சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 4, 2021

இல்லுமினாட்டி 88



நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்....”

வாங் வே அனுப்பியிருந்த அந்த ரகசிய ஆவணச் செய்தியின் கடைசி வரியை வைத்து அந்த இடத்தைக் கண்டுபிடிக்க சாமுவல் பல முயற்சிகள் எடுத்து விட்டார். டேனியல் உடலில் இருக்கும் விஸ்வம் இன்னும் ஜெர்மனியை விட்டு வெளியேறவில்லை என்பதில் இல்லுமினாட்டி உளவுத் துறைக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. தரைவழி எல்லைகளிலும், விமானநிலையங்களிலும் கடுமையான தளராத பரிசோதனை இருந்ததால் விஸ்வம் தப்பிச் சென்றிருக்க வழியேயில்லை என்பதை இல்லுமினாட்டியின் உளவுத்துறை அறிந்திருந்தது. அதனால் அவர்கள் போய்ச் சேர்ந்திருக்கக்கூடிய தொழுத இடம் ஜெர்மனிக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் தவறில்லாமல் யூகித்தது. அதற்குப் பிறகு ஜெர்மனியில் இல்லுமினாட்டியினர் தொழுத இடங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் அப்படிப்பட்ட தொழும் இடங்கள் நிறைய இருந்தன. பிறகு ஹிட்லரின் கெடுபிடியால் இல்லுமினாட்டியினர் பகிரங்கமாகத் தொழும் இடங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. அதன் பின்னர் வழிபாட்டு ஆர்வமும் குறைந்து போனதால் இல்லுமினாட்டியினர் வழிபாட்டு இடங்கள் எதையும் பெரிதாகக் கட்டவில்லை.  பழைய கோயில்கள் எல்லாம் நூலகங்கள், காட்சியகங்கள், அவர்கள் கூடுமிடங்களாக மாறின. வழிபாடு என்பதே வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. அப்படி மாறிய இடங்களில் எல்லாம் ஒளிந்து கொள்ளும் வசதி இருக்கவில்லை. என்றாலும் தனக்கு மிக நம்பிக்கையான ஊழியர்கள் ஐந்தாறு பேரை அந்த இடங்களுக்கெல்லாம் சாமுவல் அனுப்பி ஏதாவது வகையில் அங்கே விஸ்வம் ஒளிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று முழு சோதனைகள் செய்து பார்த்தார்.  விஸ்வம் அங்கெல்லாம் இல்லை என்று உறுதியாகத் தெரிந்து விட்டது.

ஜெர்மனியில் பழைய இரண்டு வழிபாட்டு இடங்கள் இப்போது சர்ச்கள் ஆகியிருந்தன. அதில் ஒரு சர்ச்சில் இப்போது வழிபாடு எதுவும் நடப்பதில்லை. அங்கு முதலிலேயே ஆட்கள் சென்று பார்த்து யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். பூட்டிய இடங்கள், காலியாக இருக்கும் பொது இடங்கள் எல்லாம் பார்க்கும் போது அதையும் பார்த்து புகைப்படம் கூட எடுத்து ஃபைலில் வைத்திருந்தார்கள். இன்னொரு சர்ச்சில் இப்போது வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்கள் தினசரி போய் வரும் சர்ச்சில் விஸ்வம் ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நிலைமையை வாங் வேக்கு சாமுவல் போன் செய்து சொன்னார். வாங் வே ஏமாற்றத்தோடு சொன்னார். “நான் அந்த ஒரு வரியிலேயே விஸ்வம் இருக்கும் இடத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று நிறையவே நம்பி இருந்தேன்...”

சாமுவல் வருத்தத்துடன் சொன்னார். “தொழுத இடங்கள் எல்லாம் பார்த்தாகி விட்டது. அவன் இல்லை....இன்னும் கூடுதலான தகவல்கள் கிடைத்திருந்தால் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்திருக்கும்.”

வாங் வே யோசனையுடன் சொன்னார். “அந்த ரகசிய ஆவணத்தில் இனி வரும் வரிகளில் ஏதாவது கூடுதல் தகவல்கள் இருக்கலாம்

அப்படி ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும்என்று சாமுவல் சொன்னார்.
கர்னீலியஸிடம்  கூடுதலாக தகவல்கள் எதாவது கிடைத்திருக்கிறதா என்று தினமும் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த ஆளும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்... பார்ப்போம்

ர்னெஸ்டோவை மிக அருகில் இருந்து கவனிக்க முடிந்த அக்‌ஷய்க்கு அவர் அறிவுகூர்மையும், மன உறுதியும், முடிவுகள் எடுப்பதில் இருந்த தெளிவும் அசத்தின. நள்ளிரவை நெருங்காமல் உறங்கப் போகும் பழக்கம் அவரிடம் இல்லாததால் காலை மிகவும் தாமதமாகத் தான் எர்னெஸ்டோ கண்விழிப்பார். கண்விழித்து, காலைக்கடன்கள் முடித்த பின், பால் கலக்காத காபி ஒரு கோப்பை குடித்து விட்டு அவர் வேலைகள் ஆரம்பமாகும். ’அவசரம், அதிமுக்கியம்’ என்று அவர் பார்வைக்கு உளவுத்துறையும், மற்றவர்களும் அனுப்பிய செய்திகளைப் படிக்க ஆரம்பிக்கையில் அவர் முழுக்கவனமும் அவற்றில் தான் இருக்கும். ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டியதில் முடிவெடுக்க அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதை அக்‌ஷய் கவனித்தான். சில சமயங்களில் முடிவெடுப்பதற்கு முன் கூடுதல் தகவல் ஏதாவது தேவையிருந்தால் உடனடியாகச் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்துப் பேசுவார்.  அதைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டு முடிவுகளை எடுத்து கட்டளை பிறப்பித்து விடுவார். சில சமயங்களில் சிலர் போன்கால்களில் அதிஅவசரமாக அவரை அழைப்பதுண்டு. பேசுபவர்கள் யாரும் மூன்று நிமிடங்களுக்கு அதிகமாக அவரிடம் பேசுவதில்லை என்பதையும் அக்‌ஷய் கவனித்தான். அதற்கு அதிகமாகப் பேசுபவர்களை அவர் முன்பே தவிர்த்து அதற்குள் சுருக்கிச் சொல்லுமாறு பழக்கியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பல நாடுகளின் அரசியல், பொருளாதாரம் முதல் தீவிரவாதிகளின் இயக்கங்கள் வரை அவருடைய முடிவுகள் பாதிப்பதாகவும், இருக்கும் நிலைமைகளை மாற்றுவதாகவும் இருந்தது.

”உடனடியாகக் கொன்று விடு. விபத்து போல் தெரிய வேண்டும்”, “இப்படிச் செய்யச் சொல்.....”, “இந்த அறிவிப்பு நாளைக்குள் வெளியாக வேண்டும்” “இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். இரண்டு நாள் பொறுப்போம்” “ஒரு மில்லியன் யூரோவை அவர்களுக்கு அனுப்பு” ”பத்து மில்லியன் அமெரிக்க டாலர் இல்லுமினாட்டிக்கு அனுப்பு. பிறகு பார்ப்போம்” ”உடன்படிக்கையில் இந்த ஷரத்தைச் சேர்த்து விட்டு அறிவிக்கச் சொல்” என்றெல்லாம் ஓரிரண்டு வாக்கியங்களில் அறிவித்து ஒவ்வொரு பிரச்னையாக அவர் முடித்து வைக்கும் விதம் அவனை ஆச்சரியப்படுத்தியது.

அதன் பின் காலை உணவு சாப்பிட்டு விட்டு முன்பே அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்கும் மிக முக்கியமான மனிதர்களை அவர் சந்திப்பார். அவர்களும் அவரிடம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அவரிடம் பேச அனுமதி இல்லை. அதனால் வருபவர்கள் தாங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லக் கற்றுக் கொண்டே அவரிடம் வந்திருப்பதையும் அவனால் கவனிக்க முடிந்தது. சிலரிடம் மிகவும் நட்புணர்வுடன் பேசி, சிலரிடம் கண்டிப்புடன் பேசி, சிலரிடம் ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி அனுப்பி வைத்தார். ஒருவரிடம் நடந்து கொண்டது போல இன்னொருவரிடம் அவர் நடந்து கொள்ளாததை அக்‌ஷய் கவனித்தான். அதே போல அவரைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரும் அவரிடம் உள்ளுக்குள் பயந்து நடுங்கியபடி தான் பேசியதாகவும் அவனுக்குப் பட்டது. பலரிடம் பல விதமாக நடந்து கொண்டு விட்டு மதிய உணவு உட்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் அவர் இளைப்பாறுவார்.  பின் பழையபடி சந்திப்புகள் தொடரும். சாயங்காலம் ஐந்து மணி முதல் எட்டு மணி வரை அக்‌ஷயிடம் அவர் பேசிக் கொண்டிருப்பார். அவனிடம் பேசும் போது எந்த விதமான பந்தாவும் அவரிடம் மறைமுகமாகக் கூட இருக்கவில்லை. ஒரு நண்பர் போலவே பேசிக் கொண்டிருப்பார்.

எட்டு மணிக்கு மேல் நள்ளிரவு வரை ஒயினும், பிதோவன் இசையும் மட்டுமே அவர் நேரத்தை ஆக்கிரமிக்கும். அவர் மூலம் பிதோவன் இசை அக்‌ஷய்க்கும் அறிமுகமாகியது. போகப் போக அவனும் அந்த இசையை ரசிக்க ஆரம்பித்தான். பிதோவனின் ஒன்பது சிம்பனிகளும், கன்சர்ட்களும், மற்ற இசைகளும் அவனுக்கும் பிடிக்க ஆரம்பித்தது. அவன் ரசிப்பதைக் கவனித்த அவர் அந்த இசையில் பொதிந்திருந்த சூட்சுமங்களை அவனுக்கு விளக்க ஆரம்பித்தார். அவை புரிந்த பின் அவனுக்கு பிதோவன் இசை மேலும் பிடிக்க ஆரம்பித்தது.  சில நேரங்களில் அந்த இசை அவனைத் தியான நிலைக்குக் கொண்டு போனது. அந்த நேரங்களில் அவன் சம்மணமிட்டுத் தரைவிரிப்பில் அமர்ந்து கொண்டு ஒரு பரவசநிலையில் அமர்ந்திருப்பான். அந்தச் சமயங்களில் எர்னெஸ்டோவுக்கு அவனைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.

பிதோவனை அறிமுகப்படுத்தியபடி ஒயினையும் அக்‌ஷய்க்கு அறிமுகப்படுத்த அவரால் முடியவில்லை. அவரிடம் உலகின் பல பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பழமையானதும், விலையுயர்ந்ததுமான ஒயின்கள் பல வகைகள் இருந்தன. ஆனால் அவர் எவ்வளவு சொல்லி ஒயினைக் குடிக்க அவன் மறுத்தான். சிறிய அளவில் கூட அவன் மூளை மற்றும் உடலின் சக்திகள் தளர்வதை விரும்பவில்லை. சில வகை ஒயின்கள் உடலுக்கு மிக நல்லது என்று சில ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதை அவர் சொன்னார். அதெல்லாம் அவனைச் சிறிதும் மாற்றவில்லை. “எங்கள் யோகாவை விட இதெல்லாம் உடலுக்கு அதிக நல்லதைச் செய்து விட முடியாது” என்று அவன் சொல்லி மறுத்தான்.

எர்னெஸ்டோவுக்கு விஸ்வம் நினைவுக்கு வந்தான். இவன், அவன் எல்லாம் ஒருவிதத்தில் ஒரே ரகம் என்று அவருக்குத் தோன்றியது.... இப்போது நிறைய நேரமாக எந்த விதமான அசௌகரியத்தையும் உணராமல் தொடர்ந்து அவனால் தரைவிரிப்பில் சம்மணமிட்டு உட்கார முடிவதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனை ஆச்சரியத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று அவருடைய அறைக்கு வெளியே ஹாலில் ஏதோ பொருட்கள் உருளும் சத்தம் கேட்டது.

அடுத்த கணம் அக்‌ஷய் அவருடைய அறைக்கதவருகே இருந்தான். அவரை அமைதியாக இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்படி சைகையால் தெரிவித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்





8 comments:

  1. Sema thrilling. What next? Because of your novels Mondays and Thursdays become special to me sir.

    ReplyDelete
  2. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்ககும் வகையில் மிகவும் பரபரப்பாக முடித்துள்ளீர்கள். அருமை

    ReplyDelete
  3. விஸ்வம் தொழுத இடத்தில் தான் இருக்கிறான்... யார் முதலில் கண்டுபிடிப்பார்களோ... தெரியவில்லை...

    ReplyDelete
  4. Please provide a "Like" button Sir.

    ReplyDelete