அர்ஜுனுக்கு இப்போதெல்லாம் கீதாவிடம் பேச நிறைய இருந்தது. நட்பாக
இருந்த வரையில் இவ்வளவு பேச இருக்கவில்லை. முன்பெல்லாம்
ஐந்து நிமிடங்கள் பேசிய விஷயத்தை இப்போதெல்லாம் அரைமணி நேரம் இருவரும் பேசுகிறார்கள். அப்படிப்
பேசுவதில் ஒரு இன்பம். ஆனால் சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசாமல்
மௌனமாகவே இருவரும் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதும் உண்டு. அந்த மௌன
நிலையிலேயே திருப்தியடைந்து அவர்கள் விடைபெற்றுக் கொள்வதும் உண்டு. விடைபெற்றுக்
கொள்வதும் வார்த்தைகளில்லாமல் தலையசைப்பில் நடந்து விடுவது உண்டு. அப்படி சேர்ந்து மௌனமாக இருப்பதும் இன்னொருவகை இன்பம் தான். அந்த இருவித
இன்பங்களையும் இருவரும் சில நாட்களாகத் தொடர்ந்து உணர்ந்து வருகின்றார்கள்.
இன்றைய தினம் அவர்களுக்கு பேசும் நாளாக
இருந்தது. அவன்
மனதை அழுத்திக் கொண்டிருந்த,
அவன் இதுவரையில் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்ல முடிந்திருக்காத சில
விஷயங்களை அவன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் தாய்
அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பதையும், அதனால் அவன் பாதிக்கப்பட்டதையும்
அவளிடம் சொன்னான். தாயைப் போலவே அவனும் தனியொரு கூட்டில் வாழ்வதாக,
தங்கை சுட்டிக் காட்டியதைச் சொன்னான். அவள் சுட்டிக்
காட்டிய பிறகு நிறைய யோசித்ததைச் சொன்னான். கீதாவிடம் உணர்ந்த
காதலையும் கூட அங்கீகரிக்க முடியாத பாதிப்புக்கும் அது தான் காரணம் என்று பிறகு புரிந்து
கொண்டதைச் சொன்னான். சிறு வயதில் அவனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்
போது மட்டுமே அம்மா அவனுடன் இருப்பாள் என்பதையும், அதனாலேயே அவள்
நெருக்கத்திற்காக அவன் அடிக்கடி நோய்வாய்ப் பட்டதையும் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த
கீதா கண்கலங்கினாள். அவனுடைய பிறந்தநாளுக்கு அவன் வீட்டிற்கு அவள் சென்றிருந்த
போது பானுமதி சரியாக அவளிடம் பேசியிருக்காதது நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில்
அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை, அதனால் தான் அவள்
சரியாகப் பேசவில்லை என்று நினைத்ததை அவளும் அவனிடம் மனம் விட்டுச் சொன்னாள்.
அர்ஜுன் வருத்தத்துடன் புன்னகைத்தான். “அக்கம்
பக்கத்துல கூட அவங்க யார் கிட்டயும் நாலஞ்சு வார்த்தைகளுக்கு மேல பேசறதில்லை. அப்பா கிட்டயும்
அவங்க அதிகமாய் பேசினதை நான் பார்த்ததில்லை. நித்யா
ஒருத்தி கிட்ட தான் அவங்க ஒரு சராசரி தாய் பேசற அளவிலாவது பேசறாங்க. அதுவும்
அந்த வாயாடி கிட்ட யாரும் பேசாமல் தப்பிச்சுட முடியாதுங்கறதுனாலன்னும் நான் நினைக்கிறேன். போன்ல எங்க
மைதிலி சித்தி கிட்ட ஓரளவு பேசுவாங்க. அவங்க ரெண்டு
பேரும் பேசறது கூட எங்க பாட்டியைப் பற்றி தான் அதிகமாய் இருக்கிறதாய் நித்யா கண்டுபிடிச்சு
சொல்லி இருக்கா...”.
கீதா சொன்னாள். “அதிகம்
படிக்கலைங்கற தாழ்வு மனப்பான்மை கூட ஒரு காரணமாய் இருக்கலாம் அர்ஜுன்”
“வெளி ஆள்கள்
கிட்ட பேசாமல் இருக்கறதுக்கு அதைக் காரணமாய் சொல்லலாம். ஆனா வீட்டுக்குள்ளேயே, அதுவும்
பெத்த பிள்ளை கிட்டயே அப்படி இருக்கறதுக்கு அது காரணமாய் இருக்க முடியாதே கீதா.”
பானுமதி ஏதோ மனப்பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள் என்று கீதாவுக்குத் தோன்றியது. அவள் சற்று யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்கு என்ன தோணுதுன்னா, உங்கம்மா அழகா இருந்ததால உங்கப்பா அவங்களைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டிருக்கலாம். அவங்களும் சம்மதிச்சிருக்கலாம். ஆனால் பிறகு உங்கம்மாவுக்கு உங்கப்பாவைக் கல்யாணம் செஞ்சுகிட்டதுல குற்றவுணர்ச்சி இருந்திருக்கும். அத்தனை பெரிய தலைவரோட மகன், நிறைய படிச்சவர், புத்திசாலியான அவருக்கு எட்டாம் க்ளாஸ் வரைக்கு மட்டுமே படிச்ச தான் பொருத்தம் இல்லாதவள்னு தோண ஆரம்பிச்சிருக்கலாம். உன் தாத்தாவும் உடனடியா கல்யாணத்திற்கு ஆதரவு தரலைன்னு வேற சொல்றே. அதுவும் அவங்க குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் சேர்ந்து அவங்களை இப்படி ஆக்கியிருக்கலாம்.”
அர்ஜுன் சொன்னான்.
”நீ சொல்ற மாதிரி ஆரம்பத்துல அவங்களுக்குக் குற்றவுணர்ச்சி இருந்திருக்கலாம்.
ஆனா அது இத்தனை காலமாகவா இருக்கும்?”
கீதா சொன்னாள்.
“எது எத்தனை காலம் நம்ம மனசை வதைச்சுகிட்டு இருக்கும்னு யாருக்குத் தெரியும்
அர்ஜுன். சில பேருக்கு மன பாரத்தை சீக்கிரமே இறக்கி வைக்கவும்,
மறந்துடவும் முடியுது. பல பேருக்கு அது அவ்வளவு
சுலபமாய் முடியறதில்லை….”
விமல் டெல்லிக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறான். இப்போது அவன் துறவு உடையில்
இல்லை. டெல்லியிலிருக்கும்
சில கோவில்களுக்குப் போய் விட்டு இரண்டு நாட்களில் வருவதாகச் சொல்லி விட்டு ஆசிரமத்தை
விட்டுக் கிளம்பிய அவன் பஸ் ஸ்டேண்டில் உள்ள கழிவறையில் துறவு ஆடைகளைக் களைந்து விட்டு,
பைஜாமா குர்த்தாவுக்கு மாறி விட்டான். சில நாட்களாக
அவன் சவரம் செய்யவில்லை. ஒரு மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டிருக்கிறான்.
அவனைத் தெரிந்தவர்களுக்குக் கூட இப்போது அவனைப் பார்த்தால் உடனடியாக
அடையாளம் தெரிவது சிரமம் தான்.
அவன் இப்போது ஒரு மிக ஆபத்தான வேலையில்
இறங்குகிறான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். திட்டத்தை
எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று அவன் இன்னமும் யோசிக்கவில்லை. கண்டிப்பாக
இதை அவன் மட்டும் தனியாகச் செய்ய முடியாது என்பதையும் அவன் அறிவான். உதவிக்கு
ஒன்றோ இரண்டோ ஆட்கள் அவனுக்கு இருப்பது அவசியம் என்பதையும் அவன் அறிவான். அதிலும் சிக்கல் நிறைய இருக்கின்றது..
அவனுக்குத் தெரிந்த ஆட்களை அவன் தொடர்பு கொண்டால் எதிரியின் ஆட்கள் கண்டுபிடித்துவிடக்
கூடிய ஆபத்து உண்டு. புதிய ஆட்கள் யாரையாவது சேர்த்துக் கொள்ளலாம்
என்றாலோ, புதிய ஆட்களை இது போன்ற விஷயங்களில் எப்படி நம்ப முடியும்
என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் இரண்டாம் கட்ட வேலையின்
சிக்கல்கள். முதலில் அவனுக்கு ஒரு அலைபேசி வேண்டும். அது தான் அவனுக்கு முதல் கட்டத் தேவை. மற்றதை பின்பு
யோசித்துக் கொள்ளலாம்..
டெல்லியில் கரோல் பாக் மார்க்கெட்டை அவன் அடைந்த போது மதியம்
மூன்றரை மணி. அந்த நேரத்தில் அங்கு அதிக மக்கள் இருக்கவில்லை. ராஜா
சிங்கின் மொபைல் கடையைக் கண்டுபிடிப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.
ராஜா சிங்கின் கடை சிறியது தான் என்றாலும் எல்லா நேரங்களிலும்
அவன் கடையில் வாடிக்கையாளர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்று விமலிடம் அந்தத்
துறவி சொல்லியிருந்தார். அவர் சொன்னது போல அந்த மதிய நேரத்திலும் அவன் கடையில் இரண்டு வாடிக்கையாளர்கள்
இருந்தார்கள். விமல் தயக்கத்துடன் கடைக்குள் நுழைந்தான்.
தலைப்பாகையுடன் இருக்கும் ஆள் தான் ராஜா சிங் என்பதை விமல் யூகித்தான். கடையில் அவனுக்கு உதவியாளனாக ஒரு
சிறுவன் இருந்தான். அவன்
சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன்களைக் காட்டி அவற்றின் சிறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருந்தான்.
கல்லாவில் அமர்ந்திருந்த ராஜா சிங்கின் கூரிய பார்வை விமல் மீது
விழுந்தாலும் அவன் விமலிடம் ”என்ன வேண்டும்” என்று கேட்கவில்லை. விமல் கண்ணாடி அலமாரிகளில் வைக்கப்பட்டு இருந்த புதிய மொபைல் போன்களை நிதானமாகப்
பார்க்க ஆரம்பித்தான்.
மற்ற இரண்டு வாடிக்கையாளர்களும் சிறுவன் காட்டிய மொபைல் போன்
ஒன்றை விலைகுறைத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்க, சிறுவன் அவர்களை ராஜா சிங்கிடம் அழைத்துக் கொண்டு
போனான். ராஜா சிங் விலையில் அதிகபட்சமாய் ஐநூறு ரூபாய் குறைக்க
முடியும் என்று சொல்ல அவர்களோ ஆயிரத்து முன்னூறு ரூபாய் குறைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ராஜா சிங் அந்த அளவுக்கெல்லாம் விலையை குறைக்க முடியாது என்று சொல்ல
அவர்கள் வாங்காமல் போய் விட்டார்கள்.
அவர்கள் சென்றவுடன் விமல் ராஜா சிங்கைத் தயக்கத்துடன் நெருங்கினான். ராஜா சிங்கின் அனுபவப் பார்வை
விமலை சிறப்பு வாடிக்கையாளராக அடையாளம் காட்டியது. சிறப்பு வாடிக்கையாளர்
என்று அவன் அழைப்பது போலிப் பெயர் மற்றும் விலாசத்தில் அவனிடம் புதிய சிம் வாங்க வருபவர்கள்.
ராஜா சிங்கின் பிரதான வருமானம் சிறப்பு வாடிக்கையாளர்கள் மூலம்
தான் வருகிறது. அவர்கள் தான் இப்படி ஐநூறு ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய்க்கும்
பேரம் பேசாமல் அவன் கேட்கும் தொகையைக் கொடுத்து விட்டுப் போவார்கள். ஆனாலும் அவன் பெரிய வரவேற்பு எதையும் காட்டாமல் விமலை சுவாரசியமில்லாமல் பார்த்தான்.
(தொடரும்)
என்.கணேசன்

Many Thanks.
ReplyDeleteWhy we don't have an episode today sir?
ReplyDeleteNext episode please
ReplyDeleteSir, unable ser the next episode.
ReplyDeletePosted now.
ReplyDeleteThank you
Delete