம்...
பார்த்தசாரதி என்னை அவசரமாய் வரச் சொல்லி இருக்கார்”
“அந்த ஆளை முதல்ல
என்னை வந்து பார்க்கச் சொல்லு. உன் பெரிய தாத்தாவைக் கொன்னவங்களைக் கண்டுபிடிக்கச்
சொன்னா அந்த ஆள் உன் கிட்ட பேசிப் பொழுதைக் கழிக்கிறான்...”
ஈஸ்வருக்கு
இந்தப் பாட்டியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.
ஆனந்தவல்லி
கேட்டாள். “பைக்குல போறியா, கார்ல போறியா?”
ஈஸ்வர் அவளைக்
கடுகடுப்பாகப் பார்த்தான். ஆனந்தவல்லி அசராமல் கேட்டாள். “மகேஷ் இருந்திருந்தா அவனை அனுப்பிச்சிருப்போம். அவன் இல்லாததால தான் உன்
கிட்டே சொல்றேன். உனக்கு ஒன்னும் அவள்
கிட்ட சண்டை இல்லையே”
”எனக்கு அவள் கிட்ட சண்டை போட என்ன இருக்கு?” என்ற ஈஸ்வர் அங்கே இனியும் சிறிது நேரம் இருந்தால்
வெடித்து விடுவோம் என்று தோன்ற அங்கிருந்து கிளம்பித் தன்னறைக்குச் சென்றான்.
பரமேஸ்வரன் தாயிடம் சிரித்துக் கொண்டே
சொன்னார். “நீ அவன் பொறுமையை நிறையவே சோதிக்கிறே. கண்டிப்பா ஒரு நாள் உன்
கழுத்தைப் பிடித்து அவன் நெறிக்கப் போறான்”
ஆனந்தவல்லி கவலைப்படாமல் சொன்னாள். “அவன்
கிடக்கிறான் சின்னப் பையன். நான் எத்தனைய பார்த்துருப்பேன்....”
(தொடரும்)
-என்.கணேசன்
கிவலிங்கத்தோடு மூன்று கார்களும் வேதபாடசாலையின் மெயின் கேட்டை அடைந்த போது மெயின் கேட்டே பனிமூட்ட இறுக்கத்தாலும் ,
ReplyDeleteதென்னரசும் பிரச்னை இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்ததும் பிரமிக்கவைக்கிறது..!
very interesting as usual. man's pyshic powers are beautifully explained. Anandavalli is rocking.
ReplyDeleteசம்பவங்கள் சுவாரசியம் என்றால் கேரக்டர்கள் அதை விடவும் பிரமாதம். நான் என்ன பயில்வானா என்று கேட்கும் கணபதியும், எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்று கலாய்க்கும் ஆனந்தவல்லியும் ரசிக்க வைக்கிறார்கள்
ReplyDeleteNice pair Anandhavalli and Eeshwar
ReplyDeleteif it is scripted for cinema, we can nominate SUKUMARI to play Anandavalli Character.. it is so nice. As well as i noticed Sheeradi and SaniSignapur is inserted interestingly.. hope it is recent visit by Mr.NG
ReplyDeleteIt is true. Sukumari will neatly fit into the character. But she died in March.
DeleteSUPER STORY...
ReplyDeleteCool :) Nice characterization ...Keep it up ...
ReplyDeleteஅருமை அருமை நண்பரே ..,
ReplyDelete*** கார் பனி மூட்டத்தில் மறைந்தது அசால்ட்டான அற்புதம் ..,
*** and this episode went very simley coz of ஆனந்தவல்லி
அற்புதம் ..., தொடருங்கள் ..
Vadivukarasi comes to my mind whenever I hear Anandavalli character....Good going thanks for the reply.
ReplyDeleteyes. vadivukkarasi can do the character very well.
DeleteSir, Why dont you try to place like/unlike buttons near the reader's reply? Will be helpful...Thanks
ReplyDeleteநல்ல எழுத்து....
ReplyDeleteதொடருங்கள்... தொடர்கிறோம்....
Super characterization!!
ReplyDeleteToo suspance, we can't wait, please go fast...
ReplyDeleteஎங்களால முடியல சார் மிகவும் அருமை. ... .
ReplyDeleteGoing great.. waiting for next episode
ReplyDeleteஎன்னது டவுசர் போட்ட காலமா ? குபீர் என்று சிரித்துவிட்டேன் ! ஆனந்த வல்லி காதலர்களை நன்றாகத்தான் சிண்டு முடித்து விடுகிறாள் ! நகைச்சுவையும் காதலும் கலந்துள்ளது
ReplyDelete