சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 18, 2021

இல்லுமினாட்டி 90

ர்னெஸ்டோ பிதோவன் இசையையும், ஒயினையும் மறந்து அன்றிரவு அக்ஷயின் திபெத் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவன் எப்படி காற்றின் வேகத்தில் நகரக் கற்றுக் கொண்டான் என்பதை விளக்கும் போது அதிகாலை மூன்று மணிக்கு இமாலயக் குளிரில் எழுந்து செய்த பயிற்சிகளைச் சொன்னான். ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் தியானம் செய்ததையும், ஏழு மணி நேரம் பயிற்சிகள் செய்ததையும் சொன்னான். மாதக்கணக்கில் இப்படித் தொடர்ந்து செய்து அவன் மனமும், உடலும் இணைந்து அந்த வித்தையில் தேர்ச்சி பெற்றதைச் சொன்னான். தினமும் பத்து மணி நேரம் பல மாதங்கள் தொடர்ந்து அவன் பயிற்சி செய்ததைக் கேட்ட போது மகத்தான விஷயங்கள் சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை என்று மனதிற்குள் அவர் சொல்லிக் கொண்டார்

அவர் அவனிடம் கேட்டார். “எங்கே போனாலும் ஒருசில வினாடிகளில் நீ நிறைய விஷயங்களைக் கவனிக்கும் சக்தி படைத்தவன் என்று உன்னைப் பற்றிச் சொன்னார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?”

அக்ஷய் சொன்னான். “அதற்கும் என் குரு தான் காரணம். ஏதாவது பயிற்சிகள் செய்ய சில சமயங்களில் வெளியிடங்களுக்கு என்னை அனுப்புவார். நான் திரும்பி வந்தவுடன் என்னிடம் அந்தப் பயிற்சிகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பத்து கேள்விகளாவது கேட்பார். நீ வருகிற வழியில் எத்தனை ஆடுகள் பார்த்தாய்,  நீ தியானம் செய்த இடத்தில் உன் எதிரில் எத்தனை பைன் மரங்கள் இருந்தன, நீ நடந்து வந்த போது உன்னைக் கடந்து போன மனிதர்கள் எத்தனை என்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்பார். ஆரம்பத்தில் எனக்குப் பத்தில் இரண்டு கேள்விகளுக்குக் கூடப் பதில் தெரியாது. சின்னச் சின்ன விஷயங்களையும் கவனிப்பது முக்கியம் என்று என் குரு அடிக்கடி சொல்வார் ….”

எர்னெஸ்டோவுக்கு ஒரு கணம் அவன் மீது பொறாமையாக இருந்தது. எப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை அவன் வாழ்ந்திருக்கிறான்!

அக்ஷய் பழைய நினைவுகளில் புன்னகை பூத்தவனாகச் சொன்னான். ”நான் அவர் இந்தக் கேள்வி கேட்கலாம், அந்தக் கேள்வி கேட்கலாம் என்று எதிர்பார்த்து அதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்து பதில் சொல்லத் தயாராயிருப்பேன். ஆனால் அதைத் தெரிந்து வைத்தவர் போல அதை மட்டும் கேட்க மாட்டார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நான் யோசித்து தான் பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும்அவர் எப்போதும் சொல்வார். “வாழ்க்கையில் எதிர்பார்ப்பதை விட அதிகமாக எதிர்பார்க்காதது தான் நடக்கும். அதற்கு நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.” என்பார்…”  
எர்னெஸ்டோ அந்த குருவின் தீர்க்கதரிசனத்தையும், அதைத் தன் சீடனுக்கு அவர் சொல்லிக் கொடுத்த விதத்தையும் வியந்தார். மேலும் சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எர்னெஸ்டோவுக்குக் கண் இமைகள் தானாக மூட ஆரம்பித்தன. இருவரும் உறங்க ஆயத்தமானார்கள்.

ந்த நேரத்திலும் விஸ்வம் உறங்காமல் தியானத்தில் இருந்தான். அவன் இப்போதெல்லாம் பாதாள அறையில் தான் அமர்ந்து தியானம் செய்கிறான். அவன் மனம் டேனியலின் உடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் இப்போது முழுமையாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. சில நாட்களுக்கு முன் காட்டிய எதிர்ப்பை அந்த உடல் இப்போதெல்லாம் காட்டுவதில்லை...

அவனையே பார்த்தபடி ஜிப்ஸி அமர்ந்திருந்தான். விஸ்வம் அவனை எப்போதுமே ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை.  விஸ்வத்துடனான முதல் சந்திப்பு ஜிப்ஸிக்கு இப்போதும் பசுமையாக நினைவிருந்தது. எந்தக் குறிக்கோளும் இல்லாமல், இலக்குமில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்தவன் பின் எப்படி நேரெதிராக மாறி விட்டான்! ஜிப்ஸி எதிர்பார்த்ததற்கும் மேலாக ஒவ்வொரு கட்டத்திலும் விஸ்வத்தின் முன்னேற்றம் இருந்தது. தொடுவானம் நோக்கி விரையும் எரிநட்சத்திரம் போல இலக்குகளை நோக்கிய அவன் பயணம் இருந்தது. இல்லுமினாட்டியில் சேர்ந்து அங்கும் அவர்களிடம் அவன் பிரமிப்பையே ஏற்படுத்தினான். க்ரிஷ் இல்லுமினாட்டியில் பேச வரும் வரை எல்லாமே பிசிறில்லாமல் தான் போனது. அதன் பின் அங்கே நடந்ததை ஜிப்ஸியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

கடைசியில் அவனாலும் விஸ்வத்தைக் காப்பாற்ற முடியாமல் போன போது எல்லாம் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கும் விதமாக வூடு சடங்கில் ஆவியை உடலில் வரவழைக்கும் இசையை அவன் மீட்டி அந்த இசையை விஸ்வத்தைச் சேரும் அலைவரிசையில் அனுப்பியும் வைத்தான். அந்த இசை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு உடலிலிருந்து உயிர் போய்க் கொண்டிருப்பதைச் சூசகமாகத் தெரிவிக்கவும் செய்தான்.  விஸ்வம் வாழ்ந்த காலத்தில் செய்த சாதனைகள் எல்லாம் வேறு ரகம். உயிர் போய்க் கொண்டிருக்கும் போது அவன் கற்ற வித்தைகளோடு இன்னொரு உடலுக்கு வந்து சேர்வது வேறு ரகம். உயிரோடிருக்கையில் விஸ்வம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவன் தான். ஆனால் அது அவன் முழுமையாகத் தயார்நிலையில் இருந்து திட்டமிட்டுச் சாதித்தது. ஒரு உடல் அழியும் நிலையில் இருக்கையில் அதிலிருந்து வெளியேறி இன்னொரு உடலை நிரந்தரமாக அடைவது வேறு ரகம் மட்டுமல்ல. சக்திகளைத் துல்லியமாக வசப்படுத்தி வைத்திருந்த ஒருவனுக்குத் தயார்நிலையிலும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடிந்த உச்ச ரகம். கூடுவிட்டுப் பாயும் வழி இருக்கிறது, உடலும் இருக்கிறது என்று தெரிவித்ததை, பழைய உடலை இழந்து கொண்டிருந்த இக்கட்டான நிலையில் இருந்த  விஸ்வம் பயன்படுத்திச் சாதித்தது இதுவரை யாரும் சாதிக்காத சாதனை தான்....

ஜிப்ஸி அவன் சாதனையையும், அதைத் தொடர்ந்து இந்தக் கணம் வரை அவன் எடுத்துக் கொண்டிருக்கும் தளராத முயற்சியையும் வியந்தபடி எழுந்து பாதாள அறையிலிருந்து மேலே சென்றான்’இவன் கண்டிப்பாக வெல்வான். இவனோடு சேர்ந்து நானும் வெல்வேன்’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. 

சில நிமிடங்கள் கழித்து விஸ்வம் கண் திறந்தான். அந்தப் பாதாள அறையில் இருள் மண்டிக் கிடந்தது. என்றாலும் எதிர் சுவரில் இருந்த கதேயின் கவிதை மட்டும் மெலிதாக மிளிர்ந்தபடி இருந்தது. அந்தக் கடைசி வரிகளை மறுபடியும் படித்தான்.

"Choose well; your choice is
"Brief and yet endless; "Here eyes do regard you
"In eternity's stillness; "Here is all fullness,
"Ye have to reward you, "Work, and despair not."


அந்த வார்த்தைகளில் எல்லையில்லாத சக்தி இருந்தது. அது அவனுடைய அந்தராத்மாவைத் தொட்டுப் புத்துணர்ச்சியை எழுப்பியது. அவன் ஆழமாக நம்பினான். தனக்குள்ளே அந்தக் கணமே சத்தியமும் செய்து கொண்டான். “நான் கண்டிப்பாக வெல்வேன். நிச்சயமாகத் தோற்க மாட்டேன் 



ம்மானுவல் அக்ஷய் வந்ததிலிருந்து எர்னெஸ்டோவின் பாதுகாப்பு பற்றிய கவலையை விட்டொழித்திருந்தான். எர்னெஸ்டோவுக்கு அக்ஷயை விடச் சிறந்த மெய்க்காப்பாளனை உலகத்தில் கண்டிப்பாக அவனால் தேடிக் கண்டுபிடித்திருக்க முடியாது.  அந்த விஷயத்தில் நிம்மதியைடைந்திருந்த அவன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த விட்டான். அவனுக்கு இப்போதும் சிந்து பற்றிய சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாகச் சொல்லா விட்டாலும் எல்லாத் தகவல்களையும் அவன் க்ரிஷுக்குத் தந்திருக்கிறான். க்ரிஷ் அதை அலட்சியம் செய்திருக்க மாட்டான். ஆனால் சிந்து பற்றிய எந்தப் புகாரும், சந்தேகமும் க்ரிஷிடமிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் சிந்து விஸ்வத்தின் ஆளாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த நம்பர் தெரியாத இண்டர்நேஷனல் காலும் விஸ்வம் செய்ததாக இருக்க வாய்ப்பில்லை என்று அவள் பற்றிய கவலையையும் இம்மானுவல் விட்டொழித்தான்.

அவன் இப்போது முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிற ஆள் விஸ்வத்தின் கூட்டாளி தான். அவனைப் பற்றி இம்மானுவல் இதுவரை சேகரித்திருக்கும் தகவல்கள் எல்லாம் ஓரளவு திருப்திகரமாகவே இருந்தன. இன்னும் சில தகவல்கள் மட்டும் வர பாக்கி இருந்தன. மூன்று நாட்களுக்குள் அவையும் கிடைத்து விடும். அப்படிக் கிடைத்து விட்டால் ஒரு தீர்மானத்திற்கு வர அவன் க்ரிஷை ஜெர்மனிக்கு வரவழைப்பது என்று முடிவு செய்தான். க்ரிஷ் வந்தால் விஸ்வத்தின் கூட்டாளி பற்றித் தெளிவு பிறந்து விடும்!

(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அடுத்த பதிவை எதிர் நோக்க வைக்கிறது. அருமை

    ReplyDelete
  2. அக்ஷயின் அனுபவங்கள் அற்புதம்... மேலும் தொடர் பரபரப்பாக செல்கிறது...

    ReplyDelete
  3. Akshay is still rocking. An unforgettable character. Viswam's efforts are amazing.

    ReplyDelete