பாடலிபுத்திர நகர வாயிற்காவலர்கள்
எப்படியெல்லாம் சோதிக்கிறார்கள் என்பதை சின்ஹரன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலும்
அவனது வெளித் தோற்றம் சிந்தனைகளில் ஆழ்ந்தபடி பொறுமையுடன் காத்திருக்கும் ஆன்மிக முதியவராகவே
அவனைக் காட்டியது. வருபவர்கள் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் தனியாகப்
பிரிக்கப்பட்டு தீவிரமாகவும் விரிவாகவும் விசாரிக்கப்படும் விதத்தை அவன் கவனித்தான்.
ஆயுதக்கிடங்கு எரிக்கப்பட்டதன் விளைவாக இந்தச் சோதனை ஆரம்பித்திருக்க வேண்டும் என்று
தோன்றியது. அதே போல வெளியே செல்பவர்களையும் பரிசோதித்த பின்பே அனுப்புவதையும் கவனித்தான்.
தனநந்தனின் புதையல் காணாமல் போனபின் போகிறவர்களையும் சோதிப்பதை ஆரம்பித்திருப்பார்கள்
என்று தோன்றியது.
வரிசையில் அவன்
முன்னேறி காவலர்கள் அவனைச் சோதிக்க நெருங்கிய போது இந்தக் கிழவரைப் பரிசோதிக்க என்ன
இருக்கிறது என்று காவலர்கள் நினைத்தது போலிருந்தது. அவன் தன்னுடைய அடையாளச் சீட்டையும்,
கையிலிருந்த பழைய பையையும் அவர்கள் பரிசோதிக்க நீட்டினான். அவன் அடையாளச் சீட்டு வைசாலி
நகரவாசியாக அவனைக் காட்டியது. அவன் பையில் பழைய காவி உடைகள் இரண்டிருந்தன. வந்திருக்கும்
உத்தேசம் என்னவென்று கேட்டார்கள். கரகரத்த முதிர்ந்த குரலில் மகாவிஷ்ணு கோயிலுக்கு
தொழ வந்திருப்பதாய் சின்ஹரன் சொன்னான். இந்த முதிய மனிதனும், பையிலிருக்கும் உடைகளும்
மகதத்திற்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்திவிட முடியாதென்பதால் அவர்கள் அதிகம்
யோசிக்காமல் உள்ளே அனுமதித்தார்கள்.
சின்ஹரன் நேராக
மகாவிஷ்ணு கோயிலுக்கே போனான். கோயிலில் இருந்த பூசாரி சின்ஹரனைப் பார்த்தவுடன் பரபரப்படைந்தார்.
ஏனென்றால் இளவரசன் சுதானு அந்த மகான் மறுபடி வந்தாரா, அவர் எங்கிருப்பவர் என்று தெரியுமா
என்று பல முறை அவரிடம் கேட்டிருந்தான். இளவரசன் காணத் துடித்த மகான் இன்று திடீரென்று
வந்து சேர்ந்தது அவருக்குப் பரபரப்பாக இருந்தது.
பூசாரி சின்ஹரனைப்
பார்த்ததும் பயபக்தியுடன் கைகூப்பி வணங்கினார். “வாருங்கள் சுவாமி. அரசியாரும், இளவரசரும்
தங்களைப் பார்க்க வேண்டும் என்று அன்று நீங்கள் சென்ற பிறகு நிறைய முயற்சி செய்தார்கள்.
உங்களைப் பிறகு காண முடியாததில் அவர்களுக்கு ஒரே வருத்தம்.”
சின்ஹரன் புன்னகையுடன்
சொன்னான். “அந்த வருத்தத்தை இறைவனைக் காண முடியாததில் காட்டியிருந்தால் எப்போதோ கடைத்தேறி
இருப்பார்கள்.”
மகான்கள் வாயிலிருந்தே
இத்தகைய வார்த்தைகள் வர முடியும் என்று பூசாரி எண்ணியபடி சொன்னார். “அவர்களுக்குத்
தங்களிடம் ஏதோ கேட்க வேண்டுமாம். தாங்கள் அரண்மனைக்குச் சென்றால் அவர்கள் மகிழ்ச்சி
அடைவார்கள்...”
சின்ஹரன் சொன்னான்.
“மகாவிஷ்ணுவைத் தேடி வந்தவன் மனிதர்களைத் தேடிச் செல்வது உசிதம் என்று தோன்றவில்லை.
என்னை மன்னியுங்கள்”
பூசாரிக்கு அவர்
மகான் என்பது மேலும் உறுதியாகியது. அரண்மனைக்குச் சென்று வெகுமதிகள் பெறும்
வாய்ப்பை எத்தனை பேரால் உதறித்தள்ள முடியும்?
அவர் அவசரமாகச்
சொன்னார். “அப்படியானால் இறைவனைத் தொழுது விட்டு தயவு செய்து இங்கே சற்று நேரம் ஓய்வெடுங்கள்.
நான் தாங்கள் வந்திருக்கும் தகவலை அனுப்பி அவர்கள் தங்களை வந்து பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.”
சின்ஹரன் சிறிது
தயக்கத்தோடு யோசிப்பவன் போல பாவனை காட்டினான். பூசாரி அந்த மகான் மறுத்து விடுவாரோ என்று
பயந்தார். அதனால் யோசிக்கவும் சமயம் தராமல் அங்கேயிருந்து வேகமாக வெளியேறினார். அவர்
ஓட்டமும் நடையுமாக அரண்மனையை அடைந்து வாயிற்காவலன் மூலம் சுதானுவுக்குத் தகவல் அனுப்பி
விட்டு அதே வேகத்தில் கோயிலுக்குத் திரும்பி வந்தார். வரும் போது அந்த மகான் காத்திருக்காமல்
போயிருப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது. நல்ல வேளையாக அந்த மகான் கோயிலிலேயே தியானம்
செய்தபடி அமர்ந்திருந்தார்.
அந்த மகான் மகாவிஷ்ணு கோயிலுக்கு வந்திருக்கிறார் என்ற தகவல்
கிடைத்தவுடன் சுதானுவும், தாரிணியும் தாமதிக்காமல் விரைந்து வந்தார்கள். சுதானு பூசாரியின் கையில்
சில பொற்காசுகளைத் திணித்து விட்டுச் சொன்னான். “அவரிடம் நாங்கள்
தனிமையில் பேச வேண்டியிருக்கிறது”
பூசாரி புரிந்து கொண்டு பொற்காசுகள் கிடைத்த மகிழ்ச்சியுடன் “நான் வெளியே தங்கள் ரதத்தருகே
நிற்கிறேன் இளவரசே.” என்று கூறி அவர்களைத் தனிமையில் விட்டு வெளியேறினார்.
தாரிணி
கொண்டு வந்திருந்த பெரிய தாம்பாளத்தில் கனிகளும், பட்டுத் துணியும், பொற்காசுகளும் இருந்தன. சின்ஹரன் முன் மிகுந்த பயபக்தியுடன்
அந்தத் தாம்பாளத்தை வைத்து விட்டு இருவரும் வணங்கி எழுந்தார்கள்.
சின்ஹரன் மெள்ள கண்களைத் திறந்து வலது கையை உயர்த்தி அவர்கள் இருவரையும்
ஆசிர்வதித்தான். பின் தாம்பாளத்தைத் தள்ளி வைத்தபடி சொன்னான். “மகாவிஷ்ணுவின்
அருளைத் தவிர அடியேன் வேறெதையும் நாடியதில்லை. எனக்குத்
தேவையுமில்லை.”
தாரிணி பயபக்தியுடன்
சொன்னாள். “எங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள் இதைப் பெற்றுக் கொண்டு ஆசிவழங்க
வேண்டும் சுவாமி”
சின்ஹரன் கரகரத்த குரலில் சொன்னான். “இறைவனின்
அருளைக் கேட்டுப் பெறுங்கள். மனிதர்களின் ஆசியில் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது.”
தாரிணி சொன்னாள். “அப்படிச்
சொல்லாதீர்கள் சுவாமி. இறைவனின் திருவடிகளையே மனதில் பற்றிக் கொண்டிருக்கும் தங்களைப்
போன்ற மகான்கள் ஆசியில் எத்தனையோ நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”
சின்ஹரன் அந்த நம்பிக்கைக்கு எதிராக
எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சுதானு அவசரமாக
ஆவலுடன் சொன்னான். “சுவாமி அன்று நீங்கள் எனக்கு அருள்வாக்கு ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள். அதன் முழுப்பொருள்
எனக்கு விளங்கவில்லை. தாங்கள் அதை விளக்கினால் எனக்கு மிக உதவியாய் இருக்கும்”
சின்ஹரன் சொன்னான். “அதைப் பயன்படுத்திக்
கொள்ளும் யோகம் உனக்கு இருக்குமானால் அதன் பொருள் தானாக உனக்குப் புலப்படும்.”
சுதானுவுக்குச் சுருக்கென்றது. விளங்கவில்லை
என்றால் யோகமில்லை என்று பொருளாகி விடுமா என்று பயந்தவனாகச் சொன்னான். “அரைகுறையாய்
புரிந்து கொண்டு அது தவறாக இருந்து விடக்கூடாது என்று தான் விளக்கமாகச் சொல்லுங்கள்
என்று கேட்கிறேன் சுவாமி”
சின்ஹரன் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். அவன் கண்களை மூடி முக்காலத்தையும்
பார்த்துக் கொண்டிருப்பது அரசிக்குத் தோன்றியது.
சின்ஹரன் கண்களை மூடியபடியே சொன்னான். “நீ எதை அடைய வேண்டிக் கொண்டு
இந்தக் கோயிலுக்கு வந்தாயோ அதை அடைய உனக்கு ஒரு கச்சிதமான சந்தர்ப்பம் வரப் போகிறது
என்று சொல்லியிருந்தேன். அதற்கு மேல் உனக்கு அதை விளக்க எனக்கு
அனுமதியில்லை.”
தாரிணி
மெல்லச் சொன்னாள். “விளக்க வேண்டாம். கூடுதல் தகவல்கள் எதாவது தந்தால் அவனுக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்று
கேட்கிறான். தயவு செய்து அனுக்கிரகிக்க வேண்டும் சுவாமி”
சின்ஹரன் மெள்ள கண்களைத் திறந்து சுதானுவைக் கூர்மையாகப் பார்த்தபடி
சொன்னான். “அடுத்த
வளர்பிறை ஏகாதசி நள்ளிரவு தான் அனைத்தும் முடிவுசெய்யப்படும் நாள். அதற்குப் பின் எடுக்கிற முயற்சி எதுவும் பலன் தராது. உன் முயற்சியில் உன் விதி மட்டுமல்லாமல் மகதத்தின் விதியும் தீர்மானமாகப் போகிறது.
அதனால் எச்சரிக்கையுடன் சிந்தித்துச் செயல்படு.”
சுதானு தலையசைத்தான்.
பின் மெல்லக் கேட்டான். “அந்த சமயத்தில் தான் தாங்கள்
சொன்ன எதிரிகளின் முற்றுகையும் இருக்குமா?”
சின்ஹரன் தலையை மட்டும் அசைத்து விட்டு எழுந்தான். ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து
கிளம்ப யத்தனித்தான். தாரிணி பயபக்தியுடன் அந்தத் தாம்பாளத்தை
எடுத்து அவனிடம் நீட்டினாள். சின்ஹரன் இரு கைகளாலும் வேண்டாம்
என்று சைகை காட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
யாரோ
ஒரு மகானை மகாவிஷ்ணு கோயிலில் சுதானுவும், அரசியும் சந்தித்த தகவல் ராக்ஷசருக்கு அன்றிரவே எட்டியது.
ராக்ஷசருக்கு
இளவரசன் சுதானு மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவன் அதிகம் உணர்ச்சிவசப்படுவன்,
கோபக்காரன் என்பதோடு தன்னிச்சையாகச் செயல்படுகிறவன், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்க
மறுக்கிறவன் என்பதும் அவன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை அவர்
மனதில் ஏற்படுத்தியிருந்தன….
அவர் யோசனையுடன் தகவல் கொண்டு வந்த ஒற்றனிடம் கேட்டார். “அவர் வந்தது எப்போது?”
“காலையில் தான். நகர வாயிற்காவலர்கள் சொன்ன நேரத்தைப் பார்த்தால் வந்தவர் நேரடியாக மகாவிஷ்ணு கோயிலுக்குப் போய் வழிபட்டிருக்கிறார் போலத்
தெரிகிறது. அவர்
வந்திருக்கும் தகவலை அரண்மனைக்குச் சென்று பூசாரி தெரிவித்திருக்கிறார். உடனே அரசியும் இளவரசனும் சென்று அந்த மகானைச் சந்தித்திருக்கிறார்கள்.”
அரசி கோயில்களுக்குச் செல்வதும், மகான்களைச் சந்திப்பதும்
எப்போதும் நடப்பது தான். ஆனால் சுதானு அப்படிச் செல்பவன் அல்ல….
“அந்த மகான் இப்போது எங்கே இருக்கிறார்”
“தெரியவில்லை.
இளவரசர் அவரைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகு
தான் நாங்கள் அந்த மகான் பற்றிய தகவல் சேகரிக்க ஆரம்பித்தோம். அவர் வந்த விவரங்கள்
கிடைத்தன. ஆனால் போன விவரங்கள் கிடைக்கவில்லை. பயணியர் விடுதி உட்படப் பல இடங்களில்
பார்த்து விட்டோம். அவர் எங்கும் இல்லை.”
ராக்ஷசரின் மூளையில் ஒரு சிறு அபாய மணி அடித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
சின்ஹரனை சிறந்த வீரன் என்று குறிப்பிடுவதை விட... சிறந்த நடிகன் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.....
ReplyDelete