சஞ்சய் ஷர்மா நாளுக்கு நாள் உடல் பலவீனமாகிக் கொண்டே போவதை
உணர்ந்தான். அவனுக்குப் பிறந்ததில் இருந்து, விதிவசமாக
இவர்களிடம் பிடிபடும் வரையில், ஒரு நாளும் உணவுப் பிரச்னை இருந்ததில்லை. இப்படி
நாளுக்கு மூன்று ஆறிய சப்பாத்திகள் சாப்பிட்டு உயிர்பிழைக்கும் துர்ப்பாக்கியம் இருக்கவில்லை. அவன்
‘உண்மையைச் சொல்கிறேன்’ என்றவுடன் நரேந்திரன் அது என்ன என்று அறிந்துகொள்ள எதிரில்
வந்து நிற்பான் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. அவன் சொன்ன விஷயம் நரேந்திரன் காதை
எட்டவேயில்லை என்பது அவனை மனம் புழுங்க வைத்தது.
”அவராகப்
போன் செய்தால் சொல்கிறேன்” என்று சொல்லியிருந்த தடியனிடம் ஒவ்வொரு வேளை அவன்
வரும் போதும் சஞ்சய் கேட்டான். “சார் போன் செய்தாரா?”
“இல்லை” என்று ரத்தினச்சுருக்கமாகச்
சொல்லி விட்டுப் போகும் தடியன் ஒரு நாள் எரிச்சலோடு கேட்டான். “சார் கேட்கறப்பவே
எல்லாத்தையும் சொல்லியிருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?”
இப்படிக் கண்டவன் எல்லாம் கேட்கும்
நிலைமை நமக்கு வந்து விட்டதே என்று மனம் நொந்தாலும் அசடு வழிந்தபடி சஞ்சய் அமைதி காத்தான். மூன்று
நாள் கழித்து தடியன் “இன்றைக்கு சாயங்காலம் ஐந்து
மணிக்கு நீ சொல்வதைக் கேட்பதாகச் சொல்லியிருக்கிறார் சார்” என்று
சொல்லி அவன் வயிற்றில் பால் வார்த்தான். எந்த உண்மையை இன்று சாயங்காலம்
எப்படித் திரித்துச் சொல்வது என்று சஞ்சய் சந்தோஷமாகச் சிந்திக்க ஆரம்பித்தான்.
இன்று நரேந்திரன் வரும் போது அவன் பின்னாலேயே மாமனின் ஆட்களோ,
அந்தத் திவீரவாதிகளின் ஆட்களோ பின் தொடர்ந்து வந்து இந்த இடத்தைக் கண்டுபிடித்து
விட்டால் தேவலை. இந்த இரண்டு நாய்களையும் எட்டி உதைத்து விட்டு
இதே சித்திரவதையை இவர்களுக்குத் தரலாம். அந்தச் சித்திரவதை
ஜென்மத்திற்கும் அவர்களுக்கு
மறக்கக்கூடாது. இவர்களுக்கு மூன்று சப்பாத்திகளும் அதிகம் தான். ஒரு
நாளைக்கு ஒரு சப்பாத்தி தந்தால் போதும். இதை விடத் தடிமனான சங்கிலியில்
கட்டிப் போட வேண்டும்.
குறைந்தபட்சம் அந்த அறையில் ஒரு சுவர்க்கடிகாரமாவது வைத்திருக்கலாம். நேரம் என்ன என்றாவது தெரியும்.
அதைச் செய்யவும் இவன்களுக்கு மனம் இல்லை. நேரம்
ஆமையை விட மெள்ள நகர்ந்தது. சஞ்சய் என்ன சொல்ல வேண்டும் என்று
தீர்மானித்துப் பின் ஆவலாகக் காத்திருக்கையில் தடியன் ஒரு லாப்டாப்போடு வந்தான்.
‘என்ன இவன் படம் காண்பிக்கப் போகிறானா?’
லாப்டாப்பைத் திறந்து ஒரு நிமிடம் எதோ செய்தவன் பிறகு “பேசு” என்று சொல்லி விட்டு லாப்டாப்பை அவன் பக்கம் தள்ளி விட்டான்.
லாப்டாப் திரையில் நரேந்திரன் கேட்டான். “எதோ சொல்ல வேண்டும் என்று
சொன்னாயாமே.. சீக்கிரம் சொல்”
சஞ்சய் திகைப்பில் வாயடைத்துப் போய் சில வினாடிகள் பேந்தப் பேந்த
முழித்து விட்டுச் சொன்னான்.
“நேரில் வந்தால் தான் சொல்வேன். இப்படிப் பேசுவது
எனக்கு ஆபத்து”
அவன் அப்படிச் சொன்னதுமே நரேந்திரன் “சரி” என்று சொன்னான். அடுத்த வினாடி வெற்றுத் திரை தான் சஞ்சய்
முன் தெரிந்தது. சஞ்சய் கோபம் தாங்காமல் ”ஆ ஆஆஆ” என்று உச்சக்குரலில் அலறினான். அடுத்த கணம் அவன் வலது கன்னத்தில் இடி போல் தடியனின் அறை விழுந்தது.
அண்டசராசரங்களும் சுற்றி ஒரு விதமாய் நிற்பதற்குள் தடியன் லாப்டாப்பை
எடுத்துக் கொண்டு போயிருந்தான்.
அன்றிரவு கல்யாண் உறங்கவில்லை. பழையதும் புதியதுமாகப் பல
சிந்தனைகள் அவனைத் தூங்க விடாமல் தடுத்தன. பக்கத்து வீட்டுப்
புதிர் விடுபடும் வரை அவனுக்கும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது என்று தோன்ற
ஆரம்பித்தது. மறுநாள் அதிகாலையிலிருந்தே தந்தையும் மகனும் வீட்டின்
முன்பக்கப் புல்வெளியில் பக்கத்து வீட்டுக்காரனின் பார்வை தங்கள் மீது பட வேண்டும்
என்று தவம் இருந்தார்கள்.
ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் கண்களுக்குக் காப்பு கட்டிய குதிரை
போல நேர்பார்வை பார்த்துக் கொண்டே போய் வாசல் கூட்டி விட்டுத் திரும்ப உள்ளே போனவன்
பிறகு திரும்பவும் வரவில்லை.
கல்யாணுக்குத் தானாகப் போய்
பேச கவுரவம் தடுத்தது. தேவைப்படும் நேரங்களில் கவுரவம் என்றால் ஆள் பெயரா, சினிமா
பெயரா என்று கேட்க முடிந்த வேலாயுதம் “நான் போய்ப் பேசட்டுமா”
என்று மகனைக் கேட்டார்.
“பொறுங்கப்பா. பார்ப்போம். இன்னைக்கு
எப்படியாவது சாயங்காலமாவது வெளியே வராமல் இருக்க மாட்டான். அப்போது
போய்ப் பேசுவோம். அப்படி வரலைன்னா வேணும்னா நாளைக்கு நாமளே போய்ப்
பேசலாம்” என்று கல்யாண் அவரைக் கட்டுப்படுத்தினான்.
அன்று கல்யாண் ஆபிசுக்குப் போகவில்லை. அப்பா அல்லது மகன் மாறி
மாறி வீட்டின் முன் இருந்தார்கள். காலை
சுமார் பதினோரு மணிக்கு பக்கத்து வீட்டின் முன் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார்
நின்றது. அதிலிருந்து ஒரு வட இந்தியர் போலத் தெரிந்தவர் கோட்டும்
சூட்டுமாக இறங்கினார். குல்லா அணிந்திருந்த அவர் உள்ளே போனார். கல்யாண் அந்தக்
கார் ரிஜிஸ்ட்ரேஷனைக் கூர்ந்து பார்த்தான். மும்பை!
அந்த வட இந்தியரும் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார். கார் ஏறிப் போய் விட்டார்.
அவரை வழியனுப்பக் கூட நாகராஜ் வெளியே வரவில்லை. நேற்று அந்த மில் அதிபரையும் வழியனுப்ப அவன் வெளியே வரவில்லை என்பதை வேலாயுதம்
கல்யாணிடம் சொன்னார். இவர்கள் எல்லாம் எதற்கு இங்கே வந்து போகிறார்கள்
என்பது தெரிந்தால் ஓரளவு பக்கத்து வீட்டு நாகராஜை அனுமானித்து விடலாம் என்று கல்யாண்
எண்ணினான்.
கல்யாணுக்கு மதியம் மூன்று மணிக்கு ஒரு முக்கிய மனிதரிடம் அப்பாயின்மெண்ட்
இருந்ததால் மதியத்திற்கு மேல் இப்படிக் காத்திருக்க முடியவில்லை. “நீ போ. இன்னைக்கு எப்படியாவது அவனை நான் பார்த்துப் பேசி விட்டுத் தான் மறுவேலை.”
என்று வேலாயுதம் சொன்னார்.
மகன் போன பிறகு மிகவும் பொறுமையாக வெளியே காத்திருந்த வேலாயுதம்
சிறுநீர் கழிக்க உள்ளே போவதற்குக் கூட மிகவும் தயங்கினார். அந்த நேரத்தில் அந்த நாகராஜ்
வெளியே போய் விட்டால் இந்த நாளும் சந்தித்துப் பேச முடியாதே என்று யோசித்து இரண்டு
தடவை அவசரமாகப் போய் இரண்டு நிமிடங்களுக்குள் வெளியே வந்து காத்திருந்தார்.
நாகராஜ் அன்று மாலை ஐந்தரை மணிக்கு வெளிப்பட்டான். சாதாரண உடை அணிந்து
இருந்த அவன் மாலை நடைப்பயிற்சிக்குக் கிளம்பியவன் போலத் தோன்றினான். வேலாயுதம் தன் வயதுக்கு மீறிய ஓட்டமும்
நடையுமாய் போய் தெருவில் அவனை எட்டினார். ”நமஸ்காரம்”
நாகராஜ் திரும்பி அவரைப் பார்த்து “நமஸ்காரம்” என்று சொன்னான். ஆனால் நடப்பதை அவன் நிறுத்தவில்லை.
வேலாயுதம் அவனுடன் சேர்ந்து நடந்து கொண்டே சொன்னார். “நான் உங்க பக்கத்து வீடு.
பேர் வேலாயுதம்”
நாகராஜ் தலையசைத்து விட்டு மவுனமாக நடந்தான். ஒரு புன்னகையோ, மறு கேள்வியோ எதிர்பார்த்து வேலாயுதம் ஏமாந்தார். ஆனால்
வேலை ஆக வேண்டியிருக்கும் போது இதை எல்லாம் அவமரியாதையாக நினைக்கும் நபர் அல்ல அவர்.
வேகமாக நடக்கும் அவனுடன் மூச்சு வாங்க நடந்து கொண்டே ”உங்க பேர்?” என்று கேட்டார்.
“நாகராஜ்” என்றான் அவன். அவன் முகத்தில்
புன்னகையும், வாயில் கேள்வியும் வரவில்லையே தவிர அவன் முகத்தில்
அலட்சியமோ, அவரைத் தவிர்க்க நினைக்கும் முனைப்போ கூடத் தெரியவில்லை
என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது.
அவர் ”எங்களுக்குத் தொழில் டெக்ஸ்டைல்ஸ் மெஷினரி ஸ்பேர் பார்ட்ஸ். எக்ஸ்போர்ட் அதிகமா பண்றோம்” என்றார்.
அதற்கும் அவன் பொறுமையாகத் தலையசைத்து வேகம் குறைக்காமல் நடந்து
கொண்டேயிருந்தான். அவனாகத் தன் தொழிலையும் சொல்வான் என்று எதிர்பார்த்து விட்டு அவன் சொல்லாமல்
போகவே அவராகவே கேட்டார். “உங்க தொழில்?”
(தொடரும்)
என்.கணேசன்
தற்போது விற்பனையில்
Mystery of Nagaraj deepens. Very interesting.
ReplyDeleteசஞ்சய் கிட்ட நரேந்திரன் வீடியோ கால்ல பேச வந்ததும்...தடியன் அரைந்ததும் செம்ம காமெடி👌👌😂😂😂
ReplyDeleteநாகராஜ் இவ்வளவு பதில் சொன்னதே பெரிய விஷயம் தொழில் பற்றி கேட்காது தொழில் பற்றி கேட்கிறார் என்ன சொல்லப் போகிறான் கல்யாண இடம் கூட ஒரு மர்மம் இருக்கு ஒருவேளை நாகராஜ் அவனைப் பார்த்தால் தெரியும
ReplyDelete