இது கனவா என்கிற சந்தேகம் தான் ஈஸ்வருக்கு முதலில் வந்தது. கண்களை
மூடிக் கொண்டிருக்கையில் அப்படியே அசந்து தூங்கி விட்டு கனவில் தான் அந்தச்
சித்தரைப் பார்க்கிறோமோ என்ற சந்தேகம் வந்தது. கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டான்.
ஜவுளிக்கடையில் பார்த்த அதே சித்தர்,
அதே லேசான புன்னகை. நெருப்பாய் ஜொலித்த கண்கள் ஜொலிப்பு நீங்கி
இயல்பானதாக மாறிய போதும் அந்தக் கண்களின் தீட்சண்யம் குறையவில்லை. ஈஸ்வர் பேச வாய்
திறந்தான். சீக்கிரத்தில் வார்த்தைகள் வரவில்லை. வரும் என்று நம்பிக்கை வந்த போதோ
என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர் திடீரென்று இன்றும் காணாமல்
மறைந்து போய் விடுவார் என்று தோன்றியது.
ஆனால் அவர் மறைந்து போகவில்லை.
புன்முறுவலோடு சொன்னார். ”இன்னைக்கு திடீர்னு மறைஞ்சுட மாட்டேன். எனக்கு உன்
கிட்ட பேச வேண்டி இருக்கு”
அவர் கண்களைப் போலவே குரலுக்கும்
கவர்ந்திழுக்கும் தன்மை இருந்தது. பேச்சு மட்டும் சாதாரண மனிதர்கள் பேசும் பேச்சு
வழக்காக இருந்தது. அவன் திகைப்பில் ஆழ்ந்திருக்கும் போதே அவர் அவன் எதிரில்
அமர்ந்தார்.
ஈஸ்வர் மெல்ல இயல்பு நிலைக்குத்
திரும்பினான். ”எனக்கும் உங்க கிட்ட கேட்க நிறைய இருக்கு... அன்னைக்கு
எங்களைத் தொட்டுட்டு போனீங்க. ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. எனக்கு மட்டும்
அல்ல... கணபதிக்கும் தான். ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு புரிஞ்சாலும் என்ன காரணம்னு
தெரியலை.... அன்னைக்கு நீங்க வந்ததுக்கும் காரணம் தெரியல, பேசாம போனதுக்கும்
காரணம் தெரியல....”
அக்னிநேத்திர சித்தர் சொன்னார். “சில விசேஷ
முகூர்த்த நேரங்கள் இருக்கு. அது அபூர்வமாய் தான் வரும். அப்படி வரும் போது தவற
விட்டுட்டா அடுத்த முகூர்த்த நேரத்துக்கு மாசக்கணக்கில் காத்திருக்க வேண்டி
இருக்கும். அன்னைக்கு கிடைச்ச முகூர்த்தம் அப்படிப்பட்ட முகூர்த்தம். அந்த
முகூர்த்த நேரத்தில் நீங்க ரெண்டு பேரும் கிடைச்சதை நான் பயன்படுத்திக்க வேண்டி
இருந்தது...”
ஈஸ்வருக்குக் குழப்பமாக இருந்தது. என்ன
சொல்ல வருகிறார்?
அவன் குழப்பத்தை மேலும்
அதிகப்படுத்தும்படியாக அவர் சொன்னார். “உன் விதியும், கணபதியின் விதியும் விசேஷ
மானஸ லிங்கத்தோட பல காலம் முன்னாலேயே இணைக்கப்பட்டது ஈஸ்வர். நீ எதிர்பார்க்காத
நேரத்தில் எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் உனக்கு காட்சி தந்ததும் காரணம் இல்லாமல்
இல்லை...”
ஈஸ்வர் அவரையே கூர்மையாகப் பார்த்தபடி
சொன்னான். “எனக்கென்னவோ அது தானாய் காட்சி தந்த மாதிரி தெரியல. யாரோ அந்தக்
காட்சியை எனக்கு அனுப்பின மாதிரி தோணிச்சு”. அவனுக்கு
சந்தேகம் அவர் மேல் தான்.
ஆனால் அவர் அவன்
சந்தேகத்தைத் தீர்க்கவில்லை. மாறாக அவனையே அவர் காரணம் காட்டினார். “ஏதாவது
ஒரு விதத்தில் நீ ஈர்க்காமல் எதுவுமே உன் வாழ்க்கையில் வருவதில்லை ஈஸ்வர்”
ஈஸ்வர் உடனடியாக எதையும் சொல்லாமல்
யோசித்தான். சின்ன வயதில் இருந்தே அவன் அப்பா மூலம் அவனுடைய பேராவலைத்
தூண்டியவர்கள் பரமேஸ்வரனும், விசேஷ மானஸ லிங்கமும் தான். சங்கர் மகனிடம் சொன்ன
ஒளிரும் லிங்கம் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உண்டு பண்ணியது உண்மை தான்.
சங்கருக்கும் கூட அதன் மீது அதிக ஈடுபாடு இருந்தது என்றாலும் ஆழமாய் அதன் காரணமான
அம்சங்களை அவர் ஆராய முற்பட்டதில்லை. ஆனால் ஆழ்மனம் மற்றும் அபூர்வ சக்திகளின்
ஆராய்ச்சியாளனான ஈஸ்வர் பல ஆராய்ச்சிகளின் இடையேயும் அந்த சிவலிங்கத்தைப் பற்றிக்
கேள்விப்பட்ட விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறான். ஆனால் அடிக்கடி எதிர்பாராத சந்தர்ப்பங்களில்
எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் காட்சி அளிக்க ஆரம்பித்தது பசுபதியின் மரணத்திற்குப்
பின் தான். அதற்கு முன் அந்த அனுபவம் இல்லை....
ஈஸ்வர் கேட்டான். “எங்கள் விதி எப்படி
விசேஷ மானஸ லிங்கத்தோடு இணைக்கப்பட்டதுன்னு சொல்றீங்க?”
அக்னி நேத்ர சித்தர் சொல்ல ஆரம்பித்தார்.
“ஈஸ்வர் உனக்கு ஓரளவு விசேஷ மானஸ லிங்கத்தின் கதை தெரிந்திருக்கும். பலநூறு வருஷங்களுக்கு
முன்னாலேயே சித்தர்கள் எதிர்காலத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள். கலி முத்திப்
போய் பேராசை, பெருங்காமம், வெறுப்பு, யுத்தம்னு உலகம் சீரழிஞ்சுடும், மனிதம்
மறக்கப்பட்டுடும், இயற்கை அழிவுகள் பெருமளவு வந்துடும்ங்கறதை எல்லாம் தெரிஞ்ச
அவங்க அந்த எதிர்காலத்துல மனித சமுதாயத்தைக் காப்பாத்தறதுக்கு ஒரு மிகப்பெரிய
சக்தி உறுதுணையாய் வேணும்னு நினைச்சாங்க. விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கி தங்கள்
சக்திகளை எல்லாம் சேர்த்து அதில் மையப்படுத்தினாங்க. தூய்மையே பிரதானமான
சூழ்நிலையை உருவாக்கி அதை வணங்கி வந்தாங்க. ஆரம்பத்துல சித்தர்களால மட்டும் தான்
விசேஷ மானஸ லிங்கம் பூஜை செய்யப்பட்டுச்சு”.
”சமுதாயத்துல இருந்து ஒதுங்கி துறவு வாழ்க்கை வாழ்கிற
சித்தர்களே, சமுதாயத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட விசேஷ மானஸ லிங்கத்தை காலம்
காலமாய் பூஜை செய்து வர்றது சரியல்ல, கலி முத்தின அந்தக் கடைசி காலத்துக்கு
முன்னால் சிறிது சிறிதாய் அந்தப் பொறுப்பை சமுதாயத்தில் அங்கம் வகிக்கிற பொது
மனிதர்களுக்கு ஒப்படைச்சுடணும்னு முதல்லயே சித்தர்கள் தீர்மானிச்சிருந்தாங்க.
காப்பாத்தற பொறுப்பு ஒரு சாரார் கிட்டயும், தான்தோன்றித்தனமாய் நடந்துக்கற
சுதந்திரம் மீதி சாரார் கிட்டயும் இருக்கிற வரைக்கும் இந்த சமுதாயம்
உருப்படாதுன்னு தீர்க்கதரிசனத்தால அவங்க உணர்ந்திருந்தாங்க. அதனால மிக முக்கியமான குறிப்பிட்ட
ஒரு காலத்தில மனம், அறிவு, ஞானம் இந்த மூன்றிலயுமே
பரிசுத்தமாய், உயர்வாய் இருக்கிற மூன்று மனிதர்கள் கிட்ட விசேஷ மானஸ லிங்கத்தை
சேர்க்கறதுன்னு நிச்சயமாகி இருந்துச்சு”
”அந்தக் குறிப்பிட்ட காலம் வந்துடுச்சு ஈஸ்வர்.
கலிமுத்தின எல்லா அறிகுறிகளும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ஒரு காலத்துல உயர்வாய்
நினைச்சு இருந்த விஷயங்கள் இன்னைக்கு செல்லாக்காசாயிடுச்சு. கேவலமாய்
நினைச்சுகிட்டிருந்த விஷயங்கள் இன்னைக்கு உயர்வாயிடுச்சு. மனிதம்
செத்துகிட்டிருக்கு.... அலட்சியம், அறியாமை அதிகமாயிடுச்சு... மனிதன் தன்னையே
அழிச்சுகிட்டு சந்தோஷத்தைத் தேடிகிட்டிருக்கான். தன் உன்னதமான விஷயங்களை எல்லாம்
தாரை வார்த்துட்டு நிம்மதி இல்லாமல் இருக்கறதுக்கு காரணம் தேடிகிட்டிருக்கான். ஒருத்தரை
ஒருத்தன் அழிச்சுட்டு என்னென்னவோ சாதிக்கப் பார்க்கிறான்... என்னென்னவோ செஞ்சும்
நிம்மதியும் சந்தோஷமும் அவனுக்கு அகப்படாமயே இருக்கு... இயற்கையின் அழிவுகளும்
ஆரம்பமாயிடுச்சு. இன்னும் நிறைய அழிவுகள் வரும்... இந்த நிலையில் தான் விசேஷ மானஸ
லிங்கத்தோட பாதுகாப்புக்கான பொறுப்பு உன் கிட்டயும், கணபதி கிட்டயும் வந்து
சேர்ந்திருக்கு....”
ஈஸ்வருக்கு முதலில் தன் காதுகளின் மீதும்
கேட்கும் திறன் மீதும் சந்தேகம் வந்தது. ஒரு மாத லீவில் இந்தியா வந்திருக்கும்
அவனுக்கும், வெகுளியான கணபதிக்கும் விசேஷ மானஸ லிங்கத்தின் பாதுகாப்புப் பொறுப்பா?
சித்தரை அவன் திகைப்போடு பார்த்தான். அவர் முகத்தைப் பார்த்த போது அவர்
விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பது தெரிந்தது. அவன் வாய் விட்டுச் சிரித்தான்.
அக்னி நேத்திர சித்தர் சிரிக்கவில்லை. அவன்
சிரித்ததற்காகக் கோபப்படவுமில்லை. புன்முறுவல் மாறாமல் அவனையே பார்த்தார்.
ஈஸ்வர் சொன்னான். “சித்தரே. தமிழில் குருவி
தலையில் பனங்காய்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுவே பெரிய பாரம்ங்கற அர்த்தத்துல
சொல்வாங்க. ஆனால் நீங்க பனைமரமே வைக்கிறீங்களே. இது நியாயமா? இது நடக்கிற காரியமா?”
சித்தர் அமைதியாகச்
சொன்னார். “எனக்குத் தெரிஞ்சு சுமக்க முடியாத பாரத்தை இறைவன் தர்றதில்லை”
ஈஸ்வர் திகைப்போடு கேட்டான். “ஏன் நாங்க?”
“மனம்-பக்தி மார்க்கத்துல கணபதி.
புத்தி-அறிவு மார்க்கத்துல நீ” சித்தர் தெரிவித்தார்.
ஈஸ்வருக்கு இப்போது
நடந்து கொண்டிருக்கும் உரையாடல் யதார்த்தத்திற்கு ஒத்து வராத ஒன்றாகத் தோன்றியது.
இப்போதும் கூட இது நிஜம் போலத் தோன்றும் கனவாகவே இருக்க வேண்டும் என்று நம்பினான்.
நிஜம் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள மெள்ள அந்த சித்தரைத் தொட்டான். மறுபடி அவன்
உடலில் மின்சாரம் பாய்ந்தது.
கனவல்ல நிஜம் தான்.
அவரது சக்தி வாய்ந்த அலைகளுக்கு அவன் உடல் இன்னும் பழக்கப்படவில்லை. ‘இவ்வளவு
சக்திகளை வச்சுகிட்டு இவர் மாதிரி ஆள்கள் ஒதுங்கிட்டு சாதாரண ஆள்கள் கிட்ட இவ்வளவு
பெரிய பொறுப்பை எல்லாம் தரலாமா?””’
பெருமூச்சு விட்ட
ஈஸ்வர் தனக்கு எழுந்த முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான். ”ஞான மார்க்கம்னு
மூணாவது சொன்னீங்களே. அதுக்கு யாரைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க?”
“அதுக்கு மட்டும் நாங்க யாரையும் தேர்ந்தெடுக்கலை.
நீங்க ரெண்டு பேரும் சரியா இருந்தால் ஞான மார்க்கத்து ஆளை நீங்களே கண்டு
பிடிக்கலாம்”
ஈஸ்வர் சிரித்தே விட்டான். பின் சொன்னான்.
“சித்தரே. முதல்ல எங்களை மாதிரி ஆள்களால விசேஷ மானஸ லிங்கத்தைப் பாதுகாக்க
முடியும்னோ, இந்த உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்த முடியும்னு நான் நம்பலை. ஒரு
வேளை நீங்க சொன்ன மாதிரி முடியற விஷயமா இருந்தாக்கூட இதில் எங்களுக்கு அனுகூலமான
அம்சங்கள் எதுவுமே இல்லை. நீங்களே யோசிச்சு பாருங்க. அந்த விசேஷ மானஸ லிங்கமே எங்க
கிட்ட இல்லை. என் பெரிய தாத்தாவைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை ஒரு கும்பல்
தூக்கிட்டுப் போனப்ப அதை சுலபமா பெரிய
தாத்தாவோ, நீங்களோ தடுத்திருக்கலாம். நீங்க எதுவுமே செய்யல. நீங்களா அதைக் கைல
எடுத்துக் கொடுத்து அனுப்பின மாதிரி சிவலிங்கத்தை அனுப்பிச்சுட்டீங்க. இப்ப அந்த
சிவலிங்கம் எங்கே இருக்குன்னு கூடத் தெரியலை. கணபதியோ எடுத்துட்டுப் போன கும்பலோட
கட்டுப்பாட்டுல இருக்கான். அந்த குருஜியைப் பெரிய தர்மாத்மான்னு நினைச்சுகிட்டிருக்கான்.
இப்ப நான் ஒருத்தன் தான் வெளியே இங்க
இருக்கேன். மூணாவது ஆளை நாங்களே கண்டுபிடிக்கணும்னு வேற சொல்றீங்க. கணபதி எங்க
இருக்கான்னே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிற என் கிட்டே மூணாவது ஆளையும்
கண்டுபிடிக்கச் சொல்றீங்க. ரொம்பவே தமாஷா இருக்கு. சிவலிங்கம் இல்லை, கணபதி இல்லை,
ஞான மார்க்கத்து ஆள் யாருன்னே தெரியாது, நான் ஒருத்தன் இருக்கேன், ஆனா எனக்கு எந்த
விசேஷ சக்தியும் இல்லை... இதுல எதாவது ஒரு சாதகமான நிலைமையாவது இருக்கா. நீங்களே
சொல்லுங்க”
சித்தர் அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல
முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆணித்தரமான அவன் வாதத்தைக் கேட்ட
பிறகும் அவர் அசராமல் சொன்னார். “விசேஷ
மானஸ லிங்கம் இன்னும் உங்க மூணு பேர்ல ஒருத்தனான கணபதி கிட்ட தான் இருக்கு.
இப்பவும் அவன் தான் பூஜை செய்யறான். இன்னும் அதை நெருங்கற சக்தி அந்த
கும்பலுக்குக் கிடைச்சுடலை. இன்னொரு ஆளான
நீ யார் கட்டுப்பாட்டுலயும் இல்லை. சுதந்திரமாய் தான் இருக்கே....”
”ஆனா கணபதி ஒரு இடத்துலயும் நான் ஒரு இடத்துலயும் அல்லவா
இருக்கோம். அவன் கிட்டயே இப்ப எனக்கு தொடர்பு இல்லை....”
“ஒரு ஆள் கிட்ட தொடர்பு வச்சிக்க அந்த ஆள்
பக்கத்திலயே இருக்கணும்னு உன்னை மாதிரி ஆராய்ச்சியாளன் சொல்றது தான் தமாஷா
இருக்கு. உன் தொழிலே அந்த ஆராய்ச்சிகள்லே தான் இருக்கு....”
ஈஸ்வருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது
புரிந்தது. அடுத்தவர்களை வைத்து
ஆராய்ச்சி செய்த அவனுக்கு தானே அதைச் செய்து காட்ட முடியாதா என்று கேட்கிறார்.
ஈஸ்வர் சொன்னான்.
“அந்த மூணாவது ஆளையும் நாங்களே கண்டுபிடிக்கணும்னு வேற சொல்றீங்க. ஏன் அந்த ஆளை
நீங்களே சொல்லிடக் கூடாது...”
சித்தர் சொன்னர். “ஈஸ்வர். ஞானம் எப்பவுமே
கடைசியா தான் வரும். மனசும், அறிவும் சரியாய் வேலை செஞ்சா தான் வரும், மனசும்,
அறிவும் சேர்ந்து அழைச்சா தான் வரும். அதனால அதை வரவழைக்கறது உங்க கைல தான்
இருக்கு....”
ஈஸ்வருக்கு அவர் சொல்கிற தத்துவம்
புரிந்தது. ஆனால் இப்போதும் இதெல்லாம் நடக்கிற காரியமாய் அவனுக்குப் படவில்லை.
அவன் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் சாதாரண மனிதன். இவரைப் போன்ற சித்தர் அல்ல...
கணபதி அவனை விடவும் சாதாரண மனிதன்... அவனை யாரும் எப்படியும் பயன்படுத்தி
விடலாம்....
அவன் மனதில் ஓடும் எண்ணத்தைப் புரிந்து
கொண்ட சித்தர் சொன்னார். “ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகள்ல
உனக்கு ஈடுபாடு வந்ததும், அதற்கான சூழ்நிலைகளை அமைச்சுக் கொடுத்ததும் விதி. உன்னையும்
நல்ல பெற்றோருக்குப் பிறக்க வச்சு நல்ல பாதையிலயே வளர வச்சதும் விதி. இந்த ஒரு
காலத்துக்காக நல்ல அறிவோட விதி உன்னைத் தயார்ப்படுத்தி தான் வச்சிருக்கு.... அதே
மாதிரி கணபதியால தெரிஞ்சு தப்பு செய்யவே முடியாது ஈஸ்வர். அவன் இயல்புலயே அது
இல்லை. அந்த அளவு பரிச்சுத்த மனசோட அவனையும் விதி தயார்ப்படுத்தி வச்சிருக்கு. நீங்க
ரெண்டு பேரும் சேர்ந்து தேடினா மட்டும் தான் ஞானம் அகப்படும்.... ஞானம் வந்த பிறகு
நீங்க மூணு பேரும் சேர்ந்தா இந்த உலகத்துல முடியாதது என்கிறதே கிடையாது...”
ஈஸ்வர் தன்னம்பிக்கைக்குப் பெயர் போனவன்.
ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான விஷயங்கள் எல்லாம் அவனால் முடியும் என்று
தோன்றவில்லை....
“சித்தரே. அந்தக் குருஜிக்கு ஆள் பலம்,
பணபலம், அதிகார பலம் எல்லாமே இருக்கு. அதோட சிவலிங்கமும் இப்ப சேர்ந்துருக்கு.... நாங்க வெறும் நல்லவங்களா மட்டும் இருக்கோம்..”
சித்தர் சொன்னார். “நல்லவங்களோட பிரச்னையே
அவங்க தைரியம் இல்லாதவங்களாவும் தன்னம்பிக்கை இல்லாதவங்களாவும் இருந்துடறது தான். அதுவே
கெட்டவங்களுக்கு பலமா மாறிடுது....”
அவர் சொல்வது உண்மை தான். ஆனால்...
ஆனால்... ஈஸ்வர் கேட்டான். “சித்தரே அந்த சிவலிங்கம் சக்தி வாய்ந்தது தானே. அதுவே
என்ன செய்யணுமோ அதைச் செய்யாதா? கடவுளுக்கு மனுஷங்களோட உதவி தேவையா என்ன?”
சித்தர் சொன்னார். “கடவுளா பார்த்தா அது
கடவுள். கல்லாய் பார்த்தா வெறும் கல் தான். சக்தியா பார்த்தா சக்தி தான். ஆனா
எப்படி பார்க்கிறவங்க அதை எப்படி உபயோகிக்கிறாங்களோ அப்படியே அவங்களுக்கு
உபயோகமாகும்”
ஈஸ்வருக்குத் தலை சுற்றுகிற மாதிரி இருந்தது.
அவன் அறிவுகூர்மைக்கு இது எல்லாம் பிடிபடாத விஷயங்கள் அல்ல என்றாலும் தற்போதைய வில்லங்கமான சூழ்நிலை அவனுக்குக்
குழப்பத்தைத் தான் தந்தது.
”ஒரு வேளை என்னால் எதுவும் செய்ய முடியலைன்னா என்ன
ஆகும்...”
”கெட்டவங்க யுத்தம் இல்லாமல் ஜெயிச்சிடுவாங்க அவ்வளவு
தான். அவங்க கிட்டயும் அறிவு நிறையவே இருக்கு. அவங்க செய்யறது எல்லாம் தான்
சரின்னு கணபதியை நம்ப வைக்க அவங்களுக்கு சுலபமா முடியும். கணபதி அவங்க பக்கம் போனா
மத்ததெல்லாம் அவங்களுக்கு சுலபம். தப்பான மனசு, தப்பான அறிவு, தப்பான ஞானம் இது
மூணும் போதாதா உலகத்தை அழிக்கிறதுக்கு?”
”அப்ப கடவுள்?”
“கடவுளுக்கு காப்பாத்தற வேலை மட்டுமா இருக்கு.
அழிக்கிற வேலையும் அவரோடது தானே. அவர் அந்த வேலையைச் செய்வார்....”
ஈஸ்வருக்கு பகீரென்றது. “என்ன இப்படிச்
சொல்றீங்க சித்தரே?”
”நல்ல மனசும், நல்ல அறிவும் இருக்கறவங்களே
காப்பாத்தப்படணும்னு உறுதியா முயற்சிகள் எடுக்கலைன்னா அவங்க இருக்கிற சமுதாயம்,
உலகம் காப்பாத்தக்கூட தகுதி இல்லாததாயிடுது.... கடவுளுக்கு கவனிக்க இந்த உலகம்
மட்டும் இல்லை, கோடான கோடி உலகங்கள் இருக்கு.... தகுதி இருக்கற உலகங்களை அவர்
காப்பாத்திட்டுப் போறார்...”
ஈஸ்வருக்கு சித்தர் பேசியது கடூரமாக இருந்தது.
ஆனால் அர்த்தம் இல்லாததாகத் தோன்றவில்லை....
”எனக்கு இதுல என்ன செய்யணும், எப்படி செய்யணும்னு
ஒன்னுமே புரியலை சித்தரே. ஏதோ ஆராய்ச்சிகள் செய்துகிட்டிருந்தேனே ஒழிய இந்த அளவு பெரிய
வேலைக்கான அனுபவம் எல்லாம் எனக்கு இல்லை....” ஈஸ்வர்
பரிதாபமாகச் சொன்னான்.
சித்தர் கனிவாகச் சொன்னார். “வாழ்க்கைப்
பயணம் வரைபடத்தோட தரப்படறதில்லை ஈஸ்வர். பல நேரங்கள்ல பாதைகளை நாமளே தான் தேடிக்
கண்டுபிடிச்சுப் போக வேண்டி இருக்கு. போகப் போக வழி கிடைக்கும்...”
சித்தர் எழுந்தார். அவர் கிளம்புகிறார்
என்று ஈஸ்வருக்குப் புரிந்தது. அவரிடம் அவனுக்குக் கேட்க நிறைய இருந்தன. அதில் எதை
முதலில் கேட்பது என்று பரபரப்புடன் அவன் யோசிப்பதற்குள் அவர் கை அவன் தலை உச்சியை
லேசாகத் தொட்டது. உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அவனுக்குச் சிலிர்த்தது. அவர்
இரண்டடி நடந்தது தெரிந்தது. அவன் ஏதோ கேட்க வாயைத் திறக்கும் முன் அவர் மறைந்து போனார். ஈஸ்வர் சிலையாக
அமர்ந்திருந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
Excellent chapter. Siddhar's talk is very meaningful. Hats off to you sir. May God bless you.
ReplyDeleteஈஸ்வருடன் ..., படிக்கும் எல்லோருக்கும் . மின்சார தீட்சையுடன் அனுபூதி கண்ணிரையும் தந்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார் ...,
ReplyDelete“வாழ்க்கைப் பயணம் வரைபடத்தோட தரப்படறதில்லை
ReplyDeleteபல நேரங்கள்ல பாதைகளை நாமளே தான் தேடிக் கண்டுபிடிச்சுப் போக வேண்டி இருக்கு. போகப் போக வழி கிடைக்கும்...”
வழி கிடைக்கட்டும் இறைவன் அருளால்..!
really storey nu namba mudila avalo real ha irunthathu.intha lines 100% true..
Delete
ReplyDeleteசித்தர் கனிவாகச் சொன்னார். “வாழ்க்கைப் பயணம் வரைபடத்தோட தரப்படறதில்லை ஈஸ்வர். பல நேரங்கள்ல பாதைகளை நாமளே தான் தேடிக் கண்டுபிடிச்சுப் போக வேண்டி இருக்கு. போகப் போக வழி கிடைக்கும்...” முற்றிலும் உண்மை...!
நிஜமாக நடை பெருவது போல் இருக்கிறது. கதை என நம்ப முடியவில்லை.அழகான அற்புதமன நடை. வாழ்த்துக்கள் கணேஷ்.
most waited/expected episode.. conversations are too good between Siddhar and Eswar.. waiting for next action from Eswar !!!
ReplyDeleteஜி இதுவரை வெளியான தொடரில் முக்கியமான வரிகளை சுட்டிக்காட்டி உங்களின் எழுத்து திறமையை பாராட்டும் வாய்பளித்தீர்கள். ஆனால் இந்த பதிவில் அந்த வாய்ப்பை பறித்துவிட்டீர்கள். ஏனென்றால் இந்த பதிவில் அனைத்துமே அருமை. முதல் எழுத்தில் இருந்து கடைசி எழுத்து வரை தொடர்ந்த உணர்வு பறிமாற்றத்தை உணர்ந்தோம்.
ReplyDeleteநன்றி.
www.facebook.com/groups/nganeshanfans/
உண்மை கணேசன் சார். இந்த அத்தியாயம் முழுவதுமே அற்புத வரிகள் தான். சித்தர் ஈஸ்வருக்கு சொன்னதாய் எடுத்துக் கொள்ளாமல் அவர் உலகத்திற்கே சொன்னதாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆணி அடித்தாற் போல் உங்கள் எழுத்து.
Deleteஇந்த உலகம் அறிய வேண்டிய உண்மைகளை அழகான நடையில் தந்துள்ளீர்கள். ... .
ReplyDeleteமிக அற்புதம் . ... . சித்தர் சொல்வது ஈஸ்வருக்கு மட்டும் அல்ல இந்த உலகத்திற்கும் தான். ... .
Very Good Conversation between Shankar & Agninethra Siddhar... Awaiting next episode ...As Agninethra Siddhar mentioned , we have to decide based on our experience or intellectual power :) ...
ReplyDeleteஇதயத்தைத் தொடும்படியாகவாவது சில நல்ல எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் ஒரு நாவலில் ஆத்மாவைத் தொடும்படியாக எழுத முடிவது நான் அறிந்த வரை உங்களுக்கு மட்டுமே. இந்த அத்தியாயத்தை உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக தமிழில் எழுதியிருக்க முடியாது.
ReplyDeletewell said !!!
DeleteTrue words. This chapter in this novel is gita in Mahabharata. No words to express.
Deletenan ipo thu than unga novela padichen sir esweroda nilai than sir enakum sola varththagal ilai
ReplyDeleteஎப்பா இன்னிக்கி மட்டும் நான் ஏழு, எட்டு முறை உங்களோட வெப் சைட்டுக்குள்ள வந்து பார்த்திருப்பேன். எப்ப போஸ்ட் பண்ணுவிங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
ReplyDeleteபடிச்சிட்டேன். நல்ல இருந்தது.
இந்த விறு விருப்போடவே கொண்டு போங்க.
Simply superb.
Maryfergin
போஸ்ட் செய்யும் நேரம் 5:45
Deleteமிக மிக அருமையான அத்தியாயம் இது. வாழ்த்துக்கள் கணேசன். உங்கள் அற்புதமான பணி தொடரட்டும்...
ReplyDeleteவணக்கம் கணேசன் சார்,
ReplyDeleteநான் நெடுநாட்களாக உங்கள் வாசகன், தங்கள் இன்றைய அத்தியாயம் மிக அற்புதம், இதுவரை வாசித்து மட்டும் சென்ற என்னை முதல் முறையாக பின்னூட்டம் போட வைத்துவிட்டது.
ஒவ்வொரு வார்த்தையும் கருத்தாழம் மிக்கவை, நன்றி!!!
ஒரு சிறிய சந்தேகம் ஈஸ்வரின் கேள்விக்கு சித்தரின் பதிலில்லையே...."அந்த சிவலிங்கத்தை ஒரு கும்பல் தூக்கிட்டு போனப்ப அதை சுலபமா பெரிய தாத்தாவோ நீங்களோ தடுத்திருக்கலாம்"
Brilliant work. Please continue writing. Thank you
ReplyDeleteExcellent writing, Ganeshan. Keep it going!
ReplyDeleteIt looks like we are all Eswar you are like Siddhar, often felt words have power while reading this week chapter, re-read many paragraphs many times again and again. Manasa lingam is your writing.
ReplyDeleteI am sure thought process has some connections, but what is not in my experience is Siddhars existence and their powers in this Kaliyuga...Not able to digest it as story rather I feel its your strong experience its coming out as a story indirectly...otherwise it can not be this true...
Good going...I am sure I will be buying this book too once it is available in that form.
Dear Sudhakar,
DeleteNice Matching with story. You missed "Energy of Manasa Lingam". That is the "Power of Words" we feel while reading.
My opinion is as you said "Strong experience that's coming out as a story indirectly" ( Might be in his previous birth ). when i read the Parama(n)ragashiyam just read and enjoy the flow with that. if one taste that, there is no questions to arise.
#“உன் விதியும், கணபதியின் விதியும் விசேஷ மானஸ லிங்கத்தோட பல காலம் முன்னாலேயே இணைக்கப்பட்டது ஈஸ்வர். நீ எதிர்பார்க்காத நேரத்தில் எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் உனக்கு காட்சி தந்ததும் காரணம் இல்லாமல் இல்லை...#
இதுபோல நமக்கும் திரு.கணேசன் அவர்களுக்கும் பலகாலம் முன்பே தொடர்பு இருந்திருக்குமோ ?
https://www.facebook.com/groups/nganeshanfans/
Must be...Karma continues...
DeleteGanesan sir, I have a doubt why ANS [Agnsi Nethra Siddhar] is not directly dealing/approaching with his students Udhayan or Guruji, there must be some reason...I am wondering whether it was explained in your previous chapters, am I missing any link or reasoning expected in the future chapters.
DeleteThe reason is subtle. It will be understood in the end.
Deleteசுவராஸ்யமாப் போகிறது...
ReplyDeleteதொடருங்கள்... தொடர்கிறோம்...
"தொடருங்கள்... தொடர்கிறோம்.."
Deleteவார்த்தையை ரசித்தேன் !
அருமையான அத்தியாயம்
ReplyDelete