என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 16, 2026

சதுரங்கம் 27

 


ர்ஜுன் தங்கையிடம் மெல்லக் கேட்டான். “இது அம்மா கையெழுத்து தானா?”

 

நித்யா உறுதியாகச் சொன்னாள். “அம்மா கையெழுத்து தான். அம்மா மளிகை சாமான்கள் லிஸ்ட் எழுதறதை நான் பார்த்திருக்கேனே

 

அம்மா இப்போதெல்லாம் மளிகை சாமான் லிஸ்ட் தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. வேறெதுவும் எழுத இப்போதெல்லாம் சந்தர்ப்பமும் அவளுக்கு இல்லை….. யோசிக்கையில் மனம் வலித்தது. எந்திரம் போல் இன்று வாழ்பவள் ஒரு காலத்தில் கவிதைகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறாள். எப்போது அந்த ரசனைகளை எல்லாம் அவள் தொலைத்தாள், ஏன் தொலைத்தாள், எப்படித் தொலைத்தாள் என்றெல்லாம் அவன் யோசித்தான். அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. மனதில் எழுந்த சில கேள்விகளை வாய்விட்டுக் கேட்கவும் அவனுக்கு தைரியம் வரவில்லை. அவன் கேள்விகளை நித்யா எப்படிப் புரிந்து கொள்வாளோ தெரியவில்லை.

 

அவன் மெல்லக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய் நித்யா?”

 

நம்ம குடும்பத்தைப் பற்றியே நமக்குத் தெரியாதது நிறைய இருக்குண்ணா. அதை நீ தான் கண்டுபிடிக்கணும்.”

 

நானா?”

 

நீ தானே பத்திரிக்கை நிருபர். ஊர், உலகத்துல நடக்கிறதை எல்லாம் கண்டுபிடிச்சு எழுதற நீ உன் குடும்பத்தைப் பற்றியே சரியாய் தெரிஞ்சுக்காம இருக்கிறது சரியில்லையேண்ணா….”

 

அம்மா அவளை அழைப்பது கேட்டது. நித்யா போய் விட்டாள்.  அர்ஜுன் யோசிக்க ஆரம்பித்தான். அம்மாவைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்தது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் தான். அம்மாவின் இளமைக் காலத்தைப் பற்றி ஒரு முறை நித்யா கேட்ட போது அம்மா கண்கலங்கியபடி தனதறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டதற்குப் பிறகு, அந்த நிகழ்வை, அம்மா இல்லாத சமயத்தில், நித்யா அப்பாவிடமும் சொல்லியிருக்கிறாள். மிகச் சாதாரண கேள்விக்கும் அம்மா அப்படி ஏன் நடந்து கொண்டாள் என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறாள். நித்யா கேட்டதற்கு அப்பா மென்மையாகச் சொன்னார்.  எல்லார் வாழ்க்கையும் உன் வாழ்க்கை மாதிரி சந்தோஷமாய் இருக்கறதில்லை நித்யா. நினைவுபடுத்தினால் கூட வலிக்கிற கடந்த காலம் சிலருக்கு இருக்கு. அதுல உன் அம்மாவும் ஒருத்தி. அவ அதை மறந்துட்டு வாழ முயற்சி பண்றா. நாம அதுக்கு உதவணும்.”

 

என்ன ஆச்சுப்பா?”

 

வலிக்க வைக்கிற விஷயங்களைத் தெரிஞ்சு நீ என்ன செய்யப் போகிறாய் நித்யா. நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவோம்.”

 

இல்லைப்பா. எனக்கு அம்மா வழி தாத்தா பாட்டி பெயர் கூடத் தெரியாது. அவங்க எந்த ஊர்ன்னும் தெரியாது. இது விசித்திரமாய் இல்லையாப்பா?”.

 

அப்பா சொன்னார். “உன் தாத்தா பெயர் மகுடபதி. உன் பாட்டி பேர் ரங்கநாயகி. அவங்க வாழ்ந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கிற அத்திவாக்கம்கிற குக்கிராமம். போதுமா? இனி நாம இதைப் பற்றி பேச வேண்டாம். அவளுக்கு வலிக்கிற விஷயங்கள் நமக்கும் வேண்டாம்.”

 

அதற்கு மேல் அந்த வீட்டில் அம்மாவின் பூர்வீகமும், கடந்த காலமும் பேசப்படவில்லை. அத்திவாக்கம் கிராமத்திலிருக்கும் பானுமதியை, ஞானமூர்த்தி எப்படி சந்தித்தார், எப்படி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. திருமண சமயத்தில் பானுமதியின் பெற்றோர் உயிரோடு இல்லை என்பது மட்டும் தெரியும்.

 

நித்யா சொன்னது போல அவனைப் போன்ற ஒரு பத்திரிக்கை நிருபர் மனம் வைத்தால் எதைத்தான் தெரிந்து கொள்ள முடியாது? அம்மாவைப் பற்றியும், அவளுடைய குடும்பப் பின்னணி பற்றியும் அவன் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பா என்றைக்கோ முற்றுப் புள்ளி வைத்து விட்ட விஷயம் அது என்பதால் அவரிடம் மீண்டும் அந்தப் பேச்சை எடுக்க முடியாது. சித்தப்பாவிடம் கேட்டால் கூட அந்த விவரங்களை அவன் பெற்றுக் கொள்ள முடியும். அவர் அப்பா போல் கறார் பேர்வழி அல்ல. ஆனால் அவன் தாயின் பூர்வீகத்தைப் பற்றி அவன் பெற்றோரிடமே பேசமுடியாமல் இருப்பதைக் காட்டும்படியாக, சித்தப்பாவிடம் கேட்பது சரியல்ல என்று தோன்றியது. மேலும் அவரும் சில விஷயங்களை மறைக்கிறார். தாத்தா அவனுடைய பெற்றோர் திருமணத்திற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதை அறிந்ததாக அவன் சொன்ன போதே அவர் அதிர்ச்சியுடன் பார்த்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. பிறகு அவர் அதைச் சமாளித்தார் என்றாலும் அந்தச் சின்ன விஷயத்துக்கு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கத் தேவையில்லை. படித்த மகனுக்கு எஸ்.எஸ்.எல்.சி வரை கூட படித்திருக்காத பெண் மனைவியாக வருவதில் தாத்தா தயக்கம் காட்டியது குற்றமென்று யாரும் சொல்ல முடியாது....

 

ஹாலில் சத்தமாகப் பாட்டு கேட்டது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்....”

 

நித்யாவின் கைங்கரியம் இது என்று அர்ஜுனுக்குப் புரிந்தது. அம்மாவின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்க அவள் விரும்புகிறாள்... அர்ஜுன் எழுந்து மெல்ல அறைக்கதவருகே நின்று கொண்டு ஹாலைப் பார்த்தான். நித்யா அம்மா நறுக்கச் சொல்லியிருந்த காய்கறிகளை நறுக்கிக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். வேலை செய்யும் போது பாட்டு கேட்டுக் கொண்டே செய்வது அவள் வழக்கம். பெரும்பாலும் காதில் இயர்போன் வைத்துக் கொண்டு தான் பாடல்களைக் கேட்பாள். இன்று அவள் இயர்போன் உபயோகிக்கவில்லை. எஃப் எம் ரேடியோவில் அந்தக் குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் ஒலியை நன்றாகவே கூட்டியிருக்கிறாள் என்று அர்ஜுனுக்குப் புரிந்தது.

 

அம்மா சமையல் அறையிலிருந்து வேகமாக வந்து ரேடியோவை ஆஃப் செய்தாள். “இவ்வளவு சத்தமாவா பாட்டு கேட்பாங்க. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என்று நித்யாவைத் திட்டி விட்டு வேகமாகவே போய் விட்டாள். தலைவலிக்கும் அளவு சத்தமாக அந்தப் பாடல் ஒலிக்கவில்லை. நித்யா அர்ஜுனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள். ’அம்மாவுக்கு, அவள் ரசித்து எழுதி வைத்த பாடலையே இப்போது கேட்பதற்குத் தலைவலிக்கிறது.’

 

அர்ஜுன் திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்து கொண்டான். அம்மா விஷயத்தில் நிறைய புதிர்களும், முரண்களும், பதிலில்லா கேள்விகளும் இருக்கின்றன. அப்பா விரும்பி அவளைத் திருமணம் செய்து கொண்டார் என்றால், கண்டிப்பாக அது கட்டாயத் திருமணமாக இருக்க வழியில்லை. அதனால் ஒரு காலத்தில் காதல் பாடல் இனித்தது, இன்று கசக்கிறது என்று சொல்ல வழியில்லை. மேலும், அம்மாவும் அப்பாவும் நிறைய பேசிக் கொண்டிருக்கா விட்டாலும் வார்த்தைகளில்லாத அன்னியோன்னியம் அவர்களுக்கு இடையே இப்போதும் இருப்பதை அவன் பார்க்கிறான்.

 

இந்த வீட்டில் பானுமதியின் பெற்றோர் புகைப்படம் ஒன்று கூட இல்லை. வாசுதேவன்யசோதா புகைப்படம் ஹாலில் பெரிதாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் மகுடபதிரங்கநாயகி படம் ஒன்று கூட இல்லை. சுவரில் தொங்கா விட்டாலும் பழைய புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. சரி வறுமையில் இருந்த அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூட வசதியில்லாதவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களைப் பற்றிய ஏதாவது பேச்சு பானுமதி வாயில் இருந்தாவது வரவேண்டும். பானுமதி ஒரு முறை கூட அவர்களைப் பற்றிப் பேசியதில்லை. அதுமட்டுமல்ல, பானுமதியின் உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு யாரும் இந்த வீட்டுக்கு வந்ததாகவும் அர்ஜுனுக்கு நினைவில்லை.

 

அவனுடைய தொழிலில் ஒரு சின்னத் தும்பு கிடைத்தால் போதும் அதைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல மொத்தத்தையும் அறிந்து கொள்வது சர்வசாதாரணம். அவனுடைய தாய்வழி பாட்டி தாத்தா பெயர் தெரியும், ஊர் தெரியும். இது போதாதா மீதியையும் தெரிந்து கொள்வதற்கு?

 

காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கிற அத்திவாக்கம் கிராமத்திற்குச் சென்று வருவதென்று அர்ஜுன் தீர்மானித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment