என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 24, 2025

யோகி 91


 றுநாள் அதிகாலை ஷ்ரவன் நடைப்பயிற்சியை ஆரம்பித்த போது கண்ணனின் வரவை எதிர்பார்த்தான். ஆனால் ஆரம்பத்தில் அவனைப் பின் தொடர்ந்து வந்த துறவியே நான்கடிகள் தள்ளி வர ஆரம்பித்த போது, கண்ணனை இன்று அவர்கள் அனுப்பவில்லை என்பது உறுதியாகியது. கல்பனானந்தாவிடம் அவன் சொன்னதை வைத்து அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது தெரிந்தது. இன்று கடைசி நாள் என்பதால் இனி அவர்கள் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு குறைவு என்று அவன் எண்ணினான்.

 

அன்றும் ஸ்ரேயா நடைப்பயிற்சிக்கு வரவில்லை. அவனுக்கு வருத்தமாக இருந்தாலும் அவன் எதுவும் செய்வதற்கில்லை. அன்றைய வகுப்புகளிலும் அவன் அவளைப் பின்னால் இருந்து பார்ப்பதையும் தவிர்த்தான். அவனைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள் என்பதால் அவன் அவளை அடிக்கடி பார்ப்பதும் ஆபத்து என்று நினைத்தான். ஆனால் அவளைப் பார்த்து ரசிக்கவும் முடியாதது அவன் மனதிற்கு ஒரு குறையாக இருந்தது. அதனால் வகுப்புகளில் மனம் முழுக் கவனம் செலுத்த மறுத்தது.

 

ஸ்ரேயாவுக்கு அவன் அடிக்கடி அவளைப் பார்ப்பதை நிறுத்தியதும் மனதை வாட்டியது. காதலில் என்ன தான் வெளியே அலட்சியத்தைக் காட்டினாலும்,  எதிர்ப்பக்கமும் அதே அலட்சியத்தைக் காட்டினால் மனம் சகிப்பதில்லை. அலட்சியத்தைக் காண்பிப்பதே எதிர்ப்பக்கம் இறங்கி வர வேண்டும், இன்னும் நெருங்க வேண்டும் என்பதற்காகத் தானே? அது எதிர்ப்பக்கத்தின் அலட்சியத்தையும் வளர்த்து, மேலும் இடைவெளியை அதிகரித்தால், ஏற்படுவது துக்கமே அல்லவா? அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது. ’முதலில் இது காதலே அல்ல முட்டாளே அதைப் புரிந்து கொள். ஆரம்பத்தில் நீ உணர்ந்ததைப் போலவே அவனும் உணர்ந்ததாய் நீ நினைத்ததே உன் கற்பனை தான். கற்பனையை வளர்த்துக் கொண்டே போய் ஏன் தொடர்ந்து கஷ்டப்படுகிறாய் மனமே? இன்று இங்கிருந்து போகும் போது அவனிடம் வாயால் மட்டுமல்லாமல் மனதாரவும்குட் பைசொல்லி அவனை மறந்து விடு. கோபம், வருத்தம் எல்லாமே கூட ஒருவகையில் பந்தங்கள் தான். அவை இன்னும் அவன் முக்கியம் என்பதையே வேறுவிதமாகச் சொல்கின்றன. எனவே அதைக்கூட வைத்துக் கொள்ளாதே. அவனிடம் இருந்து கற்றுக் கொள். அவனைப் போலவே அலட்சியமாய் விலகி விடு...’ என்றெல்லாம் மனதிடம் சொன்னாள்.

 

துரதிர்ஷ்டவசமாக மனம் நல்ல அறிவுரைகளை ரசிப்பதோ, ஏற்றுக் கொள்வதோ இல்லை.  அது வேறு விதமாக நினைத்தது. ’அவன் இப்போதும் அடிக்கடி உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவன் மீது இருக்கும் கோபத்தால் நீ அதை உணராமல் இருக்கலாம்என்று சொன்னது. அவளும் வெட்கத்தை விட்டு அவனை மூன்று தடவை திரும்பிப் பார்த்தாள். அவன் பார்வை அவள் மீது இல்லை. ஆரம்பத்தில் அவனுக்கு அவள் மீது இருந்த ஈர்ப்பு இப்போது முழுவதுமாக இல்லாமல் போய் விட்டது போலிருக்கிறது. அவளுக்கு ஏனோ அழத் தோன்றியது. பின்பும் அவனைத் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. ஆனால் அவளுடைய சுயகௌரவம் திரும்பிப் பார்க்க அனுமதிக்கவில்லை. ’போதும். இனி வேண்டாம்.’ என்று கோபத்துடன் மனதுக்குக் கட்டளையிட்டு வகுப்பில் சொல்லிக் கொடுத்ததில் கவனம் செலுத்த முயன்றாள்.

 

ஸ்ரேயா மூன்று முறை திரும்பிப் பார்த்தது ஷ்ரவனின் கவனத்துக்கு வராமல் இல்லை. அவள் ஒவ்வொரு முறை அவனைப் பார்த்த போதும் அவன் இதயமும் காயப்பட்டது. அவளுடைய எண்ணங்களை அவனால் உணர முடிந்தது. ’ஸ்ரேயா என்னை மன்னித்து விடுஎன்று அவன் திரும்பத் திரும்ப மனதினுள் மன்னிப்பு கேட்டான்.

 

அன்று கடைசி வகுப்பும் முடிந்தவுடன் எல்லோரும் ஒருவருக்கொருவர் வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டார்கள். அப்படி ஸ்ரேயா அவனிடமும் வந்தாள். எல்லோரிடமும் கைகுலுக்கியது போலவே அவனிடமும் கைகுலுக்கிய போது அவள் முதல் நாள் உணர்வையே மீண்டும் பெற்றாள். அவள் தன்னையே மனதினுள் திட்டிக் கொண்டு, அவனிடம்  வறண்ட குரலில்குட் பைசொன்னாள்.  

 

அவன் கைகுலுக்கிய போது அவளுடைய கண்களைப் பார்த்துமீண்டும் சந்திப்போம்என்று புன்னகையுடன் சொல்லி விட்டு, உடனே அவள் அருகில் இருந்த கமலம்மாவின் கையைக் குலுக்கி அவருடன் பேச ஆரம்பித்தான். ஸ்ரேயாவுக்கு இனி சிறிது நேரம் அவனருகே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அவள் இனி அவனைப் பார்க்க விரும்பவில்லை. பார்த்து திரும்பவும் காயப்பட விரும்பவில்லை. அவசரமாக அவள் தனதறைக்கு விரைந்தாள். கிளம்பிச் செல்லும் போது, அறைக்கு அருகிலும் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தைத் தவிர்க்க ஆசைப்பட்டாள்.

 

ஷ்ரவன் அறையிலிருந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, ஸ்ரேயா முன்பே போய் விட்டது தெரிந்தது. யோகாலயத்திலிருந்து வெளியே வந்து அவன் டாக்ஸியில் ஏறிய போது சுமார் இருபதடி தள்ளி இருந்த காரும் கிளம்பியதைக் கவனித்தான். அந்தக் காரில் இருந்த இரண்டு தடியர்கள் யோகாலயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உடனடியாக அவனால் அனுமானிக்க முடிந்தது.

 

டாக்ஸியில் அவன் செல்லும் போது திரும்பிப் பார்க்கா விட்டாலும் அந்தக் கார் அவனுடைய டாக்ஸியைப் பின் தொடர்வதை அவனால் உணர முடிந்தது. அது அவன் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான்.

 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியவன் ஹைதராபாத் செல்லும் ரயிலுக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தான். அறிவிப்புப் பலகையில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் ஹைதராபாத் செல்லும் ரயில் வரப்போகும் அறிவிப்பு வந்தவுடன் எழுந்து சென்றான். அவன் ஒரு முறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

 

அவனுக்குப் பின்னால் நான்கு வரிசைகள் தாண்டி அமர்ந்திருந்த அந்த இரண்டு தடியர்களும் மிகவும் கவனமாக அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தார்கள். ஷ்ரவன் ரயில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் ஒருவன் அங்கேயே நிற்க, மற்றவன் மெல்ல ரயிலுக்குள் நோட்டமிட்டபடியே பிளாட்பாரத்தில் நடந்தான். ஷ்ரவன் உள்ளே அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் சிறிது தூரம் சென்று அங்கு நின்று கொண்டான்.

 

இருவரும் அந்த ரயில் கிளம்பிச் செல்லும் வரை அங்கேயே நின்றிருந்தார்கள். இருவர் பார்வையும் ரயிலிலிருந்து இறங்குபவர்கள் மீதே தங்கியிருந்தது. ரயில் கிளம்பியது. அப்போதும் அவர்கள் இருவரும் அங்கேயே நின்றிருந்தார்கள். ரயில் அவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்து விட்டுத் திருப்தியுடன் வெளியேறினார்கள்.

 

இருவரில் ஒருவன் பாண்டியனிடம் அலைபேசியில் பேசினான். “ஐயா, அவன் ஹைதராபாத் ரயில்ல தான் போய்கிட்டிருக்கான். ரயில் போய் அஞ்சு நிமிஷமாச்சு

 

பாண்டியன் அந்தத் தகவலில் திருப்தியடைந்தார். ஹைதராபாதிலிருந்து ஷ்ரவன் வந்த டிக்கெட்டை அவரே பார்த்திருக்கிறார். அதே போல் அவன் ரயிலில் ஹைதராபாத்திற்கே திரும்பிச் செல்வதை அவருடைய ஆட்களும் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவன் பொய் சொல்லவில்லை என்பது தெரிகிறது. அவன் சொன்னது போல் துறவியாகத் திரும்பி வந்தால் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று அவர் எண்ணினார்.

 

ரயில் கிளம்பி ஐந்து நிமிடங்கள் ஆன பின் ஷ்ரவன் தன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு எழுந்து கழிவறைக்குச் சென்றான். தன் தலைமுடியை வாரிய விதத்தை மாற்றிக் கொண்டான். தன் கண்களில் வைத்திருந்த லென்ஸை வெளியே எடுத்தான். தன் தோற்றத்திலும் சில மாற்றங்களைச் செய்து கொண்டு பழைய ஷ்ரவனாக மாறினான்.  சூட்கேஸோடு சில ரயில் பெட்டிகளைக் கடந்து போய் ஒரு கதவருகே நின்றான். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த தடியர்களே இப்போது அவனைப் பார்த்தாலும், சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் பின் தொடர்ந்து வந்த ஆளென்று அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.  தோற்றத்தில் மட்டுமல்லாமல் அவன் நடை, பாவனையில் கூட நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

 

சில நிமிடங்களில் சென்னை சென்ட்ரல் செல்லும் இன்னொரு ரயில் வந்தது. ஷ்ரவன் அதில் ஏறிக் கொண்டான். அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன...


(தொடரும்)

என்.கணேசன்







1 comment:

  1. திரும்ப துறவியாக வந்தால் ஷர்வன் பல சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

    ReplyDelete