என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 23, 2026

சதுரங்கம் 28

 


விமல் சோனா ஓட்டலில் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு நாளை ஒரு போலி பெயர், முகவரியுடன் புதிய ஒரு அலைபேசி கிடைத்து விடும். ஆனால் அடுத்ததாக அவன் செய்யப் போகும் வேலை மிக ஆபத்தானது. பிரச்சினையில்லாமல் முடிந்தால் அவன் மீதமுள்ள வாழ்க்கையை அரசனைப் போல் வாழலாம். ஆனால் பிரச்சினை வந்தால் பின் மீதமுள்ள வாழ்க்கை என்பதே இருக்காது. அவன் ஒரு அனாதைப் பிணமாய் முடிந்து போகவும் வாய்ப்பு உண்டு. அறிவுபூர்வமாக யோசித்தால் அவன் அப்படி அனாதைப் பிணமாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.  ஆனாலும் அவன் ஏன் அந்த ஆபத்தான வேலையில் இறங்குகிறான் என்றால் பணம், வசதிகள், மது, அசைவ சாப்பாடு, அழகான பெண்கள் சகவாசம் எல்லாம் இல்லாமல் வாழ்வது அனாதைப் பிணமாக முடிவதை விடக் கொடுமையானது. நர்மதா இறந்தவுடன் உயிருக்கு மேல் எதுவும் இல்லை என்று ஓடி வந்தவன் தான் அவன். ஆனால் ஒளிந்து, பதுங்கி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது நரக வாழ்க்கை என்பது சில நாட்களிலேயே அவனுக்கு விளங்கி விட்டது.

 

அவனுடைய திட்டத்தை நிறைவேற்ற அவனுக்கு குறைந்தபட்சம் இன்னொரு ஆளின் உதவியாவது வேண்டும். முழு நம்பிக்கைக்குரிய தைரியமான  இரண்டு மூன்று ஆட்கள் அவனுக்கு உதவிக்கு இருந்தால் மேலும் நல்லது. அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் யாரும் தங்களுக்கு ஆபத்தை வரவழைத்துக் கொண்டு அவனுக்கு உதவ முன்வர மாட்டார்கள். சினிமாவில் ஒன்றிரண்டு வேடங்கள் கிடைத்த பின் அவன் தமிழ்நாட்டின் அடுத்த ரஜனிகாந்த் ஆகவும், விஜய் ஆகவும் வருவது உறுதி என்ற நம்பிக்கையில் அவர்களை எல்லாம் அலட்சியப்படுத்தி இருந்தான். அத்தனை உச்சத்திற்குச் செல்லா விட்டாலும் தொடர்ந்து திரை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அதுவுமில்லாமல் போய், சின்னத் திரை தொடர்களில் நடித்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருக்கிற அவனுக்கு நண்பர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜாலியாக பொழுது போக்குவதில் அவனுடன் சேர்ந்து கொள்பவர்களே தவிர, ஆபத்து, பிரச்சினை என்றால் அடுத்த கணம் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காணாமல் போகிறவர்கள். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. அவனே அப்படித்தான். அதனால் அவனுடைய நட்புகள் வேறுவிதமாக இருக்க வாய்ப்பில்லை. புதியவர்களையோ அவன் இதில் நம்பி சேர்த்துக் கொள்ள முடியாது.  என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தெளிவும் கிடைக்கவில்லை.

 

அவனுக்கு இப்போது தேவை தைரியமான ஆள். ஆபத்தைக் கண்டு பின் வாங்காத ஆள். அந்த ஆள் நாணயஸ்தனாகவும் இருக்க வேண்டும். விமல் அவனுக்கு வரும் பணத்தின் ஒரு பகுதியை அந்த ஆளுக்குத் தரத் தயார். ஆனால் அந்த ஆள் விமலைக் காட்டிக் கொடுத்து அதே அளவு பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அப்படி பணம் சம்பாதிக்க நினைக்காத ஒரு அடிப்படை நேர்மையாவது அந்த ஆளுக்கு இருக்கவேண்டும். அது போன்ற ஒரு ஆளை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? எதிரியுடன் பேரம் பேசி விட்டு பிறகு யோசித்துக் கொள்ளலாம்...  

 

முடிவு எடுத்த பின் விமல் நிம்மதியாகத் தூங்கினான்.

 

த்திவாக்கம் கிராமத்திற்கு அர்ஜுன் பஸ்ஸில் தான் சென்றான். பைக்கில் சென்று வரக்கூடிய அளவுக்கு அது குறைந்த தூரமல்ல. அதை விட அதிக தொலைவுக்கும் அவன் பைக்கில் போவதுண்டு. ஆனால் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டிய வேலையில் பைக்கின் ரெஜிஸ்டிரேஷன் எண் அவனைக் காட்டிக் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது. இன்று போகும் விஷயத்தில் அவன் அடையாளம் தெரிவது பெரிய ஆபத்தில்லை என்றாலும், அவனுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வின் காரணமாக அவன் பஸ்ஸையே தேர்ந்தெடுத்தான்.

 

பஸ் நிறுத்தத்தில் ஒரு பெட்டிக் கடையும், டீக்கடையும் மட்டுமே இருந்தன. அருகில் ஒரு பெரிய ஆலமரமும் இருந்தது. ஆலமரத்தடியில் இருவரும், டீக்கடையில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுன் முதலில் டீக்கடைக்காரரிடம் பேசினான்.  கிராமத்திற்கு அந்த ஆலமரத்தைத் தாண்டித் தெரியும் பாதையில் ஒரு மைல் தூரம் உள்ளே போக வேண்டும் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.  டீக்கடைக்காரரிடம் தன்னை ஒரு எல்..சி ஏஜெண்ட்டாக அர்ஜுன் அறிமுகப்படுத்திக் கொண்டான். மகுடபதி என்பவர் பெயரில் ஒரு பழைய பாலிசி இருப்பதாகவும், நாமினேஷனாக அவர் மனைவி ரங்கநாயகி பெயர் போடப்பட்டு இருப்பதாகவும், விலாசமாக அத்திவாக்கம், காஞ்சிபுரம் என்று மட்டும் தரப்பட்டிருப்பதாகவும், மகுடபதி, ரங்கநாயகி, அல்லது அவர்கள் குடும்பத்தினர் யாராவது இருந்தால் அவர்களிடம் அந்த பாலிசி குறித்து பேச வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.

 

டீக்கடைக்காரருக்கு மகுடபதி குறித்தோ, அவர் குடும்பம் குறித்தோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. டீக்கடையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் பக்கத்து பெட்டிக்கடைக்காரரைக் கேட்டார். அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.  அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆலமரத்தடி ஆட்களும் வந்தார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை.

 

அவர்களில் ஒருவர் கேட்டார். “அந்த பாலிசி எப்போ எடுத்தது தம்பி?”

 

நாற்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த பாலிசி என்று அர்ஜுன் சொன்னவுடன் அவர் சொன்னார். “தம்பி, இந்தக் கிராமத்தில் மாடசாமிங்கற பெருசு இருக்கு. வயசு 75 க்கு மேல இருக்கும். அதுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு..”

 

சொன்னதோடு நிற்காமல், அவர் தன்னுடைய பழைய ஸ்கூட்டரில் அவனை  கிராமத்தின் உள்ளே இருக்கும் மாடசாமியின் வீட்டுக்கும் அழைத்துக் கொண்டு போய் விட்டார். “பெருசு கிட்ட கொஞ்சம் சத்தமாய் பேசணும்.  அப்ப தான் காது கேட்கும். ஆனா பழசு எல்லாத்தையும் புள்ளி விவரத்தோட சொல்லும். நல்ல ஞாபக சக்தி.”

 

மாடசாமிக்கு மகுடபதியை ஞாபகம் இருந்தது. அர்ஜுனை அழைத்துச் சென்றவரிடம் அவர் சொன்னார். “இப்ப முத்துப்பேச்சி குடியிருக்கு இல்லயா. அந்த வீட்டுல தான் மகுடபதி இருந்தார்.” பின் அர்ஜுனிடம் அவர் சொன்னார். “அவரும் அவர் சம்சாரமும் கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்களே தம்பி.”

 

அர்ஜுன் மற்றவர்களிடம் சொன்ன எல்..சி பாலிசி கதையையே அவரிடமும் சொன்னான். “அவங்களுக்கு எத்தனை பிள்ளைங்க இருந்தாங்க? இப்ப அவங்க எல்லாம் எங்கே இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா பெரியவரே

 

அவங்களுக்கு ஒரே ஒரு மகள் இருந்தா. ஆனா அவ எங்கே போனா, இப்ப எங்கே இருக்கான்னு எல்லாம் தெரியாது தம்பி.”

 

அவர்களைப் பற்றிக்  கூடுதல் விவரங்கள் தெரிந்திருக்கக் கூடியவர்களும்  அங்கு யாரும் இல்லை என்று அவர் சொன்னார். “இப்போதைக்கு இங்கே இருக்கிறவங்கள்லயே பழைய ஆள் நான் தான். இங்கே வந்து 32 வருஷம் ஆச்சு. மகுடபதி காலத்து மத்த ஆளுங்க எல்லாம் நிலத்தை வித்துட்டு எங்கங்கயோ போய்ட்டாங்க.”

 

அர்ஜுனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவருக்கு பானுமதியின் பெயராவது நினைவிருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்பி கேட்டான். “அவங்களுக்கு ஒரு மகள் இருந்ததாய் சொன்னீங்களே, அவங்க பெயர் தெரியுமா பெரியவரே?”

 

அதெல்லாம் ஞாபகம் இல்லை தம்பி. மகுடபதி பெயர் மட்டும் தான் தெரியும். அவர் மனைவி பெயர் கூடத் தெரியாது. அப்பவெல்லாம் ஒரு பெயரை வெச்சு தான் அந்தக் குடும்பத்து ஆள்கள் அத்தனை பேரையும் கூப்பிடுவோம். மகுடபதி சம்சாரம், மகுடபதி மகள்னு கூப்பிடறது தான் அப்பத்து வழக்கம்.”

 

அர்ஜுன் யோசித்து விட்டுக் கேட்டான். “முதல்ல இறந்தது மகுடபதியா, இல்லை அவங்க மனைவியா?”

 

ரெண்டு பேரும் ஒரே சமயத்துல தான் இறந்தாங்க தம்பி. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துட்டு செத்தவங்க தானே

 

அர்ஜுன் அதிர்ச்சியடைந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்




No comments:

Post a Comment