சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 3, 2025

யோகி 92


ஷ்ரவன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான். துறவியாக யோகாலயத்தில் சேர்ந்த பிறகு, அவர்களைப் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான அமானுஷ்யத் தகவல்கள் அவனுக்குத் தெரிய வந்திருப்பதாகச் சொல்லி, அவர்களுடைய ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரித்து, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாய் மாறுவது அவனுக்குக் கஷ்டமான காரியமல்ல. அவர்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் அதைத் தீர்த்து வைக்கும் அளவுக்கு அவனிடம் திறமை உண்டு. அங்கே போய்ச் சேர்வதற்கு முன் மாந்திரீகம் சம்பந்தமான விஷயங்களை நிறைய படித்துத் தெரிந்து கொள்வதென்று அவன் ஏற்கெனவே தீர்மானித்தும் இருக்கிறான். ஆனால் அந்த விஷயத்தில் அங்கே அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆள் ஒருவர் உண்டு- காசர்கோட்டு மந்திரவாதி தேவானந்தகிரி. அவர் அங்கு வந்து விசேஷ பூஜைகளைச் செய்தால் அவனைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடமுடியும்.

 

பாண்டியனும், டாக்டர் சுகுமாரனும் பேசிக் கொண்டதை வைத்துப் பார்த்தால் தேவானந்தகிரி அவர்களுக்கு மறுபடியும் தாயத்து கட்ட ஒரு மண்டல காலம் கழித்து தான் வருவார். ஆனால் பிரம்மானந்தா வற்புறுத்தினால் இடையிலேயும் கூட தேவானந்தகிரி வரலாம். ஏதாவது முக்கிய அவசரக் காரணம் இருந்தால் ஒழிய அப்படி பிரம்மானந்தா இடையில் வற்புறுத்திக் கூப்பிடும் அவசியம் வராது. அவன் அங்கே சேர்ந்த பிறகு அவன் மேல் தீவிர சந்தேகம் அவர்களுக்கு எழுமானால் அவன் சொல்வதெல்லாம் சரியா என்று தெரிந்து கொள்ள அவர்கள் தேவானந்தகிரியை வரவழைக்கும் சாத்தியம் மட்டும் எப்போதும் உண்டு. அதனால் அப்படி அவர்களுக்குச் சந்தேகம் எழவே எழாதபடி அவன் பார்த்துக் கொண்டால் போதும்...

 

அவர்கள் அழைக்காமல் தேவானந்தகிரி வேறு ஏதாவது காரணத்தால் தானாகவே வந்தாலும் அவனைக் கண்டுபிடித்து விடும் வாய்ப்பிருக்கிறது. ஷ்ரவன் யோசித்து விட்டு தேவானந்தகிரியின் அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டான். தேவானந்தகிரியின் உதவியாளர் தான் பேசினார். ஷ்ரவன் ஒரு முக்கிய விஷயமாய் பிரஷ்னம் வைத்துப் பார்த்து, தோஷம் ஏதாவது இருக்குமானால் அதற்குப் பரிகார பூஜையும் செய்ய வேண்டும் என்று சொன்னான். அந்த உதவியாளர் இரண்டு மாதங்களுக்குஅப்பாயின்மெண்ட்இல்லை என்றும் அதற்குப் பின் தான் தேவானந்தகிரியைச் சந்திக்க முடியும் என்றும் சொல்லி விட்டார்.

 

இந்த அளவு வேலைப்பளு உள்ள தேவானந்தகிரி, தானாக, ஓய்வாக யோகாலயம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று ஷ்ரவன் நிம்மதி அடைந்தான்.

 

யோகாலயத்திற்குத் துறவியாகச் செல்வதற்கு முன் அவனுடைய தனிப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினையையும் அவன் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவன் இதயம் சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய காதல் பிரச்சினை. ஆனால் அதை உடனடியாகச் சரிசெய்வதில் சில சிக்கல்கள் இருந்தன.    

 

அவனிடம் மிகவும் கோபமாக இருக்கும் ஸ்ரேயாவிடம், தன்னுடைய அலட்சியப் போக்குக்கான காரணங்களை அவன் விளக்காமல், அவளுடைய கோபத்தையும், வருத்தத்தையும் அவன் போக்க வழியில்லை. பொய்களையும் சொல்லி அவளைச் சமாதானப்படுத்தலாம் என்றாலும் உண்மைக் காதலில் பொய்யைப் பயன்படுத்துவது காதலைக் களங்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று அவன் நினைத்தான்.

 

உண்மையைச் சொல்லலாம் என்றாலோ அவன் தன் தொழில் தர்மத்தைக் கைவிடுவது போல் ஆகி விடும். அவன் இதுநாள் வரை தன்னுடைய எந்த ஒரு ரகசிய வேலையையும் பற்றி அவன் பெற்றோரிடம் கூடச் சொன்னதில்லை. அவனுடைய வேலையில் ரகசியம் மிக மிக முக்கியம். அவளிடம் சொல்வது அவள் மூலம் வேறு யாருக்காவதும் தெரிய வரலாம். அந்த வேறு யாராவது மூலம் அவன் எதிரிகளுக்கும் தெரிய வரலாம். அதில் அவனுக்கு ஆபத்து நேரும் என்பதையும் கூட அவன் இரண்டாம் பட்சமாகவே  நினைத்தான். அதை விட முக்கியமாக, அந்த வேலை வெற்றிகரமாக முடியாததற்கு அவனே காரணமாகி விடுவதை அவன் மனசாட்சி அனுமதிக்கவில்லை.

 

அவளிடம் சென்று பேச இன்னொரு காரணமும் அவனைத் தடுத்தது. அவன் தொழிலில் இருக்கும் ஆபத்து தான் அது. ஒவ்வொரு வேலையிலும் அவன் தன் உயிரைப் பணயம் வைத்து தான் செல்கிறான். எத்தனை திறமைகளும், சாமர்த்தியமும் அவனுக்கு இருந்த போதிலும், எதிர்பாராத சிக்கல்கள் வருவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உண்டு. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு பதிலாக அவர்களிடம் அவனே பலியாகவும் வாய்ப்பு உண்டு. அப்படி அவன் பலியானால் அது அவளை மேலும் காயப்படுத்தும், நிரந்தர துக்கத்தில் ஆழ்த்தும்.

 

அதை விட, அவள் அவனைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் இப்போதைய நிலைமை எத்தனையோ தேவலை. சில நாட்களில் அவள் இதிலிருந்து மீள்வாள். அவளுக்குப் பிடித்தமான வேறு எவனையோ அவள் கண்டுபிடித்து, அவனைத் திருமணம் செய்து கொண்டு, காலப்போக்கில் நிம்மதியாக வாழ்வாள். எப்போதாவது ஒரு நாள் இந்தப் பைத்தியக்காரனை அவள் நினைத்துப் பார்க்கலாம். அல்லது மறந்தே விடலாம். அவளுடைய நெடுங்கால துக்கத்தை விட இது எத்தனையோ பரவாயில்லை.

 

யோசித்துப் பார்க்கையில் சைத்ரா வழக்கை முடித்து விட்டு வெற்றிகரமாய் வந்த பிறகு அவளிடம் பேசுவது தான் நல்லது என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஆனால் அதற்குள் அவள் வீட்டார் வேறொருவனை அவளுக்கு மணமுடிக்க முயற்சிகள் எடுத்து விட்டால், அவளும் அவனை மறந்து வாழ்க்கையைத் தொடர அது தான் நல்ல வழி என்று நினைத்து அதற்குச் சம்மதித்து விட்டால், என்ன செய்வது என்ற கேள்வியை அவன் இதயம் எழுப்பியது. ‘எங்கிருந்தாலும் வாழ்கஎன்று அவன் மிகவும் சோகமாக ஹைதராபாதுக்குத் திரும்ப வேண்டியிருக்கும்.

 

ஒருவருடனேயே யாருடைய வாழ்க்கையும் முடிந்து விடுவதில்லை, அப்படி முடிந்து விடவும் கூடாது என்றாலும், ஆத்மார்த்தமாய் உணர்ந்த அந்தக் காதலியுடன் வாழும் வாழ்க்கைக்கு ஈடான இன்னொரு வாழ்க்கையை வாழ முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.  இரண்டாந்தர வாழ்க்கையைத் தான் அவன் அனுசரித்து வாழ வேண்டியிருக்கும். அதற்கும் அவன் மனம் ஒப்பவில்லை.

 

அவன் மனம் மாறி மாறி யோசித்து எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதைப் பற்றி அவன் யாரிடமும் கலந்தாலோசிக்க முடியாது. என்ன செய்வதென்று யோசித்தான். பரசுராமன் இருந்திருந்தால் அவரிடம் அவன் கேட்டிருக்கலாம். அவர் கண்டிப்பாக அவனுக்கு வழிகாட்டியிருப்பார். அவர் தான் இப்போது இங்கு இல்லையே!

 

அலைபேசியில் அவரிடம் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் அது நேரில் பேசுவது போல் ஆகாது.... திடீரென்று அவனுக்கு அவர் சொல்லித் தந்த உபதேச மந்திரம் நினைவுக்கு வந்தது. அவனுக்குக் கவசமாய் இருக்கும், சிக்கலான நேரங்களிலும் வழிகாட்டும் என்று அவர் சொல்லியிருந்தார். அதை ஏன் இந்த வழக்கு விசாரணைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான இந்தக் காதல் பிரச்சினைக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?

 

அதற்குப் பின் அவன் அதிகம் யோசிக்காமல் உடனடியாக அந்த மந்திரத்தை ஆத்மார்த்தமாய் ஜபிக்க ஆரம்பித்தான். 1008 முறை ஜபித்து முடித்த பின் அவன் ஆழ்மனம் எதை உணர்கிறதோ அதைச் செய்வது என்று தீர்மானித்து விட்டான்.

 

அவன் ஜபித்து முடித்த பின் அவன் ஆழ்மனம் அவளிடம் பேசச் சொன்னது. அவனைக் கவர்ந்த அவள் பொறுப்பில்லாமல் அடுத்தவர் ரகசியங்களை வெளியே சொல்பவள் அல்ல என்பதை அவன் உணர்ந்தான். அவளிடம் உண்மையைச் சொல்லி அவள் எந்த முடிவெடுத்தாலும், அதற்கு முரண்படாமல் அதை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானித்தான். அவள் அவனுடைய தொழிலின் ஆபத்தைப் பெரிதாக நினைத்து என்னேரமும் ஆபத்திருக்கும் வாழ்க்கையை ஏற்க முடியாதவளாய் இருந்தால் அவன் அதை மதித்து விலகி விடுவது தான் நாகரிகம் என்று நினைத்தான். ஆனாலும் அவளுடைய நினைவை அவன் மனதின் ஒரு மூலையில் என்றும் வைத்திருப்பான். ஒரு கணத்தில் உணர்ந்து பின் நிரந்தரமாய் தங்கி விட்ட அந்த உணர்வை அவனால் என்றைக்கும் இழக்க முடியாது.

 

ஒருவிதத்தில் இது பைத்தியக்காரத்தனமே என்பதை அவன் அறிவான். மனம் விட்டு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. காதலைத் தெரிவித்துக் கொள்ளவில்லை. இருவரும் முழுமையாக ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவில்லை. ஆனாலும் ஒரு வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே உணர முடிந்த உன்னதம் ஒன்றை உணர்ந்திருக்கிறோம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை.

 

ஒரு முடிவுக்கு வந்தவனாக அவன் ஸ்ரேயாவை அலைபேசியில் அழைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. Super ganeshan your article's are soo beautiful

    ReplyDelete
  2. I was waiting for this..
    I wish you write stories with strong female leads too sir.. How long females should only be the love interest of men as in movies.. Kindly represent intelligence of female kind too.

    ReplyDelete
    Replies
    1. Read my stories மனிதரில் எத்தனை நிறங்கள் & மாயப்பொன்மான். In them females are the lead characters.

      Delete
  3. "உண்மையை ஸ்ரேயா_விடம் சொல்லி விட வேண்டும்" என ஷர்வன் நினைப்பது அருமை...
    அதே நேரத்தில் "ஷர்வன் தொழில் சம்பந்தமான அனைத்தும் சொல்ல வேண்டியதில்லை...''என நினைத்தால்...

    இருவரும் பொருத்தமான ஜோடிகள்....

    ReplyDelete