சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 28, 2013

காயத்ரி மந்திரத்தின் மகிமை!

அறிவார்ந்த ஆன்மிகம் - 24

கவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். “மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்”.  அந்த அளவு சிறப்பு வாய்ந்தது காயத்ரி மந்திரம். இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று சொல்லப்படுகிறது. அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரம் இது.  

காயத்திரி மந்திரம் 24  அட்சர சக்திகள் கொண்டது. அவைகள் ஒலி வடிவானவை. காயத்ரி மந்திரத்தைப் பற்றி முழுவதுமாக அறியும் முன் ஒலியின் சக்தி பற்றியும், மந்திரங்களின் சக்தி பற்றியும் நாம் அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஒலிக்கு நிறைய ஆற்றல் உண்டு. அதுவும் தகுந்த இசையோடு உச்சரிக்கும் போது அதன் சக்தி அளப்பரியதாக மாறி விடுகிறது. இதை ஜெர்மானிய இசை வல்லுனரும், இயற்பியல் விஞ்ஞானியுமான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (Ernst Florence Friedrich Chladni)  (1756-1827) என்பவர். 1787 ஆம் ஆண்டு இவர் தனது கண்டுபிடிப்புகளை இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' (Discoveries in the Theory of Sound)' என்ற நூலாக எழுதி வெளியிட்டார். 

க்ளாட்னி தான் ஒலியியல் (acoustics)  என்ற புதிய இயலை வகுத்தார். உலகில் உள்ள  ‘இயற்பியல் பொருளை'  ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் பல சோதனைகள் மூலம் உலகிற்கு நிரூபித்தார்!  நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலினை நிறுத்தி  அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இசை பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!  இவற்றை அவர் தொகுத்தார். அந்த தட்டுகளும் க்ளாட்னி ப்ளேட்ஸ் என்று உலகப் புகழ் பெற்றன.

இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர்.

ஆனால் இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது முனிவர்கள் முன்பே மிகவும் முன்னேறி இருந்தனர். அவர்கள் அதன் சூட்சும ஆற்றலை அறிந்திருந்தனர்.  ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நுணுக்கமாக அறிந்திருந்தனர்.  அதனால் அர்த்தமுள்ள வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர்.

அப்படி அவர்கள் குரு சிஷ்ய பாரம்பரியம் மூலம் கற்பிக்கக் காரணம் தவறானவர்கள் கையில் இந்த மந்திரங்கள் சேரக் கூடாது என்பதும், மந்திரங்களை பிரயோகிக்க தகுந்த மன, உடல் தூய்மை தேவை என்பதும் தான்.

அவர்கள் மந்திரங்கள் பலிக்க  உச்சரிப்பு,  நியமம், கட்டுப்பாடு,  உபகரணம், நம்பிக்கை ஆகியவை அடிப்படைத் தேவைகள் என்று நம்பினார்கள். அவர்கள் நேரடிப் பார்வையில் கற்பிக்கப்படும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.



ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டு,  ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவை என்று பண்டைய அறிஞர்கள் அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்ல ஆன்ம ஞானத்திற்கே வழி வகுக்க வல்லவை மந்திரங்கள் என்றும் புரிந்து கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட மந்திரங்களுக்கே தலையாய காயத்ரி மந்திரம் இது தான்
ஓம்
பூர் புவ ஸ்வஹ
தத் ஸ்விதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்” 

இந்த மந்திரத்தைச் சொல்லும் போது இங்கு கொடுத்துள்ள படியே ஓம் முதற்கொண்டு ஒவ்வொரு அடி இறுதியிலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.

பூ உலகம்மத்திய உலகம்மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்தப் பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை  உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும் என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.  

இந்த மந்திரத்தில் தனிப்பட்ட தெய்வ வழிபாடு இல்லை. சிலர் சூரியனை வேண்டி சொல்லப்பட்டது என்று பொருள் கொண்டாலும் ஞான சூரியனாகிய பரம்பொருளிடம் வேண்டுவதாகவே இது உள்ளது என்பது பெரும்பாலான ஆன்மிக அறிஞர்களின் கருத்து. 

இந்தப் பிரார்த்தனை மந்திரத்தில் எவ்வளவு உயர்ந்த நோக்கம் பாருங்கள்.  உண்மையை உணரும் வகையில் என் அறிவு விரிவடையட்டும் என விழைவது எவ்வளவு அறிவுபூர்வமான பிரார்த்தனை. எல்லாப் பிரச்சினைகளும் அறிவின் குறைபாட்டால் அல்லவா வருகின்றன? உயர் அறிவு வந்து விட்டால் மனிதனுக்கு என்ன தான் பிரச்சினை? அந்த உயர் அறிவைப் பெற்ற பின் மனிதனால் முடியாதது தான் என்ன?  

காயத்ரி மந்திரச் சிறப்புப் பற்றி புனித நூல்களும், மகான்களும், பேரறிஞர்கள் இப்படிப் புகழ்ந்து கூறுகிறார்கள்.

இவ்வுலகத்திலும், பரவுலகத்திலும் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தவத்தை வளர்க்க காயத்திரியை விட மேலான மந்திரம் இல்லைஎன்கிறது  தேவிபாகவதம்.

 மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருபவன் வாயுபோல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை அடைவான் எனக் கூறுகின்றது மனுஸ்மிருதி. 

நான்கு வேதங்களையும் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு சமமாக காயத்ரியை மட்டும் மறுதட்டில் வைத்தால் எடை சரியாகவிருக்கும். காயத்ரி வேதங்களின் தாய். சகலபாவங்களையும் போக்குபவள். காயத்ரியைப் போல பவித்திரமான மந்திரம் மண்ணுலகிலும் இல்லை, விண்ணுலகிலும் இல்லை. காயத்ரிக்கு மேலான ஜபம் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லைஎன்கிறார் யக்ஞவல்கியர்.

ஸ்ரீ ராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்களும், மகாத்மா காந்தி போன்ற தலைவர்களும் காயத்ரி மந்திரத்தை மிகவும் பாராட்டிப் பேசி இருக்கிறார்கள். 

காயத்ரி மந்திரமானது உலகத்துக்கே பொதுவான ஒன்றாகும். அது எந்த ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. இம்மந்திரம் அனைவருக்கும் பொதுவான பரம்பொருளை தியானிக்கச் சொல்லும் அருமையான மந்திரமாகும்.  எனவே இம்மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம். சந்தியா காலங்களில்,  அதாவது காலை மாலை நேரங்களில், காயத்ரி மந்திரம் சொல்வது மிகவும் நல்லது. 

இந்த காயத்ரி மந்திர ஜபத்தை சிரத்தையுடனும், அர்த்தம் நினைவில் வைத்தும் தொடர்ந்து சொல்லி வந்தால் மனதில் நிதானமும், அமைதியும் ஏற்பட ஆரம்பிக்கும். நமது வாழ்க்கையில் சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவாக முடிவெடுக்க முடியும். மாணவர்கள் பாடங்களை பயிலும் முன் இந்த மந்திரத்தை ஜபித்துவிட்டு தொடங்கினால் நிச்சயம் ஆழ்மனதில் நன்றாக பதியும்.

இந்த மகா மந்திரத்தைப் பயன்படுத்தி முன்னேறுவோமாக!

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 20.08.2013




9 comments:

  1. உண்மை உண்மை .., நன்பரே .., அருமை நன்றி......, !!!!
    ---------------------------------------------------------------------------
    தினமும் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் 1008உரு என்பதாக ஒரு மண்டலமேனும் தொடர்ந்து உருவேற்றிடில்..., எந்த மந்திரமாயினும் . அந்த மந்திரத்தின் பீஜாட்சரங்கள் அந்த அந்த மண்டல லோகத்தை எட்டி .. அந்த மண்டலத்தின் அதிர்வலைகளை நம் உடம்போடு இனனக்கும்...,

    ReplyDelete
  2. விளக்கம் மிகவும் அருமை...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. விளக்கம் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாந்த்ரீகம் கற்றுக் கொடுக்கும் நல்ல மாந்திரீக குரு முகவரி (ADDRESS) கொடுங்கள்

    ReplyDelete
  5. Nice explanation .... keep posting mantra with explanations.. it will benefit the people whoever interested ...

    ReplyDelete
  6. Nice Explanation & Thanks for posting...

    ReplyDelete
  7. காயத்ரி மந்திரம் தமிழில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒன்று என்று இங்கு சொல்லப்படுகிறது......

    www.siththarkal.com/2010/08/03.html

    தமிழ் காயத்ரி மந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது......

    ReplyDelete
  8. காயத்ரி மந்திரத்தில் எங்களது அறிவை ப்ரகாசப்படுத்தவும் என்று தான் பொருள் அமைந்துள்ளது. பன்மையில் தான் உள்ளது

    ReplyDelete