சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 27, 2025

சாணக்கியன் 150


ராக்‌ஷசர் மனதில் எழுந்த கொந்தளிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார். என்ன நடக்கிறது மகதத்தில்? அவர் பார்வை சேனாதிபதி பத்ரசாலின் மீது நிலைத்தது. பத்ரசால் முடிந்த வரை அவர் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருப்பது என்று நிச்சயித்திருந்தான். அவன் தன் முன்னால் உள்ள குதிரைப்படை அணியை மேற்பார்வை பார்த்துக் கொண்டும், அவனுடைய படைத்தலைவர்களுக்கு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டும் கர்மமே கண்ணாயிருந்தான்.

 

ராக்‌ஷசர் சேனாதிபதியையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்களுக்குத் தென்பட்ட உண்மை அவன் கண்களுக்கும் தென்படாமல் இருக்க வழியே இல்லை. சொல்லப் போனால் சேனாதிபதியான அவனுக்கு அது அவருக்கு முன்பாகவே தெரிந்திருக்க வேண்டும். அவன் திகைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. சேனாதிபதி இயல்பாக அவன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பாரசீகக் குதிரைகளின் எண்ணிக்கை எப்படிக் குறைந்தது? அவை எங்கே போயின?

 

முதலில் ஆயுதக்கிடங்கு தீப்பிடித்தது, பின் தனநந்தனின் புதையல் காணாமல் போனது, இப்போது இது…. ஒவ்வொன்றாய் கிளம்புகின்றது. அவர் நிர்வாகத்தின் கீழ் அவர் அறியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண சமயமாய் இருந்திருந்தால் இப்போதே அவர் சேனாதிபதியை அழைத்து விசாரித்திருப்பார். ஆனால் அவசரப்பட வேண்டாம் என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. சிறிது நேரம் அங்கிருந்து பார்த்து விட்டு அங்கிருந்து அவர் கிளம்பினார். அவர் போவதைப் பார்த்து பத்ரசால் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அதைக் கவனித்த சுதானுவுக்கு பத்ரசாலும் ராக்‌ஷசரும் கூட நல்லுறவில் இல்லை என்பது மெல்லப் புரிந்தது.  

 

பத்ரசால் ராக்‌ஷசர் குதிரைகளின் மாற்றத்தைக் கண்டுபிடித்து விடவில்லை என்று நினைத்து தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தான். கண்டுபிடித்து இருந்தால் கண்டிப்பாக அவனைக் கூப்பிட்டு விசாரித்திருப்பார். அதையெல்லாம் தாமதப்படுத்தும் நபர் அல்ல அவர் என்பது அவன் பழைய  அனுபவமாக இருந்தது.

 

ஆனால் ராக்‌ஷசர் அங்கிருந்து சென்றவுடன் முதல் வேலையாக குதிரைகள், யானைகள் ஆகியவற்றை கணக்கெடுத்து தணிக்கை செய்யும் அதிகாரியை உடனே அழைத்து விசாரித்தார். ”நீங்கள் கடைசியாக குதிரைகளைத் தணிக்கை செய்தது எப்போது?”

 

”சென்ற மாதம் பிரபு. போர்ச்சூழல் ஏற்படலாம் என்று தாங்கள் உடனடியாகச் செய்து முடிக்கக் கட்டளையிட்டீர்கள்.”

 

“தணிக்கை செய்த போது எல்லாம் சரியாக இருந்ததா?”

 

“இருந்தது பிரபு. நான் தணிக்கை முடித்து அதற்கான அறிக்கையையும் தங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.”

 

““நான் இன்று குதிரைகளின் அணிவகுப்பைப் பார்வையிட்ட போது எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரியவில்லையே. எப்படி நீங்கள் கணக்கெடுத்தீர்கள்?”

 

அதிகாரியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அவர் விவரித்தார். மகதத் தலைநகரத்தின் குதிரை லாயம் மிகப்பெரியது. பல சிறு பகுதிகளை உள்ளுக்குள் அடக்கியது. அவர் ஒவ்வொரு பகுதியில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கையையும் குறித்து கடைசியில் மொத்த எண்ணிக்கையைக் கூட்டி இருக்கிறார். முன்பிருந்த எண்ணிக்கை, பிறந்த குதிரைகள், இறந்த குதிரைகள், வாங்கிய குதிரைகள் கணக்குகளை கூட்டிக்கழித்த போது சரியாக இருந்திருக்கிறது. குதிரைகளை ரகவாரியாகப் பிரித்து கணக்கெடுக்கும் வழக்கம் ஆரம்பத்திலிருந்தே இல்லை. அதைப் பயன்படுத்தி யாரோ குதிரைகளை மாற்றியிருக்கிறார்கள் என்பது ராக்‌ஷசருக்கு மெல்லப் புரிந்தது.

 

ராக்‌ஷசர் யோசனையுடன் அந்த அதிகாரியைப் பார்த்து விட்டுச் சொன்னார். “சரி நீங்கள் போகலாம்.”

 

அந்த அதிகாரியின் குழப்பம் மேலும் அதிகரித்தது. ’எல்லாம் சரியாக இல்லையே’ என்று சொன்னவர் இப்போது அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் போகச் சொல்கிறாரே. சும்மா சோதித்துப் பார்க்க அப்படிச் சொன்னாரோ? தவறு செய்திருந்தால் குற்றவுணர்வோடு உளறி விடுவோம் என்று எதிர்பார்த்தாரோ?

 

ராக்‌ஷசருக்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் ஆபத்தாய்த் தோன்றின. இப்போதே சேனாதிபதியை அழைத்து விசாரிப்பது பெரிதல்ல. ஆனால் போர்க் காலத்தில் சேனாதிபதி அதிக அவசியமானவன். குற்றம் அவன் மீதிருந்து அவனைத் தண்டிக்க முடிந்த காலமில்லை இது. போர் முடிந்த பின் எடுக்க வேண்டிய களைகள் இங்கே ஏராளமாக இருக்கும் போலிருக்கிறது….

 

அவர் முன் ஒற்றன் வந்து நின்றான். அவர் கேட்டார். “என்ன நிலவரம்?”

 

“அந்த மகானை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. காவலர்களும், பூசாரியும் சொன்ன தோற்றத்தில் ஒரு முதியவரை ஓரிருவர் மகாவிஷ்ணு கோயில் அருகே அன்று காலை பார்த்திருக்கிறார்கள்.  அதற்குப் பின் யார் பார்வையிலும் அவர் படவில்லை. பாடலிபுத்திரத்தை விட்டு வெளியேயும் அவர் போகவில்லை. அவரைப் பார்த்தால் வெளியே போக அனுமதிக்காமல் உடனடியாகத் தெரிவிக்கும்படி காவலர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம்”

 

மற்ற சதி வேலைகளைப் போல இதுவும் ஏதாவது சதி வேலையின் ஒரு பகுதியா, இல்லை இது சம்பந்தமில்லாத வேறு புதிரா என்பது அவருக்கு விளங்கவில்லை. சுதானு சம்பந்தப்பட்டிருக்கிறான், இப்போது அந்த முதியவரைக் காணவில்லை என்பதைத் தவிர இதில் சந்தேகப்பட வேறு எதுவுமில்லை. ஆனால் குழப்பம் தெளிவடையும் போது உண்மையான பிரச்சினையின் அடையாளமும் தெரிய வரலாம்….

 

ராக்‌ஷசர் நிகழ்வுகளின் போக்கில் களைப்பை உணர்ந்தார்.

 

த்ரசால் அன்றைய பணிகள் முடிந்து வீடு திரும்புகையில் இருட்ட ஆரம்பித்திருந்தது. யாரோ அவன் பின்னால் வருவது தெரிய அவன் யாரென்று பின் திரும்பிப் பார்த்தான். யாரோ ஒரு வீரன். அவன் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தவுடன் வேகமாக முன்னேறி வந்து வணக்கம் தெரிவித்தான்.

 

அருகில் அவன் வந்த பிறகு தான் கார்த்திகேயன் என்பது அவனுக்குத் தெரிந்தது. பத்ரசால் உற்சாகமாக எதோ பேசப் போன போது கார்த்திகேயன் தாழ்ந்த குரலில் சொன்னான். ”நான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் சேனாதிபதி. உங்கள் நாட்டு ஒற்றர்கள் எங்கிருந்தாவது நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் படைவீரன் நான். தாங்கள் ஏதோ கட்டளையிட்டு அதை நிறைவேற்ற தங்களைக் காண வந்திருக்கிறேன் என்ற பாவனையையே வெளிப்படுத்துங்கள்.”

 

பத்ரசால் அவன் எச்சரித்ததால் சுதாரித்துக் கொண்டு “என்னுடன் வா” என்று சற்று சத்தமாகவே கட்டளையிட்டு முன்னால் நடக்க, அவன் கீழ் பணிபுரியும் படைவீரன் போல கார்த்திகேயன் இரண்டடி இடைவெளி விட்டு அவனைப் பின் தொடர்ந்தான்.  

 

வீட்டுக்குள் நுழைந்ததும் பத்ரசால் அவனிடம் வியப்புடன் கேட்டான். “ஏனிந்த மாறுவேடம் நண்பரே?”

 

கார்த்திகேயனாய் பத்ரசாலுக்குக் காட்சியளித்த சின்ஹரன் சொன்னான். “தங்களுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது நண்பரே. அதைத் தெரிவிக்கத் தான் நான் மாறுவேடத்தில் வந்திருக்கிறேன்.”

 

பத்ரசால் அதிர்ச்சியுடன் கேட்டான். “என்ன ஆபத்து நண்பரே”

 

“குதிரைகள் பரிவர்த்தனை பற்றி ராக்‌ஷசர் யூகித்து விட்டார் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது நண்பரே. நாங்கள் எங்கள் பாதுகாப்பு மற்றும் லாபம் மட்டுமல்லாமல் எங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களின் பாதுகாப்பு மற்றும் லாபம் குறித்தும்  எப்போதும் மிகுந்த அக்கறை வைத்திருக்கிறோம். அதனால் தான் தகவல் கிடைத்தவுடன் உங்களை எச்சரிக்க ஓடோடி வந்திருக்கிறேன்.” சின்ஹரன் ரகசியக்குரலில் சொன்னான்.

 

பத்ரசால் திகைப்பும் குழப்பமும் கலந்து உணர்ந்தவனாய்ச் சொன்னான். “இன்று காலை கூட குதிரைகளின் அணிவகுப்பு சமயத்தில் ராக்‌ஷசர் வந்திருந்தார். ஆனால் அப்போது அவர் ஒன்றும் சொல்லவில்லையே. சந்தேகப்பட்டிருந்தால் உடனடியாக அவர் விசாரித்திருப்பாரே.”

 

“சாதாரண காலமாய் இருந்திருந்தால் கண்டிப்பாக அழைத்து விசாரித்திருப்பார். ஆனால் யுத்த சமயத்தில் உங்களை எதுவும் செய்வது மகதப்படையைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் கண்டு கொள்ளாதபடி தெரிகிறார் என்று நான் நினைக்கிறேன். ”

 

பத்ரசால் பீதியடைந்தான். “என்ன சொல்கிறீர்கள் நண்பரே. இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது?”

  

“நான் சொன்னபடி இப்போதைக்குப் பிரச்னை இல்லை நண்பரே. அதனால் அமைதியிழக்க வேண்டியதில்லை. ஆனால் போர் முடிந்த பிறகு ராக்‌ஷசர் உங்களுக்குப் பிரச்சினையாகலாம்.  அதற்குள் நாம் எத்தனையோ செய்து விடலாம். கவலைப்படாதீர்கள்.” சின்ஹரன் பத்ராசாலின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

 

எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடும் போது ஒருவருக்குப் பிரச்னை என்றால் மற்றவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடி ஒளிவது தான் எங்கும் நடக்கும் வாடிக்கை. ஆனால் இதிலும் கார்த்திகேயன் வித்தியாசப்படுவதை பத்ரசால் நன்றியுடன் எண்ணிப் பார்த்தான். அவன் இத்தனை ஆபத்தான சூழ்நிலையில் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை…

 

”மிக்க நன்றி நண்பரே. இனி என்ன செய்வது?” பத்ரசால் கேட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. சாணக்கியர்... வீரனான சின்ஹரனை இந்த விசயத்திற்கு சரியாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்....

    ReplyDelete