அர்ஜுன் தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. “என்ன ஐயா
சொல்றீங்க? அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துகிட்டாங்களா?”
“ஆமா தம்பி. என்ன காரணம்னு
யாருக்கும் சரியா தெரியா தெரியலைன்னாலும் வறுமை தான் காரணம்னு தோணுது. ரெண்டு
பேரும் தினக்கூலிக்குப் போய்கிட்டு இருந்தாங்க. இந்தக்
கிராமத்துல வேலை இல்லைன்னா பக்கத்து கிராமத்துக்குப் போவாங்க. கஷ்ட ஜீவனம்
தான் பாவம். ஆனா அந்தக் கஷ்டத்துலயும் மகுடபதி அடுத்தவங்க கிட்ட கையை
நீட்டி நின்னவரில்லை. மானஸ்தன்...”
அம்மா தன் பெற்றோரைப் பற்றியோ இளமைக்காலம் பற்றியோ ஏன் பேசுவதைத் தவிர்த்தாள் என்பது இப்போது புரிந்தது. பெற்றோரை இழந்து நிர்க்கதியாக, அனாதையாக அவள் நின்றிருந்த போது எத்தனை வேதனையை அனுபவித்தாளோ? அம்மாவை நினைக்கையில் அவனுக்கு மனம் இளகியது.
மாடசாமிக்கு மகுடபதியின் உறவினர்கள் யாரையும் தெரிந்திருக்கவில்லை. மகுடபதியின் மகள் என்ன ஆனாள்,
இங்கிருந்து எங்கே போனாள் என்பதெல்லாம் தெரியவில்லை. பாவப்பட்ட
நல்ல மனிதர்கள் என்பதைத் தவிர அவருக்குக் கூடுதலாக அவர்களைப் பற்றிச் சொல்ல எதுவுமிருக்கவில்லை. அதனால்
அர்ஜுன் கிளம்பத் தீர்மானித்த போது தான் மாடசாமி வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த
வாசுதேவனின் புகைப்படத்தைப் பார்த்தான்.
“தலைவர்
படத்தை மாட்டியிருக்கீங்க. அவரோட ஆதரவாளரா நீங்க?”
மாடசாமி வாசுதேவனின் புகைப்படத்தை பெருமையாகப்
பார்த்து விட்டு ஆமாம் என்று தலையாட்டினார். “அவரைப் பல தடவை நேரில் பார்த்துப் பேசற
பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. இந்தக் கிராமத்துக்கு வந்ததால கிடைச்ச பாக்கியம் அது”
அர்ஜுனுக்கு அவர் ஏனப்படி சொல்கிறார்
என்று புரியவில்லை. “ஏன் ஐயா
அப்படிச் சொல்றீங்க? வேற இடத்துல இருந்திருந்தா உங்களுக்கு அவரைப் பார்த்துப்
பேச முடிஞ்சிருக்காதா?”
”அதுக்கு
நான் அவரிருக்கற இடத்திற்குப் போய் அல்லவா போயிருக்கணும். இங்கே அவர்
அடிக்கடி வந்து போய்கிட்டு இருந்ததால, அவர் இங்கே வந்தப்ப
எல்லாம் போய்ப் பார்த்து பேச முடிஞ்சதுன்னு சொல்ல வர்றேன்.”
“இங்கே ஏன்
அவர் வந்து போய்கிட்டு இருந்தார்?” அர்ஜுன் குழப்பத்தோடு கேட்டான்.
“என்ன தம்பி
உங்களுக்குத் தெரியாதா? அவர் இந்த கிராமத்துப் பொண்ணைத் தானே கட்டிகிட்டார்? யசோதாம்மாவோட
தாய்வீடு இங்கே தான இருந்துச்சு?”
அர்ஜுனுக்கு இந்தத் தகவலும் அதிர்ச்சியைத்
தந்தது. அம்மாவும், பாட்டியும் ஒரே
ஊர்க்காரர்களா? அம்மாவின் திருமணத்திற்கு முன்பே அம்மாவைப் பாட்டிக்குத்
தெரியுமா?
மாடசாமி சொல்லிக் கொண்டே போனார். ”அவர் மாமனார்
வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் நாங்க அங்கே போய் அவரைப் பார்க்காம இருக்க மாட்டோம். யார் போனாலும்
எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவார். அவரை மாதிரி தங்கமான
ஒரு நல்ல தலைவரை எல்லாம் இந்தக் காலத்துல பார்க்க முடியுமா தம்பி? இப்பத்து
ஆளுக எல்லாம் தேர்தல் சமயத்துலன்னா தலையைக் காட்டுவானுங்க. கையெடுத்துக்
கும்பிடுவானுங்க. மற்ற சமயத்துல எல்லாம் அவங்களை நெருங்கவாவது முடியுமா, சொல்லுங்க
தம்பி”
”முடியாது” என்று அர்ஜுன்
ஒத்துக் கொண்டான். சொந்த சொத்தைக் கூட மக்களுக்காக எந்த அரசியல்வாதி எப்போது
செய்திருக்கிறார்? நாணயம், நேர்மையின் திருவுருவமாக இருக்கும் அவனுடைய அப்பா கூட அதைச்
செய்ய மாட்டார்.
மாடசாமி சொன்னார். “சொல்லப்
போனா தலைவரோட மாமனாரும், மச்சான்களும் தான் எங்களைக் கோவிச்சுக்குவாங்க. எங்க மாப்பிள்ளை
கூட கொஞ்சம் நேரம் கூட எங்களைப் பேச விடமாட்டேங்கறீங்களேன்னு திட்டுவாங்க.”
”அந்தக்
குடும்பத்து ஆளுக யாராவது இப்பவும் இந்தக் கிராமத்துல இருக்காங்களா?”
“இல்லை தம்பி. அந்தக்
குடும்பம் இருபது வருஷத்துக்கு முன்னாடியே இங்கே இருக்கற சொத்தை எல்லாம் வித்துட்டு
டவுன்ல போய் செட்டிலாயிட்டாங்க. யசோதாம்மாவோட தம்பி மட்டும் எப்பவாவது ஒரு தடவை இந்தக் கிராமத்துல
இருக்கற அவங்க குலதெய்வம் கோயிலுக்கு, குடும்பத்தோட வந்துட்டு
போவார். ”
ஒருவேளை அந்த வீட்டுக்கு அப்பா வந்து போன ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவைப் பார்த்திருக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.
“தலைவரோட பசங்களும் இங்கே அடிக்கடி வந்துகிட்டிருந்தாங்களா ஐயா?”
“சின்னப் பசங்களாய் இருந்தவரைக்கும் வந்துகிட்டு இருந்திருக்கலாம். நான் இங்கே வந்த பிறகு அவங்க இங்கே அதிகமாய் வந்து நான் பார்க்கலை தம்பி. தலைவர் இறந்ததுக்கப்பறம்
யசோதாம்மா இங்கே வந்ததே கூடக் குறைவு தான். நான் யசோதாம்மாவை
இங்கே கடைசியாய் பார்த்தது அவங்க அண்ணா காலமானப்ப. அது
22 வருஷங்களுக்கு முன்னாலே….”
அர்ஜுன் கேட்டான்.
“நீங்க போய் தலைவரைப் பார்த்துகிட்டு இருந்த காலத்துல உங்க மாதிரி மகுடபதியும்
தலைவரைப் பார்க்க வந்ததுண்டா”
மாடசாமி சிரித்தபடி சொன்னார். “இல்லை தம்பி. மகுடபதி
மாதிரியான ஆள்க உலகம் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே தான். அவங்க,
அவங்க குடும்பம், உழைப்பு, ஊதியம்னு மட்டும் தான் அந்த உலகம் இருக்கும். ஒரு நாள்
பிரச்சினை இல்லாமல் கடந்துச்சுன்னா அதுவே அவங்களுக்குப் பெரிய விஷயம். அதைத்தவிர வேறு எதுலையும் அவங்க ஈடுபடறதில்லை. கவனிக்கறதுமில்லை.”
அர்ஜுனுக்கு அம்மா ஏன் அப்படி இருக்கிறாள் என்று இப்போது புரிந்தது. அவள் வளர்ந்த விதமே அப்படித்தான். கூடுதலாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவள் கவிதைகளை எழுதி வைத்திருக்கிறாள் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. இப்போதும் அம்மாவுக்கு உலக நடப்புகள் தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது.
”மகுடபதியும் அவர் மனைவியும் இறந்துட்டதால இன்சூரன்ஸ் பணத்தை
அவர் மகளுக்குத் தான் தரமுடியும்.
மகுடபதி மகள் பத்தி யாரைக் கேட்டால் தெரியும்?”
“தெரியலையே தம்பி”
கடைசியாக மாடசாமியை அர்ஜுன் கேட்டான். “உங்க தலைவரோட ரெண்டு மகன்களே
அரசியல்ல எதிரும் புதிருமா இருக்காங்க. அதைப் பற்றி நீங்க என்ன
நினைக்கிறீங்க ஐயா?”
“தலைவரோட மூத்த மகன் ஞானமூர்த்தி தான் அரசியல்ல இருக்காரு. சின்னவர் ராஜாராம், பின்னால இருந்து ஆளும் கட்சியை இயக்கறாருன்னு
சொல்றாங்க. ஆனா அது பிரயோஜனம் இல்லையே தம்பி. தலைவரோட மகன் களத்துல நேரடியாய் இறங்கறதல்லவா பெருமை? அதுவும் அவர் அண்ணனை எதிர்த்து ஆதரிக்கிறது திருட்டுப்பசங்களை. அது நியாயமில்லையே”
“உங்க ஆதரவு யாருக்கு ஐயா?”
“மூத்தவருக்குத் தான். அவர் எதையும் நியாயமாய்,
வெளிப்படையாய் செய்யறார். நேர்மையாய்ப் பேசறார். ஆனால் அது எந்த அளவுக்கு
அவருக்குக் கைகொடுக்கும்னு தெரியல தம்பி.”
அர்ஜுன் மாடசாமிக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
விமல் ராஜா சிங் சொன்ன நேரத்திலேயே
அவனுடைய கடைக்குச் சென்றான். கடைசி நேரத்தில் ராஜா சிங் கையை விரித்து விடுவானோ என்று விமலுக்குப் பயமாக
இருந்தது. நேற்று இரவு நிம்மதியாகத்
தூங்கி எழுந்த அவனுக்கு இன்று காலை வரை இருந்த நிம்மதி பிறகு விடைபெற்றுக் கொண்டது. கஷ்ட காலங்களில் ஒரு சமயத்தில் இருக்கும் தைரியம்
இன்னொரு சமயத்தில் இருப்பதில்லை…
அவன் சென்ற போது ராஜாசிங் கடையில் வேறு
ஆட்களும் இருந்தார்கள். விமலைப் பார்த்த போது ராஜா சிங் முகத்தில் அவனை அறிந்திருக்கும்
அறிகுறி கூட இல்லை. அதைப் பார்த்த விமலுக்குப் பக்கென்றது. ஆனால் அதை
வெளிக்காட்டாமல் புதிய மொபைல் போன்களைப் பார்க்க ஆரம்பித்தான். அதில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கவும் செய்தான். அதற்குள் மற்ற வாடிக்கையாளர்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு
போய்விட்டார்கள்.
அவர்கள் சென்ற பின் ராஜாசிங் கல்லாவிலிருந்தபடியே
விமலைப் பார்த்து, அருகே வரும்படி சைகை செய்தான். விமல் அருகே
சென்றவுடன் ஒரு சிறிய தாளை அவனிடம் நீட்டினான். அதில் நானாஜி
தேஷ்முக், ஏ 5, கோல்டன் ஸ்டார் அபார்ட்மெண்ட்ஸ், 298 பட்டேல்
ரோடு, கரோல் பாக், டெல்லி 110005. என்ற முகவரி இருந்தது. அந்தப்
பெயர், விலாசத்தில் தான் சிம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை விமல்
புரிந்து கொண்டு தலையை ஆட்டினான்.
ராஜா சிங் கையை நீட்ட விமல் புதியதாகத்
தேர்ந்தெடுத்து வைத்திருந்த மொபைலையும் கொடுத்தான். ராஜா சிங்
இன்னொரு சிறிய தாளை எடுத்து “ரூ3000 + ரூ13580 = ரூ 16580/-”என்று எழுதினான்.
விமல் அந்தத் தொகையை எடுத்துக் கொடுத்தவுடன்
அந்த புதிய மொபைலில் சிம்மை பொருத்தித் தந்தான். விமல் பரம
திருப்தியுடன் “ரொம்ப தேங்க்ஸ்” என்றான். ராஜா சிங்
முகத்தில் சிறு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்தது. விமல் வெளியே
வந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
ஆகஸ்ட் 4 வரை நடக்கும் ஒசூர் புத்தகத் திருவிழாவில் என்.கணேசனின் நாவல்கள் அரங்கு எண் 19, 20 மகேஸ்வரி புக் ஸ்டாலில் கிடைக்கும்.

No comments:
Post a Comment