அப்சல்கானைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி தன் கண்களைச்
சந்தேகித்தான். ’அப்சல்கான் புன்னகைக்கிறானா? நான் பார்த்தது
சரிதானா?’
திகார் சிறையில் அப்சல்கானைப் போல்
தினசரிகள் அனைத்தையும் முழுவதுமாகப் படிப்பவர்கள் குறைவு. அதிலும்
அவனைப் போல் ஒரு செய்தி விடாமல் நீண்ட நேரம் படிப்பவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லி
விடலாம். உலகின் அதிபயங்கரவாதிகளில் ஒருவன் என்று சொல்லப்படும் அவனைக்
கண்கொத்திப்பாம்பாக கவனிக்கும்படி அவனைப் போன்ற காவலாளிகள் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்
அங்கு அந்தக் காவலாளி காவலில் இருக்கும் போதெல்லாம் அப்சல்கானை விடாது கண்காணித்துக்
கொண்டு இருக்கிறான். இது வரை எல்லா நாட்களும் ஒன்று போலவே சுவாரசியமில்லாமலும், வித்தியாசமாக
எதுவும் நடக்காமலும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று
அப்சல்கான் அதிசயமாய் ஒரு வாரப்பத்திரிக்கையை எடுத்துப் படிக்கிறான். புன்னகைக்கிறான்….
அப்சல்கான் எழுந்து அந்தக் காவலாளி
அருகே வந்தான். காவலாளி துப்பாக்கியை உபயோகிக்கத் தயார் நிலைக்கு உடனே மாறினான். அப்சல்கான்
தெளிவான குரலில் சொன்னான். அடுத்த நிமிடம் அடுத்த அதிசயம் நடந்தது. “எனக்கு
என் வக்கீலைப் பார்க்க வேண்டும்”. அந்தக் காவலாளி முதல் முறையாக அப்சல்கானின் குரலைக் கேட்கிறான்.
வக்கீல் காளிதாஸை உச்சநீதிமன்ற வட்டாரத்தில் அறியாதவர்கள்
யாருமில்லை. அவர் சட்ட மேதையோ, சட்ட நுணுக்கங்களைக்
கரைத்துக் குடித்தவரோ அல்ல. ஆனாலும் அவர் ஏன் பிரபலம் என்றால், யாரும்
ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வழக்குகளையும் அவர் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார். தீவிரவாதிகள், கொடூரமான
கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள், பெருங்குற்றவாளிகள்
என்று வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தவர்கள் எல்லாம் அதிகமாக உச்சநீதிமன்றம் வரும்
போது அவரைத் தான் நாடி வருவார்கள். பல வக்கீல்கள் போல
அவர் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அந்த வழக்கை மறுக்க மாட்டார். அதே போல்
வெற்றிக்கு வாய்ப்பே இல்லா விட்டாலும் ஒதுங்க மாட்டார். அதிகமாக
பணத்தைத் தந்தால் அந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு நடத்துவார்.
சட்ட நுணுக்க வல்லுனர் அவரல்ல என்றாலும்
அவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மிக நன்றாக அறிந்தவர். உச்சநீதிமன்ற
நீதிபதிகள் பற்றியும் அவர் மிகத் துல்லியமாக அறிந்தவர். இது போன்ற
வழக்குக்கு இந்த நீதிபதி இந்தத் தீர்ப்பு தான் வழங்குவார் என்று அவர் முன்கூட்டியே
சொல்ல முடிந்தவர். உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆட்களையும், அவர்களிடம்
வேலை ஆக யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூட அவர் நன்றாக அறிந்தவர். வழக்குகளில்
வெற்றி பெற்றுத் தரமுடியாத அளவு குற்றம் தெளிவாக இருந்தாலும் வழக்கை எப்படி முடிந்த
வரை நீட்டிப்பது, தண்டனையை எப்படி தள்ளிப் போடுவது அல்லது குறைப்பது என்பதை
அவர் கச்சிதமாக அறிவார். அவரது சில்லறைத்தனமான
தந்திரங்களை உணரும் சில நேர்மையான நீதிபதிகள் அவரைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்ததுண்டு. ஆனால் அவர்
அதை எப்போதும் அவமானமாக எடுத்துக் கொண்டதில்லை. எதற்காக
அவர் கண்டிக்கப்பட்டாரோ அதை அவர் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் தொடர்ந்து செய்வார். ஃபீஸ் விஷயத்தில்
தான் அவர் மிகவும் கறாராக இருப்பாரே ஒழிய அவர் மற்ற அனைத்திலும் கண்டிப்போ, எதிர்ப்புகளோ, கவலையோ
அற்ற மென்மையானவர் தான்.
திகார் சிறைச்சாலையிலிருந்து ’அப்சல்கான்
அவரைச் சந்திக்க விரும்புகிறான்’ என்ற செய்தி அவரை வந்தடைந்த போது அவர் ஆச்சரியப்பட்டார். அப்சல்கானுக்கு
அவரிடம் பேசவோ, அவருக்கு அப்சல்கானிடம் பேசவோ எதுவுமிருப்பதாக அவர் நினைக்கவில்லை. டெல்லி உயர்நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து, பின் அவன்
மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றத்திற்கு வர அவரை அணுகிய போது தீர்ப்பு வேறு விதமாக
வாய்ப்பில்லை என்று தெளிவாகச் சொல்லிய அவர், முடிந்த
வரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பல வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம் என்ற உத்தரவாதம்
மட்டுமே அவனுக்கு அளித்திருந்தார். அவனும் அதை ஏற்றுக்
கொண்டிருக்கிறான். அவர் அவனுக்கு வாக்களித்தபடி சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி
வழக்கு வாய்தாக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். இதற்கு
மேல் பேசவோ செய்யவோ எதுவுமில்லை. அப்படி இருக்கையில் அவன் ஏன் அழைக்கிறான் என்று அவருக்குப்
புரியவில்லை.
சூடு சொரணை அற்றவர் என்று சகாக்களால்
கூறப்படும் காளிதாஸுக்கே அப்சல்கானைச் சந்தித்துப் பேசுவதில் சிறிது படபடப்பு இருந்தது. காரணம்
அவனிடம் பேசுகையில் அவனுக்குள்ளே வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலையை அவர் அடிக்கடி
உணர்வதுண்டு. அவன் சிறைச்சாலையில் இருக்கையில் அவரிடம் இதுவரை பேசிய வார்த்தைகளை
விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் அவன் பேசாத வார்த்தைகள் அவரை எச்சரிக்கை செய்தன. அந்த வார்த்தைகளைக்
கேட்க நேரிட்டு விடுமோ என்று பயமுறுத்தின. அப்படி
ஏன் தோன்றுகின்றது என்று அவரால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும்
அந்த உணர்வு அவரிடம் எப்போதும் இருந்து வருகிறது. இப்போது என்ன சொல்வானோ என்ற படபடப்புடன் தான் அவர் திகார்
சிறைக்குச் சென்றார்.
அவனை அவர் சந்தித்த போது மரியாதை நிமித்தம் “எப்படி
இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவன் அந்தக்
கேள்வி பைத்தியக்காரத்தனமானது என்பது போல் பார்த்தானே ஒழிய பதில் சொல்லவில்லை. “இங்கே ஒருவன்
எப்படி இருப்பான்?” என்ற பதில் கேள்வியை அவன் கேட்பது போல் அவனது மௌனம் இருந்தது. ’பின் என்ன
தான் உன்னிடம் பேசுவது’ என்று மனதுக்குள் அவனுடைய மௌனத்திற்குப் பதிலாக அவர் கேட்டுக்
கொண்டார்.
அப்சல்கானுக்கு இரண்டடி தூரத்தில் ஒரு
காவலன் நின்று கொண்டிருந்தான். அப்சல்கான் அவனை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்தான். தானாக அந்தக்
காவலாளி மேலும் இரண்டடி தள்ளி நின்றான்.
அப்சல்கான் மெல்லிய குரலில் காளிதாஸிடம்
சொன்னான். “என் ஆளிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும்.”
காளிதாஸ் தன் முந்தைய அனுபவத்தால் காதுகளைக்
கூர்மையாக்கித் தான் அந்த வார்த்தைகளைக் கேட்க முடிந்தது.
காளிதாஸால் அவன் குரலுக்கு இணையாக மெலிதாகப்
பேசமுடியும் என்று தோன்றவில்லை. அவர் பேசுவது அந்தக் காவலாளி காதில் விழுந்தாலும், அதை வைத்து
அவன் அப்சல்கானின் கேள்வியை யூகிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதை அப்சல்கான்
விரும்ப மாட்டான் என்பதையும் உணர்ந்த காளிதாஸ் பார்வையாலேயே அவனிடம் கேட்டார். “என்ன சொல்ல
வேண்டும்?”
அப்சல்கான் சொன்னான். “இந்த வார
உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கக் கட்டுரையைப் படிக்கச் சொல்லுங்கள்.”
காளிதாஸ் திகைத்தார். ‘இது என்ன
சிறுபிள்ளைத்தனம். இதற்கா என்னை இங்கே வரவழைத்தாய்?’ என்று கேட்க
அவர் நாக்கு துடித்தாலும் அதை அவனிடம் வாய் விட்டுக் கேட்பது ஆபத்தானது என்று அவருடைய
அறிவு எச்சரித்தது.
சரி வேறென்ன?’ என்று அவர்
அவனிடம் பார்வையிலேயே கேட்டார். சிறு தலையசைப்பில் அவன் ‘வேறொன்றுமில்லை’ என்று தெரிவித்து
விட்டு எழுந்தான்.
வந்தமர்ந்து இரண்டே நிமிடங்களில் சந்திப்பு
முடிந்து கிளம்பும் ஒரே வக்கீல் இந்த சிறைச்சாலை வரலாற்றில் நாமாகத் தான் இருக்கும்
என்று எண்ணியபடி காளிதாஸும் புறப்பட்டார்.
காரில் தன் வீட்டுக்குச் செல்கையில்
அப்சல்கானின் வித்தியாசமான கோரிக்கை காளிதாஸைக் குழப்பியது. வார்த்தைகளைக்
கூட அளந்து பேசும் இவன் பைத்தியக்காரத்தனமான விஷயத்தைச் சொல்ல நம்மை அழைத்திருக்க வாய்ப்பில்லையே
என்று எண்ணியபடி வந்த அவர் வழியில் தினசரிகள், வார மாத
இதழ்கள் விற்கும் ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தி அந்த வார உமன்ஸ் வர்ல்டு வாங்கினார்.
வாங்கி அந்த வார இதழைப் பிரித்தபடி
வந்து காரில் அமர்ந்த அவர் பதினாறாம் பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். அவன் என்ன
நோக்கத்தில் சொன்னான் என்பது உடனடியாக அவருக்குப் புரிந்தது. அதிர்ச்சியில்
அவர் விரல்கள் லேசாக நடுங்குவது வார இதழ் நடுங்கியதைப் பார்த்த பிறகே அவருக்கு உறைத்தது. அற்ப சகவாசம்
பிராண சங்கடம் என்ற பழமொழி அந்தச் சமயத்தில் அவருக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.
வார இதழை பின் சீட்டில் வீசி விட்டு
அவர் வேகமாகக் காரைக் கிளப்பினார்.
(தொடரும்)
என்.கணேசன்

No comments:
Post a Comment