பிரம்மானந்தாவுக்கு அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு தான் இரண்டு நாட்களாக இருந்து வருகிறது. இன்னும் பாதாள அடித்தளத்தை எட்டி விடவில்லை. எட்டினால் சுக்கு நூறாக உடைந்து விடலாம். வீழ்ச்சியின் விளைவு இன்னது தான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கும் விதி கருணை காட்டவில்லை. பாண்டியனின் மரணத்தை ஜீரணிப்பது அவருக்கு எளிதாக இல்லை. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காமல் உடனடியாக ஒரு தீர்வைக் குறுக்கு வழியில் வேகமாக எட்டுபவர் பாண்டியன். மலை போல் தோன்றிய எத்தனையோ பிரச்சினைகளை எல்லாம் அவர் பாண்டியனிடம் சொல்லிக் கவலைப்பட்டதுண்டு. சிலவற்றுக்கு உடனடியாகத் தீர்வு சொல்லும் பாண்டியன் சிலவற்றுக்குத் தீர்வைக் கண்டுபிடிக்க ஒரு நாள் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் பிரம்மானந்தாவுக்கு, திரும்பவும் அந்தப் பிரச்சினையை பாண்டியனிடம் சொல்ல வேண்டி வந்ததில்லை. காரணம், தீர்வு அவருக்குக் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட பாண்டியன் தனக்குக் கடைசியாக வந்தப் பிரச்சினைக்குக் குறுக்குவழித் தீர்வாக தற்கொலையை நினைத்தது பிரம்மானந்தாவுக்கு ஜீரணிக்க முடியவில்லை. விஸ்வகீர்த்தியின் தாயத்து வேலை செய்யா விட்டால் இன்னொரு ஆளைக் கண்டுபிடிப்பதா கஷ்டம்? அப்படியும் சரியான ஆளைக் கண்டுபிடிக்க முடியா விட்டால் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியுமே. பின் என்ன பிரச்சினை? கோழைகள் தற்கொலையைத் தீர்வாக நினைக்கலாம். ஆனால் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துப் போராட என்றுமே தயங்காத பாண்டியனுக்கு எப்படி தற்கொலையைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது? திரும்பத் திரும்ப அதே கேள்வி தான் அவரை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. அதல பாதாளத்தில் இன்னமும் போய்க் கொண்டே இருக்கிறார். பாண்டியன் இல்லாமல் எதையும் சமாளிக்க அவர் பழகவில்லை. அது பாண்டியனுக்கும் தெரியும். அது தெரிந்தும் ஏன் பாண்டியன்….
இரண்டு நாட்களாக அவரிடம் யார் யாரோ
வந்து ஏதேதோ ஆறுதல் சொல்லி விட்டுப் போகிறார்கள். காதில்
எதுவும் விழுந்த வார்த்தைகள் அவருடைய அறிவில் பதியவில்லை. எல்லாம்
வெறும் சத்தங்களாகத் தான் இருக்கின்றன.
அவரிடம் வக்கீல் எதையோ மூன்றாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருப்பதும், ஆடிட்டர் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதும் பிரம்மானந்தாவின் கவனத்தை பலவந்தமாக எண்ணங்களின் உளைச்சலில் இருந்து வெளியே கொண்டு வந்தது. பிரம்மானந்தா சொன்னார். “மன்னிக்கணும். நீங்க சொன்னதை கவனிக்கலை. என்ன சொன்னீங்க?”
“யோகாலயத்து நிர்வாகத்தை இவ்வளவு நாள் பாண்டியன் பார்த்துட்டு இருந்தார். அதை இனி யார் கிட்டே நீங்க ஒப்படைக்கப் போகிறீங்கன்னு உடனே தீர்மானிக்கறது நல்லதுன்னு சொன்னேன். அதிகாரபூர்வமாய் அதை நீங்க பதிவு பண்ணி வெச்சுட்டா உங்க பாரம் குறையும். இல்லாட்டி உங்க கிட்டயே ஒவ்வொன்னுக்கும் வருவாங்க… எல்லாத்தையும் நீங்களே பார்க்க வேண்டியிருக்கும்…” என்று வக்கீல் அழுத்தமாகச் சொன்னார். ஆடிட்டர் திவாகரனும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.
கண்ணன் இதயம் படபடக்க இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் பிரம்மானந்தாவை கவனித்து வருகிறார். யோகிஜி இனி அதிக நாள் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று கண்ணனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. பிரம்மானந்தா பித்துப் பிடித்தது போல் அமர்ந்திருப்பதும், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வெறித்த பார்வை பார்ப்பதும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமலிருப்பதும் கண்ணனுக்கு அபாயத்தின் அறிகுறிகளாகத் தோன்ற ஆரம்பித்தன. பாண்டியனைத் தொடர்ந்து இந்த முதியவரும் போய்ச் சேர்ந்து விடுவார் என்று கண்ணனின் உள்ளுணர்வு சொன்னது. இந்த நிலைமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பாண்டியனின் இடத்தை இங்கே அவர் பிடித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அவர் எண்ண ஆரம்பித்தார். பல்லாயிரம் கோடிகள் சொத்து மதிப்புள்ள யோகாலயத்தின் நிர்வாகம் கைக்குக் கிடைக்குமானால் அதன் பின் வேறொரு அதிர்ஷ்டம் தேவையே இல்லை. மீதமிருக்கும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையாகவே அமைந்து விடும்.
பிரம்மானந்தா இறந்து போய் விட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. சட்டம் ஒரு குழு அமைத்து அதிகாரத்தை சமமாகப் பிரித்து விட வாய்ப்பிருக்கிறது. பிரம்மானந்தா உயிரோடு இருக்கும் போதே யாரையாவது நியமித்து விட்டால் பின் அந்த நபருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. பாண்டியனுக்கு அடுத்தபடியாக திறமையான ஆள் என்றால் அது தான் தான் என்பது கண்ணனின் கர்வம் கலக்காத அபிப்பிராயமாக இருந்தது. பாண்டியனின் வலது கரமாய் இருந்து கண்ணன் செயல்பட்டு வந்ததை பிரம்மானந்தா பார்த்தவர். அதனால் இந்த நியமனத்தில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த எண்ணிய கண்ணன் சற்று முன் வந்த ஆடிட்டர், வக்கீல் இருவரிடமும் பிரம்மானந்தாவின் கவலைக்கிடமான நிலைமையையும், யோகாலயம் நிர்வகிக்க தலைமை இல்லாமல் இருக்கும் குழப்பமான நிலைமையையும் நாசுக்காகத் தெரியப்படுத்தினார்.
திவாகரனுக்கும் வக்கீலுக்கும் பிரம்மானந்தாவின் நிலைமையைப் பற்றி கண்ணன் சொன்னது மிகச்சரியே என்று தோன்றியது. அவர்கள் இருவரும் பேசும் போது கூட பிரம்மானந்தா வேறு ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் தோன்றியது. அதனால் தான் பாண்டியனுக்கு அடுத்தபடியாக யார் என்று முடிவெடுக்கும்படி அவர்கள் பிரம்மானந்தாவை வற்புறுத்தினார்கள்.
கண்ணன் பிரம்மானந்தாவுக்கு சேவை செய்யும் சாக்கில் மிகுந்த பணிவுடன் அந்த அறையிலேயே இருந்தார். அடுத்தது யார் என்று யோசிக்கையில் முதலில் நினைவுக்கு வரும்படியாக பிரம்மானந்தாவின் பார்வை விழும் இடத்திலேயே முன்னாலேயே கைகட்டியபடி அவர் நின்றிருந்தார்.
பிரம்மானந்தாவுக்கு இந்த நிர்வாக பாரம் என்றுமே பிடிக்காத சுமையாகத் தான் இருந்தது. இனி அந்தத் தலைவலியை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தி அவருக்கு இல்லை…. அவர் பார்வை எதிரேயிருந்த கண்ணன் மேலேயும் விழுந்தது. கண்ணன் ஆவலோடு காத்திருந்தார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்த பிரம்மானந்தா பின் கண்களைத் திறந்து சொன்னார். “கல்பனானந்தாவை நியமிச்சுடலாம். திறமைசாலி. யோகாலயம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இருக்கிறவள்….”
கண்ணனின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. ‘இந்த ஆளுக்கு நல்ல காலத்துலயே மூளை வேலை செய்யாது. லூசுத்தனமாய் உளற மட்டும் தெரியும். அதையே தன்னோட புத்திசாலித்தனம்னு நினைச்சுக்கும். இப்ப மூளை வேலை செய்யறதே நின்னு போச்சு போலருக்கு. யோவ் நாங்க எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் உன் வண்டவாளம் எல்லாம் எப்பவோ தண்டவாளம் ஏறியிருக்கும்யா…’ என்று கண்ணன் மனதுக்குள் புலம்பினார். பாண்டியனால் முடிந்தது, கல்பனானந்தாவால் முடியாது என்பதை வக்கீலோ, ஆடிட்டரோவாவது அந்தக் கிழவரிடம் சொன்னால் தேவலை என்று அவர் மனம் பரபரத்தது. அவர்கள் இருவரும் அப்படி எதுவும் சொல்லாமல் தலையசைத்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் அவருக்கு இருந்தது. அதற்கு வேண்டிய சட்டபூர்வமான வேலைகளை உடனே செய்வதாய் உறுதி அளித்து விட்டு வக்கீலும், ஆடிட்டரும் சென்றார்கள்.
பெரிய அதிகாரம் எதுவும் இல்லாத போதே கல்பனானந்தா அவர்களை எல்லாம் மதித்து நடக்காதவள். இத்தனைக்கும் பாண்டியன் மிக வலிமையான ஒரு நிலையில் இருந்தவர். அவருக்கு ஓரளவாவது மரியாதை காட்டிய அவள், அவருடைய அடியாட்களான அவர்களிடம் அலட்சியமாகத் தான் நடந்து கொள்வாள். அதுவும் வாய்விட்டு புகார் சொல்கிறபடி இருக்காது. அப்படி நாசுக்காக அலட்சியப்படுத்தும் திறமை படைத்தவள் அவள். அப்படிப்பட்டவள் அதிகாரத்தில் அமர்ந்தால் பின் கேட்கவே வேண்டாம். மேலும் பாண்டியன் அவர்களுக்குத் தாராளமாய் பணம் தருவார். பல தவறான வேலைகளைச் செய்ய வைப்பதும் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் கையில் பணம் தாராளமாய் புழங்கியது. கல்பனானந்தா தலைமையில் அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை… கண்ணன் இனி யோகாலயத்தில் இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தின் நிர்வாகப்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியானவுடனேயே கண்ணனும், பாண்டியனின்
மற்ற அடியாட்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறினார்கள். அதன்
பின் இரண்டு நாட்கள் பிரம்மானந்தா நடைப்பிணம் போல் இருந்தார். மூன்றாவது நாள் பக்கவாதம் வந்து படுத்த படுத்த படுக்கையானார். தீவிர
சிகிச்சை அவருக்குத் தரப்பட்டது என்றாலும் அவரைப் பழைய நிலைமைக்கு மருத்துவர்களால்
கொண்டுவர முடியவில்லை. தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் யோகசக்தி அவரிடம் இருந்தும், யோகாலயத்தில் நிகழ்ந்த தவறான நிகழ்வுகள் அவரை விரக்தி வைராக்கியத்தில்
தள்ளி விட்டதென்றும், அதனால் அவர் குணப்படுத்திக்கொள்ள எந்த முயற்சிகளும் எடுக்காமல்
விதி விட்ட வழி என்று இருக்கிறார் என்றும் அவருடைய தீவிர பக்தர்கள் சொன்னார்கள். பலரும்
அது சரியாக இருக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டார்கள்…
(தொடரும்)
என்.கணேசன்

No comments:
Post a Comment