கல்பனானந்தாவை ஷ்ரவனும் அமைதியாகப் பார்த்தான். தன்னுடைய
நியாயமான கேள்விக்கு அறிவுபூர்வமான பதில் அவளிடமிருந்து வரும் என்று காத்திருப்பது
போல் காட்டிக் கொண்டான்.
கல்பனானந்தா சிறிது மௌனத்திற்குப் பிறகு
சொன்னாள். “ஷ்ரவன் யோகாலயத்தில் யோகிஜி மட்டும் இல்லை. என்னைப்
போல் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் யோகிஜிக்கு சமமானவர்கள் அல்ல. எங்களுக்கு
எதிரிகள் இருக்கலாம். அவர்கள் எங்களுக்கு எதிராக ஏதாவது ஏவல் சக்தியை அனுப்பலாம். அப்படி
யாராவது, ஏதாவது
ஏவல் சக்தியை எங்களில் யாருக்காவது அனுப்பி, அதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
நீங்கள் சொன்னது போல யோகி வாழும் இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஏவல்
சக்தியும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உங்களையே
அந்த ஏவல் சக்தி தாக்கினாலும் கூட, நீங்கள் இங்கிருப்பதால், உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தி விடவில்லை
பார்த்தீர்களா? மற்றபடி யோகிஜிக்கு நல்லவர் கெட்டவர் எல்லாம் ஒன்று தான். அனைவர் மேலும் அவர் கருணையே காட்டுவார். அதனால் அந்த
ஏவல் சக்திகள் இங்கே உலாவுவதைக் கூட அவர் தடுக்கவில்லை. ஆனால்
அந்த ஏவல் சக்திகள் இங்குள்ளவருக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்திவிட முயன்றால் அதை அவர்
கண்டிப்பாகத் தடுப்பார்.”
ஷ்ரவன் மனதினுள் அவளுடைய வாதத்திறமையை மெச்சினான். நெஞ்சில் கை வைத்து பணிவு காட்டிச்
சொன்னான். ” நன்றி சுவாமினி. நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை.”
கல்பனானந்தா தலையசைத்தாள். அவள் அதற்கு
மேல் ஒன்றும் சொல்லவில்லை. அதே சமயம், அவனை அனுப்பவும்
முயற்சிக்கவில்லை. அதனால் ஷ்ரவன் தனக்குச் சிலகாலமாய் தீவிரமாக இருக்கும் துறவற
சிந்தனைகளைச் சொன்னான். இந்த முறை வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் துறந்து விட்டு
இங்கேயே வந்து, மீதி வாழ்நாளை யோகிஜியின் நிழலில் கழிக்க விரும்புவதாகச்
சொன்னான். இது போன்ற அமானுஷ்ய சக்திகளைக் காட்டிலும் யோகிஜியின் தெய்வீக
சக்திகளில் கடுகளவாவது தனக்கு வாய்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாய் அவன் சொன்னான்.
அவள் அவன் சொன்னதை வரவேற்கவும் இல்லை, எதிரான
கருத்தைச் சொல்லவும் இல்லை. ‘புரிகிறது’ என்பது போல தலையசைத்துவிட்டுச்
சொன்னாள். “நீங்கள் ஆசைப்படுவது நிறைவேற என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்”
அவன் நன்றி தெரிவித்து விட்டு விடைபெற்றான். அவன் வீசியிருக்கும்
தூண்டில் எந்த அளவு அவர்களைக் கவரும் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆபத்தான
விளையாட்டில் தான் அவன் இறங்கியிருக்கிறான் என்றாலும், எது வந்தாலும் சமாளிக்க
முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது.
“இவன் கதையளக்கிறானா, இல்லை உண்மையைச் சொல்கிறானா?”
பாண்டியன் பிரம்மானந்தாவிடம் கேட்டார்.
பிரம்மானந்தா சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “இவன் சொல்றதைப் பார்த்தால், ஹைத்ராபாத் சோமையாஜுலு சம்பவம், சுமார் இருபது வருஷங்களுக்கு
முன்னால் நடந்த சம்பவம் போல தான் தெரியுது. அது கேள்விப்பட்ட
மாதிரியும் இருக்கு. ஆனால் உறுதியாய் சொல்ல முடியலை”
“நம்ம நாட்டுல இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்குது. ஒரே மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்கறதால, இந்தக் குழப்பம்
தவிர்க்க முடியாதது” பாண்டியன் சொன்னார்.
”தேவானந்தகிரிக்கு சுமார் முப்பது வருஷங்களாவது மாந்திரீகத்தில் அனுபவம் இருக்கும்.
அதனால் இவன் சொல்கிற சோமையாஜுலு நிஜமான ஆளாய் இருந்தால் தேவானந்தகிரிக்குத்
தெரியாமல் இருக்காது.” என்று சொன்ன பிரம்மானந்தா உடனடியாக தன்
உதவியாளனை அழைத்து தேவானந்தகிரிக்குப் போன் செய்யச் சொன்னார்.
தலையசைத்து விட்டுச் சென்ற உதவியாளன் இரண்டு நிமிடங்களில் திரும்பி
வந்து தயக்கத்துடன் சொன்னான்.
“சுவாமிஜியோட சீடன் தான் பேசினான். அவர் ஏதோ பிரஸ்னம்
பார்த்துட்டு இருக்காராம். அது முடிஞ்சவுடன நீங்க கூப்பிட்டதாய்ச்
சொல்றேன்னான்.”
பிரம்மானந்தா உள்ளுக்குள் எழுந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்
கொண்டார். அவர்
அழைத்தவுடன் எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு ஒருவர் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
அவரை விட தேவானந்தகிரி பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரஸ்னம், அவருடைய சீடனுக்கு முக்கியமாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை அவரால் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை.
பாண்டியன் சொன்னார்.
“இருக்கவே இருக்கு கூகுள். பார்த்துட்டா போச்சு”
அவர் தன் ஆள் ஒருவனைக் கூப்பிட்டு கூகுளில் தேடச் சொன்னார். அவன் சிறிது நேரத்தில் கூகுளில்
தேடி, தகவல்களைச் சேமித்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான்.
சோமையாஜுலு என்ற பிரபல மாந்திரீகர் ஹைதராபாத்தில் இருந்தது உண்மை,
கூலிப்படையால் அவர் கொல்லப்பட்டதும் உண்மை என்று தெரிந்தது. அந்தச் சம்பவங்களின் காலமும் கிட்டத்தட்ட ஷ்ரவனின் பிள்ளைப்பருவமாகத் தான்
இருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது.
ஆனால் சோமையாஜுலுவின் பக்கத்து வீட்டில் வசித்த ஷ்ரவன் என்ற
சிறுவனைப் பற்றிய தகவல் ஒன்றும் இருக்கவில்லை. அவர் கொலைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள் அக்காலத்தில்
பேசப்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பதும் பாண்டியனுக்குப் புரிந்தே இருந்தது.
பிரம்மானந்தாவின் உதவியாளன் வந்து சொன்னான். “தேவானந்தகிரி போன் செஞ்சிருக்கார்
யோகிஜி. என்ன சொல்லட்டும்.”
பிரம்மானந்தாவின் மனநிலை அவருடைய இறுகிய முகத்தில் தெரிய, பாண்டியன் உடனடியாகச்
சொன்னார். “நமக்குத் தான் காரியம் ஆகணும் யோகிஜி. சோமையாஜுலுங்கற
மந்திரவாதி ஒரு காலத்துல ஹைதராபாத்தில் இருந்தானா, கொல்லப்பட்டானான்னு
வேணும்னா நாம கூகுள்ல தெரிஞ்சுக்க முடியும். ஆனா இப்ப
இந்த ஷ்ரவன் சொல்ற மத்த விஷயங்கள் எல்லாம் சரியாய் இருக்க வாய்ப்பிருக்கா, இல்லை இவன்
எதோ கதையளக்கறானான்னு தெரிய தேவானந்தகிரியோட உதவி நமக்குத் தேவை.”
பிரம்மானந்தா வேண்டா வெறுப்பாக அலைபேசியை
உதவியாளனிடமிருந்து வாங்கினாலும், அவர் தேவானந்தகிரியிடம் பேசிய போது, பேச்சில்
அவர் மனநிலை வெளிப்படவில்லை. அன்பும், பணிவுமே பேச்சில்
வெளிப்பட்டன. “நான் அடிக்கடி அன்புத் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். உங்களுக்கு
பல வருஷங்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் இருந்த மந்திரவாதி சோமையாஜுலுவைத் தெரியுமா?”
“ஆந்திரால
அவர் அந்தக் காலத்துல ரொம்பவும் பிரபலம் யோகிஜி. மாந்திரீகத்தில்
நல்ல தேர்ச்சி பெற்றவர். ஆனால் கொலை செய்யப்பட்டு இறந்தார்னு கேள்விப்பட்டேன். ஏன் கேட்கறீங்க
யோகிஜி?”
“இங்கே யோகா
தியான வகுப்புக்கு வந்த ஒருத்தனுக்கு ஓநாய் தெரிஞ்சுது, அவன் பிரக்ஞை
இல்லாமல் கொஞ்ச நேரம் விழுந்து கிடந்தான்னு சொன்னேனில்லையா, அவன் ஹைத்ராபாத்காரன். அவன் சோமையாஜுலு
வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்தவன். அவரோட ஏவல் சக்திகளைப்
பார்க்க அவனுக்கு முடிஞ்சிருக்காம். அதனால அவர் அவனைப்
பயன்படுத்திக்க முயற்சியும் செய்திருக்காராம். இது எந்த
அளவு சரியாயிருக்கும்?”
சிறிது யோசித்து விட்டு தேவானந்தகிரி
சொன்னார். “பல லட்சம் பேர்ல ஒருத்தனுக்கு அபூர்வமாய் அந்தச் சக்தி சின்ன
வயசுலயே கிடைக்கறதுண்டு. அதுலயும் அந்த சக்தி இருக்குன்னு தெரிய வர்றது ரொம்ப ரொம்ப
அபூர்வம். அந்தப் பையனே அவர் வீட்டுக்குப் பக்கத்துல இருந்ததால தான்
அந்த ஏவல் சக்திகளை பார்க்கற வாய்ப்பு கிடைச்சு, அதனால தெரிஞ்சிருக்கு. அப்படிப்
பார்த்தால் கோடியில ஒருத்தருக்கு தான் ரெண்டும் சேர்ந்து அமையும். அந்த மாதிரி
ஒருத்தன் கிடைச்சா அவனை மாந்திரீகத்துக்குப் பயன்படுத்திக்கறது உண்டு. அதை என்
குருவும் எனக்குச் சொல்லியிருக்கார். ஆனால் இதுவரைக்கும்
நான் அப்படிப்பட்ட யாரையும் பார்த்ததில்லை. அதனால எனக்கே
நீங்கள் சொன்ன ஆளைப் பார்க்க ஆர்வமாய் இருக்கு.”
“அவனுக்கு
அந்த சக்தி இருக்கறதுல மகிழ்ச்சியில்லை. அவன் ஆன்மீகத்துல
ஆழமாய் போக ஆசைப்படறவன். நாளையோட அவன் தியான வகுப்புகள் முடிஞ்சு ஹைத்ராபாத் போயிடுவான்.”
“நிஜமாவே
மாந்திரீகத்துக்கு அது பெரிய இழப்பு தான். ஏன்னா விசேஷ
பூஜைகள் செஞ்சு தெரிஞ்சுக்கற விஷயங்களை, ஒரு ஆளை வெச்சே
தெரிஞ்சுக்கறது மாந்திரீகத்துல பாதி வேலையைக் குறைச்சுடுது. என்ன ஏவல்
சக்தின்னு அவன் மூலம் தெரிஞ்சுகிட்டு, அதற்கு பரிகார பூஜைகள்
மட்டும் செஞ்சால் போதுமே.”
மேலும் பேச்சை வளர்த்தாமல் சுருக்கமாகப்
பேசி விட்டு, இணைப்பைத் துண்டித்த பிரம்மானந்தா பாண்டியனைப் பார்த்தார். பேச்சை முழுதும் கேட்டிருந்த பாண்டியன்
யோசிக்க ஆரம்பித்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
'உடனடியாக தன்னுடன் தொலைபேசியில் பேசாத விசயத்தை அவமரியாதையாக' நினைக்கும் பிரம்மானந்தா....
ReplyDelete'அனைத்தும் அறிந்த யோகியான நாம் போய்...இந்த மாதிரியான சிறு சிறு விசயங்களை தெரிந்து கொள்ளக் கூட தேவானந்தகிரியிடம் தொடர்பு கொள்ள வேண்டி இருக்கிறதே...!' என்பதை நினைத்து வெட்கப்படவில்லை பாருங்கள்....